Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கம்போடியாவில் அப்படி என்னதான் இருக்கு?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து இருப்பதைப் பற்றி எப்போதும் பொருமிக்கொண்டு இருப்போம். ஆனால் நாம் சுற்றுலா செல்ல பழம்பெருமை வாய்ந்த தலங்களைக் கொண்டதொரு நாடு உண்டு, அதிலும் அதன் பணமதிப்பில் கணக்கிட்டால் நம் நாட்டு ரூபாயே அவர்களுக்கு அமெரிக்க டாலர் போன்று பிரமிப்பாக இருந்தால்?

அப்படியொரு நாடுதான் “கம்போடியா” !! ஆசியக் கண்டத்தில், தாய்லாந்துக்கும் வியட்நாமுக்கும் இடையில் உள்ள நாடு.

எப்படி அமெரிக்காவின் ஒரு டாலருக்கு நம் பணம் அறுபத்தெட்டு ரூபாய் இருக்கிறதோ, அதேபோல் நம் ஒரு ரூபாய்க்கு அவர்களது “கம்போடியன் Riel” எனப்படும் பணத்தின் மதிப்பு அறுபது.! அவர்களின் அதிகாரபூர்வ மொழி Khmer எனப்படும். எனினும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்வதால் சிறு கடை தொழிலாளிகள், வாகன ஓட்டிகள் முதற்கொண்டு பெரும்பாலானோர் நன்றாக ஆங்கிலத்திலேயே உரையாடுவார்கள்.

“ரூபாயின் மதிப்பு குறைவுதான், சரி. ஆனால் பார்ப்பதற்கு உருப்படியாக என்னென்னவெல்லாம் இருக்கிறது?” என்கிறீர்களா?

முதலில் நாம் பார்க்கவேண்டியது – அங்கோர் வாட்

தமிழர் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விடயம் இது – அங்கோர் வாட் எனப்படும் உலகின் மிகப்பெரிய கோவில் வளாகத்தைக் கட்டிய மன்னன் “இரண்டாம் சூரியவர்மன்” நம் தமிழ் வம்சத்தின் வழிவந்த மன்னன்!! 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இது. கிட்டத்தட்ட நானூறு சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் இத்துணை நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.

விஷ்ணு கோயிலாகக் கட்டப்பட்டு பின்பு புத்தர் கோயிலாக மாற்றப்பட்டது. உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டிய இடம்.

இங்கு பிரபலமான விடயமே சூரிய உதயம்தான். (முந்திய நாளே நுழைவுச்சீட்டு வாங்கி) காலையில் நான்கு மணிக்கே எழுந்து தயாராகி ஆட்டோ ரிக்‌ஷா போன்ற ‘டுக் டுக்’ ஒன்றைப் பிடித்து நாலே முக்கால் மணிக்கே சென்றீர்கள் என்றால், அங்கு உங்களுக்கு முன்பே  பெரிய கூட்டம் வாயில் திறப்பதற்குக் காத்திருக்கும்!!! என்றால் இதன் முக்கியத்துவத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஐந்து மணியளவில் வெளி வாயில் திறப்பார்கள். அங்கிருந்து முக்கிய வாயிலை நடந்து சென்று அடையவே பதினைந்து நிமிடங்கள் ஆகும். சூரிய உதயத்தின் பின்னணியில் இதன் கோபுரங்களை இருளில் காண்பது ஒரு இனிய அனுபவம். 

 
Angkor Wat (Pic: Writer Himself)

கோவிலினுள்

சூரிய உதயத்தைக் கண்டு தரிசித்த பின் கோவில் வளாகத்தில் நுழையலாம். இங்கு மொத்தமாக நிறைய தப்படிகள் நடந்து கொண்டே இருக்கவேண்டி இருக்கும். மையத்தில் பிரதானமான கோவிலில் நுழைய மட்டும் பெரிய வரிசை இருக்கும், இதன் வளாகத்தில் வேறு எங்கும் வரிசை இல்லை. வரிசையில் நின்றாலும் பரவாயில்லை என்று மையக் கோவிலின் மேலே சென்று பாருங்கள். அங்கிருந்து பார்க்கும்போது வெளிக்காட்சியின் பிரம்மாண்டம் உங்களை அசத்திவிடும்!

மைய வளாகத்தில் இருந்து வெளியே வந்தாலும் கோட்டை சுவரின் உள்ளேயே சுற்றுப் புறங்களையும் சுற்றிப் பாருங்கள். இதன் பிரம்மாண்டத்தை அப்போதுதான் உங்களால் முழுமையாக உணர முடியும். அவை அனைத்தையும் ஒரேயொரு புகைப்படத்தில் அடக்குவது கடினம்.

தாராளமாக ஒரு நாள் முழுக்கச் செலவிடும் அளவுக்கு அத்துணை காட்சிகள் உண்டு இதன் வளாகத்தில், நமக்கு சோர்வு ஏற்படாமல் இருந்தால். அதுபோக பெரிய பலூனிலோ அல்லது ஹெலிகாப்டரிலோ அழைத்துச் சென்று வானத்தின் மேலிருந்து அங்கோர் வாட்டைக் காட்டுவார்கள் – அதற்கு செலவழிக்கும் அளவு பணமும், பருவநிலையும் சாதகமாக இருந்தால்.

அங்கோர் வாட் பற்றி மட்டுமே சொல்வதற்கு இந்தவொரு கட்டுரையே போதாது!!!

View From Angkor Wat (Pic: Writer Himself)

அடுத்து – பேயான் கோவில்

“என்னடா! பேய் கீய் என்று பயமாக இருக்கிறதே?” என்று நினைக்க வேண்டாம். அத்துணை அழகான கோவில் இது (ஆகமம் இல்லை). எங்கு திரும்பினாலும் முகங்கள்தான் தென்படும் – அத்துணை பயணிகள் இருப்பார்களோ? என்றால்.. அதில்லை. இந்தக் கோவிலே “முகங்களின் கோவில்”தான். 

பல கோபுரங்கள் உண்டு, ஒவ்வொன்றின் கூரையுமே முகங்களாகத்தான் இருக்கும். உங்களது புகைப்பட ஆர்வத்திற்கு நல்ல தீனி உண்டு. மிக அருமையாகக் கட்டப்பட்ட கோவில் இது, புகைப்படத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மூன்று மணி நேரங்கள் வரை செலவழிக்கலாம், இல்லையெனினும் இரு மணி நேரங்களாவது ஆகும்.  நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்.

Bayon Temple (Pic: Writer Himelf)
 

அடுத்து – தா ப்ரோம்

பசுமையும் ஆல மரங்களும்தான் இதன் சிறப்பு. இதுவும் ஒரு (ஆகமம் இல்லா) கோவில்தான். “கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?” என்பதுபோல், “ஆல மரம் வளர்ந்ததும் கோவில் கட்டினார்களா? அல்லது கோவில் கட்டியதும் ஆலமரம் வளர்ந்ததா?” என்று நீங்கள் ஐயமுறும் அளவு இக்கோவிலில் எங்கும் ஆலமரங்கள் நிறைந்திருக்கும். பின்னிப் பிணைந்திருக்கும் என்பதுதான் சரி. 

முடிந்த வரையில் சிதிலமடையாமல் இதைப் பாதுகாக்கிறார்கள். ஓங்கி வளர்ந்த ஆல மரங்களின் வேர்கள் கோவில் சுவர்களின் மீது ஒட்டி உறவாடும் காட்சி அருமையாக இருக்கும். 

Ta Prohm (Pic: Writer Himself)
 

அடுத்து – பண்டீ ஸ்ரே கோவில்

கிராமங்களில் செம்மண் பார்த்திருப்போம். இக்கோவில் வளாகம், கோவில் சுவர்கள், கூரை என எங்கும் செம்மண் (நிறம்)தான். போதாத குறைக்கு இதன் வளாகத்தில் இருக்கும் குளத்தின் நீரும் செம்மண் நிறத்தில்தான் இருக்கும். 

ராமாயண, மகாபாரதக் காட்சிகள் பலவும் மேற்கூரையில் சிற்பங்களாகச்  செதுக்கப்பட்டிருக்கும். சற்றே சிறிய கோவில்தான், ஆனால் கண்ணுக்கு நல்ல வித்தியாசமான விருந்து அளிக்கும்.

Banteay Srei Temple (Pic: Writer Himself)
 

அடுத்து – ப்ரேயா கான் (Preah Khan) !

சிதிலமான ஒரு கோவில் – எனினும் உங்களை வாயடைக்க வைக்கும். இங்கும் ஆலமரம் பின்னிப் பெடலெடுக்கும். 

சிலைகள், சிற்பங்களின் தலை உடைக்கப்பட்டிருக்கும். ஆயினும் இவ்வளாகத்தை ஒரு முறை சுற்றிப் பாருங்கள். மூதாதையர்களின் சிறந்த கட்டிடக் கலைக்கு உள்ள சான்றுகளில் இதுவும் ஒன்று.

Preah Khan (Pic: Writer Himself)
 

கடைசியாக நீங்கள் தவறவிடக் கூடாதது – அப்சரஸ் நடனம் 

அந்தந்த நாடுகளுக்குச் செல்லும்போது அங்கு உள்ள பாரம்பரிய கலைகளைக் கண்டுகளிப்பது அவர்களின் கலைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு. கம்போடியாவின் பாரம்பரிய நடனத்தையும் இசையையும் கண்டு/கேட்டு களிக்கும் வாய்ப்பு இது. இதற்கென்றே பல ஹோட்டல்கள் பெரிய உணவுக்கூடங்களை வைத்திருப்பார்கள். மாலை உணவு சாப்பிட்டுக்கொண்டே இந்த நடனங்களைக் கண்டு களிக்கலாம். அவர்களது உடைகள், நடனம், இசைக்கருவிகள், அவற்றில் எழும் வித்தியாசமான இசை, இவர்களது மொழியில் பாடல் வரிகள் என அனைத்துமே ஒரு சுகானுபவம். 

செல்ஃபி பிரியர்களைத் திருப்திப்படுத்த நடனங்கள் முடிந்ததும் மேடைக்கு நம்மை அழைப்பார்கள் – எல்லா நடனக் கலைஞர்களுடனும் தாமி எடுத்துக் கொள்ளலாம்.

Apsaras Dance (Pic: Writer Himself)
 

கட்டக் கடைசியாக – “இரவு வாழ்க்கை என்று சொல்லப்படும் Night life பற்றி எதுவும் சொல்லாவிட்டால் எங்களை மாதிரி வெர்ஜின் பசங்க சாபம் உன்னைச் சும்மா விடாது” என்று கூவும் இளசுகளுக்காக….

நீங்கள் குடும்பவாசி என்றால் சமர்த்தாக கண்ணை மூடிக்கொண்டு அடுத்த பாரா போய்விடுங்கள். உங்களுக்கு பார்ட்டிக்குப் போகும் பழக்கம் இருந்தால் இந்த இரவு வாழ்க்கை உங்களுக்குப் பிடிக்கும் – ரொம்பவே கோலாகலமாக இருக்கும். இரவு நேரம் ஆக ஆக வெளிநாட்டுப் பயணிகள் தெருவில் இறங்கி மேற்கத்திய நடனம் ஆட ஆரம்பித்து விடுவார்கள். தண்ணி அடிக்கும் பழக்கம் இல்லாமல், பார்ட்டிக்குப் போகும் பழக்கம் இல்லாமல், இன்னும் வேறு எந்த பழக்கங்களும் உங்களுக்கு இல்லாவிட்டால்… எதிலும் கலந்து கொள்ளாமல் வெறுமனே பார்த்துவிட்டு வரலாம், இல்லையென்றால் ஹோட்டல் ரூமில் குப்புறப் படுத்து தூங்கலாம். 

“சும்மா இருந்த எங்களை உசுப்பிவிட்டு விட்டாயே! எல்லாவற்றையும் சொல்லிவிட்டு எவ்வளவு செலவாகும் என்பதை மட்டும் சொல்லாமல் இந்தக் கட்டுரையை முடித்தால் அடுத்த ஜென்மத்தில் நீ எங்கும் பயணம் செல்ல முடியாமல் இருக்கக் கடவது” என்று நீங்கள் படபடப்பாவதற்குள்….

கம்போடியாவின் “சியாம் ரீப்” (Siem Reap) நகரம்தான் நீங்கள் செல்ல வேண்டியது. நான் இதுவரை சொன்ன இடங்கள் எல்லாம் இதன் அருகில்தான் உள்ளன. 

சென்னையில் இருந்து சியாம் ரீப்புக்கு சென்று வர விமானக் கட்டணம் ஒருவருக்கு (இந்திய மதிப்பில்) இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் ரூபாய் வரையில் ஆகும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால் இருபதாயிரத்தில் அடக்கலாம்.

வெவ்வேறு தரங்களில் நிறைய ஹோட்டல்கள் இருக்கின்றன. சியாம் ரீப் முக்கிய சுற்றுலா தலம் என்பதால் ஹோட்டல்களுக்குப் பஞ்சம் இல்லை. இருவர் தங்கும் அறையின் விலை ஓர் இரவுக்கு ஐந்நூறு முதல் இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் இருக்கும். இன்னும் அதிக விலையிலும் கூட ஹோட்டல்கள் உள்ளன.

மூன்று அல்லது நான்கு நாட்கள் தங்கினாலே போதும், நான் சொன்ன அனைத்தையும் பார்த்துவிடலாம். வழிகாட்டிகளை (guide) வைத்துக்கொண்டால் பலவித வரலாறுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். எந்தெந்த கோவில்களில் எங்கெங்கு வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுக்கலாம் என்றும் உங்களை வழிகாட்டுவார்கள்.

சைவ உணவு கிடைப்பது கொஞ்சம் கடினமே (ரெடிமேட் உணவு வகைகளை இங்கிருந்தே எடுத்துச் செல்வது நல்ல யோசனை). தரமான ஹோட்டல்களில் கார்ன் ஃப்ளேக்ஸ், ரொட்டி/ஜாம், பழங்கள், பழச்சாறு போன்ற மேற்கத்திய உணவுகளை வழங்குவார்கள். அங்கோர் வாட் மற்றும் பிற கோவில்களின் வளாகங்களில் சைவ உணவு கிடைப்பது வெகு அரிது – கையோடு எடுத்துச் செல்லுங்கள். அசைவ உணவுப் பிரியர்களுக்கு நல்ல தீனி கிடைக்கும்.

‘டுக் டுக்’ எனப்படும் ஆட்டோ ரிக்‌ஷாவிலேயே எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்கலாம். நம்மூர் ஆட்டோக்களை விட நியாயமாகவே இருப்பார்கள்.

என்ன, அடுத்த விடுமுறை எப்போது? எப்படி சியாம் ரீப் செல்லலாம்? என்று திட்டமிட ஆரம்பித்துவிட்டீர்களா?

இனிதான பயணம் அமைய வாழ்த்துக்கள்!!

Web Title: The Places To Explore In Combodia

Featured Image Credit: Writer Himself

Related Articles