Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் (GOT)

இலங்கையின் வரலாற்றின் பக்கங்களில் சிம்மாசனத்துக்கான போட்டிகள் ஏராளம் நடந்துள்ளன. அவற்றில் சில இந்த பிரபல்யம் பெற்ற நாடாகத்தொடரில் பிரதிபலிக்கவும் செய்கின்றன. பறிக்கப்பட்ட தன்னுடைய மரபை மீட்டெடுப்பதற்காக அண்டைய நிலப்பரப்பில் இருந்து பெரும் சேனையை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து வெற்றிபெற்ற நிகழ்வுகள் சில நம் வரலாற்றில் இருந்துள்ளன. கி.பி 5ம் நூற்றாண்டில் தனக்குரிய சிம்மாசனத்தை வென்றெடுக்கவும், தன்னுடைய தந்தையின் கொலைக்காக பழிவாங்கவும் வேண்டி தென்னிந்தியாவில் இருந்து படை திரட்டிக்கொண்டு வந்து நாட்டை வென்றெடுத்த மொகல்லான மன்னனின் வரலாறு மார்டினின் பாத்திரமான Daenerys Targaryen ஐ இலகுவில் ஞாபகமூட்டும். அதே போன்று இலங்கையின் முதல் ஆரிய அரசனான விஜயன் சிரிசவத்து நகரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் இயக்கர்களை தோற்கடித்து நாட்டை கைப்பற்றிய நிகழ்வானது கேம் ஆஃப் த்ரோன்ஸில் இடம்பெறும் The Red Wedding காட்சிக்கு இணையானதே. 

இலங்கையின் அரச பரம்பரைகளுக்கு இடையே நடந்தேறிய போர்காட்சியை விபரிக்கும் சித்தரம் ஒன்று. பட உதவி: sirimunasiha.wordpress.com

உலகம் முழுவதும் கேம் ஆஃப் த்ரோன்ஸின் தாக்கம் உச்சமடைந்த வேளையில் 2013 இன் இறுதியில் பிரபல சிங்கள தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் ஒளிபரப்பானது. முதல் நான்கு பாகங்கள் மட்டுமே ஒளிபரப்பான நிலையில் குறித்த தொலைக்காட்சி நிறுவனம் இம்முயற்சியை கைவிட்டது. எனினும் கேம் ஆஃப் த்ரோன்ஸின் ரசிகர்களாகிப்போன பலரும் இணையத்திலும், HBO தொலைக்காட்சி அலைவரிசையிலும் வேறுசில ஊடக செயலிகள் மூலமும் தொடர்ந்து இந்த நாடகத்தை தொடர்ந்து வந்தனர். இறுதிப்பாகம் வெளியாக அண்மித்திருந்த நிலையில் பல்வேறு வகையான கேம் ஆஃப் த்ரோன்ஸ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட உடைகளும், படங்கள் பொறிக்கப்பட்ட பொருட்களும், கேம் ஆஃப் த்ரோன்ஸ் தாக்கத்தில் வடிவமைக்கப்பட்ட சீட்டுகளும், board கேம்களும் இணையத்தில் விற்பனையாகின.

இந்த டீவி தொடரின் தீவிர ரசிகர்களுக்கும் புதிதாய் இனி பார்க்கக் காத்திருக்கும் பார்வையாளர்களுக்கும் சேர்த்தே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. உங்கள் பின்னூட்டங்களை எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

கேம் ஆஃப் த்ரோன்ஸ் : ஒரு பார்வை.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சிம்மாசனம் 
படஉதவி : vox.com

21ஆம் நூற்றாண்டில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட ஆகச்சிறந்த நாடகங்களின் தரப்படுத்தலில் முதன்மை இடத்துக்கான முன்மொழிவுகளில் தட்டிக்கழிக்கப்பட முடியாத ஒரு பெயர் கேம் ஆஃப் த்ரோன்ஸ். சின்னத்திரையின் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் என அறியப்படும் அளவுக்கு நேர்த்தியும், பிரம்மாண்டமும், வலுவான ஒரு கதைக்களமும் கொண்டு அமைக்கப்பட்ட இந்த ஃபேன்டஸி ட்ராமா சமகாலத்தில் வெளியாகி உலகளாவிய ரீதியில் மாபெரும் வரவேற்புகளை பெற்ற ஃபேன்டஸி  திரைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டது. ஆகச்சிறந்த கதைக்களத்தையும்,பாத்திரப்படைப்பையும் கொண்டு உருவாக்கப்பட்ட போதிலும் சின்னத்திரை நாடகம் எனும் வரையறையின் விளைவால் உலகளாவிய அந்தஸ்தத்தை பெறுவதற்கு ஏனைய நாடகங்களால் முடியாமல் போனபோது, சின்னத்திரைக்கே உரிய கட்டுப்பாடுகளை உடைத்து வெள்ளித்திரைக்குரிய அந்தஸ்தை தட்டிச்சென்ற முதல் தொலைக்காட்சி நாடகம் கேம் ஆஃப் த்ரோன்ஸ். ஏறக்குறைய ஒரு தசாப்தமாக தொலைக்காட்சியில் வெளியாகி வந்த இந்நாடகத்தின் இறுதி அத்தியாயம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்டது. நேர்மறையானதும், எதிர்மறையானதுமான விமர்சனங்களுடன் முடிவுக்கு வந்துள்ள இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியினை குறித்த கண்ணோட்டமே இந்த ஆக்கம்.

சின்னதிரையின் ஒரு மைல் கல்

2001இல் வெளியான LORD OF THE RINGS மற்றும் HARRY POTTER படவரிசைகளின் வெற்றியை தொடர்ந்து, மக்கள் மனதில் உருவாகி இருந்த ஃபேன்டஸி மீதான காதலை பயன்படுத்திக்கொண்டு  HBO நிறுவனம் சின்னத்திரைக்கு உரிய ஒரு ஃபேன்டஸி தொடரை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டது. ஏனைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போலில்லாமல் வயது வந்தவர்களின் அனைத்து விதமான உணர்வுகளையும், விருப்பங்களையும் மிகவும் வெளிப்படையாக காட்சிப்படுத்தக்கூடியவாறு ஒரு நாடகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் சமகாலத்தில் வெளியாகிய வண்ணம் இருந்த ஜார்ஜ் R.R மார்ட்டினின் நாவல் வரிசையை அணுகினர் டேவிட் பெனிஆஃப் மற்றும் D.B.வெஸிஸ்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தயாரிப்பாளர்கள் டேவிட் பெனிஆஃப் மற்றும் D.B.வெஸிஸ்
படஉதவி : inc.com

2011 ஏப்ரல் 17ம் திகதி முதலாவது அத்தியாயத்தினை HBO தொலைக்காட்சி அலைவரிசை வெளியிட்டது. முதலாவது பாகத்தின் முதலாவது அத்தியாயமே இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு பெருத்த வரவேற்பை பெற்றது. இந்த முதல்பாகமானது 2009 இல் முதன்முறையாக தயாரிக்கப்பட்டு பார்வையாளர் முன்னோட்டத்துக்காக வெளியிடப்பட்ட போது திருப்திகரமான பின்னூட்டல்களை பெறாத காரணத்தினால் மீண்டும் முழுவதுமாக தயாரிக்கப்பட்டு வெளியானது. தயாரிப்பாளர்களின் இந்த அர்ப்பணிப்பு மிக்க தொழிற்பாடு தரமான ஒரு ஆரம்பத்தை தந்தது. தொடர்ந்து உலகமெங்கும் நல்லவரவேற்பை பெற்ற வண்ணம் இருந்த இந்நாடகவரிசையின் இறுதி பாகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் பதினோரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்தது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கும், பிரம்மாண்ட  பின்னணிகளுக்கும் என்றுமே குறைவில்லாத ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்துவந்தது. வயது வந்தவர்களுக்கான நிகழ்ச்சியாக இருந்தமையால் ரத்தம் படிந்த கொலைகளும், ஆபாச காட்சிகளும் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே காட்டப்பட்டிருந்தது. இதன் விளைவால் அத்தியாயங்கள் தோறும் படமாக்கல் செலவுகளும் உயர்ந்த வண்ணமே சென்றது. 6 அத்தியாயங்களுடன் வெளியான இறுதி பாகம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பட்ஜெட்டில் உருவானது. தொலைக்காட்சி வரலாற்றில் இத்தனை ஆடம்பரமாக உருவான முதல் நாடகம் இதுவே. இத்துணை பெரிய பொருட்ச்செலவில் உருவான இந்நாடகம் மக்கள் அங்கீகாரத்தை மட்டுமில்லாது, பல்வேறு விருதுகளையும் வென்றெடுத்தது. அமெரிக்காவின் பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கா வழங்கப்படும் Emmy Awards இல் இதுவரை [47] விருதுகளை பெற்ற ஒரே நிகழ்ச்சி கேம் ஆஃப் த்ரோன்ஸ். மேலும் 5 Screen Actors Guild Award விருதுகள் மற்றும் ஒரு Peabody Award என பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. பிரபல விமர்சன வலைத்தளங்களான Rotten Tomatoes [89%] மற்றும் IMDb [9.4/10] இல் உயர்ந்த மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

அடிப்படைக்கதை

வெஸ்டெரோஸ் எனும் பெருநிலப்பரப்பு. அதன் அதிகாரத்துக்காக மோதிக்கொள்ளும் எட்டு அரசகுடும்பங்கள். நெருப்பை உமிழும் டிராகன்களை வசப்படுத்தி வைத்திருந்த புதிய ஒரு குடும்பத்தின் வருகை. வந்தவர்கள் வென்றார்கள். வீழ்த்தப்பட்ட 1000 எதிரிகளின் வாட்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட ஒற்றை அரியாசனம், அதிகாரத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட மையப்புள்ளி. ஏனையவர்கள் அனைவரும் புதிய பேரரசின் சேவகர்கள் ஆயினர். காலங்கள் சில கடந்து சென்றன. பேரரசை ஆண்டவர்களில் சிலர் எல்லைமீறி அதிகாரங்களை செலுத்தலாயினர். பழைய அரச குடும்பங்கள் சில மீண்டும் ஒன்றிணைந்தன. சுதந்திரத்துக்காக அல்ல, பேரரசை ஆழும் குடும்பத்தை வேரறுப்பதற்க்காக. கிளர்ச்சிக்காரர்களின் எண்ணம் ஈடேறியது. பேரரசை ஆண்ட குடும்பம் ஏறக்குறைய அழிந்து போயிற்று, ஒரு சோடி வாரிசுகள் தவிர பிறிதெல்லாம் வாளுக்கு இறையாகின.

வெறுமையுற்று கிடந்த அரியாசனத்தை கிளர்ச்சி செய்த அரசகுடுமபங்களில் ஒன்று தட்டி சென்றது.ஆனால் அதனை மற்றையவர்கள் ஏற்புடையதாய் பார்க்கவில்லை. சூழ்ச்சியாலும், வஞ்சத்தாலும், போரினாலும், புத்தியினாலும் அந்த இரும்பு அரியாசனத்தை அடையும் போட்டி அவர்களுக்குள்ளே தோர்த வண்ணமே இருந்தது. இன்னொரு புறம் பறிக்கப்பட்ட தங்களின் பிறப்புரிமையை அடைய வேண்டும் என்ற கனவுடன் காத்திருக்கும் இரு வாரிசுகள். தங்களுக்கு நிகழவிருக்கும் உண்மையான பேராபத்தை உணராமல், அதிகாரத்துக்காக அடித்துக்கொள்ளும் இந்த வஞ்சமும் துரோகமும் நிரம்பிய நிலத்தில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு கணக்குக்காக மீண்டும் திரும்பி வரும் மிகப்பழமையான ஒரு எதிரி. இவர்களின் கதையே இந்நாடகம். ஜார்ஜ் R.R மார்ட்டின் எழுதிய நாவலான அ சோங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபையர் எனும் ஃபான்டஸி நாவலை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்ட இந்நாடகத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது ஜார்ஜ் R.R மார்ட்டினின் எழுத்துக்களில் இருந்த கற்பனையும், எதார்த்தமும், எதிர்பாராத திருப்பங்களுமே.

ஜார்ஜ் R.R மார்ட்டின் : சிருஷ்டி கர்த்தா

ஜார்ஜ் ரேமண்ட் ரிச்சர்ட் மார்ட்டின், 1948 செப்டம்பர் 20 ம் திகதி லோங்ஷோர்மன் ரேமண்ட் கொலின்ஸ் மார்ட்டின் மற்றும் மார்கெரெட் பிரேடி மார்ட்டின் தம்பதிகளின் இல்லற வாழ்வின் முதல் பரிசாக பிறந்தார். ஜார்ஜ் மார்ட்டின் பிறக்கும் பொது அவரின் குடும்பம் குறிப்பிடத்தக்க விதத்தில் எந்த விதமான செல்வாக்கும் கொண்டிருக்கவில்லை. சாதாரண கீழ் மத்திய வர்க்கம். மார்ட்டினின் ஆரம்ப காலத்தின் முதல் சில அத்தியாயங்கள்  பாட்டியின் வீட்டிலேயே கழிந்தது. 1953 இல் அரச வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு தொடர்மாடி குடியிருப்புக்கு மார்ட்டின் குடும்பம் நகர்ந்தது. அங்கிருந்து நான்கு தெருக்கள் கடந்து ஐந்தாவது தெருவில் ஜார்ஜின் ஆரம்பகால பள்ளிக்கூடம். தினமும் பாடசாலைக்கு நடந்து செல்வதே ஜார்ஜின் வாடிக்கை. இந்த ஐந்து தெரு நடைபயணம் ஜார்ஜின் வாழ்க்கையில் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உண்டுபண்ணியது.வீடு, பாடசாலை மற்றும் இரண்டுக்கும் இடையிலான நடை பயணம் என்று மிகவும் குறுகிப்போய் இருந்த மார்டினின் வாழ்க்கை அவரை புதிய இடங்களுக்கு பயணம் செய்யவும் புதியவற்றை அனுபவித்து பார்க்கவும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதனை நிறைவேற்றிக்கொள்ள அந்த சிறுவனின் கைகளில் இருந்த ஒரே வாய்ப்பு கற்பனை. கற்பனையின் வாயிலாக மார்ட்டின் வாழ்ந்த வாழ்க்கை பிற்காலத்தில் அவறது படைப்புகளில் பெரும் செல்வாக்கை செலுத்தியது.

பிரபல நாவலாசிரியர் ஜோர்ஜ் R.R மார்ட்டின்  
படஉதவி : aerogrammestudio.com

ஜார்ஜ் மார்டினின் குடும்பம் கீழ் மத்திய வர்க்கமாக இருந்த போதிலும், உண்மையில் மார்ட்டின் தனது தாய் வழியில் [பிரேடி குடுமத்தின் வழியே] செல்வந்த வாரிசாக இருந்திருக்க வேண்டியவர். பிரேடி  குடும்பம் அமெரிக்காவில் மிகப்பிரபல்யம் பெற்ற ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்திவந்தது. 1929 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்தநிலையின் விளைவாக பிரேடி குடும்பத்தின் வியாபாரம், வீடு, சொத்துக்கள் அனைத்தும் இல்லாமல் போயின. பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியில் பெரும்பாலும் தனக்கு கிடைத்திருக்க வேண்டிய செல்வந்த வாழ்க்கையையும், ஒழுங்கற்ற அரசியல் அதிகாரத்தால் அது பறிபோனதையும் நினைத்துக்கொள்வது உண்டாம். மார்ட்டின் வாழ்வில் நடந்த இந்த சம்பவங்களின் தாக்கம் கேம் ஆஃப் த்ரோன்ஸின் முதன்மை  கதாபாத்திரங்களில் ஒன்றான Daenerys Targaryen [தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட பிறப்புரிமைகளுக்காக போராடும் உயர்குல இளவரசி] இன் பாத்திரப்படைப்பில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாவல்களுக்கான கருத்தாக்கத்தை தந்த தன்னுடைய வாழ்நாள் நிகழ்வொன்றை மார்ட்டின்,பிரபல அமெரிக்கா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான THE LATE SHOW WITH STEPHEN COLBERT இல் பதிவு செய்தார். தன்னுடைய இளம்பருவத்தை பெரும்பாலும் நியூ ஜெர்சியின் கடலோர பகுதியான பேயோனில் கழித்து வந்தமையால், செல்லப்பிராணியாக வீட்டில் சிறிய வகை ஆமைகளையே ஜார்ஜ் வளர்த்து வந்தார். பெரியதொரு கண்ணாடி பெட்டியினுள் நீர் நிரப்பி, அதில் சிறிய தீவொன்றை உருவாக்கி, தன்னுடைய பொம்மை பொருட்களை பயன்படுத்தி அத்தீவில் ஒரு கோட்டையையும் செய்து வைத்தார். ஆரம்பத்தில் எல்லாம் சகஜமாகவே இருந்தது, சில நாட்களிலேயே ஆமைகள் ஒவ்வொன்றாக இறப்பதை கவனித்த ஜார்ஜ் மேலதிக கவனத்துடன் அவற்றை பார்த்துக்கொண்டார். எனினும் அவற்றின் இறப்பு வீதம் வீழ்ச்சியடையவில்லை. அந்த சிறிய வகை ஆமையின் ஆயுட்காலம் சிறியது என்பதை உணரக்கூடிய பக்குவத்தை அடைத்திருக்கத்த மார்ட்டின், அந்த ஆமைகள் தொட்டியில் இருக்கும் தீவை ஆட்சிசெய்வதற்காக ஒன்றையொன்று கொல்கின்றன எனும் முடிவுக்கு கொண்டுவந்தார். பின்னாட்களில் ஒரு பெரும் ஃபேன்டஸி நாவளுக்கான கதைக்களத்தை தந்தது இச்சிறு நிகழ்வே.

ஆரம்பப்பள்ளியில் இருந்து இரண்டாம் நிலை பள்ளிக்கு நகர்ந்த மார்டினின் வாழ்க்கையில் புதியதொரு வருகை நிகழ்ந்தது, அவை கோமிக்ஸ். TIME MACHINE, WAR OF THE WORLDS, DEER SLAYER என அக்காலகட்டத்தில் முன்னணியில் இருந்த பல்வேறு கோமிக்களின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் மார்ட்டின் ஒரு காமிக் பிரியர் ஆனார். ஷேக்ஸ்பியரின் HEMLET என்னும் கதை கோமிக் வடிவில் வெளியான போது மார்டின் மீது ஷேக்ஸ்பியரின் எழுத்துக்கள் தாக்கம் செலுத்த தொடங்கின. SUPER MAN, BAT MAN மற்றும்  ஸ்டான் லீ எழுத்தாக்கத்தில் உருவான FANTASTIC FOUR என காலப்போக்கில் மார்டினின் கோமிக் வ உலகத்துக்கு புதிய வருகைகள் வந்த வண்ணமே இருந்தன. காலத்தின் ஓட்டத்தில் கோமிக்ஸ் சிறிது ஓய்வு பெற்றுக்கொண்டதும், நாவல்கள் மீதான ஆர்வம் மார்டினை தொற்றிக்கொண்டது. டோல்கியன் எழுத்தில் உருவாகி உலகம் முழுவதும் பல லட்சம் மக்களின் ஆதரவை பெற்ற நாவலான LORD OF THE RINGS மார்டினின் கைகளுக்கு எட்டியது. கற்பனையில் உருவாகிய ஒரு உலகம் மக்களால் இத்துணை தூரம் கொண்டாடப்பட்டதை ஐந்து மார்ட்டின் தன்னுடைய கற்பனைகளுக்கு உருவம் எழுத்துக்களால் உருவம் தரத்தொடங்கினார்.

அ சோங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபையர்

இல்வாழ்க்கை இனிமையாக அமையாததால் புத்தகங்களையம், தன்னுடைய எழுத்துக்களையும் தனக்கு துணையாக்கி கொண்டார் மார்ட்டின். WAR OF THE ROSES என வர்ணிக்கப்படும் இங்கிலாந்து அரசஉரிமை போராட்டத்தை முன்மாதிரியாகக்கொண்டு, பிரபல்ய பிரெஞ்சு வரலாற்று நாவல் THE ACCURSED KING மற்றும் இங்கிலாந்தின் மத்தியகால வரலாற்றை கொண்டு உருவாக்கப்பட்ட IVANHOE எனும் வரலாற்று நாவல் ஆகியவற்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகளை பயன்படுத்தி அ சோங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபையர் நாவல் வரிசை உருவம் பெற்றது.

படஉதவி : nypl.org

மூன்றுபாகங்களில் முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்ட போதிலும், தற்போது ஏழு பாகங்களில் முடிப்பதற்கு முடிவாகியுள்ளது.இந்நாவல்வரிசையின் முதல் பாகமான  A Game of Thrones 1996 இல் வெளியானது. அதை தொடர்ந்து  A Clash of Kings 1998 இலும், A Storm of Swords 2000 இலும் வெளியானது. இவ்வரிசையில் நான்காவது பாகமான  A Feast for Crows 2005 நவம்பரில் வெளியாகி பெரும்வரவேற்பை பெற்றது. ஐந்தாம் பாகம் A Dance with Dragons 2011 ஜூலை மத்தியில் வெளியாகி  New York Times Bestseller List இல் தொடர்ந்த 88 வாரங்களுக்கு முதல் இடத்தில இருந்தது. தொடர்ந்து வந்த ஆண்டில் மிகச்சிறந்த நாவலுக்காக பல முன்னணி விருது நிகழ்ச்சிகளான Science fiction and fantasy’s Hugo Award, World Fantasy Award, Locus Poll Award மற்றும் The British Fantasy Award ஆகியவற்றுக்கு முன்மொழியப்பட்டதுடன், Locus Poll இன் மிகச்சிறந்த ஃபேன்டஸி நாவளுக்கான விருதை வென்றது. இந்நாவல். நாவல்வரிசையின் இறுதி இருபகுதிகளான The Winds of Winter மற்றும் A Dream of Spring ஆகியவை வெளியாக இருக்கும் நிலையில் 2018 ஏப்ரல் 25 அன்று கிளைக்கதைகள் சிலவற்றின் தொகுப்பாக Fire & Blood எனும் புத்தகம் வெளியானது.

பிட்டர் ஸ்வீட் முடிவு

கேம் ஆஃப் த்ரோன்ஸ் இன் ஏழு பாகங்களுக்கும் இருந்த சாதகமான பார்வையானது இந்த ஆண்டு வெளியான இறுதி பாகத்தில் வீழ்ச்சி கண்டது. எதிர்பாராத திருப்பங்களும், அதிரடி முடிவுகளுமாக செல்லும் மார்டினின் கதையின் இறுதி இரு பாகங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், டேவிட் பெனிஆஃப் மற்றும் D.B.வெஸிஸ் ஆகிய இரு தயாரிப்பாளர்களும் மார்டினுடன் இணைந்து திட்டமிட்டு இறுதி மூன்று பாகங்களையும் உருவாக்கினார். எனினும் இறுதி பாகத்தின் ஒளியமைப்பு மற்றும் அது முடிவடைந்த விதம் என்பவை பார்வையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இறுதி பாகத்தை மீண்டும் கதை திருத்தத்துடன் தயாரிக்கக்கோரி ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரால் கையெழுதிடப்பட்டு மனுவொன்று HBO தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. இன்னொரு இறுதிப்பகம் வெளியாகுமா என்பது நிச்சயமற்ற போதிலும் HBO நிறுவனம், அ சோங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபையர் நாவல் வரிசையில் இருந்து ஒரு முந்தைய கதைபகுதியை [Game of Thrones prequel] நாடகமாக்குவதற்கு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் மீண்டும் மார்டினின் கற்பனை உலகத்தில் சில காலங்களை கழிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்

Related Articles