தேர்தலை நோக்கி செல்ல முடியுமா?
மாகாண சபைத் தேர்தலினை இந்த சந்தர்ப்பத்திலும் நடத்த முடியும் அதற்காக விடயப் பொறுப்பு அமைச்சரின், அரசாங்கத்தின் அனுமதியும் தேவையும் மாத்திரமே அவசியம். காரணம் காலாவதியாகிவிட்ட மாகாண சபை தொடர்பில் ஏற்கனவே பல்வேறுபட்ட சர்ச்சை நிலைகள் காணப்படுகின்றன. அரசியல் கட்சிகளும் இத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் தீவிரமாக உள்ளன.
அடுத்தது ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை இப்போது உடனடியாக நடத்த முடியுமா என்றால். முடியாது என்ற பதிலையே அரசியலமைப்பு தருகின்றது. 2024 ஒக்டோம்பர் – செப்டம்பர் காலப்பகுதியிலேயே இத் தேர்தலை நடத்த முடியும். பதவியில் இருக்குமோர் ஜனாதிபதி பதவி விலகுவார் எனின் நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய ஜனாதிபதி தேர்தெடுக்கப்படுவார். அவர் பழைய ஜனாபதிபதின் பதவிக்காலம் முடியும் வரை ஜனாதிபதி பதவியில் தொடருவார். இம்முறையின் மூலமே இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அப்பதவி சென்றது. ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் தேர்தல் மூலம் புதியவரை தேர்தெடுக்க வேண்டும் என்று அரசியலமைப்பு கூறவில்லை.
இலங்கை வரலாற்றில் இவ்வாறான பதவி விலகல் நடைபெற்றது இதுவே முதல் முறை. 1993களில் அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் டி.பி.விஜேதுங்க நாடாளுமன்றம் மூலமாக ஜனாதிபதியான பதவியேற்றார். இது தவிர இலங்கையின் வரலாற்றில் இவ்வாறான ஜனாதிபதி மாற்றம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போன்று அரசியல் ரீதியில் பல்வேறு பூசல்களையும், குழப்பநிலைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்துள்ள நிலையில் பொதுத்தேர்தல் ஒன்றிக்கு செல்லமுடியுமா? என்ற கேள்வியும் எழுகின்றது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதியதியினால் நாடாளுமன்றமானது முற்றாக கலைக்கப்பட்டு மீண்டுமோர் பொதுத்தேர்தலுக்கு செல்லமுடியும். அவ்வாறு இல்லையெனின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையானோரின் மூலம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் யோசனை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதல் மீதான சபாநாயகரின் அனுமதி, முடிவு என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தை கலைத்து பின்னர் பொதுத்தேர்தலுக்கு செல்லமுடியும். அதன் அடிப்படையில் பார்க்கும் போது பொதுத்தேர்தல் ஒன்றின் பிற்புலத்திலை ஏற்படுத்திக் கொள்ள முடியுமாயின் தேர்தலை நடத்துவது சாத்தியமானதாகும்.
“நாட்டில் இப்படியாதோர் குழப்பநிலையும், ஸ்தீரமன்ற பொருளாதாரமும் காணப்படுகையில் பணத்தினை அச்சடித்து ஏராளமான செலவின் மூலம் தேர்தல்களை நடத்திக் கொண்டு இருப்பதால், இன்னுமின்னும் நாடு வீழ்ச்சியையே சந்திக்கும். அதனால் இப்போதைய ஆட்சியாளர்கள் முடிந்த வரையில் இப்படியே நாட்டை கொண்டு செல்லட்டும், அதன் பின்னர் பொருளாதார, அரசியல் குழப்ப நிலைகள் ஸ்தீரமடைந்த பின்னர் தேர்தல்களை நடத்துவது நல்லது” என்று ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
மற்றுமோர் தரப்பு “இந்த இக்கட்டான சூழ்நிலைகளை சரி செய்ய வேண்டுமாயின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதன் போதே மக்களின் உரிமைகளும், ஜனநாயகமும், அபிலாஷைகளும் பூர்த்தி செய்யப்படும்” என்று கூறுகின்றனர். சில கட்சிகளும் இந்தக் கூற்றை கூறிவருகின்றன. நாட்டில் பெரும்பான்மையான மக்களின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கின்றது என்றும் கூறிவிடலாம். சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பிற வழிகளிலும் மக்களால் இக்கருத்து வலுப்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றது. “சமூக வலைத்தளங்களில் கூறப்படும் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது அது எப்படி பொதுக்கருத்தாக மாறும்” என்றும் சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இலங்கையில் இப்படியோர் அரசியல் குழப்பமும், மாற்றத்திற்கான தோற்றமும் உருவாகியது சமூக வலைத்தளங்களின் ஊடாகவே என்பதை மறந்துவிடல் ஆகாது.
இவ்விடத்தில் முக்கியமான ஒன்று மக்கள் கோரிக்கை தேர்தல் எனும் போது அரசியல்வாதிகள் அதனை வேறு கோணத்தில் பார்க்கும் நிலைமையும் இலங்கையில் காணப்படுகின்றது. “ போராட்டம், போராட்டம் என்று மக்கள் கேட்கும் போது தேர்தல் நடத்திட முடியாது. அப்படி பார்த்தால் அரசாங்கம் என்று எதுவும் தேவையில்லை” என்ற வகையிலான கருத்துகளை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அவ்வாறான கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் எதுவானபோதும் மக்களுக்காகவே நாடு. மக்கள் அபிப்பிராயம் எதுவோ அதற்கு தலைவணங்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கும் சரி, அரசியல்வாதிகளுக்கும் சரி இருக்கின்றது. முக்கியமாக “அரசியல்வாதிகள் வாழ்வது மக்களினால், அவர்களின் பணத்திலேயே தவிர மக்கள் வாழ்வது அரசியல்வாதிகளினால் அல்ல” என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யாருக்கு தேர்தல் அவசியமாகின்றது?
எப்போதுமே தேர்தல் என்பது எதிர்கட்சியின் பிரதான கோரிக்கையாக காணப்படும். ஒரு தேர்தல் முடிந்த உடனேயே அவர்கள் அடுத்த தேர்தலுக்கான பிரச்சாரத்தினை ஆரம்பித்துவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பர். இந்த அரசியல் கலாச்சாரம் தொன்று தொட்டு வரும் மரபு. மாறாக தேர்தல் காலப்பகுதி வரும் வரையில் அரசாங்கத்திற்கு உதவி செய்து நாட்டை முன்னேற்றும் செயற்திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்குவது என்பது மிகக் குறைவே. இப்போதும் அதுவே நடக்கின்றது. தன்னால் தீர்வுகளை கொடுக்க முடியும் அதற்கு தான் அதிகாரத்தில் அமர வேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்கின்றார்களே தவிர, எப்படி இந்த பொருளாதார சிக்கலை தீர்க்கலாம் என்ற ஒத்துழைப்பு மிக மிக குறைவே. அவர்களின் தேவை அவர்களின் அதிகார பலம் அது ஒன்று மாத்திரமே. குறிப்பாக மக்களின் நலத்திற்கான தேர்தலை இவர்கள் எதிர்பார்க்கின்றார்களா என்பது கேள்விக்குறிதான்.
மறுபக்கம் தேர்தல் அவசியம் என்ற கோரிக்கை மக்களிடையே வலுப்பெற்று வருகின்றது. அது அவர்கள் உரிமை அவர்களின் தேவை. இத்தனை வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள் செய்தது என்ன? அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற வளத்தில் நாட்டுக்காக செய்தது என்ன? இப்போது இந்த நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டு உள்ளது என்றால் அதற்கான காரணங்கள் யார்? என்ற கேள்விகளால் மக்களால் மக்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது நியாயமும் கூட இனி இந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றலாம் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது.
அதேபோல இலங்கை மீது உண்மையான அக்கறை கொண்ட நாடுகள் அல்லது பொருளாதார தேவைக்காக வர்த்தக தேவைக்காக அக்கறை கொண்டுள்ள சர்வதேச நாடுகள் தேர்தல் ஒன்று நடந்து மக்களின் அனுமதியோடு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற தலைமைகள் உருவாவதை விரும்புகின்றன. காரணம் ஸ்தீரமற்ற நாடுகளில் அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. ஒரு சுற்றுலாப் பயணி கூட பொருளாதார, சமூக காரணிகளில் நிலையில்லாத நாட்டுக்கு செல்வதை விரும்புவதில்லை அது போலவே இதுவும்.
தேர்தல் அவசியம் இல்லை என்பவர்கள் யார்?
தேர்தல் தேவையில்லை என்று கூறுகின்றவர்களில் பிரதானமானவர்கள் ஆளும் தரப்பே. அதாவது அதிகாரத்தில் இருக்கும் வர்க்கமே தேர்தலை கண்டு அச்சப்படுகின்றது. காரணம் அவர்களுக்கு தன்னுடைய அதிகாரம், பதவி இல்லாது போய்விடும் என்ற அச்சம் இருப்பதால். 5 வருடங்கள் பூர்த்தியை கடந்து விட எப்போதுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரயத்தனத்தோடு இருப்பார்கள். அப்போதே அவர்களுடைய வரப்பிரசாதங்கள் கிட்டும். இப்போதுள்ள அரசியல்வாதிகள் அனைவர் பேரிலும் மக்கள் வெறுப்பாகவே உள்ளனர் அதனால் மீண்டும் அவர்களால் பதவிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கை குறைவே. எனவே அவர்கள் தேர்தலை புறக்கணிப்பதில் கவனமான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவர்.
அதேபோல் பதவியில் உள்ள ஜனாதிபதி தேர்தலை கண்டு அச்சப்படுவார். தேர்தல் நடந்து அவர் நினைக்காத கட்சி எதிர்ப்பக்கத்திற்கு வந்து சேரும் என்றால் அவரால் நினைத்தது போல் அரசாங்கத்தையும், நாடாளுமன்றத்தையும் கையாள முடியாத நிலை ஏற்படும். எனவே தன்னுடைய அதிகாரத்தில் முனைப்பாக இருக்கும் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதை எப்போதும் விரும்புவதில்லை. பதவி இருக்கும் வரையில் அதனை தக்க வைத்துக் கொள்ளவே விரும்புவார். மற்றைய வகையில் இந்த அரசியல் சதுரங்கத்தை புரிந்து கொள்ள முடியாதவர்கள் மேலோட்டமாக இந்த பிரச்சினைகளை பார்ப்பவர்கள், அரசியலின் கைக்கூலிகள் போன்ற தரப்பினரும் தேர்தலை விரும்புவதில்லை.
தேர்தல் அவசியமா?
இப்போதைய நிலையில் தேர்தல் அவசியமா? என்றால் ஆம் என்று கூறலாம். தேர்தலுக்கான செலவுகள் அதிகம் நாடு எதிர்நோக்கியுள்ள சிக்கலான பொருளாதார நிலையில் தேர்தல் நடத்துவது கடினம்தான், ஆனாலும் அதனை விடவும் மோசமானது இப்படியே செல்வது. நிலையற்ற பொருளாதாரம், வாழ்வாதார சிக்கல்கள், மக்களுக்கு வாழ முடியாத நிலை, விருப்பமற்ற தலைமைகள் போன்றவற்றை மாற்றம் செய்ய வேண்டியதோடு மக்களின் அபிப்ராயங்களும் அபிலாஷைகளும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயமும் உள்ளது.
இப்படியே சென்று விடலாம் என எண்ணும் போது அதனால் ஏற்படும் சரிவு மிக அதிகம். அதனால் எப்படியாவது தேர்தல் நடத்தி மக்கள் விருப்ப தலைமைகள் உருவாகிடல் வேண்டும். அதன்பின்னரே படிப்படியாக இந்த இடியாப்ப சிக்கலை சரி செய்துவிட முடியும். எப்போதும் இலங்கை மக்கள் தனித்து சுயமாக சிந்தித்து செயல்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. அப்படி நடக்கும் போது பாதிப்பு அவர்களுக்கு ஏற்படும். அதனால் ஏதாவது ஒரு சிக்கலை, பிரச்சினையை அவர்களாக உருவாக்கி கொண்டே இருப்பது இலங்கையின் அரசியல் கலாச்சாரங்களில் ஒன்று. இந்த நிலைமைகள் மாற வேண்டும் என்றால் தேர்தல் ஒன்றிக்கு செல்லவேண்டிய அவசியம் தற்போதைய தேவை.