.jpg?w=1200)
பல நேரங்களில் நாம் அலட்சியமாகச் செய்யும் சின்னச் சின்ன விடயங்கள் எந்த அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது நமக்குப் புரிவதில்லை. பிளாஸ்டிக் பயன்பாடு தொடங்கி இதுமாதிரியான சிறிய விடயங்கள்தான் நம்முடன் இந்தப் பூமியைப் பகிரும் மற்ற உயிரினங்களைப் பெருமளவில் பாதிக்கின்றன. அப்படி ஒரு பாதிப்பு இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது; ஒரு புகைப்படம் வடிவில்…
பறவைகளைப் புகைப்படம் எடுப்பவர் கரேன் மேசன். கடந்த மாதம் ஃபுளோரிடா கடற்கரையில் எப்போதும்போல பறவைகளைப் படம்பிடித்துக்கொண்டு இருந்திருக்கிறார். தன் குட்டிக்காக எடுத்துவந்த உணவை அன்பாக தாய் பிளாக் ஸ்கிம்மர் (Black Skimmer) பறவை கொடுக்கும் காட்சி அவரது கண்ணில் தென்பட்டிருக்கிறது. உடனே அதைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். ஆனால், சில நிமிடங்களுக்கு பிறகுதான் அவருக்கு ஒன்று புரிந்திருக்கிறது. தாய் எடுத்து வந்தது உணவில்லை, மீதம் விடப்பட்ட ஒரு சிறிய சிகரெட் துண்டு என்பது.
இந்தப் புகைப்படத்தை “If you smoke, please don’t leave your butts behind.” ( தயவுசெய்து புகைபிடித்தால் மீதிமிருப்பதை கீழே விட்டுச் செல்லாதீர்கள்) என்று முகப்புத்தகத்தில் அவர் பதிவிட இது கடந்த மாதம் உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடல் பறவைகள் குட்டிகளுக்காக உணவுதேடி கடலுக்குச் செல்வது வழக்கமாக நடப்பது. ஆனால், இப்போது நாம் கடலில் கொட்டிவைத்திருக்கும் குப்பைகளால் அவற்றுக்கு உணவு எது என்பதே சரியாகத் தெரிவதில்லை. அவ்வப்போது இந்தக் குப்பைகளை எடுத்து உணவா, இல்லையா என்று அவை சோதித்துப் பார்க்கின்றன. இந்த நிகழ்வைப் போன்று சில நேரங்களில் அவற்றால் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியாமலும் போய்விடுகிறது என்பது கவலைக்கிடமானது.
‘வெறும் சிகரெட்தானே?’ என நாம் நினைக்கலாம். ஆனால், பிளாஸ்டிக்கைவிடவும் கடலை அதிகம் ஆக்கிரமித்திருக்கும் சிறிய குப்பை, மீதம் விடப்படும் சிகரெட் துண்டுகள்தானாம். வாஷிங்டன் அரசு சாரா கடல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று 1980-ம் ஆண்டு முதல் கடலில் கலந்திருக்கும் சிகரெட் துண்டுகளைச் சேகரித்துவந்துள்ளது. தற்போது வரை இப்படியான 6 கோடி துண்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடற்கரைகளில் பயன்படுத்தப்படும் சிகரெட் மட்டுமல்லாமல் அனைத்து ஆறுகளில் இருந்து வருவது, நேரடியாகக் கடலில் கொட்டப்படும் குப்பைகளில் இருப்பது என சிகரெட் பல வழிகளில் இங்கு வந்துசேருகிறது.

சான் டியாகோ மாநில பல்கலைக்கழகத்தின் உலக சுகாதார பேராசிரியர் தாமஸ் நோவோட்னி ஒரு ஆய்வை மேற்கொண்டார். சிகரெட் துண்டுகள் போடப்பட்டு அகற்றப்பட்ட தண்ணீரில் மீன்கள் விடப்படுகின்றன. நான்கு நாட்களுக்குப்பிறகு அதில் பாதி மீன்கள் இறந்துவிட்டன. இதன் மூலம் நீர்வாழ் சூழலுக்குள் நுழையும் சிகரெட் துண்டுகள் நச்சுத்தன்மையுள்ளவை மற்றும் உயிரினங்களுக்கு ஆபத்தானவை என்பதை தெரியப்படுத்தினார்.
எப்படி இவ்வளவு தூர பயணத்தை இந்த சிகரெட் துண்டுகள் தாக்குப்பிடிக்கின்றன என நீங்கள் கேட்கலாம். நுரையீரல் புற்றுநோய் அச்சங்களை குறைக்கும் நோக்கில் 1950 களில் பிளாஸ்டிக் புகை வடிப்பான்கள் (cigarette filters ) கண்டுபிடிக்கப்பட்டன.

பட உதவி : edition.cnn.com
புகையிலை புகைப்பழக்கத்தில் தீங்கு விளைவிக்கும் சுமார் 250 இரசாயனங்கள் உள்ளன. இதில் கனரக உலோகங்கள், ஆர்சனிக் மற்றும் பொலோனியம் -210 ஆகியவை கொலைகளுக்கு உபயோகப்படுத்துவது. இந்த இரசாயனங்கள் குறைந்தது 69 புற்றுநோயை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. இந்நச்சுப் பதார்த்தங்களை தடுப்பதன் மூலம் நுரையீரல் புற்றுநோயைக் குறைக்க முடியும் என்ற எண்ணத்தில் புகை வடிப்பான்கள் வடிவமைக்கப்பட்டன.
இருப்பினும், 1960 களின் நடுப்பகுதியில், ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் வடிகட்ட முயற்சிக்கும் தார் (tar ) மற்றும் நிகோடின் (nicotine ) ஆகியவைதான் புகைபிடிப்பவர்களுக்கு மனநிறைவளிக்கும் பதார்த்தங்கள் என்பதை உணர்ந்தனர்.

உண்மையில் புகை வடிப்பான்கள் சில நச்சுக்களை தடுத்த அதேவேளையில், அவை சிகரெட் புகையை உள்ளிழுக்க மென்மையானதாக மாறின. இது புகைபிடிப்பவர்களை அடிக்கடி புகையை உள்ளிழுக்க ஊக்குவித்தது. அதுமட்டுமன்றி புகை வடிப்பான்கள் புகையிலை எரியும் வழியையும் மாற்றியமைத்ததான. இதன் விளைவாக அவை வெளிவிடும் நச்சுக்களின் அளவும் அதிகரித்தது.
வடிப்பான்களுடன் கூடிய சிகரெட்டுகள் மூலம் பொதுவான நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் விகிதம் குறைந்த அதே சமயம் அடினோகார்சினோமா – adenocarcinoma எனும் மற்றுமொருவகை நுரையீரல் புற்றுநோய் அதிகமாகியது.

“இரண்டு வகையான புற்றுநோய்களின் உயிர்வாழ்வு விகிதங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை” என்று பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக (Pittsburgh Medical Center) மருத்துவ மையத்தின் நுரையீரல் நிபுணர் டேவிட் வில்சன் கூறுகிறார், மேலும் இவர் “வடிப்பான்கள் ஒட்டுமொத்த நுரையீரல் புற்றுநோய்க்கும் ஒரு பயனுள்ள தீர்வை ஏற்படுத்துகின்றன என்பதற்கு எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லை. “
சுருக்கமாக சொன்னால் புகை வடிப்பான்கள் புகைப்பிடிப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவில்லை. ஆனால் அவை நம் சூழலை மோசமாக்கின.
இப்படி மனிதனால் மற்ற உயிரினங்கள் சிக்கலைச் சந்திப்பது இன்று, நேற்று கதை இல்லை. இது தொடர்ச்சியாக நடந்துகொண்டேதான் இருக்கிறது. தினம் இதுபோன்று எதாவது ஒரு நிகழ்வு நமக்குத் தெரியவந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், இதற்கு தீர்வாக நாம் என்ன செய்யப்போகிறோம்?