Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

COVID-19 முடக்கத்தின் போது நாட்பட்ட நோயாளர்கள் எதிர்கொண்ட சவால்களும் சிரமங்களும்

ஏப்ரல் 19 ஆம் திகதி அன்று, கொழும்பிலிருந்து தெற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் பன்னிபிட்டியவில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் நோயாளி ஒருவர் COVID-19 தொற்றுக்குள்ளானதை தொடர்ந்து அம் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது. அம் மருத்துவமனையில் கடமைபுரிந்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் உட்பட அறுபத்தொன்பது ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

இம் முடிவானது எதிர்பாராத பல பின்விளைவுகளை ஏற்படுத்தியது: இம் மருத்துவமனையில் வழக்கமாக டயாலிசிஸ் பெறும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் அவர்களுக்கு தேவையான மருத்துவ பராமரிப்புகளை பெறவழியின்றி அல்லலுற்றனர். 

“ஏனைய தனியார் மருத்துவமனைகளும் எங்களை சிகிச்சைக்காக அனுமதிக்க மறுத்துவிட்டன. அரசாங்க மருத்துவமனைகள் எங்களில் சிலரை மட்டும் குறுகிய காலத்திற்கு அனுமதிக்க முடியும் எனக் கூறின”  என  சுனேத் லியானகே (சிகிச்சை பெறுபவரின் மகன்) என்பவர் roar ஊடகத்திடம் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியினை கொண்டவர்களும் மற்றும் வெளிக்கூற முடியாத நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழமையாக தேவைப்படும் மருந்துகள், பரிசோதனைகள் அத்தியாவசிய மருத்துவ உதவியைப் பெறுவதை கடினமாக்கியது. 52 நாட்கள் நீடித்த நாடுதழுவிய முடக்கம் மற்றும் ஊரடங்கு அவர்களின் அந்  நிலைமையை இன்னும் மோசமாக்கியது.

நீண்ட நாட்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்  மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு தேவைப்படுகிறது. அவர்கள் கண்டிப்பான சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும்.
பட உதவி: VII / எட் காஷி

‘சிகிச்சை மறுக்கப்பட்டது’

லியனகேவின் 68 வயதான தந்தை – அசோக, ஓய்வு பெற்ற முன்னாள் பாடசாலை அதிபர் ஆவார். அவர் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பது ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட பின்னர் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சையைத் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் இரு முறை, ஒவ்வொரு சிகிச்சைக்கும் இடையில் இரு நாள் இடைவெளியுடன் அவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற வேண்டும். ஆனால் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதால் அசோகாவினால் வழமையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

“47 சிறுநீரக நோயாளிகள் அம் மருத்துவமனையில் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சையைப் பெற்றுவந்தனர். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் அம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவ்வப்போது வருகை தந்தனர். அவர்கள் பன்னிபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதை அறியத் தந்தபோது அவர்கள் அனைவருக்குமான மருத்துவமனை பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள் மறுக்கப்பட்டன” என்று லியனகே தெரிவித்தார்.

சிறுநீரக நோயாளிகளுக்கு அதுவும் குறிப்பாக அறியப்படாத நோய்க்காரணியினால் நீண்டகாலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏனைய மருந்துகளைத் தவிர்த்து தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகிறது. இந் நோயாளர்களுக்கும் அவர்களை பராமரிப்பாளர்களுக்கும் (பெரும்பாலும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள்), வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது மற்றும் ஊரடங்கு உத்தரவின் விளைவாக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சமாளிப்பது என்பன பெரும்பாலும் சாத்தியமற்றதாகும்.

சிறுநீரக நோயாளர்கள் வழமைப்போல் டயாலிசிஸ் பெற வேண்டும் என தெளிவான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டு இருந்தாலும், அசோக லியானகே மற்றும் அவர் அறிந்த ஏனைய சிறுநீரக நோயாளிகளில் பல சிரமங்களுக்கு ஆளாக நேர்ந்தது.

“என் தந்தைக்கு சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. அவர் ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று சிகிச்சை பெற வேண்டும், ஆனால் அதனை அன்று பெற்றுக்கொள்ள முடியவில்லை,” என லியானகே கூறினார். தொடர்ந்து “எங்களால் ஏப்ரல் 26 ஆம் திகதி மற்றுமொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி பெறமுடிந்தது, ஏனென்றால் அம் மருத்துவமனையில் நாளொன்றுக்கு மூன்று சிறுநீரக நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். நான் எவ்வாறு என் தந்தை அவ்வளவு காலம் துன்பப்படுவதை சகித்துக்கொள்ள முடியும்?” எனவும் கலவை தெரிவித்தார்.

நோயெதிர்ப்பு குறைபாடு

60 வயதான  கலானி*, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மூன்றாம் நிலை கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்து, இரு வாரங்களுக்கு ஒரு முறை அவர் பரிசோதனைகளுக்காக  மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இருப்பினும், கீமோதெரபி மருந்துகளின் விளைவாக இரத்த அறிக்கைகளில் அடிக்கடி நிகழக்கூடிய மாறுபாடுகள் காரணமாக, அவர் உடனடியாக அவரது புற்றுநோயியல் நிபுணரைப் சந்திக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தபடியால், உடனடியாக  வைத்தியரை அணுகுவது அவருக்கு சவாலாக அமைந்தது. இந் நெருக்கடியின் போது கைவசமிருக்கும் குறைந்த அளவிலான வளங்கள் அனைத்து நோயாளிகளுக்கும் கிடைக்கும் வண்ணம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், ஊரடங்கு உத்தரவின் போது புற்றுநோயாளிகளை முறையாக நிர்வகித்திட மருத்துவமனைகளுக்கு இலங்கை மருத்துவ சங்கம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

“நாங்கள் தொடர்ந்து மருத்துவமனைக்குச் செல்ல முடியாது என்பதாலும், அவசியம்  ஏற்படுமாயின் மாத்திரமே செல்லமுடியும் என்பதாலும், என் தாயின் புற்றுநோயியல் நிபுணர் நாங்கள் வீட்டிலேயே என்ன செய்ய வேண்டும் என்பதனை எங்களுக்கு அறிவுறுத்தினார்,” என கலானியின் மகள் ஜனித்ரி* roar Media விற்கு தெரிவித்தார்.

நாடு முடக்கப்பட்ட இரண்டாம் வாரத்தின் போது கலானி ஏற்கனவே திட்டமிடப்பட்ட கீமோதெரபி சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்பட்டார். “ஒரு கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு, அவரது உடல்நிலையை கட்டுப்படுத்த அவருக்கு தடுப்பூசி போட வேண்டியிருக்கும் – பொதுவாக இதனை மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந் நேரத்தில் எங்களால் அதனைச் செய்ய முடியவில்லை, ஏனெனில் அவரது புற்றுநோயியல் நிபுணர் எம்மை மருத்துவமனைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்” எனவும் ஜனித்ரி தெரிவித்தார்.

பாதுகாப்பு முகமூடி அணிந்த பெண்ணொருவர்  கொழும்புக்கு அருகிலுள்ள தேசிய தொற்று நோய் நிறுவன (ஐ.டி.எச்) வளாகத்தை விட்டு வெளியேறுகிறார்.
பட உதவி: நூர்ஃபோட்டோ / அகில ஜெயவர்தனா

இருதயம் 

செலின் டி ஆண்ட்ராடோ 78 வயதானவர், நீரிழிவு மற்றும் தலைசுற்றலை கட்டுப்படுத்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறார், அதே நேரத்தில் பெரிகார்டியல் எஃப்யூஷன் இருதய நோயிலிருந்தும் குணமடைந்து வருகிறார்.

“பெரிகார்டியல் எப்யூஷன் என்பது இருதயத்தை சுற்றியுள்ள பெரிகார்டியம் எனப்படும் இரு உறைகளுக்கிடையிலான மத்தியப் பகுதி திரவத்தால் நிரம்பி இருதயத்தை அழுத்தும் செயற்பாடு ஆகும்” என செலினின் பேரன் மகேஷ் roar Media விற்கு தெரிவித்தார். “ஆகவே நீங்கள் ஏதேனும் கடினமான செயலைச் செய்தால், அக்கடின உழைப்பு சுவாசத்திற்கும் தலைச்சுற்றலுக்கும் வழிவகுக்கிறது, ஏனெனில் இருதயம் இரத்தத்தை பாய்ச்சுவதிலிருந்து கட்டுப்படுத்தப்படுகிறது.” என்றார் மகேஷ்.

மார்ச் மாத ஆரம்பத்தில், தனது கால்களில் வீக்கம் ஏற்பட்டதாக,  டி ஆண்ட்ராடோ  வருத்தம் தெரிவித்தார். அவரது மருத்துவர் அவருடைய மருந்தை மாற்றியதாகவும், மேலும் கவலைப்பட ஒன்றுமில்லை என அவருக்கு உறுதியளித்ததாகவும் அறிவித்தார். ஆனால் அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்து அவரது தலைசுற்றலை அதிகமாக்கியது, படிப்படியாக அவர் பசி உணர்வையும் இழந்துவந்துள்ளார்.

“முடக்ககாலம் தீவிரமடைந்த போது, அவருக்கு தலைசுற்றல் மற்றும் வீக்கம்  ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாங்கள் Medi-Calls இற்கு அழைத்தோம், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவர் ஒருவர் வருகை தந்தார்.” என மகேஷ் டி ஆண்ட்ராடோ தெரிவித்தார்.

செலின் டி ஆண்ட்ராடோவிற்கு அதிர்ஷ்ட்டம் கைகூடியிருந்தது. ஏனெனில் Medi-Call போன்ற சிறந்த திறன் வாய்ந்த தனியார் அவசர மருத்துவ சேவைகளை அவரால் அணுக முடிந்தது. மருத்துவர் அவருடன் அமைதியான முறையில் பேசியபடி அவரை சிறப்பாக பரிசோதித்தார்,  மேலும் அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துக்கான மாற்று அளவையும் பரிந்துரைத்தார்.

அவரது மருந்தை வாங்கும் போது கூட, அவரது வழமையான மருந்தாளரை  தொடர்பு கொண்டு அண்மையில் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விநியோக முறையில் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடிந்தது. “நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தேவையான மருந்துகளின் பட்டியலை அனுப்புவதும், தேவைப்பட்டால் மருந்துகளின் படத்தை இணைப்பதும் மட்டுமே” என அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அங்கியுடன் இருக்கும் மருத்துவ அதிகாரி மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம்,  படையினரால் பாதுகாக்கப்படுகின்றனர். ஒளிப்பட உதவி: AFP

இருப்பினும், அனைவருக்கும் இவ்வாறான அதிர்ஷ்டவசமான சந்தர்ப்பங்கள் அமைந்து விடவில்லை.

“வழமையாக வருகை தருபவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என மருத்துவமனை எங்களிடம் கூறியதால், நாங்கள் தடுப்பூசிகளை வாங்கி எங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டியிருந்தது” என்று ஜனித்ரி தெரிவித்தார். ஊரடங்கு உத்தரவினால் மற்றும் அவருக்கு வேண்டிய நேரத்தில்  அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையினால், கலானி தற்போது தனது தடுப்பூசிகளை அயலில் உள்ள ஓய்வுபெற்ற செவிலியர் ஒருவரின் உதவியுடன் பெற்றுக்கொள்கிறார். “அவர் எங்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆவார். என் அம்மாவின் நிலை பற்றி அவர் கேள்விப்பட்டபோது, அவர் எங்களுக்கு உதவ ஒப்புக்கொண்டார். ”

ஆனால் அசோக லியனகேவின் விடயத்திலோ, மக்கள் மேற்கொண்ட பாரியதொரு எதிர்ப்பின் பின்னரே அதற்கு தீர்வொன்று வந்தது.

தற்காலிகமாக மூடப்பட்ட அத் தனியார் மருத்துவமனை ஆறு நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 24 ஆம் திகதி அன்று, மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் தனது தந்தைக்கு  டயாலிசிஸ் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு மீண்டும் சென்றவர்களின் முதல்பட்டியலில் லியனகேவும் ஒருவர் ஆவார்.

அன்று நாம் (roar) அவருடன் தொலைபேசியில் உரையாடிய போது: அவர், தனது தந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு, சில மணி நேரம் ஓய்வெடுக்க  வீட்டுக்கு  வந்ததாக கூறினார். இரு நாட்கலாக அவர் சரியாக உறங்கியிருக்கவில்லை. “ இறுதியில் என் தந்தைக்கு தேவையான சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடிந்தது. அவர் பல நாட்களாக கஷ்டப்பட்டார். அவருடன் சேர்ந்து நாங்களும் கஷ்டப்பட்டோம். ஏனைய நோயாளர்களுக்கும் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான நியமனங்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன. தற்போது முடிவொன்றுக்கு எட்டப்பட்டுள்ளதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ”என அவர் மன நிம்மதியுடன் தெரிவித்தார்.

தாமதமாக்கப்பட்ட சிகிச்சைகள்

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு நாட்டு மக்கள் மீண்டு வருவதால், நோயாளர்கள் மிகவும் தாமதமாக்கப்பட்ட சிகிச்சைகளை நாடி மருத்துமனைகளுக்கு அதிகளவில் வருகைதருகிறார்கள். முடக்கத்தினால் தாமதமாக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள அதிகளவில் வருகைதரும் நோயாளர்களின் திடீர் வருகையினை புதியதொரு சவாலாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் எதிர்கொள்கின்றன. மேலும், வழங்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் காரணமாக  மருத்துவமனை ஊழியர்களுக்கு அதிக கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கடினமான விடயமாக அமைந்துள்ளது. அதிக நேரம் தங்களது முறை வரும்வரை  காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் நோயாளர்கள் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் ஜூன் 8 ஆம் திகதி திங்கட்கிழமை, இலங்கையின் தேசிய மருத்துவமனையின் இருதயவியல் பிரிவின் வளாகத்தின் முன்னால் பெரும் திரளான மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.

ஜூன் 8, திங்கள்கிழமை அன்று தேசிய மருத்துவமனையின் இருதயவியல் பிரிவின் வளாகத்தில் கூடியுள்ள மக்கள்.
ஒளிப்பட உதவி: Waruna Wanniarachchi / Daily Mirror 

உள்கட்டமைப்பு குறைபாடுகள்

பொதுவான நாட்களில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான நோயாளர்கள் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக இருதயவியல் பிரிவிற்கு தவறாமல் சமூகமளிக்கின்றார்கள். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு மற்றும் நாடு தழுவிய முடக்கம் என்பவற்றை தொடர்ந்து வருகைதரும் நோயாளர்களின் எண்ணிக்கை வழமையை விட அதிகரித்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆனால் தொற்றுநோய் பிரிவின் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய, திடீரென அதிகரித்துள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் போதியளவிலான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் நோயாளிகளிடையே சரியான உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க மருத்துவமனை ஊழியர்கள் போராட வேண்டியுள்ளது. சில மருத்துவ பிரிவுகள் வழமையாக குறிப்பிட்டதொரு நேரத்தில் 20 இற்கும் மேற்பட்ட சிகிச்சை மையங்களை நடாத்தியுள்ளன. மேலும் அவற்றிற்கு 3000 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் வருகை தருவார்கள். ஆனால் தற்போது நாளொன்றுக்கு 500 நோயாளர்களுக்கு மாத்திரமே இடமளிக்க முடியும். இதனால் நோயாளர்கள் போதியளவு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியாமை, நேர விரயம், போக்குவரத்து சிரமங்கள், தங்குமிட சிரமங்கள், COVID-19 நோய்த்தொற்று பாதுகாப்பு மேலும் குறிப்பாக அவர்கள் நீண்ட நேரம் நிற்கவோ அல்லது அதிகமாக சோர்வடைய வேண்டியதோ போன்ற அவர்களது உடல்நிலை குறித்த பாரியளவிலான சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளன.

எவ்வாறாயினும் தற்போது மெல்ல மெல்ல வழமைநிலை மீண்டு வருவதினால் இந் நிலைமைகளை வெகுவிரைவில் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பினரிடையேயும் நிலவுகின்றது.

Cover pic: Ed Kashi/VII Source: Daily Mirror

Related Articles