“புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் மொத்த உலகுக்குமே மழையை ஒழுங்குப்படுத்துகிறது. அதை அழிப்பதும் உலகை அழிவை நோக்கித் தள்ளுவதும் ஒன்றுதான்” – சூழலியலாளர்கள்.
இன்று அதே காடு அனல் வாதம் புரிந்துகொண்டிருக்கிறது. பிரேசிலின் அமேசான் காடுகள் கடந்த மூன்று வாரங்களாக காட்டுத் தீக்கு இரையாகி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும், விஞ்ஞானிகளிடமும் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காட்டுத் தீ குறித்து பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறும்போது, ” பிரேசிலில் இந்த ஆண்டு மட்டும் 72,843 காட்டுத் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் பாதிக்கும் அதிகமான தீ விபத்துகள் அமேசான் காட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 80% அதிகமாகும்” என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பிறகு சுமார் 9,000க்கும் அதிகமான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன என பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.
உலகுக்கே 20 சதவிகிதம் ஒட்சிசனை வழங்கும் அமேசான் காடுகளை ‘உலகின் நுரையீரல்’ என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்துகள் பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக நாம் மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியான அழிவு, பிராண வாயு உற்பத்திக்குப் பதிலாக அதிகமான கரிம வாயுவை வெளியேற்ற வைக்கிறது. அது மீட்டுருவாக்க முடியாத அளவுக்குச் சேதமடைந்தால், பயன்களைவிட அபாயங்கள் அதிகமாக இருக்கும் என்கின்றது உலகக் காட்டுயிர் நிதியம் (World Wildlife Fund)
அமேசான் காடுகளில் அழிக்கப்பட்ட விகிதம்தான் இதுவரை நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது என பிரேசில் அரசு வெளியிட்ட தகவல் தொடர்பான காணொளி.
“நம் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அதற்குக் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட நம்மிடமிருக்கும் ஓர் ஆயுதம்தான் அமேசான். இப்போது அமேசானைக் காப்பாற்றுவதால் நாம் அதை மட்டும் பாதுகாக்கப் போவதில்லை, அதன்மூலம் நமக்கு நிகழவிருக்கும் பேரழிவிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம்.” என்று சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.