Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

உலகம் முழுதும் புரட்சியை ஏற்படுத்திய இளவரசர் ஹரியின் சுயசரிதை!

பிரித்தானிய அரச குடும்பத்தில் சர்ச்சைக்குரிய ஒருவராக பார்க்கப்பட்ட பேசப்பட்ட ஒருவரே இளவரசர் ஹாரி.  அண்மையில் அவர் தனது சுயசரிதை புத்தகமான Spare எனும் புத்தகத்தை வெளியிட்டார். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான J.R. Moehringer உதவியுடன் ஹாரி எழுதிய இந்த புத்தகத்தை  Penguin Random House என்ற வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டது.

பலரால் அதிகம் எதிர்பார்த்திருந்த இந்த புத்தகம், ஹாரியின் வாழ்வையும், அதன் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளையும், நினைவுகளையும் மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. வெளியான உடனேயே பிரபல்யம் ஆகத் தொடங்கியது. பிரிட்டன், கனடா, அமெரிக்காவில் வெளியான முதல்நாளில் மாத்திரம் 1.43 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது உலகில் வேகமாக விற்பனையாகும் புனைகதை அல்லாத புத்தகம் என்ற கின்னஸ் சாதனையையும் spare படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னால் இந்த சாதனை அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் A Promise Land புத்தகம் வசமிருந்தது என்பதையும் நினைவுபடுத்தி விடுவோம்.

புகைப்பட உதவி – BBC.COM

புத்தகம் பற்றிய பேச்சு

கடந்த 2021 ஜூன் மாதத்தில், ஹாரி தன் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இத்தகைய புத்தகத்தை வெளியிட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. அத்தோடு அந்த புத்தகம் மூலமாக கிடைக்கும் வருமானமானது பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக புத்தகம் வெளியாவதற்கு முன்னரே இதன் மூலம் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைக்கப் பெற்றதாகவும் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. அதனைத் தொடர்ந்து அப்படி என்னதான் இதில் இருக்கின்றது? ஹாரி எதை கூறப்போகின்றார் என்ற ஆர்வம் பலர் மத்தியிலும் ஏற்பட்டதால் எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன.

தன் கதையும் அது சார்ந்த புத்தகம் பற்றியும் ஹாரி கூறும் போது “பிறக்கும் போதே இளவரசனாக இருந்த ஒருவன் என்று, இற்தப் புத்தகத்தை நான் எழுதவில்லை. இன்று நான் சாதாரண ஒருவனாகவே இந்த புத்தகத்தை எழுதுகின்றேன். வாழ்வில் பல ஆண்டுகளாக பலவிதமான அனுபவங்களை எதிர்கொண்டேன். நான் எதிர்கொண்ட ஏற்ற தாழ்வுகள், செய்த தவறுகள் அதன் மூலம் கற்ற பாடங்கள் என்ற என் கதையை எழுதுவதன் மூலம், நாம் எங்கிருந்தாலும், நாம் நினைப்பதை விடவும் பொதுவான விடயங்கள் மிக அதிகம் என்பதை உணர்த்துவேன் என்று நம்புகின்றேன்” என்கிறார். அவ்வகையில் இது ஒரு வாழ்க்கை பாடமாகவும் இருக்கக்கூடும்.

விற்பனையில் சாதனை

146 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம் டிஜிட்டல் மற்றும் அச்சு பிரதியாகவும் வெளியானது. மேலும் ஆங்கிலம் தவிர 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அதே சமயம், புத்தகத்தின் ஆடியோ பதிப்பு 15 மணிநேரங்கள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஹாரி மற்றும் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றியும், உள்ளக சர்ச்சைகள் பற்றியும் உண்மைகளை கூறுதாக அமையும் இந்த புத்தகம் வெளியான முதல் நாளே 1.4 மில்லியன் பிரதிகளை விற்றுத் தீர்த்தமை சாதனைதான்.

ஹாரியின் குழந்தை பருவம் முதல் தொடங்கி, தாயார் வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணம் அவரை பாதித்தது, இள வயதில் அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள், அதனைச் சுற்றிய சூழ்நிலைகள் பின்னர் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்ந்த பின்னரான காலகட்டம், அவரது ஆப்கானிஸ்தான் கடப்புகள், ஆகிய அனைத்தையும் இந்த புத்தகத்தில் படிக்க முடியும். மேலும் கிங் சார்லஸ் III (தந்தை), பட்டத்து இளவரசர் வில்லியம் (சகோதரர்), ராணி கமிலா (மாற்றாந்தாய்), மேகன் மார்க்ல் (மனைவி) மற்றும் ராணி எலிசபெத் II (பாட்டி) மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோருக்கு இடையிலான உறவின் பல்வேறு அம்சங்களையும் இந்த புத்தகம் தெளிவுபடுத்த முனைகின்றது.

புகைப்பட உதவி – nypost.com

ஹாரியை அடித்த வில்லியம்

புத்தகம் வாயிலாக வெளிவந்து அதிகம் பேசப்படும், விமர்சனங்களையும் அரச குடும்பம் பற்றிய கதைகளுக்கும் வழிவகுத்த சில சம்பவங்களில், ஹாரியை வில்லியம்ஸ் தாக்கிய சம்பவமும் முக்கியமானது. இது இப்புத்தகம் உரைக்கும் சர்ச்சைக்குரிய சம்பவங்களில் ஒன்று. மேகனைப் பற்றிய உரையாடலுக்கு பின்னர் வில்லியம், ஹாரியை அடித்ததாகவும், அதன் பின்னர் மீண்டும் வில்லியம் தன்னை அடிக்குமாரு ஹாரியிடம் கூறிய போதும் அதனை செய்ய அவர் மறுத்துவிட்டதாகவும், சர்ச்சைக்கு பின்னர் வில்லியம் தன்னிடம் மன்னிப்பு கோரியதாகவும் ஹாரி தன் புத்தகத்தில் கூறுகின்றார்.

ஹாரி மற்றும் மேகன் வசித்து வந்த கென்சிங்டன் (kensington) அரண்மனை மைதானத்தில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. ஹாரி மற்றும் மேகன் தொடர்பில் ஊடகங்களில் விமர்சனங்களும், விவாதங்களும் எழவே அது குறித்து உரையாட, விவாதிக்க வில்லியம் வந்துள்ளார். இதன்போதே அந்த மோதல் இடம்பெற்றதாக ஹாரி கூறுகின்றார்.

“வில்லியம் என் கழுத்தை பிடித்து, மாலையை பிய்த்து கீழே தள்ளினார். அந்த அளவு சண்டை பெரிதானது.  என்னை வேறு பெயரில் அழைத்து கீழே தள்ளினார். அப்போது நான் நாய் உணவு உண்ணும் பாத்திரத்தின் மீது விழவே அது துண்டு துண்டாக உடைந்துபோனது. சிறிது நேரம் சென்று நான் எழுந்து அவரை வெளியே போகச் சொன்னேன். அனைத்தும் மிக வேகமாக நடந்தன” என்று அந்த மோதல் சம்பவத்தை ஹாரி விளக்குகின்றார்.

புகைப்பட உதவி – www.marca.com

பிரிந்த தன் மகன்களுக்கு சார்லஸ் விடுத்த வேண்டுகோள்

அரச பதவிகளில் இருந்து விலகிய பின்னர் ஹாரி  2021இல் தன் தாத்தா இளவரசர் பிலிப், எடின்பர்க் டியூக்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொல்ல இங்கிலாந்து வருகின்றார். இந்த சம்பவம் குறித்தும் புத்தகத்தில் ஹாரி பேசுகின்றார். அரச குடும்ப பிரிவின் பின்னர் சகோதரர்கள் இணைவது இந்த நிகழ்விற்காகவே ஆகின்றது. அதே சமயம் அந்த காலத்தில்  ஓப்ரா வின்ப்ரேயுடனான (Oprah Winfrey) நேர்காணலில் ஹாரி மற்றும் மேகன் பேசியது விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

“நான் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக செல்வதாகவே நினைத்திருந்தென். ஆனால் அப்போதைய நடப்புகள், சம்பவங்கள் பற்றி பேசுவதற்கு வில்லி மற்றும் தந்தையுடன் இரகசிய சந்திப்பு ஒன்றை கேட்டு, என் தரப்பு வாதங்களை முன்வைக்க முடிந்தவரை முயற்சி செய்தும் அதனை செய்ய என்னால் முடியவில்லை” என்று ஹாரி அந்த நினைவு பற்றி விபரிக்கின்றார்.

இந்த மோசமான நிகழ்வுகளின் போது வாக்குவாதமும் சர்ச்சைகளும் ஏற்படவே   சகோதரர்களிடையே “கடைசி காலகட்டத்தில் அதனை சோகமான காலமாக மாற்றிவிட வேண்டாம்” என்று சார்லஸ் வேண்டுகோள் விடுத்ததாகவும் ஹாரி கூறுகின்றார்.

உண்மையான தந்தை யார்? –  கேலி செய்த சார்லஸ்

ஒருவரின் வாழ்வின் கசப்பான அல்ல, மறக்கத்தக்க விடயங்கள் தொடர்பில் கேலி செய்வது மோசமான விடயம். ஆனாலும் ஹாரியின் தந்தை யார் என்ற வகையில் ஒருமுறை சார்லஸ் கேலி செய்ததாகவும் ஹாரி குறிப்பிடுகின்றார்.  சார்லஸ் ஒருமுறை இளவரசி டயானாவுக்கும் மேஜர் ஜேம்ஸ் ஹெவிட்டுக்கும் இடையேயான விவகாரம் குறித்து கேலி செய்ததாக அவர் கூறுகின்றார்.

“நான் வேல்ஸின் உண்மையான இளவரசனா என்பது யாருக்குத் தெரியும்? நான் உன் உண்மையான தந்தையா என்று யாருக்குத் தெரியும்? “ஒருவேளை உங்கள் உண்மையான தந்தை பிராட்மூரில் இருக்கலாம்” என்று சார்லஸ் ஹாரியிடம் கூறியதாக அந்த சம்பவத்தை புத்தகத்தில் எழுதுகின்றார் ஹாரி. 

புகைப்பட உதவி – www.cosmopolitan.com

மேஜர் ஜேம்ஸ் ஹெவிட் மற்றும் டயானா பற்றிய வதந்திகள் அந்த காலகட்டத்தில் பரவிய காரணத்தினால், தன் தந்தையின் நகைச்சுவை வேடிக்கையான ஒன்று அல்ல என்று ஹாரி கருதியதாக கூறுகின்றார். 1986 இல், இளவரசி டயானா தனக்கும் மேஜர் ஜேம்ஸ் ஹெவிட்டிற்கும் இடையே தொடர்பு இருந்ததாக  சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு அளித்த பேட்டியின் போது குறிப்பிட்டார். இருப்பினும், சார்லஸ் உறவைப் பற்றி ஏதாவது நினைத்த்துவிட்டால் என்று, அதை தனக்குத்தானே வைத்திருந்தார் என்று ஹாரி தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

கமிலாவை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று  தந்தையிடம் வேண்டுகோள்

சார்லஸ்  கமிலாவின் உறவை திருமணத்திற்கு கொண்டு செல்ல விரும்பியபோது ஹாரியும் வில்லியமும் கமிலாவை தனித்தனியாக சந்தித்ததாகவும் கூட புத்தகத்தில் ஹாரி கூறியுள்ளார். கதைகள் கேட்டது போல பொல்லாத சித்தியாக கமிலா அமைந்துவிடுவார் என்ற அச்சத்தில், அந்த திருமணம் வேண்டாம் என்று தானும் தன் சகோதரர்களும் தந்தையிடம் கெஞ்சியதாகவும் ஹாரி எழுதியுள்ளார்.

“தேநீர் நேரத்திற்கு முன் கமிலா பற்றி, அவர் மோசமான சித்தியாக மாறுவார் என்ற அச்சம் பற்றி சிந்தித்தது இப்போதும் நினைவிருக்கின்றது. ஆனால் அவர் அப்படி இருக்கவில்லை அதனால் வில்லி போலவே எனக்கும் அவரிடத்தில் நன்றியுணர்வு ஏற்பட்டது”. என்று அந்த பழைய நினைவுகளை ஹாரி புத்தகத்தில் மீட்டியுள்ளதோடு, தானும் வில்லியும் கமிலாவை இன்னோர் பெண் என்று அழைத்ததாகவும் அவர் புத்தகத்தில் நினைவு கூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாக பேசப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் ஹாரி

ஹாரி ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் ராணுவ வீரராக இருந்த காலகட்டத்தில் 25 பேரை (பெரும்பாலும் பயங்கரவாதிகள்) கொன்றதாக ஹாரியின் வாழ்க்கை வரலாறு கூறுகிறது. 2007 முதல் 2008 வரை ஒரு வருடமும், 2012 முதல் 2013 வரை ஒரு வருடமும் இரண்டு முறை ஆப்கானிஸ்தானில் ஹாரி இருந்துள்ளார்.  இது பற்றி ஹாரி புத்தகத்தில் “அது எனக்கு திருப்தியை அளிக்கும் எண்ணிக்கை அல்ல அதே சமயம் வெட்கப்பட வைக்கும் எண்ணிக்கையும் அல்ல” என்கிறார்.

அதே போன்று கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் கூறும் போது “அவர்களை மனிதர்களாக கருதவில்லை எனவும், சதுரங்கத்தில் இருந்து அகற்றப்பட்ட சிப்பாய்களாகவே தான் கருதுவதாகவும், ஹாரி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆப்கானிஸ்தான் கடப்பும், நினைவும் பற்றிய ஹாரியின் எழுத்திற்கு சில பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் விமர்சனக் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதும் குறிப்படத்தக்கதாகும்.

புகைப்பட உதவி – www.forces.net

இரண்டாம் எலிசபெத் மகாராணி பற்றியும்….

இளவரசர் ஹாரி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம் பற்றி தன் வாழ்க்கை புத்தகத்தில் சேர்ப்பாரா என்ற கேள்வியும் ஆர்வமும் பலரிடத்தில் காணப்பட்டது.  ஆனாலும் இதற்கும் ஒரு பிரிவை ஒதுக்கியுள்ளார் ஹாரி. அதில் ராணியின் உடல்நிலையில் திருப்பம் ஏற்பட்டு விட்டதாக தன் தந்தையே தன்னிடம் முதலில் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் அச்செய்திக்கு பின்னர் வில்லியம் தம்பதிகள் அரண்மனைக்கு வருவார்களா என்று, வில்லியமிடம் குறுஞ்செய்தி மூலம் கேட்டதாகவும் அதற்கு அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை என்றும் ஹாரி எழுதியுள்ளார்.

இந்த இடத்தில் முக்கியமான ஒன்றையும் ஹாரி பதிவு செய்துள்ளார். அதாவது  பால்மோரல் கோட்டை (balmoral)யில் ஹாரியின் வருகை எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால் மேகனின் வருகை எதிர்பார்க்கப்படவில்லை எனவும் சார்லஸ் மீண்டும் ஹாரிக்கு தொலைபேசியில் கூறியதாகவும், ஹாரி விமானத்தில் மேகங்களை பார்த்து கொண்டு பாட்டியின் கடைசி வார்த்தைகளின் நினைவை மீட்டுக் கொண்டு சென்றதாகவும் புத்தத்தின் பக்கம் வரலாற்றை பதிந்து கொண்டுள்ளது.

ராணியின் மரணம்

ராணியின் மரணம் பற்றி கூறுகையில் உள்ளார்ந்த துயரை ஹாரி வார்த்தைகளில் கொண்டு வர முயற்சி செய்கின்றார் ஹாரி. “அவர் அறையில் இருந்தார். அப்போது நான் குளிர்ச்சியாக என்னை உணர்ந்தேன் மிக கடினமாக இருந்தது அவரை பார்க்க. அந்த சந்தர்ப்பத்தில் நான் என் தாயாரின் கடைசி தருணங்களை பார்க்க கிடைக்காது போனதும் கூட நினைவில் வந்து சென்றது.” என்று கூறுகின்றார். 

போதை பொருள் பயன்பாடு

ஹாரி போதை பொருள் பயன்படுத்தியதாகவும் அந்த வாழ்க்கை குறிப்பு கூறுகின்றது. ஒரு கட்டத்தில் தன்னை சுற்றி உள்ள அனைவரும் போதைப்பொருளால் ஈர்க்கப்பட்ட போதிலும் தனக்கு அப்படி எதுவும் நடக்க வில்லை என்று ஹாரி கூறுகின்றார். அவரது கூற்றுபடி ஹாரி 17 வயதில போதைபொருள் பயன்படுத்தியதாக புத்தகத்தில் உள்ளது.

புகைப்பட உதவி – www.starsinsider.com

அம்மாவின் சுரங்கபாதை அனுபவம்

பிரான்சில் உள்ள சுரங்கப்பாதையில் (Pont de l’Alma) இளவரசி டயானா  பயணம் செய்து கொண்டிருந்த போது, ​​ கார் விபத்தில் சிக்கிய அனுபவத்தையும்  ஹாரி விபரித்துள்ளார். அந்த நினைவில் 2007 உலகக் கோப்பை ரக்பி போட்டியில் பங்கேற்ற போது, டயானா பயணித்த அதே வேகத்தில் அதாவது மணிக்கு 104.6 கிமீ என்ற வேகத்தில் வண்டியை செலுத்த வேண்டும் என்று ஓட்டுனருக்கு தான் கூறியதையும் ஹாரி புத்தகமூடு நினைவு படுத்துகின்றார்.

புகைப்பட உதவி – www.telegraph.co.uk

இப்படியாக இன்னும் பலவற்றை கூறுகின்றது இந்தப் புத்தகம். அடிப்படையில் ஒரு குடும்பம் சார் புத்தகமாக இது பார்க்கப்பட்டாலும் அதிகாரத்திலும், வசதியிலும் உச்சத்தில் உள்ள ஒரு சாரார் பற்றி இந்த புத்தம் கூறுவதைத் தொடர்ந்து சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழாமல் இருந்தால் மட்டுமே ஆச்சரியம்.

Related Articles