வடக்கிலிருந்து கிழக்கே காடுகளின் நடுவே
யாழ்ப்பாணம், நாகதீபம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து தனித்தனி குழுக்களாக வரும் பக்தர்கள் உகந்தை முருகப் பெருமானுக்கும், கதிர்காமக் கடவுளுக்கும் வணக்கங்களையும், வழிபாடுகளையும் செய்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் காட்டு வழிக்குள் நுழைகின்றனர். மற்றுமோர் குழு மட்டக்களப்பு, கோமாரி, அம்பாறை, பொத்துவில், அறுகம்பே ஊடாக பானம வந்தடைகின்றது.
சமீப காலம் முதல் பௌத்தர்களும் பானமவிற்கு வந்து இந்துக்களுடன் இணைந்து பயணிப்பதை காண முடியுமாக இருக்கின்றது. சில சமயங்களில் வெளிநாட்டவரும் கூட இந்த பயணத்தில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் யால கிழக்கு அல்லது குமண தேசிய வனப் பூங்கா வழியே உகந்தை கோயிலுக்கு அருகில் நுழைகின்றனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க உகந்தை மலை கோவிலானது பானமவில் இருந்து 16 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
யால வனத்தின் ஊடாக
பானம கிராமத்தினைக் கடந்து குமண மற்றும் யால தேசிய பூங்காக்கள் வழியாக கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை செல்கின்றது. மொனராகலை மாவட்டத்தில் உள்ள யால வனத்தின் ஊடாகவே அவர்கள் இந்தப் பயணத்தில் பெரும்பாலான பகுதியை கடந்து செல்கின்றனர். முன்னொரு காலத்தில் வடக்கு, கிழக்கில் இருந்து சுமார் 35000 பக்தர்கள் கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக வந்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் அந்த எண்ணிக்கை தற்போது 5000 ஆக குறைவடைந்துள்ளது. இந்த பக்தர்கள் 20 முதல் 25 நாட்களை யாத்திரைக்காக செலவிடுகின்றனர். அதேபோல் யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கடந்த ஜூன் மாத இரண்டாவது வாரத்தில் தமது யாத்திரையை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக 40 நாட்களுக்கும் அதிகமாக பயணம் செய்து ஜூலை கடைசியில் கதிர்காமத்தில் ஆரம்பமாகும் எசல திருவிழாவிற்கு வந்து சேருகின்றார்கள்.
எசல பெரஹெர தினத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னைய காலத்தில் திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் இருந்து யாத்திரை ஆரம்பமாகின்றது. தொடர்ந்த இப்போது குமணவில் இருந்தும் பானமவில் இருந்தும் மற்றுமோர் குழுவினர் பாதயாத்திரையாக தொடரும் அந்த கடினமான பயணத்தில் இணைந்து கொள்கின்றனர்.
வனத்தின் வழியே நடக்கும் இந்தப் பயணம் நினைப்பதை விடவும் கடினமானது. சுமார் 10 நாட்கள் பெரும் வனத்தின் நடுவில் பயணிக்கவும், தங்கவும் வேண்டியுள்ளது. இந்த சந்தர்ப்பங்களில் வழியில் முகாம்களை அமைத்துக் கொள்கின்றார்கள். உணவுத் தேவையினை சமைத்து பூர்த்தி செய்து கொள்கின்றார்கள் அதற்கு தேவையான சமையல் உபகரணங்களை கையோடு கொண்டும் வருகின்றனர். குறிப்பாக இவ்வாறு சமைக்கும் உணவுகள் முற்று முழுதான சைவ உணவுகளே. கதிர்காமத்தில் திருவிழா நடைபெறும் அந்த 15 நாட்களும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வெவ்வேறு குழுக்களாக பாதயாத்திரையாக அவ்வப்போது கதிர்காமத்திற்கு பக்தர்கள் வந்து சேர்கின்றனர்.
யாத்திரிகள் சுமார் 110 கிலோமீற்றர் தூரத்தினை கடந்தே கதிர்காமத்தினை வந்தடைகின்றனர். இடையில் யால எனும் பெரும் வனத்தை கடக்க மாத்திரம் 10 நாட்கள் தேவைப்படுகின்றது.
கடவுளரின் கதைகள்
ஆதி காலம் தொடக்கம் இந்த பாதயாத்திரையுடன் தொடர்புடைய சுவாரஸ்யமான பல கதைகள் காணப்படுகின்றன. வள்ளியை ஆட்கொள்ள வந்த கந்தன், உகந்தை கடற்கரைக்கு தங்கத் தோணியில் வந்ததாக புராணக் கதையொன்றில் குறிப்பிடப்படுகின்றது. அங்கிருந்து கால்நடையாக கந்தன் தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதே சமயம் கந்தன் வந்த தங்க ஓடத்தை யாரேனும் பார்க்க நேரிட்டால் பொருளாசையில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்ளக்கூடும் என்பதால் முருகன் அந்த ஓடத்தை கல்லாக மாற்றி கவிழ்த்து விட்டே கதிர்காமம் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார். இவ்விதமாய் கவிழ்த்து போடப்பட்ட கல்தோணி ஒரு மலையாக உகந்தை கடற்கரையில் தோணி வடிவில் காணப்படுவதாக நம்பப்படுகின்றது. அன்று கந்தன் வந்த பாதையிலேயே இன்றும் பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.
பாதயாத்திரை செல்வோம்
கதிர்காமப் பெருமான் கந்தன், உகந்தையில் இருந்து குமண வனப்பகுதி, மடமெதொட, பிளிண்ணாவ, கடுபில, வரஹன, கடகமுவ, கொச்சிபதான போன்ற பகுதிகளின் வழியாக கதிர்காமத்திற்கு வந்ததாகவும் நம்பப்படுகின்றது. கந்தனை தரிசிக்க வரும் மக்கள் பாதயாத்திரை மூலமாகவே அதே வழியில் நடக்க வேண்டும் அன்றேல் அது குற்றமாகும் என்ற வகையிலான புராண நம்பிக்கை ஒன்று பானம முதியவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
கதிர்காம பாதயாத்திரை எனப்படுவது இலங்கையின் மிக நீண்ட மத யாத்திரையாகும். என்றாலும்கூட இதன் வரலாறு, தோற்றம் தொடர்பிலான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் நூறு ஆண்டுகளுக்கும் மேலானதோர் நீண்ட வரலாற்றை இந்த பாதயாத்திரை கொண்டுள்ளதாக கருதப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் வாகரைக்கு அருகாமையில் வாழ்ந்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த வேடுவ இனத்தவர்கள் முதன் முதலாக இவ்வாறு காட்டு வழியே நடந்து கதிர்காமத்திற்கு வந்து கந்தனை வழிபட்டதாக புராணக் கதைகள் கூறுகின்றன. அதன் பிறகு வடக்கு, கிழக்கு இந்துக்களும் இந்த பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர். முக்கியமாக இன்றும் கூட தான் எந்த நிலையில் இருந்தாலும், இந்த வழிபாட்டு பயணத்தை ஆரம்பிக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் இறைச்சி, மது உள்ளிட்டவற்றை முற்றாக தவிர்த்து பயபக்தியுடன் இந்த யாத்திரையை ஆரம்பிக்கின்றனர்.
அசைவ உணவுகளை தவிர்த்து, பிறர் உடுத்திய ஆடைகளை அணியாமல் இறை நம்பிக்கையை முழுமையாக ஏற்று, மனதாலும் உடலாலும் வார்த்தைகளாலும் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு இந்த வழிபாடு செய்யப்படுகின்றது. முக்கியமாக ஆண் பெண் இரு பாலரும் தூய்மையாக இருப்பதும் முதன்மையாக காணப்படுகின்றது. இப் பாதயாத்திரையில் பங்கேற்று செல்வதற்கு முன்னர் சோற்றை காயவைத்து அதனுடன் கித்துல் கருப்பட்டி சேர்த்து சுவையான உருண்டைகளை தயாரிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
பாதயாத்திரை பக்தர்களின் ஆடை
பாதயாத்திரையில் இணைந்து கொள்ளும் பக்தர்களை அவர்களின் உடைகளை வைத்தே அடையாளம் கண்டுகொள்ள முடியும். வேலாயுத சாயம், நவகுண்டகொடி, மயில்தோகை வடிவிலாக ஆடைகளை அணிவார்கள். ஆனாலும் தற்போதைய காலத்தில் இவற்றில் மிகுந்த வித்தியாசம் காணப்படுவதாகவும், பக்தர்களில் உடைகள் மாற்றமடைந்து அவை நவீனமடைந்துள்ளதாகவும் பெரியவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வனத்தின் நடுவே தங்குமிடங்கள்
கதிர்காம கந்தனை தரிசிக்க பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பெரும் வனத்தின் நடுவே தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இதன்போது கடந்த காலங்களில் அவ்வழியே யாத்திரை பயணித்த பக்தர்கள் தாம் தங்குவதற்கு தேர்தெடுத்த அதே பழக்கப்பட்ட இடங்களை மாத்திரமே தேர்வு செய்து தங்குமிடங்களை அமைத்துக் கொள்கின்றனர். எக்காரணத்தை கொண்டும் அந்த இடங்களை தவிர்த்து வேறு இடங்களில் தங்குமிடங்களை அமைப்பது தவிர்க்கப்படுகின்றது.
பாகுர களப்பு, கும்புக்கன் ஓயா, யால இரண்டாம் வலயம், கட்டுபிலார, பிளிண்னாவ, வரஹன, பொத்வல, உடபொத்வல, கதிர்காம மாணிக்க கங்கை, யால மூன்றாம் பிரிவு வலயம், கடகமுவ மற்றும் கொச்சிபதானை போன்ற குறிப்பிட்ட பாதுகாப்பான பகுதிகளில் மாத்திரமே இவ்வாறான தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன.
பாதயாத்திரை வரும் பக்தர்கள் கும்புக்கன் ஓயா மற்றும் மாணிக்க கங்கையினை கடந்தே பயணம் செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் தமது உடைமைகளை மூட்டையாக தலைக்கு மேல் சுமந்து கொண்டு சதுப்பு நிலங்கள் வழியாக பயணம் செய்கின்றார்கள். இன்று வனவிலங்கு பாதுகாப்பு துறையானது யாத்திரை மேற்கொள்ளப்படும் வழித்தடத்தின் ஆங்காங்கே குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய பிளாஸ்டிக் தொட்டிகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பல முயற்சிகள், கல் முட்பாதையின் போராட்டங்கள், அபாயமான வனப்பகுதி போன்றவற்றை கடந்து வரும் பக்தர்கள் இறுதியாக மாணிக்க கங்கையில் நீராடிவிட்டு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
பின்னர் கதிர்காம கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு காவடி நடனத்திலும் பக்தர்கள் இணைந்து கொள்கின்றார்கள். கதிர்காம திருவிழா நிறைவடைந்த பின்னர் தாம் வந்த வழியில் இல்லாமல் பொதுப்போக்குவரத்து, போன்ற வெவ்வேறு பயணங்கள் மூலமாக சொந்த இடங்களுக்கு செல்கின்றனர்.
அரசின் அடிப்படை வசதிகள்
இந்த பாதயாத்திரை பயணிகளுக்கு தேவையான சில அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசும் பங்கெடுத்து கொள்கின்றது. குடிநீர், உணவு போன்ற வசதிகளை காவல்துறை, வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் போன்றோர் ஏற்பாடு செய்கின்றனர். பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகளையும் இவர்கள் விதிக்கின்றனர். இதனால் குமணவில் இருந்து காட்டுக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைவதும் சாத்தியப்படாத ஒன்று.
பாதயாத்திரையின் போது வனவிலங்கு பாதுகாப்பு துறையானது சாலைகளை திறந்து அனுமதிகளை வழங்குகின்றது. இவ்வழியே செல்லும் பக்தர்கள் பற்றிய பதிவுகள் இடம் பெறுகின்றன. உகந்தை ஆலயத்தின் மைதானத்தில் சுகாதார சேவை மையங்களும் அமைக்கப்படுவதோடு முதலுதவி முகாம்களும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலக்கரு:
Lankadeepa.lk
Silumina.lk
Bbc.com