Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய தனிநாயகம் அடிகளார் | #தமிழ்பாரம்பர்யமாதம்

தமிழின்பால் கொண்டிருந்த அறிவின் ஆழத்தினாலும் முதிர்ச்சியினாலும் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டவர் என்ற சிறப்பிற்குரியவர் தனிநாயகம் அடிகள்.

பிறப்பு 

தனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்டானிஸ்லாஸ் மற்றும் சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி பிறந்தார். தனிநாயக அடிகளின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்டானிஸ்லாஸ் என்பதாகும். 

ஆரம்பக் கல்வி

இவர் ஆரம்பக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும் ஆங்கில மொழியில் பயின்றார்.

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி

இவர் 1931 முதல் 1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றதுடன் ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஸ்பானியம், போத்துக்கீயம், ரஷ்சியம், கிரேக்கம், இபுரு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுப் பன்மொழிப் புலவரானார்.

சங்ககால இலக்கிய செய்யுள் முதல் உலகத் தமிழாய்வு வரை

குருத்துவக் கல்வியை முடித்து அதில் பட்டம் பெற்ற பின்பு தென்னிந்தியா திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளம் என்னும் ஊரில் உள்ள புனித திரேசா மடப் பாடசாலையில் 1940 முதல் 1945 வரை துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். முறையான தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இங்கேயே தோன்றியது. பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுமாணிப் பட்டம் பெற்றார்.

1945ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பிற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். இவரது தமிழ் அறிவின் ஆழத்தினையும் முதிர்ச்சியினையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரத்தினசாமி, மற்றும் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும் எடுத்த முடிவினால் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். அங்கு சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுகலைக் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1947 தொடக்கம் 1949 வரை தமிழ் இலக்கியத்தில் ‘சங்ககால இலக்கியச் செய்யுளில் இயற்கை’ என்னும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து எம்.லிட். பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். இதில் இவர் செய்த முதல் தமிழ் ஆய்வே இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு சென்றுள்ளது. 

ஆசிரியராக பணியாற்றிய தனிநாயகம்

இலங்கை மற்றும் மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகம்

1952 தொடக்கம் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் 1955 முதல் 1957 வரை இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் வழியாகக் கல்வியியல் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து கல்வியியலில் முனைவர் பட்டத்தினை இரண்டாவது முறையாகப் பெற்றுக் கொண்டார். 1961 முதல் 1968ஆம் ஆண்டுவரை மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறையின் தலைவராகவும் தமிழ்த் துறையின் பீடாதிபதியாகவும் தமிழ் பேராசிரியாராகவும் பணியாற்றினார். 1969 இல் மலேசியாவை விட்டு நீங்கியவுடன் பாரிசு மற்றும் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

‘Tamil Culture’ என்னும் ஆங்கில ஆய்விதழின் தோற்றம்

தமிழ் ஆராய்ச்சி ஒரு வரையறைக்குள் அடங்கியிருந்த காலமே அது எனலாம். இலக்கியமும் இலக்கணமுமே தமிழ் ஆராய்ச்சிக்குத் தகுந்த துறைகள் என அக்காலத்து அறிஞர்கள் எண்ணியிருந்த நிலையை மாற்றி தமிழ் இலக்கிய இலக்கணங்களோடு தமிழரின் கலைகள், வாணிகத் தொடர்புகள், வாழ்க்கை நிலை, உளவியல், அயல்நாட்டுத் தொடர்புகள் போன்றவையும் ஆராயப்பட வேண்டும் எனத் தமிழ் ஆராய்ச்சியில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த பெருமை சேவியர் தனிநாயக அடிகளாருக்கு உரியது. தமிழ் ஆராய்ச்சி தமிழ்மொழியில் மட்டுமில்லாமல் பிறமொழிகளிலும் – குறிப்பாக ஆங்கிலத்திலும் பதிவாக வேண்டும் என உறுதியாக நம்பிய அவர் ‘Tamil Culture’ என்னும் ஆங்கில ஆய்விதழை 1952ஆம் ஆண்டில் தொடங்கினார். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களையும் சென்றடைந்த அவ்விதழ் உலகளாவிய தமிழாராய்ச்சிக்கு வழிவகுப்பதாயிற்று. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத பிற நாட்டு அறிஞர்களும் தமிழ் ஆய்வில் ஈடுட்டு தங்கள் ஆங்கிலக் கட்டுரைகளை ‘Tamil Culture’ இதழில் வெளியிடுவதைப் பெருமையாகக் கருதியுள்ளனர்.

தமிழாராய்ச்சி நிறுவனத்தை அமைக்க யோசனை!

தனிநாயகம் அவர்கள் எழுதிய நூல்களுள் சில

1963 ஆம் ஆண்டளவில் தமிழக அரசில் எம். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் தனிநாயகம் அடிகளார் உலக நாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் யாவரையும் ஒன்று திரட்டி ஒரு குழுவாக அமைத்து தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நடத்தும் யோசனையை முன்வைத்துள்ளார். இதற்கான ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையினையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனவும் அதனால் இந்நிறுவனத்தை தாமே முன்னின்று உலகளவிலே நடத்த வேண்டும் என்ற உத்வேகம் கொண்டதனால் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக வழி பிறந்தது என்றால் அது மிகையாகாது.

தனது முயற்சியில் வெற்றி கண்டார்!

அவரது அரிய முயற்சியின் விளைவாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்  (International Association for Tamil Research, IATR) 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் முதல் கூட்டம் புது டெல்லியில் ஜனவரி மாதம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் தனிநாயகம் அடிகளாருடன், பேராசிரியர் கமில் சுவெலபில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ. ஐ. சுப்பிரமணியம் ஆகியோர் அழைப்பாளர்களாக இருந்து செயற்பட்டுள்ளனர். மொத்தம் 26 தமிழறிஞர்கள் சேர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 1964 ஜனவரி மாதம் 7 ஆம் நாள் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் தனியாகம் அடிகளாரின் உரையின் போது

அந்த அமைப்பின் முதல் தலைவராக பிரான்ஸ் நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் ஜேன் ஃபிலியோசா தலைவராகவும், Oxford பல்கலைக்கழக பேராசிரியர் தோமஸ் பரோ, அமெரிக்க நாட்டு பேராசிரியர் எமனோ, பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் செக்கோஸ்லோவாக்கியா பிராக் பல்கலைக்கழக பேராசிரியர் கமில் சுவெலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

முதலாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு – கோலாலம்பூர் 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை பல உலக நாடுகளில் நடத்தியுள்ளது. அடிகளார் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இவர் பொதுச் செயலாளராகவிருந்து முதல் மாநாட்டினை 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 – 23 திகதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தியுள்ளார்.

தனிநாயகம் அவர்களில் சிலை

1961ஆம் ஆண்டில் அவர் மலாய் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராகவும் தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றியமை இம்முயற்சிக்கு பெரிதும் மிகவும் துணைநின்றது. அப்போது அமைச்சர்களாக இருந்த வி. தி. சம்பந்தன், வி. மாணிக்கவாசகம் ஆகியோருடன் அடிகளார் பேணிய நல்லுறவால் மலேசிய அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது. மாநாட்டிற்கு மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமை தாங்கியுள்ளார். தமிழ்நாட்டு முதலமைச்சர் எம். பக்தவத்சலமும் கலந்து சிறப்பித்துள்ளார். புரொயென்காவின் போர்த்துக்கீச-தமிழ் அகராதியை அங்கு மீள்பதிவாக்கம் செய்து இம்மாநாட்டில் தனிநாயகம் அடிகளார் வெளியிட்டுள்ளார்.

தனிநாயகம் அடிகளாரின் சிறப்பு துணுக்குகள்

  • 1945ஆம் ஆண்டு 32ஆம் வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழை திறம்பட பயின்றுள்ளார்.
  • ‘சங்ககால இலக்கியச் செய்யுளில் இயற்கை’ என்ற அவர்துபி ஆய்வு கட்டுரை ஐரோப்பியத் திராவிடவியல் பேரறிஞராகிய முனைவர் கமில் சுவலபில் அவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ் மேல் கொண்ட பற்றால் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் உலகின் பல்வேறு நாடுகளு பயணம் மேற்கொண்டு தமிழ்த் தூது நிகழ்த்தியுள்ளார்.
  • ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரேசில், எக்குவடோர், பெரு, மெக்சிக்கோ மற்றும் இத்தாலி என்பன அவர் உரை நிகழ்த்திய நாடுகளாகும்.
  • அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் தமிழின் சிறப்பைப் பற்றி ஒரே ஆண்டில் 200 விரிவுரைகள் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையை மாற்றி உலக அரங்கில் பல நாடுகளில் தமிழாய்வு நடைபெற வழிவகுத்த பெருமை அடிகளாருக்கு உரியது.
  • தமிழ், ஆங்கிலம், இலத்தீன், இத்தாலியம், பிரெஞ்ச், ஜேர்மன், போர்த்துக்கேயம், ஸ்பானிஷ் என பல மொழிகளைக் கற்றுள்ளார் அடிகளார்.
  • ஆகவே அம்மொழிகளிலெல்லாம் தமிழ் மொழிபற்றி ஆய்வுரை நிகழ்த்தவும் ஆய்வுக் கட்டுரை வடிக்கவும் வல்லவராகத் திகழ்ந்துள்ளார்.
  • ஐரோப்பிய அறிஞர்கள் பலர் தங்களது பல்கலைக்கழகத்தில் தமிழ்பற்றிய ஆய்வுரை நிகழ்த்துமாறு அடிகளாரை அழைத்துள்ளனர்.
  • மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராக எட்டு ஆண்டுக்காலம் பணிபுரிந்த அடிகளார் பல புதிய பொருள்பற்றியும் துறைகள் பற்றியும் அப்பல்கலைக்கழகத்தில் தமிழாய்வு நடைபெற வழிகோலியுள்ளார்.
  • அந்த்தாம் தெ ப்ரோயென்சா அடிகள் இயற்றிய தமிழ் போர்த்துக்கேய அகராதியின் மறுபதிப்புக்குத் தனிநாயக அடிகளார் எழுதியுள்ள அரிய ஆய்வுரை அறிஞருலகத்தின் பாராட்டினைப் பெற்ற ஒன்றாகும்.
  • “Reference Guide to Tamil Studies” என்ற 122 பக்கங்களைக் கொண்ட உசாத்துணை நூலில் 1335 நூல்களைப் பற்றிய குறிப்புக்களைச் சேர்த்து நூலாக வெளியிட்டுள்ளார்.
  • தமிழாய்வில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டவருக்கு ஒரு உசாத்துணை நூலாக விளங்கவே இதனை வெளியிட்டுள்ளார்.
  • இலங்கையிலிருந்து வெளியான சைமன் காசிச்செட்டி ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் புளூட்டார்க் என்ற நூலை பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரைக் கொண்டு கூடுதல் செய்திகளைச் சேர்த்து பிழை களைந்து வெளியிட ஏற்பாடு செய்ததும் இவரே ஆகும்.
  • பேராசிரியப் பணி,ஆய்வுப் பணி, உலக அரங்கில் தமிழ்த் தூதுப்பணி, கள ஆய்வுப் பணி, ஆய்விதழ், ஆசிரியப் பணி என இவரது பணிகள் ஏராளம்.
  • The Carthaginian, Clergy Nature in the ancient poetry, Aspects of Tamil Humanism, தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும், தமிழ்த்தூது, ஒரே உலகம், திருவள்ளுவர், உலக ஒழுக்கவியலில் திருக்குறள் என்பன இவரது நூல்களாகும்.

தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் தூதுவர் தனிநாயகம் அடிகளார் 1980 செப்டம்பர் முதலாம் திகதி மாலை 6.30 மணியளவில் இறையடி சேர்ந்துள்ளார். 

1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவரது சிலை ஒன்றும் தமிழகக் கல்வியமைச்சர் அரங்கநாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவரின் இறப்புக்குப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது.நெடுந்தீவு மக்கள் தமது மண்ணின் மைந்தனாகிய தனிநாயகம் அடிகளுக்கு ஆளுயர சிலை அமைத்துள்ளனர்.

சென்னையில் 2013 பெப்ரவரி 16 ஆம் திகதி தனிநாயக அடிகளாரின் நினைவை போற்றும் வகையில் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றுள்ளது.

Related Articles