.jpg?w=1200)
இலங்கை மத்திய வங்கி தலைமை அலுவலமானது 1950 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள யோர் வீதியில் ”சைம்ஸ்” கட்டிடம் அதாவது ”கார்கில்ஸ் இல்லம்” என்று என்று அழைக்கப்படும் கட்டிடத்தில் தான் செயல்பட்டு வந்துள்ளது. இதனுள் வங்கி மேற்பார்வை, பொருளாதார ஆராய்ச்சி, பொதுப்படுகடன் மற்றும் செயலகத் திணைக்களங்கள் போன்றவை அமைந்திருந்தது. அதேவேளை நாணயப் பிரிவினை உள்ளடக்கிய வங்கித்தொழில் திணைக்களமானது தற்பொழுது நிதி அமைச்சு அமைந்துள்ள பொதுத் திறைசேரி கட்டிடத்தில் இருந்து இயங்கி வந்ததுள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது தன் ஆரம்ப கட்டிடத்தில் அதன் செயற்பாடுகளை தொடரக்கூடிய நிலையில் இடவசதிகள் ஒத்துழைக்கவில்லை. ஆகையால் 1955 ஆண்டு அப்போதைய ஆளுநர் ஏ.ஜி. ரணசிங்க அவர்களின் காலப்பகுதியில் சைம்ஸ் கட்டிடத்திற்கு அருகில் அமைந்திருந்த ”ஹேமாஸ்” கட்டிடத்திற்கு தலைமையலுவலகம் மாற்றப்பட்டது. இக்கட்டிடத்தில் கீழ் மாடி முழுவதும் வங்கித்தொழில் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டதுடன் பொதுப்படுகடன் மற்றும் செயலகத் திணைக்களங்கள் இரண்டாம் மாடியிலும் ஆளுநர், துணை ஆளுநர், பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளர், வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர் மற்றும் செயலாளரின் அலுவலகங்கள் போன்றவை மூன்றாம் மாடியிலும் அமைந்திருந்துள்ளன.


இலங்கை ஊழியர் சேம நிதியத் திணைக்களமானது 1958 ஆண்டு இலங்கை மத்திய வங்கியுடன் இணைக்கப்பட்டது. அச்சமயத்தில் ஹேமாஸ் கட்டிடத்தொகுதியிலும் இடப்பற்றாக்குறை காணப்பட்டதால் பொரல்லை ஜெயதிலக மாவத்தையில் அமைந்திருந்த YMBA கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது.
இப்படி இடப்பற்றாக்குறை காணப்படுகின்ற சூழலில் இலங்கை மத்திய வங்கி சொந்தக் கட்டிடம்மொன்றிக்கு நகர வேண்டியதன் அவசியத்தினை அரசு உணர்ந்தது. அதன் பின்னர் கொழும்பு புறக்கோகோட்டையில்பகுதியில் இராணி வீதியில் அமைந்திருந்த பிரித்தானிய காலனித்துவத்திற்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் அரசின் கொடையாக மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தினை அமைப்பதற்கு வழங்கப்பட்டது. இராணி வீதியும் சதாம் வீதியும் சந்திக்கும் சந்தியிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரமும் வெளிச்ச வீடும் இதன் அயலில் காணப்பட்டது. தற்போது சுற்றிலும் அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவை காணப்படுகின்றது. அப்பொழுது இலங்கையில் கொழும்பு மாநகரில் ஐந்து மாடிகளுக்குக் கூடுதலான ஒருசில கட்டிடங்கள் மட்டுமே காணப்பட்டமையினால் இந்த கட்டிடம் படிப்படியாக உயர்வதனைப் பார்ப்பதற்கு நாளாந்தம் மக்கள் அதிகமாக அவ்விடத்தில் கூடியுள்ளனர்.

இவ்வாறு வெவ்வேறு கட்டிடங்களில் அமைந்திருந்த மத்திய வங்கியினை பொதுவான ஒரு கூரையின் கீழ் கொண்டுவருவது அடுத்த கடுமையான சவாலாகக் காணப்பட்ட நிலையில், 1964 ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் காணப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் திணைக்களங்கள் அனைத்தையும் அப்போதைய ராணி வீதி இப்போதைய ஜனாதிபதி மாவத்தையில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது. இந்த இடமாற்றங்களின் போது ஒரு சிறிய பொருளைக் கூட தவறவிடாமல் மீளமைப்பு செயற்திட்டம் நிறைவடைவதற்கு மிகச் சிறந்த பங்களிப்பினை வழங்கிய வங்கியின் நிருவாகிகளுக்கு அப்போதைய ஆளுநர் திரு. டி.டபிள்யூ இராசபத்திரன பாராட்டு தெரிவித்திருந்தமை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிறப்பான முறையில் கட்டப்பட்டிடுந்த இலங்கை மத்திய வங்கியானது ஒவ்வொரு கோபுரத்திலும் 9 மாடிகளைக் கொண்ட 3 கோபுரத் தளங்களை உள்ளடக்கியிருந்தன. மத்திய கோபுரத்தில் வங்கித்தொழில் மண்டபமும் பொதுமக்கள் தமது நாணயத் தாள் மற்றும் குத்திகளின் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பழுதடைந்த நாணயத் தாள்களை மாற்றிக் கொள்வதற்கும் வருகை தரும் இடமாக விளங்கியது. ஒன்பதாவது மாடி ஆளுநர், துணை ஆளுநர்கள், நாணயச் சபை அறை மற்றும் கேட்போர் கூட மண்டபம் ஆகிய அலுவலகங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வங்கியின் வரலாற்றை மாற்றியமைக்கும் துக்ககாரமான சம்பவமொன்று இடம்பெற்றது. அதுதான் 1996 ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத குண்டுதாக்குதல். இப்பாரிய குண்டு வெடிப்பின் விளைவாக இக்கட்டிடம் பெரும் சேதங்களுக்கு உள்ளானதுடன் நாற்பத்தொரு வங்கி ஊழியர்களும் பல பொதுமக்களும் உயிரிழந்தனர். பின்னர் அமைச்சரைவையின் ஒப்புதலுடன் தலைமை அலுவலகத்தின் புதுப்பித்தல் வேலைகள் நிறைவடையும் வரை, 1996 ஒக்டோபர் மதம் 24ஆம் திகதி உலக வர்த்தக மையத்தின் 15 – 17 மாடிகளில் செயற்பட ஆரம்பித்தது. அதனைத்தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் அனைத்தும் இராஜகிரியவிலுள்ள பகுதியிலுள்ள கிராமிய வங்கித்தொழில் மற்றும் அலுவலர் பயிற்சிக் கல்லூரிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.

பின்நாட்களில் ஏற்கனவேயுள்ள சேதமடைந்த கட்டிடங்களைப் புதுப்பிக்கும் வேலை மற்றும் மத்திய வங்கியின் விரிவாக்கக் கட்டிடம் ஆகிய இரண்டினதும் வேலைகளை ஜேர்மனியின் நிறுவனமொன்று பொறுப்பேற்றுக்கொண்டது. இதற்கு மத்திய பொறியியல் ஆலோசனை பணியகம் கட்டிடக் கலை வரைபடங்கள், உள்ளக வடிவமைப்பு, மின்னூட்டல் இயந்திரவியல் வரைபடங்கள் என்பனவற்றை வழங்கியுள்ளது. செயற்திட்டத்திற்கான ஆரம்ப வடிவமைப்பு உள்ளூர் கட்டிடக்கலை நிறுவனமொன்றின் ஒத்துழைப்புடன் ஒல்லாந்து கட்டிடக் கலைஞர்களினால் மேற்கொள்ளப்பட்டது என மத்திய வங்கியின் வரலாற்று குறிப்புக்கள் சொல்கின்றன.
பின்னர் 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கட்டிடத்தின் தொழிற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய வங்கியின் 50ஆவது பொன் விழாவினை முன்னிட்டு அதனை நினைவு கூறும் வகையில் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 ஆம் திகதி அப்போதைய ஆளுநர் ஏ.எஸ். ஜயவர்த்தன அவர்களின் தலைமையில் மத்திய வங்கியின் புதிய கட்டிடத்தினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரினால் அலுவலக ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் 5 மாடிகள் கொண்ட கட்டிடமாக மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகம்.