Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பழங்கால ரோமானியர்களும் அவர்களின் வினோத சட்ட திட்டங்களும்

பஞ்ச தந்திர கதைகள் போல ஒரு சில நம்பிக்கை சார்ந்த வழி வழியாக மக்கள் கூறி வரும் கதைகள் ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டு. “ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்பட்டதில்லை” என்றொரு பழமொழி உண்டு. மிக மிகப் பழமையான ஒரு நகரம் ரோம். அடிப்படையில் ரோமானியர்கள் காட்டுவாசிகள். ஒவ்வொரு ஆட்சியாளர்களும் புது புதுச் சட்டங்களை இயற்றி, அதை சரி செய்து பின்பு கலாச்சாரமான மக்களாக மாறுவதற்கு சில நூற்றாண்டுகள் ஆகியுள்ளது. இந்த காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களும் ரோமானியர்களின் ஆட்சி முறையின் ஒரு சில வரலாற்றுப் பதிவுகளும் இங்கே.

ரோம் நகரம் எப்படித் தொடங்கப்பட்டது என்பதற்கு ரோமானியர்களிடம் ஒரு கதை உண்டு. இரட்டைச் சகோதரர்கள் ரோமுலஸ் மற்றும் ரேமஸ், செவ்வாய் கிரகத்தின் பிள்ளைகள். அவர்கள் குழந்தைகளாக இருக்கும் பொழுது டைபர் நதியில் அவர்களுடைய சூனியக்கார மாமா மூழ்க விட்டுவிட்டார். ஒரு ஓநாய் அவர்கள் இருவரையும் காப்பாற்றியது. அந்தச் சிறுவர்கள் வளர்ந்து அவர்கள் மாமாவைக் கொன்று பலி தீர்த்தனர். பின் இரட்டையர்கள் இருவரும் ஒரு புது நகரத்தை உருவாக்க முடிவு செய்தனர், ஆனால் அவர்களுக்கு அந்த நகரத்தை எங்கே அமைப்பது என்பதில் ஒரு குழப்பம். பாலத்தீன் மலையில் உருவாக்கலாம் என்பது ரோமுலசின் எண்ணம். அவென்தீன் மலையில் உருவாக்கலாம் என்பது ரேமஸின் எண்ணம். இருவரில் யாருடைய எண்ணம் சரி என்பதைக் காண அவர்களுடைய கடவுளிடமிருந்து ஏதாவது சமிக்கைகள் வருகிறதா என்று கவனித்தனர். இருவருடைய சமிக்கைகளையும் அவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இருவருமே அவர்களுக்குச் சாதகமாகத்தான் அவை கூறுவதாக எண்ணினர். இதற்கிடையில் இருவருக்குள் எதார்த்தமாக ஏற்பட்ட திடீர் சண்டையில் ரேமஸ் கொல்லப்படுகிறான். ரோமுலஸ் அன்று முதல் அந்த நகரத்திற்கு “ரோமா” என்று பெயரிடுகிறான்.

படம்: commons.wikimedia

அன்று முதல் “ரோமா” என்று அழைக்கப்பட்ட “ரோம்” நகரம் அரசர்களால் ஆளப்பட்டது. முதல் அரசன் ரோமுலஸ். ரோமானியர்களுக்கு வித்தியாசமான கடவுள் நம்பிக்கை இருந்தது. இயற்கை மற்றும் செயற்கை என்று அனைத்திற்கும் ஒவ்வொரு கடவுளை அவர்கள் கொண்டிருந்தனர். இடி, மின்னல், அன்பு, காதல், போர், அறிவு, ரோம் நகரில் ஓடும் பாதாள சாக்கடைக்குக் கூட ஒரு கடவுள் இருந்துள்ளார். புதிதாகச் சன்னதிகளை உருவாக்குவதும், காணிக்கைகள் வழங்குவதன் மூலம் கடவுளை மகிழ்விப்பதாக எண்ணினர். மன்னர்கள் ஆட்சியில் புதிய நகரங்களைக் கைப்பற்றும் பொழுது அவர்களிடம் இருந்து கடவுளை கடனாக இரவல் வாங்கினார்களாம். இசிஸ் என்ற எகிப்தின் பெண் கடவுளும், மித்ராஸ் என்ற இரானின் கடவுளும் இவர்களால் வாங்கப்பட்டது. ஒரு சில அரசர்கள் தாங்கள் இறந்தால், இறந்த பின் கடவுளாக வழிபட வேண்டும் என்று அறிவித்தனர். இதன் மூலம் அவர்களின் சாம்ராஜ்யம் சக்தி வாய்ந்ததாகவும், மரியாதையாகவும் நடத்தப்படும் என்பது எண்ணம்.

ரோம் நகர நாகரீகம் இருண்ட காலத்தின் ஒரு கலங்கரை விளக்கம் எனவே சொல்லலாம். ரோம் நகர அரசர்கள் அரியணை என்பது ஒரு கண்ணியமான, மரியாதை மிக்க ஒரு சாம்ராஜ்யமாக கருதப்பட்டது. ஆனால் அதில் ஒரு சில விதிவிலக்கான அரசர்களும், அவர்களுடைய வித்தியாசமான சட்டங்களும் இருந்தது.

படம்: playbuzz

ஊதா நிறம் மிக உயர்ந்த மரியாதைக்குரிய, ராஜ நிறமாகக் கருதப்பட்டது. தினமும் அதிகாலையில் சுத்தமான ஊதா தோகாக்களை அணிந்தனர். தோகா எனப்படுவது சமூகப்பணியில் உள்ளவர்கள், ஆளுமையில் உள்ளவர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டும் அணியப்பட்ட ஒரு ரோமானிய உடையாகும். ஊதா தோகாக்களை அணிபவர்கள் கடுமையான சட்டம் கொண்டு தண்டிக்கப்பட்டனர். அவை அரச குடும்பத்திற்கென்று ஒதுக்கிவைக்கபட்டதன் காரணம் அதில் பயன்படுத்தப்படும் ஆடம்பரமான ஊதா சாயம். அது “போனிசியா” என்கிற இடத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. போனிசியா மட்டுமே இவ்வகை சாயம் தயாரிப்பதில் ப்ரேத்யேக பெயர்பெற்றது. ஒரு தோகா தயாரிக்க சுமார் பத்தாயிரம் கடல் பாசிகளை நசுக்கி அரைத்து தயார் செய்தனர். ஒரு தோகாவின் எடைக்குத் தங்கம் வழங்கும் அளவுக்கு அதன் விலை இருந்ததாம்.

பெண்கள் இறுதி ஊர்வலத்தில் அழுவதற்குத் தடை செய்யப்பட்டிருந்தது. ரோமானியர்கள் இறந்த பின் அஞ்சலி செலுத்தும் முறை என்பது ஊர்வலத்தின் மூலம் தொடங்கும். மக்கள் தெருக்களில் நடக்கும்பொழுது அழுது கொண்டே நடப்பர். அதிக மக்கள் ஒரு சவத்தின் பின்னால் அழுது கொண்டே போனால் அவர் மிகப் பிரபலமானவர். அருகாமையில் உள்ளவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் குடும்பப் பெருமையைப் பறைசாற்ற மக்கள் வாடகைக்கு அழுக அழைக்கப்பட்டனர். அவர்கள் தலைவிரி கோலமாய் முகத்தில் தழும்புகள் உள்ளது போல் பாவனைச் செய்து பின்னால் கதறிக்கொண்டு ஓடி வரச் செய்தனர். வாடகைக்கு மக்களை அமர்த்துவது வாடிக்கையாகிப் போனதும் இறுதி ஊர்வலத்தில் அழுவதைத் தடை செய்யச் சட்டம் இயற்றினர்.

படம்: pinterest

ஒரு கணவன் தன்னுடைய மனைவியை மற்றொரு ஆடவனுடன் படுக்கையில் பார்த்துவிட்டால் இருவரையும் கை, கால்கள் விலங்கிட வேண்டும். பின்பு சுமார் இருபது மணி நேரம் கணவனுக்கு அவகாசம் கொடுக்கப்படுகிறது. அவனால் அக்கம்பக்கம், சுற்றத்தார் என்று எவ்வளவு மனிதர்களை அழைக்க முடியுமோ அழைத்து இருவருக்கும் உண்டான தொடர்பை பற்றியும், கூடுதலான சில வர்ணனைகளையும் கூற வேண்டும். கள்ளத்தொடர்புடைய ஆண் அடிமையாகவோ, விபச்சாரியாகவோ இருந்தால் கணவருக்கு அவனைக் கொல்ல உரிமை உண்டு. சராசரி குடிமகன் என்றால் மனைவியின் தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மனைவியின் தந்தைக்கு அந்த நபரைக் கொல்ல சட்டப்படி உரிமை உண்டு. இதே மனைவி கணவர் வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் கையும் களவுமாக பிடித்து விட்டால் சத்தமாக அழுது ஊரை அழைக்க மட்டுமே சட்டம் உள்ளது. அருகாமையில் எந்த ஒரு இறப்பும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டுமாம்.

மோசமான குற்றங்களுக்கு கொடூரமான தண்டனைகள் விதிக்கப்பட்டன. மோசமான தவறு ஒன்றைச் செய்து விட்டால் சிறையின் மேல்மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து தூக்கி வீசப்பட்டனர். தந்தையைக் கொன்றவர் என்று உறுதி செய்யப்பட்டால் கொடூரமான சாவு உறுதி. வெளிச்சம் தெரியாதபடி இறுக்கமாகக் கண்களை கட்டி நகரத்திற்கு வெளியில் அழைத்துச் சென்று ஆடைகளை உருவி இரும்பு கம்பியால் அடிக்கப்பட்டனர். பின்பு ஒரு சாக்குப்பையினுள் ஒரு பாம்பு, ஒரு நாய், ஒரு குரங்கு, ஒரு சேவல் உடன் சேர்த்து கட்டித் தைத்து கடலில் வீசி விடுவார்களாம்.

படம்: pinterest

ரோமானிய பெண்களின் தலைமுடி இயற்கையாகவே கருமை நிறம் கொண்டது. விபச்சாரம் செய்பவர்களுக்கு குடும்ப பெண்களுக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்க கூடாது என்பதற்காக அவர்கள் தலைமுடியை பொன்னிறமாகச் சாயம் பூசிக்கொள்ள ஆணையிட்டனர். அது இயற்கையிலே ரோமானிய காட்டுவாசி போல் இருக்கும் என்று எண்ணினர். ஆனால் இந்த யோசனை பலனளிக்க வில்லை. ரோமானிய பெண்கள் அவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டனர். ஒரு சிலர் தங்கள் தலை முடியை முழுவதுமாக மலித்துகொண்டு தலைசாயம் பூசிய பெண்களை போல் சவுரி அணிந்து கொண்டனர். மீண்டும் உயர்ந்த குல பெண்களுக்கும் விபச்சாரப்பென்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆனது.

செனட் அனுமதி அளித்தால் தற்கொலை செய்து கொள்ளலாம் எனச் சட்டம் இருந்தது. நோய் வாய்ப்பட்ட மனிதர்கள், மனத்தளர்ச்சி, பிற பிரச்சனைகள் உள்ள மனிதர்கள் செனட்டிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதை விட தற்கொலையே பெரியது என்று செனட் கூடி முடிவு செய்தால் அவர்களுக்கு இலவசமாக ஒரு விஷபாட்டில் செனட் அளிக்கும். போர் வீரர்கள், அடிமைகள் மற்றும் சிறை தண்டனை அனுபவிப்பவர்கள் மூவருக்கு மட்டும் இதில் அனுமதி கிடையாது.

படம்: pinterestஒரு குடும்பத்தில் தந்தைக்கு மூன்று முறை தற்காலிகமாக தனது மகன்களை ஏலத்தில் விட அனுமதி உண்டு. ஏலத்திற்கு உண்டான கால அவகாசம் முடிந்தவுடன் ஏலத்தில் எடுத்த நபரைத் திரும்ப தந்தையிடம் சேர்த்து விட வேண்டும். ஒரு குடும்பத்திற்கு மூன்று ஏலம் தான். இரண்டு, மூன்று மகன்கள் என்றாலும் மொத்தமாக மூன்று ஏலத்திற்குப் பின் மகன்கள் சுதந்திரமாக செயல்படலாம்.

ரோமானியர்களை பொறுத்த வரை ஒரு பொருளை குறிப்பிட்ட காலம் ஒருவர் அனுபவித்தால் அந்தப் பொருள் அவர்களுடையது, மனிதர்களையும் சேர்த்து. கணவர்கள் வீட்டில் பெண்கள் ஒரு வருடம் முழுவதுமாக தங்கி விட்டால் அவர்கள் கணவருக்கு சொந்தம். அவர்களுக்குச் சுதந்திரம் வேண்டுமென்றால் ஒவ்வொரு வருடம் முடிவதற்குள் மூன்று தினங்கள் கணவரை விட்டு விலகி வாழ வேண்டும். ஒவ்வொரு வருடமும் ரோமானிய பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி சில நாட்கள் மறைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஒரு சில மத வேறுபாடுகள் இருந்தாலும் பிற்காலத்தில் அனைவரும் ஒருசேரக் கிறிஸ்துவ மதத்திற்குள் வந்து பின்பு கலாச்சாரத்தில் மேம்பட்ட மாற்றங்களைக் கண்டனர். வரலாற்று மனிதர்களான ஜூலியஸ்  சீசர் போன்றவர்களின் கதைகளும், அவர்களின் புகழும், என்றேன்றும் நிலைத்திருக்கும்.

Web Title: Funny ancient roman rules and regulations

Featured Image Credit: highlark

Related Articles