
சில காலம் முன் வரை விரல் நுனியில் உலக அசைவுகளை இருந்த இடத்தில் இருந்தே அறிந்து கொள்ளும் அளவு தகவல் மற்றும் தொலைத்தொடர்பு வளர்ந்துள்ளது என்று பேசிகொண்டிருந்தோம்.
“கூகுள், லைட்டை போடு” “கூகுள், ஓவனை ஆப் செய்” “இன்றைய பருவநிலை என்ன” “நான் வெளியில் செல்லும்பொழுது குடை தேவையா” “இன்றைய எனது பணிகளுக்கான அட்டவனையை படி”
இணையதள ஜாம்பவானான கூகுள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் புதியதாக தற்போது ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தி தகவல் தொடர்புத்துறையை புதிய பரிமாணத்துக்கு எடுத்து சென்றுள்ளது. இவைகளை நம் வீட்டின் எலெக்ட்ரிக் சாதனங்களுடன் தொழில்நுட்ப முறையில் இணைத்து கட்டளைகளுக்கு ஏற்ப இயங்க செய்யலாம். இத்துடன் இணையத் தகவல்கள் பற்றி நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஸ்பீக்கர்களிடம் இருந்து மின்னல் வேக பதில்களும் கிடைக்கும். கைபேசியும் அருகளை இணையவசதியும் இதற்கு அவசியம். இதற்கு முன் தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தி வந்த ரோபோடிக் (Robotic) தொழில்நுட்பம் இன்று மற்றொரு வடிவில் நம் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து லாவகமாக அமர்ந்து கொண்டது. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அதன் உச்சாணிக்கொம்பில் இந்த சமூகத்தை இலயிக்கச் செய்து கொண்டிருக்கிறது. “தேவையே கண்டுபிடிப்புகளுக்கான ஆரம்பம்” என்ற கூற்று போல் இதன் ஆரம்ப கால பயன்பாடுகளையும் வளர்ச்சிகளையும் நாம் ஓரளவு அறிந்து கொண்டால் தற்போதைய சூழலில் தேவைக்கேற்ப பயன்படுத்தி பயன்பெற அடுத்த தலைமுறையினருக்கு சிறு விழிப்புணர்வாக அமையும். உலக தொலைத்தொடர்பு தினம் என்றொரு தினம் நம்மை கடந்து சென்றதோடு இருந்துவிடக்கூடாது. தொலைத்தொடர்பு அதன் தோற்றம், வளர்ச்சி, காலநிலை மாற்றங்கள் இவையனைத்தையும் இக்கட்டுரையில் காண இருக்கின்றோம்.
சாதனங்கள் இல்லாத தொலைத்தொடர்பு
மக்கள் குழுக்களாக சமூகமாக வாழத்துவங்கும் பொழுது ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஒரு பந்தத்தினை ஏற்படுத்த தகவல் தொடர்பு அவசியமானது. மொழிகளோ எழுத்து வடிவமோ இல்லாத காலத்தில் உடலசைவுகள், சீழ்க்கையொலி, புகை எழுப்பல், வர்ணம் தீட்டுதல் போன்ற கூட்டத்திற்கேற்ற சமிக்கை மொழியில் தகவல்களை பரிமாறிக்கொண்டனர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால் இயற்கையின் ஒலிகளை கொண்டு அதற்கான கருவிகளை தயார் செய்தனர். கொட்டும் முரசு, பறை போன்ற கருவிகள் மூலம் தொலைவில் உள்ளவர்களுக்கு அல்லது கூட்டத்தினற்காண தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இசையின் வெவ்வேறு சப்தங்களை வைத்து தகவல்கள் கிரகிக்கப்பட்டது. பின்பு மொழிகளும், எழுத்துக்களும் பயன்பாட்டிற்கு வந்து ஓரளவு நாகரீக வாழ்க்கைக்கு மனித இனம் மாறியவுடன் எளிதாகவும் துள்ளியமாகவும் தேவைப்படும் விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். மனிதன் எழுதத் துவங்கும் முன்னரே குறியீடுகளை பயன்படுத்தி நாணயங்களை அச்சிட துவங்கி விட்டான். மன்னர்கள் முதல் மங்குனி வரை அன்றைய உலகின் மிகப்பெரிய சவால் தொலைத்தொடர்பு.
குதிரையில் தகவல்களை கட்டி விடுவது, தூதுவர்களை அனுப்புவது போன்றவை அவர்களின் சூழ்நிலைக்கேற்ப ஓரளவு பயனளித்தாலும் அவைகளில் நடைமுறை சிக்கல்கள் இருந்தன. தூதுவர்களிடம் கசியும் இரகசியம், அவர்களினால் ஏற்படும் தவறுகள், விபத்துக்கள், தகவல் தொலைந்து போவது போன்ற விஷயங்களினால் மாற்று உபாயங்கள் தேவைப்பட்டது. தூது புறாக்களை பயன்படுத்த துவங்கினர்.
புறாக்களுக்கு இயற்கையிலயே தன்னுடைய வசிப்பிடத்தை நினைவில் வைத்து திரும்பி வரும் குணம் உள்ளது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி ஒருவர் தன்னுடைய வசிப்பிடத்தில் இருந்து தூரமாக செல்லும் பொழுது புறாக்களையும் உடன் எடுத்து சென்று விடுவார். அவருக்கு தேவைப்படும் பொழுது புறா மூலம் தகவல் அனுப்பினால் அது இருப்பிடம் நோக்கி செல்லும். காலப்போக்கில் அவைகளை பழக்கப்படுத்தி மற்ற இடங்களுக்கு செல்லவும் உபயோகப்படுத்தினர்.
வரலாற்று சுவடுகளில் மன்னர் செங்கிஸ்கான் புறாக்கள் மூலம் தொலைவில் இருந்த பல சாம்ராஜ்ஜியங்களுடன் தொடர்பில் இருந்தாராம். பழங்கால கிரேக்க போட்டியான ஒலிம்பிக்’கில் முக்கிய அறிவிப்புகள் புறாக்கள் மூலமே வெளியிடப்பட்டது . இரண்டாம் உலகப்போரின் பொழுது அரசியல், ராணுவம், சமாதானம் அனைத்திலும் புறாக்கள் முக்கிய பங்காற்றின. போக்குவரத்து சிக்கல்கள், இயற்கை பேரிடர்கள், துரோகங்கள், மனித தவறுகள் இவற்றை தாண்டி புறாக்களுக்கு எழுதப்படிக்க தெரியாதது மனிதர்களை கவர்ந்துள்ளது என்று நகைப்பாக கூறலாம்.

Dove (Pic: wikipedia)
தபால் நிலையங்கள்
அஞ்சல் சேவையை மனித குல வரலாற்றில் முதன் முதலில் பயன்படுத்தியது பெர்சிய மன்னர் சைரஸ் என்று அறியப்படுகிறது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டு பறந்த பெர்சிய ராஜ்ஜியம் அதிகாரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த தருணம் அது. அதன் அகண்ட பரப்பளவில் செய்திகளை அறிவதும் தெரிவிப்பதும் மிகக் கடினமாக இருந்தது. அப்பொழுது அஞ்சலக சேவையை மன்னர் சைரஸ் தோற்றுவித்தார். அவரை தொடர்ந்து இந்த சேவையை எகிப்து, ரோம், சீனா போன்ற நாடுகளின் அதிகாரமிக்க ஆட்சியாளர்கள் தங்கள் தபால் சேவைக்கான திட்டங்களை கட்டமைத்தனர்.
1635 ஆம் ஆண்டு பிரிட்டனில் மன்னர் ஆட்சி காலத்தில் நகர் முழுவதும் அங்காங்கே குதிரைவீரர்கள் நிறுத்தப்பட்டனர். மன்னரின் செய்திகள், அரசாணைகள் ஆகியவற்றை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதற்காக இந்த ஏற்பாடு. காலப்போக்கில் பொதுமக்கள் தங்கள் கடிதங்களையும் அரசுடைய குதிரைவீரர்களிடம் கொடுக்க ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து குதிரைவீரர்கள் சேவை அஞ்சல் அலுவக சேவையாக மாற்றப்பட்டது. இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி வர்த்தக தொடர்பிற்காக முதன் முதலில் அஞ்சல் சேவையை பயன்படுத்தினர். பின்னர் அங்கிலேயர் ஆட்சி காலம் வந்த பொழுது ஜெனெரல் இராபட் கிளைவ் மக்களுக்கான அஞ்சல் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் அது இந்திய அரசுடமையானது.

India Post (Pic: qz)
அஞ்சல் உறை மற்றும் உள்நாட்டுக் கடிதம்
கி.மு. 35௦0 ஆண்டு களிமண்ணில் என்வெளப் வடிவிலான சதுரமான காலி பெட்டகம் செய்து அதற்குள் தகவல்களை வைத்து பயன்படுத்தி வந்துள்ளனர். இவை சில சமயங்களில் உருண்டையாகவும் வடிவமைக்கப்பட்டனவாம். பின் துணி, மிருகங்களின் தோள்கள், அல்லது காய்கறிகளின் ஒரு சில பகுதிகள் என்று என்வெளப் உருமாறிக்கொண்டே வந்தது. எகிப்திய மன்னர் பாப்பிரசு முதன் முதலில் கோரைப்புல்லை பயன்படுத்தி தாள் (PAPER) என்ற ஒன்றை கண்டுபிடித்ததால் பாப்பிரசு என்ற சொல்லே “பேப்பர்” என்று ஆங்கிலத்தில் அலைக்கின்றோம். பேப்பர் என்வெளப்கள் முதன் முதலில் சீனர்கள் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. வருடம் 1845 இரு ஆங்கிலேயர்கள் என்வெளப் தயாரிக்கும் இயந்திரத்திற்கு முதன் முதலில் காப்புரிமை பெற்றனர். இந்திய அஞ்சலகம் அரசுடைமையாகி வருடம் 195௦ ல் இந்திய அரசின் சின்னம் பொருந்திய என்வெளப்கள் மற்றும் இன்லாந்து கவர்கள் வெளியிடப்பட்டன. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நமக்கு மின்னஞ்சல் வந்தாலும் அதை இன்லாந்து கடிதம் மூலம் மீண்டும் அனுப்பி வைக்கும் பழக்கம் ஒரு சில வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு உண்டு. நீண்ட காலமாக நடக்கும் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் இன்று வரை கடிதப்போக்குவரத்தை ஆதாரப்பூர்வமான தகவல் தொடர்பாக நம்புகின்றன.

Envelop (Pic: youtube)
சாதனங்களுடனான வாழ்க்கை
செமாபோர் லைன்கள்
17 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்த செமாபோர் (semaphore lines) லைன்கள் கருவிகளுடனான தொலைத்தொடர்பின் துவக்கம் என்று சொல்லலாம். ஒரே நேர் கோட்டில் உயரமான கோபுரங்கள் அமைத்து அதல் கண்காணிப்பு கண்ணாடியுடன் ஷட்டர்கள் அமைக்கப்பட்டிருக்கும். செமாபோரின் இயந்திர கைகள் அசைவுகளை வைத்து எழுத்துக்கள் கிரகிக்கப்பட்டு வாக்கியங்களாக படித்தறிந்து அறிந்து கொண்டனர். பிரெஞ்சு புரட்சி நடைபெற்று கொண்டிருந்த நேரம். ஆறு நாடுகள் பிரான்ஸ் நாட்டை சுற்றி வளைத்து கொண்டது. செமாபோர் லைன்களை சுமார் 3000 மைல்களுக்கு நிறுவியதால் உள்நாட்டு விரைவான தகவல் தொடர்பிற்கு அவை பெரிதும் உதவியது. மேற்கு யூரோப்பை மாவீரன் நெப்போலியன் கைப்பற்ற அதன் செமாபோர் லைன்கள் மேல் இருந்த ஆசையே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

Semaphore Lines (Pic: enacademic)
தந்தி சேவை
1838 ஆம் ஆண்டு மின்சார வழி தந்தி தொடர்பை சாமுவேல் மோர்ஸ் என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார். அவர்கள் கண்டறிந்தது இரண்டு தந்தி இயந்திரங்கள் மின்சார வயர்களின் உதவியுடன் இயக்கினால் பட்டன்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சீராக அடிக்க செய்ய முடியும். அகவே இதன் மூலம் தகவல்களை பரிமாறி கொள்ளலாம் என்பதை அறிந்தனர். உலக நாடுகள் முழுவதும் தந்தி வழி சேவையின் சமிக்கைகளை “மோர்ஸ் கோட்” என்றே அழைத்து மோர்சை நினைவு கூர்ந்தது.
இந்தியாவில் முதல் தந்தி சேவை கொல்கத்தா நகருக்கும் டைமன்ட் துறைமுகத்திற்கும் இடையே சோதனைக்காக 1850 ல் நடந்தது. பின்னர் 1851 ல் கிழக்கிந்திய கம்பெனியின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. கொல்கத்தா அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் தலைநகராக விளங்கியது. மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தந்தி சேவைக்கான லைன்கள் நாடு முழுவதும் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. பின்னர் தொலைபேசி கேபிள் லைன்கள் மூலம் தந்தி தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்து இத்தாலிய விஞ்ஞானி மார்கோனியின் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் கம்பியில்லா சேவையில் தந்திகள் அனுப்பப்பட்டன. பிறகு பல நிலைகளில் தந்தி தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டனர்.
இந்தியர்களின் கலாசாரத்தில் தந்தி அனுப்புதல் ஒன்றென கலந்துவிட்டது என்றே சொல்லலாம். தொலைபேசி, பேக்ஸ் போன்ற சாதனங்கள் வந்த பிறகும் இந்தியர்களின் தந்தி அனுப்பும் பழக்கம் குறையவேயில்லை. தொலைப்பேசி மூலம் விழாக்களுக்கு அழைப்பு விடுத்தாலும் ஒரு கடிதம் எழுதுவதை சம்பிரதாயமாகவே கருதினர். அதே போல் அவசர கால விஷயங்களுக்கும் கெட்ட நிகழ்வுகளுக்கும் கட்டாயம் ஒரு தந்தி அணைத்து உறவினருக்கும் அனுப்பப்படும். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வயதான பாட்டிகள் தந்தி வந்துள்ளது என்று தெரிந்தாலே செய்தியை கேள்விப்படும் முன் ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். தலைமுறைகள் கடந்து பிற தொலைத்தொடர்பு சாதனங்கள் வாழ்கையில் அத்தியாவசியமான ஒன்றான பின்னரே தந்தி சேவை முற்றிலும் குறைவானது. சென்ற 2௦13 ஆம் ஆண்டு 163 வருட தந்தி சேவையை இந்திய அரசாங்கம் நிறுத்திக்கொண்டது. கடைசி தந்தி அஷ்வாணி மிஸ்ரா என்பவரால் தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அனுப்பப்பட்டது.

Telegram (Pic: nytimes)
தொலைபேசி பயன்பாடு
அலெக்ஸ்சாண்டர் கிரஹாம்பெல் தொலைபேசியை கண்டுபிடிக்க அவருடைய தனிப்பட்ட தேவை ஒரு காரணமாக இருந்தது. அவருடைய தாய் மற்றும் மனைவி இருவருமே காது கேளாதவர்கள். ஆதலால் அவர் சப்தங்களுக்கான ஆராய்ச்சியில் முதலில் ஈடுபட்டிருந்தார். அவருடைய சோதனைகள் வார்த்தைகளுக்கான சமிக்கைகளை தந்திக்கான வயர்கள் மூலம் எவ்வாறு அனுப்புவது என்பதை பற்றித்தான் இருந்தது. தாமஸ் வாட்சன் என்ற துணை ஆராய்சியாளரை இதற்காக பணியமர்த்தினார். இருவரும் இதற்கான பணிகளில் ஈடுபடும் போது அது தொலைப்பேசி கண்டுபிடிப்பாக உருவானது. விஞ்ஞானி அலெக்ஸ்சாண்டர் கிரஹாம் பெல் தொலைப்பேசி கண்டுபிடிப்பான காப்பீட்டு உரிமத்தை 1876 ல் பெற்றார். க்ரஹாம்பெல் மார்ச் 10, 1876 அன்று தொலைபேசியில் பேசிய முதல் வார்த்தைகள் “மிஸ்டர் வாட்சன், கம் ஹியர், ஐ வான்ட் டு சீ யு” (Mr. Watson, Come here, I want to See You). க்ரஹாம்பெல் தொலைபேசியை எடுத்தவுடன் “அகாய்” (Ahoy) என்ற வார்த்தையை பயன்படுத்தினார். சில வருடங்கள் பின் வந்த புகழ் பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் “ஹுல்லா” “Hulla” என்றால் ஆச்சர்யத்தை குறிக்கின்ற வார்த்தையை பயன்படுத்த தவறுதலாக “ஹலோ” “HELLO” என்றே பிரயோகித்தாராம். பின்பு காலப்போக்கில் அதுவே நிலைத்து விட்டதாக ஒரு கூற்று உண்டு.
இந்தியாவில் தொலைபேசி சேவை 1881 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் துவங்கப்பட்டது. முதன் முதலில் பெரு நகரங்களில் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அப்பொழுது வெறும் 93 வாடிக்கையாளர்கள் தானம். பின்பு அதை அரசுடைமையாக்கி பல்வேறு நிலைகளை பெயர்களை கடந்து வருடம் 2௦0௦ இல் BSNL மூலம் தொலைபேசி சேவை ஒருங்கிணைந்தது. வருடம் 1989 அன்று இந்தியாவின் மொத்த ஜனத்தொகைக்கு கணக்கிட்டால் 2௦0 நபருக்கு ஒரு தொலைபேசியாக இருந்தது என்பது இன்றைய ஒப்பீட்டில் வியப்பளிக்கிறது. பின்பு 1995 ஆம் ஆண்டு செல்பேசி சேவை தொடங்கப்பட்டது. இணையம் செல்பேசியுடன் இணைந்த பொழுது ஏற்பட்ட புரட்சி இன்று விண்ணை தொடும் அளவிற்கு உலகெங்கும் வளர்ந்து வருகிறது.

Phone (Pic: storyvori)
சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் உருவான வருடம் மே 17, 1969 மற்றும் முதல் சர்வதேச தந்தி கூட்டமைப்பு கையெழுத்தான வருடம் 1881. இவை இரண்டையும் நினைவு கூறும் நோக்கில் உலக சர்வதேச தொலைத்தொடர்பு தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தகவல் மற்றும் தொலைத்தொடர்ப்பு தேவைக்கான பயன்பாடுகளை கடந்து இந்த சமுதாயத்தை அடிமைப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம். குடும்பங்களுள்ளான பேச்சுக்கள் குறைந்து அலைபேசியுடன் வாழும் நிலைக்கு வந்துவிட்டது. இவற்றை சுய உணர்வுடன் ஒவ்வொருவரும் உணர்ந்து அளவான பயன்பாட்டில் ஆரோக்கியமான சமுதாயத்தை வளர்த்தெடுப்போம்.
Web Title: A Sweet Story of Communications
Featured Image Credit: johnfudrow