மக்களின் வாழ்வியல் முறையோடு தான், நாம் இலக்கியங்களிலும், புராணங்களிலும், புதினங்களிலும், இதிகாசங்களிலும் நாம் படிக்கின்ற சம்பவங்கள் ஒத்து போகின்றன. மஞ்சுவிரட்டு, சல்லிக்கட்டு, சடுகுடு, மல்யுத்தம், சேவற்சண்டை என கதைகளில் நாம் கேட்ட, திரைப்படங்களில் பார்த்த எல்லா விளையாட்டுகளும், நமது வாழ்வியலோடும், வாழ்க்கைமுறையோடும் பின்னப்பட்டிருந்தது. காலப்போக்கில், நடைமுறை சிக்கல்களினாலும், சட்ட திட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களாலும், பாரம்பரியம் சார்ந்த வாழ்க்கைமுறை மட்டுமல்லாது, பாரம்பரிய விளையாட்டுகளையும் நாம் இழந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். அரசாட்சி காலத்தில் போர் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், சில நேரங்களில் கேளிக்கைக்காகவும் நடத்தப்பட்டது தான் சேவற்சண்டை. சேவற்சண்டை தமிழகத்தில் 16 ஆம் நூற்றாண்டு முதல் நடைமுறையில் இருப்பதாக சில குறிப்புகள் கூறினாலும், கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் இந்தியா, சீனா, பாரசீகம் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் வழக்கத்தில் இருந்ததாகவும்,பாரசீகத்து பேரரசின் மூலமாகத் தான் சலாமி போர் நடைபெற்ற காலத்தில் கிரேக்க நாட்டின் கடற்படை தளபதி தெர்மிஸ்டோக்கிள்ஸுக்கு அறிமுகமானது என்கின்றது சில வரலாற்றுக் குறிப்புகள்.
சேவற்சண்டை விதிகள்
சேவற்சண்டையை தொடங்குவதற்கு 21 நாட்களுக்கு முன்பு எந்த சேவலுடன் எந்த சேவலை மோதவிடுவது என்பது தீர்மானிக்கப்படும். இது “ஜோடி சேர்த்தல்” என்று அழைக்கப்படுகிறது. சேவல்களின் உயரம், வலு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஜோடி சேர்க்கப்படுகிறது. சண்டைக்கு முன்னதாக சேவல்களில் கால் நகங்களையும், காலில் இருக்கும் முட்களையும் கூர்மையாக்கி தயார் செய்கிறார்கள். 15 நிமிடம் சண்டை, 15 நிமிடம் ஓய்வு என ஒரு மணிநேரம் சண்டை நடக்கும். இதில் சேவல் சோர்வில் விழுந்துவிட்டாலோ அல்லது சண்டையில் இறந்துவிட்டாலோ அந்த சேவல் தோற்றதாக அறிவிக்கப்பட்டு வென்ற சேவலின் உரிமையாளருக்கு சண்டை களத்திலேயே தக்க பரிசுகள் வழங்கப்படுகிறது. அநேக இடங்களில் தோற்ற சேவலையும் வென்றவருக்கு பரிசாக அளிக்கின்றனர்.
மேலே குறிப்பிட்ட போட்டியில் விதிமுறைகள் இடத்திற்கு இடம் மாறுபடலாம். ஆனால் தமிழகமெங்கும், இந்த நடைமுறை தான் கடைபிடிக்கப்படுகிறது. இந்த சேவற்சண்டை மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும், கொங்கு மண்டலத்து பகுதிகளிலும் ஆங்காங்கே இன்றும் நடைபெற்று வருகின்றது.
தென்னிந்தியாவில், தமிழகம் அல்லாது ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகம் ஆகிய மாவட்டங்களில் கிராமப்புறங்களில் நடைபெற்று வருகின்றது. 2014 ஆம் ஆண்டு கூட தமிழகத்தில் நடந்த ஒரு பெரிய சேவற்சண்டைப் போட்டியில் ஆந்திராவிலிருந்து சேவல்கள் வந்து பங்கேற்றுள்ளது.
அரசாட்சி காலத்தில் போர் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக 16 ஆம் நூற்றாண்டில் நடத்தி வந்ததாக கூறப்பட்டாலும், மக்களாட்சி நடைமுறையில் இருக்கும் இந்தா காலத்திலும் சேவற்சண்டை நடத்துவதற்கென்று காரணம் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பது வேடிக்கையான ஒன்று தான். இதனை ஏன் வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன் என்றால் கிடைக்கின்ற பல குறிப்புகளைக் கொண்டு காண்கையில் இது நம் முன்னோர்களின் வாழ்வியலோடு கிடந்திருந்த ஒரு விளையாட்டாக நான் உணர்கிறேன். இந்த சேவற்சண்டையில் சில வகையான சேவற்சண்டை மூர்க்கத்தனம் அதிகமாகவே இருக்கும். சில நேரங்களில் சேவல்கள் இறந்துவிடக்கூடிய நிலையும் இருப்பதால், மிருகவதைச் சட்டம் கொண்டு, சேவற்சண்டையின் சில வழக்கத்திற்கு எதிராக ப்ளூ கிராஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு பதிவு செய்து, சேவற் சண்டை நடத்துவதற்கு தடை விதித்துள்ளனர். ஆதலால் பல கட்டுப்பாடுகளோடு மட்டும் தான் சேவற்சண்டைகள் தற்போது நடத்தப்படுகின்றனர்.
சேவற்சண்டையின் நுணுக்கங்கள் பலருக்கு வெளியே தெரியாததால், ஒரு சிலர் சண்டையிடும் தருவாயில் சேவலின் காலில் கத்தி கட்டி விடுவது போன்ற மூர்க்கத்தனமான செயல்களில் சுலபமாக ஈடுபடுவதாலேயே பல இடங்களில் சேவல் சண்டை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. கத்தி கட்டாமல் நடைபெறும் சேவல் சண்டைக்கு பெயர் வெப்போர். அந்த சேவலை வெறுங்கால் சேவல் என்பார்கள். அதை வீர விளையாட்டாக யாரும் கருதுவதில்லை என்பது வேறு கதை.
தடைகளையும் மீறி, காவல்துறைக்குத் தெரியாமல் பல மறைவான இடங்களில் நடைபெறுவதுண்டு.
சண்டைச் சேவலை தயார் செய்யும் முறை
சண்டை சேவலை பெட்டைக்கோழியுடன் இணையவைத்து முட்டையிலிருந்து வெளிவரும் போதே குஞ்சுபருவத்திலேயே சண்டை சேவலை பிரித்தெடுத்து மற்ற கோழிகளோடு சேரவிடாமல் எப்போதும் தனியாக கூண்டில் வைத்து பராமரித்து வருவர். மற்ற சேவல்களை விட சண்டை சேவல் சற்று கம்பீரமாகத்தான் காட்சியளிக்கும்.
இரண்டு வயதாகும்வரை சேவலுக்குப் பயிற்சி தருகிறார்கள். குறிப்பாக சண்டைக்குப் பழக்கும் சேவலைத் தண்ணீரில் நீந்தவிட்டு மூச்சு பயிற்சி தருகிறார்கள்.தண்ணீரில் விடப்பட்ட சேவல் களைத்துப்போகுமளவுக்கு நீந்தும். சேவல் அதிக எடை வைத்துவிடக்கூடாது என்பதோடு அது பாய்ந்து சண்டை போட வேண்டும் என்பதிலும் சேவலை பழக்குபவர் கவனத்தில் கொள்வார்.
சேவலுக்கு போடப்படும் தீனிக்கு தான் அதிகம் செலவாகும். ருதுவான பெண்ணை முதல் வாரத்தில் வீட்டில் வைத்து கவனிப்பதைப்போல, சண்டைக்கு பழக்கும் சேவலுக்கு ஆட்டு ஈரல், முந்திரி, வேகவைத்த இறைச்சி என்று கொடுக்கும், தீனிகள் புரதச்சத்துகள் அதிகம் கொண்டவை தான்.
சேவலின் உடல்வாகு, குறிப்பாக கால்கள் மற்றும் இடுப்பு தான் அதன் சண்டை போடும் வலுவிற்கான முக்கிய அம்சம். அது நிற்கும் வாகிலிருந்தே அதன் வலிமையை கண்டறிந்துவிடலாம்.
இலக்கியங்களில் சேவற்சண்டை
நமது சங்க இலக்கியங்களின் குறிப்புகளைக் கொண்டு நாம் அறியப்பெற்றது என்னவென்றால் ஜாவா, மலாய் போன்ற நாடுகள் வரை நமது சோழ மன்னனும், பாண்டிய மன்னனும் சேவற்சண்டையை கொண்டு சென்றுள்ளனர்.
கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் அயோத்தி நகர மக்களின் பொழுதுபோக்குகளை கம்பன் வருணிக்கிறான். கோசல நாடு பற்றி கம்பன் கூறியது அனைத்தும் சோழ நாட்டை மனதிற்கொண்டு சொல்லப்பட்டவையே.
இதனை எவ்வாறு உறுதியாக கூறுகிறேனென்பதற்கான காரணத்தை செய்யுள் வரிகள் விவரிக்கும்.
கறுப்புறு மனமும் கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி
உறுப்புறு படையின் தாக்கி உறுபகை இன்றி சீறி
வெறுப்பு இல களிப்பின் வெம்போர் மதுகைய வீர ஆக்கை
மறுப்பட ஆவிபேணா வாரணம் பொருத்துவாரும்
என்ற பாடலின் பொருள் பின்வருமாறு
சினம் மிகுந்த மனமும், கண்களைப் போலச் சிவப்பு நிறமுள்ள உச்சிக் கொண்டையும் தோன்ற, தமது காலிலே கட்டப்பட்ட கத்தியால் தம்முடன் போரிடும் கோழியைத் தாக்கி, முன்பகை ஏதுமில்லாமலே கோபித்துப் போர் செய்வதில் வெறுப்பில்லாதவனாகி, செருக்கினால் அப்போரில் வலிமை பெற்று, வீர வாழ்க்கைக்கு களங்கம் உண்டானால், உயிர்துறக்கும் சேவற் கோழிகளை சிலர் போர் செய்யுமாறு செய்தார்கள். இலக்கியங்கள் வெறும் புனைவுகள் அல்ல. காலத்தின் கண்ணாடி, வரலாற்றின் திறவுகோல். அவற்றை அறிவியல் உள்ளிட்ட துறைகளோடு ஒப்பு நோக்கி ஆய்வு செய்தால். ஆச்சரியங்களும், அதிசயங்களும் வெளிப்படலாம் என்கிறார் ஆய்வுகள் நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர் பாலகிருஷ்ணன்.
இவரது ஆய்வினையும் கவனத்தில் கொள்ளக்கூடிய ஒன்று என்று ஏன் வெளிப்படுத்துகிறேன் என்றால், இவர் சங்கத் தமிழ் இலக்கிய தரவுகளை கொண்டு சிந்து சமவெளியை, இடப்பெயர் ஆய்வு முறையில் வேறு திசைக்கு எடுத்துச் சென்று ஆய்வாளர்களின் புருவங்களை உயர வைத்துள்ளார். அவர் கூறுகையில் சிந்து சமவெளியில் தற்போதும் காணப்படும் சேவற்சண்டை, தமிழகத்தின் முக்கியமான பண்பாட்டு அடையாளமாக உள்ளது. சிந்து சமவெளி முத்திரைகளிலும் காளை, சண்டை சேவல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலும் மேற்சேரி, கீழ்ச்சேரி நடுகல், யானையை வெல்லும் சேவலுடன் கூடிய கோழியூர் சிற்பம் போன்றவை பண்பாட்டு தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார்.
மேலும் சில சான்றுகள்
தமிழர் பண்பாட்டை எடுத்துச் சொல்லும் உலகத்தின் மிகப்பெரிய தமிழ் பண்பாட்டுக்கான கோயிலான அங்கோர் வாட் கோயிலின் மதிலின் வெளிப்புறத்தில், வாழ்வியல் சார்ந்த சுவர் வடிவங்களில் சேவற்சண்டை செதுக்கல்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜே.எஸ்.ஞானசேகர், என்கிற எழுத்தாளர் தான் எழுதிய பாரதியாரின் வேடிக்கை கதைகள் புத்தகத்தின் பகுப்பாய்வுக் கட்டுரையில் தெரிவித்திருப்பது என்னவென்றால்,
பாரதியார் எழுதிய சின்ன சங்கரன் கதையில் ஒரேயொரு பக்கம் வந்துபோகும் சேவற்சண்டைக் குறிப்புகளைச் சில நொடிகள் திரையில் காட்டி பலருக்கும் கொண்டு சேர்த்தமை பாராட்டுக்குரியது என்று கூறுகிறார்.
மேலே குறிப்பிட்ட சேவற்சண்டையைப் பற்றிய அனைத்து குறிப்புகளும், சேவற்சண்டை போட்டிகளில் பின்பற்றும் முறையை நியாயப்படுத்தும் நோக்கம் கொண்டோ அல்லது சேவற்சண்டைக்கு இருக்கின்ற தடை நீங்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல. மாறாக அடுத்த தலைமுறையினருக்கு சேவற்சண்டையைப் பற்றி எடுத்துச் சொல்ல இந்த கட்டுரையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டேன். நிச்சயம் மிருகவதை நடவடிக்கைகளை கண்காணித்து, மிகுந்த கட்டுப்பாட்டோடு சேவற்சண்டை தொடர்ந்து நடத்துவதில் எனக்கு உடன்பாடு உண்டு.
Web Title: History And Tamil Literatures On Cockfight, Tamil Article
Featured Image Credit: videoblocks