ஆப்பிரிக்க தேசிய விடுதலை இயக்கத்தின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவர் பாட்ரிஸ். காங்கோ குடியரசின் முதல் தலைவர். 1925ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள், பெல்ஜிய காங்கோவின் அனாலுவா என்ற கிராமத்தில் ஒரு பழங்குடி விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர்.
ஆரம்ப கால வாழ்க்கை – அரசியல் வாழ்வின் தொடக்கம்
கத்தோலிக்க மதப்பள்ளி ஒன்றில் கல்வி பயின்ற அவர், குமாஸ்தாவாகவும் அஞ்சல் அலுவலராகவும் இன்னும் பல பெல்ஜிய கம்பெனிகளிலும் வேலை பார்த்தார். பெல்ஜியம் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காங்கோவில்,6 வயதிலேயே உழைப்பாளியாகத் தன்னுடைய வாழ்க்கையை காலனியாதிக்கத்தால் விதிக்கப்பட்ட பல்வேறு வரிகளைக் கட்டவும் குடும்பத்திற்கு உணவு அளிக்கவும் நிலத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். காலனிய காங்கோவில் உயர் கல்வி நிலையங்கள் இல்லாததால் 1943ஆம் ஆண்டு கிண்டு(Kindu) நகரத்திற்குச் சென்று கல்வி பயின்றார். பின்னர் காலிமா(kalima) நகரத்தில் உள்ள “சிமடேய்ன்” நிறுவனத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார்.
இங்கு தான் முதன் முதலில் காங்கோ பாட்டாளி வர்க்கத்தோடு தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.
18 வயதில் இருந்தே பல்வேறு பத்திரிகைகளுக்கு கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வந்த அவர், உஹுரு(Uhuru)(விடுதலை) மற்றும் Independence(சுதந்திரம்) ஆகிய பத்திரிக்கைகளையும் நடத்தினார். தனது 23ஆம் வயது முதல் நாட்டின் அரசியலில் தீவிரப் பங்காற்றினார்.
காங்கோ மக்களின் அப்போதைய வாழ்க்கை நிலை – அரசியலில் பேரார்வம்
காங்கோ மக்களின் வாழ்க்கைத்தரம் ஆப்ரிக்காவிலேயே மிகவும் தாழ்வானதாக இருந்தது. 80 வருட காலனி ஆதிக்க கொடுமையினால் நாட்டின் மக்கள் தொகை, 2 மடங்காக குறைந்திருந்தது. ஆப்ரிக்காவிலேயே காங்கோவில் மட்டும் 200க்கும் அதிகமான பழங்குடி இனப் பிரிவுகள் இருந்தன. பழங்குடி இனவாதத்தை அபாயகரமான “உள்நாட்டு எதிரியாக” கருதிய லுமும்பா, மக்களை இனவாதத்திற்கு அடிமையாகாமல் பொதுத்தேசிய நலன்களுக்காகப் பாடுபடும்படி அழைத்தார்.
கிண்டு நகரத்தில் அவர் வேலை செய்த பொழுது, 1941ஆம் ஆண்டு லுலுவாபர்க்(luluaburg) நகரத்தில் நடைபெற்ற ராணுவக் காவல் படைக் கலகமும், Mattadi(மட்டாடி) நகரத்தில் 1945ல் நடைபெற்ற மாலுமிகள் எழுச்சியும் அவரை தேசத்தின் அரசியலில் பேரார்வம் காட்டச் செய்தன.
நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் காங்கோ மக்களின் வாழ்வியலை ஆராய்ந்து “காங்கோவின் எதிர்கால சுய உரிமை, மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளதா?” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். 1955, ஜூலையில் காங்கோ வந்த பெல்ஜிய அரசரிடம், காங்கோவின் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகராக அறிமுகப்படுத்தப்பட்டார். காங்கோ மற்றும் ஐரோப்பிய மக்களின் ஒருங்கிணைந்த சக்தியால் தன் தேசத்தின் இருண்ட மேகங்களை அழித்துவிட முடியும் என்று அவர் நம்பினார்.
நாட்டின் பல அரசியல் பிரமுகர்கள் பூரண விடுதலையை ஆதரித்த பொழுது ஆப்பிரிக்க ஐரோப்பிய ஒற்றுமையை அவர் வலியுறுத்தினார். ஆயினும், உலக சூழ்நிலைகளும் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்ட உணர்வும் தீவிரம் அடைந்த உடன் காங்கோ மக்களின் பூரண விடுதலையை அவரும் வலியுறுத்தினார்.
1958 ஆம் ஆண்டு அக்டோபரில் காங்கோ தேசிய இயக்கம்(Congolese national movement) என்ற கட்சியை ஆரம்பித்தார்.
“தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை தங்களுடைய சிறு முயற்சி கூட இல்லாமல் தானாகவே நிறைவேற்றப்பட்டுவிடும் என்று கைகளை கட்டிக்கொண்டு கனவு காண்பவர்களாக அல்லாமல் தங்கள் வேலைகளில் விருப்பமும் துணிவும் உண்மையும் மிக்கவர்களே தலைவர்களாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அக்ரா(கானா) நகரத்தில் நடைபெற்ற ஆப்பிரிக்க மக்கள் மாநாட்டிற்கு காங்கோவின் பிரதிநிதியாக 1958ஆம் ஆண்டில் சென்ற அவர் அங்கு “காலனி ஆதிக்கத்தின் கீழ் உள்ள எல்லா நாட்டு மக்களின் ஆசைகளும் ஒன்றே, அவர்களின் தலை விதிகளும் ஒன்றே. ஆப்பிரிக்காவில் ஏதாவது ஒரு பகுதி மட்டும் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும் கூட ஆப்பிரிக்கா எப்போதுமே சுதந்திரத்தையும் விடுதலையையும் அடையாது” என்று ஆப்பிரிக்கர்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார்.
தன்னுடைய கட்சியினரிடமும் மக்களிடமும் “சுதந்திரத்தை யாரும் வெள்ளித் தட்டில் வைத்துக் கொண்டு வந்து தர மாட்டார்கள் என்பதற்கு வரலாறு சான்றாக விளங்குகின்றது. சுதந்திரத்தைப் போராடி வெல்ல வேண்டும். அதற்கு இந்த நாட்டில் உள்ள எல்லா பலம் மிக்க சக்திகளையும் ஒன்று திரட்ட வேண்டும்” என்று அவர் விடுத்த அறைகூவலுக்கு செவிசாய்த்த காங்கோ மக்கள் காலனி ஆதிக்கத்திற்கு மரண அடி கொடுத்தனர்.
பெருகிவந்த தேசிய இயக்கத்தின் தாக்கத்தால் பெல்ஜியம் பின்வாங்கியது. 1960ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் காங்கோ குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது. பிரதம மந்திரியான பாட்ரிஸ் தன்னுடைய அரசாங்கத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு வழியில் நடத்த ஆரம்பித்தார்.
ஆட்சியும் எதிரிகள் சதியும்
“அரசியல் சுதந்திரத்தை பொருளாதார வளர்ச்சியால் உடனே உறுதிப்படுத்தாவிட்டால் அது வெறும் சொல்லாகவே நின்றுவிடும்” என்றார். காங்கோவின் செல்வங்களை ஏற்றுமதி செய்வதைத் தடைசெய்தார். உழைப்பாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக விலைகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டு வந்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும்படி முதலாளிகளை நிர்ப்பந்தித்து, மக்களுக்கு நாடு முழுவதும் முழு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் ஒரு உழைப்புச் சட்டத்தைத் தயாரிக்க முயன்றார்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் நேட்டோவின் (NATO) ராணுவத் தளங்களை அமைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறியது மேற்கு நாடுகளின் நலன்களுக்கு எதிராக இருந்தது. கூட்டு சேராக்கொள்கை, காலனி ஆதிக்கத்திலிருந்தும், நிறவெறி ஆட்சியில் இருந்தும் ஆப்பிரிக்காவை முழுமையாக விடுவித்தல், காங்கோ விற்கும் சோஷலிச நாடுகளுக்கும் சுமுகமான உறவை வளர்ப்பது என்ற பாட்ரிஸின் வெளியுறவுக் கொள்கை ஏகாதிபத்தியத்திற்கு ஒத்துவரவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் பெயரால் காங்கோ மேற்குலக நாடுகளின் பொறுப்பில் வைக்கப்படுவதை அவர் தீவிரமாக எதிர்த்தார். “ஐநா சபையின் பெயரால் எங்களுக்கு ஏதோ சர்வதேச அந்தஸ்து 15 ஆண்டுகளுக்கு கொடுக்கப்போவதாக சிலர் கூறுகின்றனர். காங்கோ ஒரு சுதந்திர அரசு என்பதையும், ஐக்கிய நாடுகள் சபையினால் அரவணைக்கப்பட்டு வாழும் நாடாக அது என்றுமே மாறாது என்பதையும் மக்களின் சார்பாகவும் அரசாங்கத்தின் சார்பாகவும் நான் அறிவிக்கிறேன்” என்றார்.
சுதந்திர காங்கோவில் தன்னுடைய நிலையை பாதுகாத்துக்கொள்ள உள்நாட்டு பிற்போக்குவாதிகள் உடன் ஏகாதிபத்தியம் அரசியல் குழப்பத்தை விளைவித்தது. இதற்கெல்லாம் அஞ்சாமல் தன்னுடைய தேசத்தின் நலன்களை பாட்ரிஸ் காத்து நின்றார். 1960 ஆம் ஆண்டு ஜூலையில் பெல்ஜியம் காங்கோ இடையிலான நட்பு உடன்படிக்கையை ரத்து செய்தார். “காங்கோவை சுரண்டலுக்கும் தங்களுடைய சுயநல எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் பயன்படுத்தும் ஒரு சிலரே இதற்குக் காரணம்” என்றார்.
இந்த நேரத்தில்தான் அவருக்கு எதிரான சதித் திட்டத்தை செயல்படுத்த ஏகாதிபத்தியம் ஆரம்பித்தது. 1954-1957 ஆண்டுகளில் அரசாங்க சொத்தை அவர் களவாடியதாக குற்றம் சாட்டினர். 1960 ஆம் ஆண்டு பாராளுமன்ற பெரும்பான்மை இருந்தும் அவரை காலனியாதிக்கவாதிகள் நீக்க முயன்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் “மேற்கு நாடுகளின் ஆட்சியாளர்களுடன் ஊழல் நிறைந்த கூட்டத்தில் நான் இணைந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரியதை நான் ஏற்க மறுத்ததால் நான் கம்யூனிஸ்டுகளின் கூலியாள் என்று என்னைப் பற்றி ஏகாதிபத்திய பிரச்சாரம் செய்யப்பட்டது” என்றார்.
1960ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏகாதிபத்தியத்தின் உதவியோடு எதிர்க்கட்சியினர் பாட்ரிசை ஆட்சியில் இருந்து அகற்றினர். அதே ஆண்டு பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். 1961 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திஸ்வில் நகரத்து சிறையில் இருந்து மக்களுக்கு அவர் விடுத்த கடைசி செய்தியில் “எனதருமை நாட்டு மக்களே! இன்பத்திலும் துன்பத்திலும் என்றும் நான் உங்களுடனேயே இருப்பேன். குறிப்பாக உங்களுடன் நின்றுதான் நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப் போராடினேன். நம்முடைய தேசிய சுதந்திரத்தை உறுதியாக்கவும் உங்களுடன் நின்று போராடுகிறேன்” என்று கூறினார்.
ஆனால் அவருடைய நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன. ஜனவரி 17ஆம் தேதி காவல் படையினர் அவரையும் அவருடைய நண்பர்கள் இருவரையும் சுதந்திர காங்கோவின் ஒரு பண்ணையில் வைத்து சுட்டுக் கொன்றனர். “கொடுமையோ, துன்புறுத்தலோ, எதுவுமே என்னை மன்னிப்பு கேட்க வைக்காது. ஏனென்றால் என்னுடைய கொள்கைகளை புதைத்துவிட்டு வாழ்வதைவிட என் தாய் நாட்டின் மீது கொண்ட மாறாத நம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து மரணமடைவது மேல் என்று நான் கருதுகிறேன்” என்று அவர் கூறியதே அவருடைய கடைசி வார்த்தைகள் ஆக இருந்தது.
அவரின் கொடூரமான கொலையை விசாரிக்க ஐநா சபை நியமித்த குழு அவரைக் கொலை செய்த ஏகாதிபத்தியத்தை குற்றம் சாட்டியது. சதிகாரர்களின் சதி காங்கோவின் தேசியத்தலைவரை வீழ்த்தியது. அவரைக் கொன்றவர்களை இன்றும் உலகம் அவமானச்சின்னங்களாகவே பார்க்கிறது.
ஒரு சாதாரண விவசாயக் கூலியாக வாழ்க்கையை ஆரம்பித்த பாட்ரிஸ் லுமும்பா தன்னுடைய புரட்சிகர இலட்சியங்களால் நாட்டின் பிரதமராக உயர்ந்து சதிகாரர்களின் சதியால் பலியானார். இன்றும் ஆப்பிரிக்காவுக்கும் அதன் மக்களுக்கும் சிறந்த ஒரு வழிகாட்டியாக திகழ்ந்து வரும் பாட்ரிஸ் லுமும்பா உண்மையில் காங்கோ தேசிய இயக்கத்தின் பேரொளி தான்..
Web Title: Patrice Lumumba Congo First Prime Minister, Tamil Article
Featured Image: africanexponent