பௌத்த தொல்லியல் ஆய்வுகள் என்பதின் நோக்கம் பௌத்த தடயங்கள் பாதுகாப்பதில் தொல்லியல் துறை, அரசு, வரலாற்று அறிஞர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் தம் முன்னோர்களின் வரலாற்று தடயங்களை தமக்கு பின் வரும் தலைமுறை அறிந்துக்கொள்ள பாதுகாக்க வேண்டும் என்றும் இவர்கள் எல்லோரையும் விட பௌத்தர்கள் கூடுதல் பொறுப்புமிக்கவராக இருக்கவேண்டும் என்ற ஒற்றை இலக்கு தான். பிற சமயங்கள் போலன்று பெளத்தம் அறிவியலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதில்லை. ரிபற்ரன் தலாய் லாமாவின் பின்வரும் கூற்று இதை தெளிவுறுத்துகின்றது.
“பெளத்ததில் மெய்ப்பொருள் புரிதலை நோக்கிய தேடல் சீரிய ஆராய்ச்சியனால் (critical investigation) மேற்கொள்ளப்படுகின்றது. அறிவியலின் முடிவானது பெளத்தத்தின் கூற்றுக்களில் ஏதாவதொன்றை பிழை என்று நிரூபிக்குமானால், அறிவியலை ஏற்று அந்தக் கூற்றை பெளத்ததில் இருந்து விலக்கிவிடவேண்டும்.” ஆனால், தற்கால அறிவியலின் வழிமுறைகளுக்கு எல்லைகள் உண்டென்றும், மெய்ப்பொருளை அறிவதில் அறிவியலுக்கு உட்படாத வழிமுறைகளும் தேவை என்றும் பெளத்தம் கருதுகின்றது. அதாவது, சிலர் அனைத்தும் அறிவியலுக்கு உட்பட்டது என்கிறார்கள். இக்கருத்தைப் பெளத்தம் ஏற்கவில்லை, மேலும் இக்கருத்து அறிவியல் தன்மையற்றது என்பதையும் கூறுகின்றது.
ஆண் பெண் என பாலின வேறுபாடோ, பிறப்பு வேற்றுமையோ பாராமல் மக்கள் அனைவரும் சமம் என்றுரைத்தது பௌத்தம். பகவான் புத்தரின் போதனைகள் ஒழுக்கமும் அறிவும் நிறைந்தவையாக இருந்தது, மக்கள் மொழியில் கற்பிக்கப்பட்டது. உயிரினங்கள் பலியிடுதலை தடுத்தது. சங்கங்கள் அமைத்து கல்வி, மருத்துவம் அளித்தது. இன்று தமிழர்கள் பின்பற்றும் பல சடங்குகள் பௌத்தம் சார்ந்தவையே. ஆனால் அவற்றில் அறிவுக்கு பொருந்தாத இழிவான பல கற்பனை கதைகளை கற்பித்து திருத்தியமைக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது என்றுரைக்கிறார் பண்டித அயோத்திதாசர். உலகத்தின் பல்வேறு நாடுகளில் பாதுகாத்து வைத்து இருக்கின்ற திரிபீடகத்திற்கு உரை எழுதிய 12 பௌத்த அறிஞர்களில் ஒன்பது அறிஞர்கள் தமிழர்கள் என்றுரைக்கிறார் வண.பிக்கு போதிபால. இன்று உலகம் முழுவதும் தமிழ் பரவியிருக்க காரணம் கடல்வணிகம் தான். உலகம் முழுவதும் உள்ள கடலோடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு தமிழ் பௌத்தம் தான். கடல் தெய்வம் என்று அழைக்கப்படும் மணிமேகலையை தாய்லாந்தில் மணிமேகலை என்றும் பிற நாடுகளில் தாரா தேவி என்றும் வழிபடுகின்றனர் என்றுரைக்கிறார் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள்.
சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பின்பற்றும் தியானம் மற்றும் பயிலும் தற்காப்பு கலையை கற்று கொடுத்தவர் காஞ்சிவரத்தில் பிறந்த வண.போதி தருமன். தர்க்கவியலின் தந்தை என்று அழைக்கப்படும் திக்நாதர் (தின்னாகர்) செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்க பெருமாள் கோவில் என்ற ஊரில் பிறந்த பௌத்த அறிஞர். நூற்றுக்கும் மேற்பட்ட தர்க்கம் (விவாதங்களை) எழுதியவர். வட இந்தியாவில் புகழ்பெற்று விளங்கிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக வண.தருமபால ஆசிரியர் இருந்திருக்கிறார். இது போன்று பல சிறப்புகளை தந்தது தமிழ் பௌத்தம்.
தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள் குறைந்த அளவிலேயே உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இருந்த அமைப்பு புத்த விகாரம் என்ற நிலையில் அமையும். தமிழகத்தில் பல இடங்களில் புத்தர் சிலைக்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பிற கோயில்களிலும் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. புகழ் பெற்ற சிறந்த துறைமுகம், வணிக முக்கியம் மற்றும் பௌத்தம் தழைத்தோங்கிய இடமாக இருந்த காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை மூலம் அறிந்துகொள்ளலாம். தமிழகத்தின் முதல் பிக்கு என அறியப்படும் வண.அறவணடிகள் தமிழகத்தின் முதல் பிக்குணி என்று அறியப்பட்டும் மணிமேகலையும் வாழ்ந்த இடம் இது. பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது. பௌத்த சமயம் அவைதீக சமயமாகும்.
புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் அவர் கருத்துகளைப் பதிவு செய்தனர். சங்கம் அமைத்தனர். சுத்த பிடகம், அபிதம்ம பிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம். பெருவழியும் இருவகைப் பிரிவாக வளர்ந்தது. அவை மாத்துமிகம், யோகாசாரம் என்பனவாகும். சௌத்திராந்திகம், வைபாடிகம், ஆகியன சிறுவழிப் பிரிவுகளாகும். பெருவழிப் பிரிவுகள் சீனா, ஜப்பான், திபெத் போன்ற நாடுகளுக்குப் பரவின. சிறுவழிப் பிரிவுகள் தென்னிந்தியாவில், பர்மாவில், இலங்கையில் பரவின. துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற நான்கும் பௌத்த சமயத்தின் உயர் வாய்மைகள் ஆகும். துக்க நிவாரணமே நிர்வாணம் எனப்படும் நிறைநிலை ஆகின்றது. துக்க நிவாரணத்திற்கு எட்டு வழிகளைப் பௌத்தம் காட்டுகிறது. நற்காட்சி, நற்கருத்து, நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கொள்கை, நல்லமைதி ஆகிய இவ்வெட்டும் துக்க நிவாரணத்திற்கான வழிகள் ஆகும். பௌத்த சமயத்தில் ஐவகை நெறிகள் கடைபிடிக்க நெறிப்படுத்தப்படுகிறது. அவை கொல்லாமை, கள்ளாமை, காமமின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை, விலக்கப்பட்ட காலங்களில் உண்ணாமை, ஆடல் பாடல் கூத்துகளை நாடாமை, ஒப்பனை செய்யாமை, அதனுடன் இருக்கைகளைப் பயன்படுத்தாமை ஆகியனவாகும்.
புத்தர் தோட்டம் பல ஏக்கர் நிலப்பகுதியை கொண்டது. இந்த புத்தபள்ளி தோட்டத்தில் தான் இன்றைய ஆதிகேசவப் பெருமாள் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இப்போது புத்தர் தோட்டம் உட்பட புத்தர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக உள்ளன. இந்தப் புத்தர் தோட்டத்தைத் தவிர புத்தமன பேட்டை என்கிற இடத்தில் அகழ்வாராய்வு நடத்தினால் பல புத்தர் சிலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சி.மீனாட்சி கூறுகிறார். மூன்று புத்தர் சிலைகள் ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் உள்ளே இருந்தன.
அமர்ந்த நிலையில் இருந்த இரு புத்தர் சிலைககளை சிலர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் வெளியில் எறிந்து விட்டதாக ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பலர் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக இச்சிலைகள் இரண்டும் கோயில் அருகே கேட்பாரற்று முட்புதரில் கிடந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு இச்சிலைகளைச் சுற்றியிருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு, சிலைகள் தெளிவாகத் தெரியும் வண்ணம் வைக்கப்பட்டிருந்தன. சிலையின் பெருமையை உணர்ந்தவர்கள் அவ்வப்போது சிலைகளைப் பார்த்தும், வணங்கியும் வந்தனர். பௌத்த ஆய்வுக்காக வருபவர்கள் பலரும் இச்சிலைகளை ஆய்வு செய்துள்ளனர் என்றுரைக்கின்றார் எழுத்தாளர் மு.நீலகண்டன் அவர்கள். இவ்வூரில் இராசகுளம் அருகில், (ஆற்பாக்கம் காலனி அடுத்து) உள்ள ஒரு கொல்லை மேட்டில் சிறுவர்களால் முகம் சிதைக்கபட்ட நிலையில் சிலை உள்ளது என பௌத்த ஆர்வலர் தி.இராசகோபாலன் போதி மாதவர் என்ற தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை இங்கு 2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர்.
பாண்டிச்சேரியில் உள்ள அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் வழியில் காக்காயன் தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு உள்ளது. இது புதுவை தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் 4 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட புத்தர் சிலை காணப்படுகிறது. கி.பி 12 நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிற்பம். பகவான் புத்தருக்கு 1000 சிறப்பு பெயர்கள் உள்ளது என மணிமேகலை குறிப்பிடுகிறது. 1000 சிறப்பு பெயர்களில் ஒன்று அருகன் என்பது. பகவான் புத்தரை பகவான் என்றும் புத்தர் என்றும் வடஇந்தியாவில் அழைத்தது போன்று தென்இந்தியாவில் இந்திரர் என்றும் அருகன் என்றும் அழைத்தனர். காஞ்சிவரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் கணிகிலுப்பை என்ற இடத்தில் 3 அடி உயரம் 2 1/2 அடி அகலம் கொண்ட புத்தர் சிலை காணப்படுகிறது. கி.பி 8 ம் நூற்றாண்டில் சோழர் அரசு காலத்தில் கட்டிய சிற்பம் இது.
காவிரிப்பூம்பட்டிணம், மதுரை, திருத்தங்கால், வஞ்சி ஆகிய ஊர்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தன என்று சிலப்பதிகாரம் குறிக்கிறது. மேலும் பௌத்த கதைகளான சிபிச் சக்கரவர்த்தி கதை, மணிமேகலா தெய்வக் கதை போன்றன பற்றிய குறிப்புகளும் சிலப்பதிகாரத்தில் உள்ளன. மேலும் காப்பியத்தில் நிறைவில் வரும் பொது அறங்கள் அனைத்தும் பௌத்தசமய அறங்கள் சார்ந்தனவாகும். இவ்வகையில் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் பௌத்த சமயக் குறிப்புகள் கிடைப்பதன் வழியாக சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், சிலப்பதிகார காலத்திலும் பௌத்தசமயம் தமிழகத்தில் விளங்கிவந்த சமயமாக இருந்தது என்பதை உணரமுடிகின்றது. இதனைத்தொடர்ந்து சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலையே பௌத்த சமயத்தின் இருப்பை நிலைநிறுத்துகிறது. இதுவே முதன் முதலில் எழுந்த பௌத்த சமய நூலாக அமைகின்றது. இதிலிருந்தே பௌத்த சமய நூல்களின் ஆக்க வளர்ச்சி தொடங்கப்பெறுகிறது.
Web Title: Scripture and architecture works of buddhism in tamilnadu
feature image credit: tamilnadu-favtourism, stylecraze