.jpg?w=1200)
எத்தனையோ வகையான சுதந்திரப் போராட்டங்களைப் பார்த்திருப்போம். வர்த்தகக் கப்பல் சேவையொன்றையே சுதந்திரப் போராட்டமாக நடத்திய கதையைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்புக்கு சென்ற கப்பல் பயணச்சேவையே அது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் வித்தியாசமான போராட்டமாகவும் அது இருந்தது. அந்தப் போராட்டத்தைப் புரிந்தவர் தான் வ.உ.சி. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை. பின்னாளில் ‘கப்பலோட்டிய தமிழன்” என்றும் அவர் போற்றப்பட்டார்.
1872 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று தூத்துக்குடியின் ஒட்டப்பிடாரம் பகுதியில் பிறந்த சிதம்பரத்தின் வாழ்க்கை படிப்பு, வேலை என்று தான் சென்று கொண்டிருந்தது, இரு முக்கிய நபர்களைச் சந்திக்கும்வரை! முதலாவது நபர் ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தர். விவேகானந்தரின் ஆணையை ஏற்று வங்காளத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து, தற்போது மையிலாப்பூரில் இருக்கும் இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்தவர் அவரே. சிதம்பரம் தனது இளம்பருவத்தில் ராமகிருஷ்ணானந்தரை சந்தித்தார். “இந்த நாட்டுக்கு ஏதாவது செய்யுங்கள்” என சிதம்பரத்திற்கு புதிய வழியொன்று காட்டப்பட்டது அப்போது தான். சிதம்பரத்தின் வாழ்க்கையைத் தேசத்துக்கான போராட்டப் பாதையில் திசைதிருப்பிய இரண்டாவது நபர் வேறு யாருமல்ல. சுப்பிரமணிய பாரதியார் தான். இவர்கள் இருவருக்கும் நெருக்கமானவராக இறுதிவரை இருந்தார் சிதம்பரம்.

அடிமைத் தளைகளால் இந்தியாவை பிரித்தானியர்கள் சுற்றி இறுகக்கட்டி வைத்திருந்த காலம் அது. அந்தத் தளைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் பொறிகளாகவும் சுவாலைகளாகவும் பெரு நெருப்பாகவும் சுதந்திரப் போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.
இந்திய சுதந்திரம் கோரி ஆரம்பிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர்களான பால கங்காதர திலகர் மற்றும் லாலா லஜபதி ராய் ஆகியோரால் சுதேசி இயக்கம் என்ற இயக்கமும் தொடக்கப்பட்டிருந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முற்பகுதியில் வீறு கொண்டெடுழுந்த வீரரான பால கங்காதர திலகரின் கருத்துகளால் சிதம்பரம் பிள்ளை வெகுவாக ஈர்க்கப்பட்டார். அத்துடன் திலகரின் சீடராகவும் ஆனார். மெட்ராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் இன்றைய ஆந்திரா பகுதியில், பிரித்தானியரை எதிர்த்து நிற்கும் முக்கிய அரசியல் தலைவர் என்ற அங்கீகாரமும் சிதம்பரத்துக்கு கிடைத்தது. மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும் மற்றொரு சுதந்திரப் போராட்ட வீரரான சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் இணைந்து, சிதம்பரம் பிள்ளை, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான பல போராட்டங்களை முன்னெடுத்தார்.
அடிமைப்பட்டுக்கிடக்கும் இந்தியாவ பிரித்தானிய ஆளுகையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற வேட்கையுடன், பல்வேறு அமைப்புகள் சிதம்பரத்தினால் ஸ்தாபிக்கப்பட்டன. யுவனேஷ் ப்ரச்சார் சபா, தர்மசங்க நெசவு சாலை, தேசிய களாஞ்சியம், மெட்ராஸ் விவசாய – தொழிற்றுறைச் சங்கம், தேசாபிமான சங்கம் என்பவை அவற்றுள் சில.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானதும், இன்றுவரை சிதம்பரம்பிள்ளையின் பெயரை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வைத்ததுமான ஒன்று தான் பிரித்தானியருக்கு எதிராக அவர் ஆரம்பித்த கப்பற் சேவை நிறுவனம். சுதேசி நீராவி போக்குவரத்து கம்பனி என்று அவர் தனது நிறுவனத்துக்கு பெயர் சூட்டியிருந்தார். இந்திய வரலாற்றில் சுதந்திர நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கப்பற்சேவை நிறுவனம் என்ற பெருமையை அது பெற்றுக் கொண்டது.

இந்தியாவின் அனைத்து வளங்களையும் பிரித்தானியர்கள் சுரண்டிச் சுரண்டிக் கொண்டிருந்த காலம் அது. அனைத்துத் துறைகளிலும் பிரித்தானியர்களின் கையே மேலோங்கிக் காணப்பட்டது. பிரித்தானியர்களின் பொருட்களையும் சேவைகளையும் புறக்கணியுங்கள் என்பதே சுதேசி இயக்கத்தின் குரலாக இருந்தது. சுதேசி இயக்கத்தின் கொள்கைகளை தன் நெஞ்சில் தாங்கி, சுதந்திரக் கனலை சிந்தையில் ஏந்திக் கொண்டிருந்த சிதம்பரம், தனது சொந்த ஊரான தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு பிரித்தானிய கப்பல்சேவை நிறுவனம் கப்பற்போக்குவரத்துச் சேவை வழங்கிவருவதை அவதானித்தார். அதன் மூலம் அந்த நிறுவனம் பெருந்தொகை நிதியை வருமானமாக ஈட்டி வருவதும் அவர் கண்களில் பட்டது. அனைத்து துறைகளிலும் பிரித்தானியருக்கு அழுத்தம் அளித்தால் மட்டுமே, அவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முடியும் என்று கருதிய சிதம்பரம் பிள்ளை, அந்தப் பிரித்தானிய நிறுவனத்திற்கு எதிராக தாமும் ஒரு கப்பற் சேவை நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமென முடிவெடுத்தார்.
சிதம்பரம் பிள்ளையின் கண்களை உறுத்திய கொளை இலாபத்தை சம்பாதித்துக் கொண்டு, தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் கப்பல் சேவை அளித்து வந்த நிறுவனத்தின் பெயர் “British India Steam Navigation Company”. 1856 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம், தூத்துக்குடி = கொழும்பு கப்பல் சேவை மட்டுமல்லாது, பல்வேறு துறைமுகங்களுக்கும் தனது செவையை வழங்கி வந்த வர்த்தக ஜாம்பவானாக இருந்தது. தவிரவும், அது பிரித்தானிய ஆட்சியாளர்களின் செல்லக் குழந்தையென்று சொல்லும்படியாக அளாப்பரிய சலுகைகளையும் பெற்றிருந்தது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்துடனேயே மோத முடிவெடுத்திருந்தார் சிதம்பரம்.

“British India Steam Navigation Company யின் கப்பல்
படஉதவி : gracesguide.co.uk
சிதம்பரத்தின் கப்பல் நிறுவனம் 1906 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பதிவு செய்யப்பட்டது. சுமார் பத்து இலட்சம் இந்திய ரூபாய் (அப்போதய மதிப்பில்) இதற்காக திரட்டப்பட்டது. இந்த நிறுவனம் 40,000 பங்குகளைக் கொண்டிருந்ததுடன் ஒரு பங்கின் அப்போதைய முகப்பு விலை 25 இந்திய ரூபாயாக இருந்தது. ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ள எந்தவொரு நாட்டினைச் சேர்ந்தவரும் இந்த நிறுவனத்தின் பங்கினை வாங்கலாமென அறிவிக்கப்பட்டது.
இந்த சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் தலைவராக பாண்டித்துரைத் தேவர் பதவி வகித்தார். அவர் வேறு யாருமல்ல; நான்காம் தமிழ்ச்சங்கம் என்று அறியப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்தை ஆரம்பித்து வைத்த பெருமகனாரே அவர். ஜமீந்தாராகவிருந்த அவர், தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த பம்பூர் என்ற கிராமத்தை இதற்காக விற்று இரண்டு இலட்சம் இந்திய ரூபாவினை, இந்த நிறுவனத்திற்கு அளித்திருந்தார்.
சிதம்பரம்பிள்ளை அந்த நிறுவனத்தின் துணைச்செயலாளார் ஆனார். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அந்த நிறுவனத்திற்கான மூலதனத்தை சிறுகச் சிறுக சேர்த்துக் கொண்டுவந்தார் சிதம்பரம். இந்தக் கப்பல் நிறுவனத்திற்கான தேவையை வலியுறுத்தி மகாகவி பாரதியாரும் கூட அக்காலத்தில் கட்டுரைகள் எழுதியிருக்கின்றமை அவதானிக்கத்தக்கது.

இறுதியில், இந்த சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்காக இரண்டு கப்பல்கள் வாங்கப்பட்டன. முதலாவது கப்பலின் பெயர் SS Gallia. இது பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்டது. இந்தக் கப்பலை வாங்குவதற்கு பால கங்காதர திலகர் மட்டுமன்றி மகா யோகி எனப் போற்றப்படுபவரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான ஸ்ரீ அரவிந்தரும், சிதம்பரம் பிள்ளைக்கு உதவினார். SS Galia கப்பல் 1907 ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்தது.
தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையிலான கப்பஸ் சேவை பல தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது. 1,300 பயணிகள் SS Galliaவில் பயணித்தனர். ஏறகுறைய நாற்பதாயிரம் பொதிகளை அந்தக் கப்பல் சுமந்து சென்றது. இந்த சுதேசிக் கப்பல் சேவையில், பின்னாளில், SS Lavo என்ற மற்றுமொரு கப்பலும் இணைத்துக் கொள்ளப்பட்டது.

படஉதவி : collections.anmm.gov.au
தாங்கள் அடிமைகளாக இருக்கின்றோம் என, இந்திய மக்கள் மெல்ல மெல்ல உணரத் தொடங்கிய காலம் அது. விழிப்புணர்வும் சுதந்திர வேட்கையும் அவர்களில் இதயத்தில் குடிகொள்ள ஆரம்பித்த வேளை அது. சிதம்பரம் பிள்ளையின் சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு மக்களின் பேராதரவு கிட்டியது. இதன் காரணமாக, தூத்துக்குடி – கொழும்பு கடல் மார்க்கத்தின் பிரதான போட்டியாளரான அந்தப் பிரித்தானிய நிறுவனம் ஓரளவு நட்டத்தினை எதிர் கொண்டது.
இதனையடுத்து பிரித்தானியர்களின் கப்பல் சேவைக்கான கட்டணம் வெறுமனே ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டது. இதன் மூலம் அதிக பயணிகளை ஈர்க்க முடியுமென அந்த நிறுவனம் கணக்குப் போட்டது. ஆனால் சிதம்பரம்பிள்ளை தனது கப்பல்களுக்கான கட்டணத்தை50 பைசாவாக குறைத்தார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத பிரித்தானியக் கப்பல் நிறுவனம் தனது பயணிகளுக்கு இலவசமாக குடைகளை அளித்தது. சில தடவைகள் இலவச போக்குவரத்தையும் பிரித்தானிய நிறுவனம் வழங்கியதாக அறிய முடிகின்றது. எனினும், மக்களின் பேராதரவு பெற்ற நிறுவனமான சிதம்பரத்தின் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை அசைத்துவிட முடியாமல் போனது. இறுதியில் வேறு வழியின்றி சட்டவிரோதமாக, பிரித்தானிய ஆட்சியாளர்களின் உதவியைப் பெற்றது அந்தப் பிரித்தானியக் கப்பல் நிறுவனம்.
இதன் காரணமாக, சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் சேவைகளுக்கு கடும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. துறைமுகத்தில் பெறப்படும் சேவைகளில் சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு பாரபட்சம் காட்டப்பட்டது. சுதேசிக் கப்பல்களில் பயணிப்போருக்கு மருத்துவ மற்றும் சுங்கப் பரிசோதனைகளின் போது, அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
இது தவிரவும் மறைமுகமான பல அழுத்தங்கள் சுதேசிக் கப்பல் நிறுவனம் மீதும் அவற்றின் சேவைகள் மீதும் செலுத்தப்பட்டன. இந்த வேளையில் சுதந்திரப் போராட்டமொன்றில் கலந்து கொண்டதற்காக, சிதம்பரம் பிள்ளையை பிரித்தானிய அரசு சிறைப்படுத்தியது. ஆட்சியாளர்களுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சிதம்பரம்பிள்ளைக்கு, இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.

சுதேசிக்கப்பல் நிறுவனத்தின் மூளையாகவும் இதயமாகவும் செயற்பட்டு வந்த சிதம்பரம்பிள்ளை இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி, அந்த நிறுவனத்திற்கு மேலும் அழுத்தங்கள் அளிக்கப்பட்டன. அதன் பங்குகளை வைத்திருந்த பங்குதாரர்கள் மிரட்டப்பட்டனர். இதனையடுத்து அந்த நிறுவனம் 1911 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அதனை விடவும் சோகமான விடயம் என்னவென்றால், எந்தப் பிரித்தானியக் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சிதம்பரம் கப்பல் சேவையை நடத்தினாரோ, அந்த நிறுவனத்திற்கே, கலைக்கப்பட்ட சுதேசி நிறுவனத்தில் கப்பல்களில் ஒன்று விற்கப்பட்டது.
கொடுமையான சிறைவாசத்தை முடித்து பிற்காலத்திலே வெளியே வந்த சிதம்பரம் பிள்ளைக்கு, இந்தச் செய்தி சொல்லப்பட்டது. அப்போது அவர் கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தை இன்றுவரை பேசப்படுகின்றது.
“அதற்கு, பேசாமல் அந்தக்கப்பலை சுக்குநூறாக உடைத்து, கடலிலேயே வீசியிருக்கலாம்!”