இலங்கையின் முதலாவது உத்தியோகபூர்வ தேர்தலில் 3,048,145 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்து அவர்களுள் 1,710,150 பேரே தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி, இலங்கையின் முதலாவது பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தேர்தலின் பங்காளர்களாகியுள்ளனர்.
சுதந்திரம் பெறாமலே நடைபெற்ற முதல் தேர்தல்
இலங்கையில் உத்தியோகபூர்வமான தேர்தல் ஒன்று 1947 ஆம் ஆண்டு நடைபெற்றது. உண்மையில் அப்போது இலங்கை சுதந்திரம் பெற்றிருக்கவில்லை. எனினும், பிரித்தானிய ஆட்சியிலிருந்த அப்போதைய இலங்கையில் நாடாளுமன்றமொன்றை உருவாக்குவதற்காகவே, அந்தத் தேர்தல் இடம்பெற்றது.
இந்தத் தேர்தலை நடாத்துவதற்காக அப்போது நாடாளுமன்றத் தேர்தல் திணைக்களம் என்ற ஒரு புதிய திணைக்களமே உருவாக்கப்பட்டிருந்தது. இன்றைய இலங்கையில் தேர்தல்களை நடாத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு வசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, அன்றைய நாடாளுமன்றத் தேர்தல் திணைக்களமே முன்னோடியாக இருந்தது.
தனது ஆதிக்கத்திலிருந்த இலங்கைக்கு சுதந்திரம் அளிப்பதற்கு பிரித்தானியா தீர்மானித்ததையடுத்து, சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வழியாக, சிலோன் சுதந்திரச் சட்டம் 1947 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான பணிகளை சோல்பரி ஆணைக்குழு 1944 ஆம் ஆண்டே ஆரம்பித்திருந்தது. நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்காகவென, அந்த நாடாளுமன்றத் தேர்தல் திணைக்களம் உருவாக்கப்பட்டதுடன், அது ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கும் எனவும் விதி வகுக்கப்பட்டது. அந்த ஆணையாளர், பிரதி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்களின் உதவியுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுப்பாரெனத் தீர்மானிக்கப்பட்டது.
தேர்தல்கள் திணைக்களத்தின் உருவாக்கம்
நகரசபை போன்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு மற்றுமொரு திணைக்களம் உருவாக்கப்பட்டது. அது உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள் திணைக்களம் என்று அழைக்கப்பட்டது. இந்த இரு திணைக்களங்களுமே, 1955 ஆம் ஆண்டுவரை சுயாதீனமாக இயங்கி வந்தன. 1947 மற்றும் 1952 ஆகிய இரு ஆண்டுகளில் இருவேறு நாடாளுமன்றத் தேர்தல்களை, நடத்தும் வாய்ப்பினை நாடாளுமன்றத் தேர்தல் திணைக்களம் பெற்றது. பிற்காலத்தில் அதாவது 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இந்த இரு திணைக்களங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு, புதியதொரு திணைக்களமாக, ‘தேர்தல்கள் திணைக்களம்’ உருவாக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை
முதலாவது தேர்தல் 1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இலங்கை சுதந்திரமடைவதற்கு முதல் இடம்பெற்ற அந்தத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இந்திய லெனினியக் கட்சி, சிலோன் கம்யூனிசக் கட்சி, சிலோன் இந்திய காங்கிரஸ் ஆகியன போட்டியிட்டன. இவற்றுள் டி. எஸ். சேனாநாயக்கவினால் தலைமை தாங்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை வகித்தது.
தேர்தலின் முடிவுகள்
- தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 751,432 வாக்குகள் கிடைத்திருந்தன. பதிவான வாக்குகளில் அது 39.81 சதவீதமாகவே இருந்தது. அந்தக் கட்சியின் சார்பில் 98 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த போதும் நாடாளுமன்றத்தின் 42 ஆசனங்களே கிடைத்திருந்தன.
- தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரதான எதிர்த்தரப்பாக இருந்த லங்கா சமசமாஜ கட்சி 28 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளில் அந்தக் கட்சிக்கு 10.81 சதவீத வாக்குகளே கிடைத்திருந்த போதும், நாடாளுமன்றத்தில் 10 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கு அது போதுமானதாக இருந்தது.
- தமிழ்த்தரப்பில் களமிறங்கியிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழ்பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் மட்டும் 9 வேட்பாளர்களைக் களமிறக்கியது. நாடளாவிய ரீதியில் அந்தக் கட்சி பெற்ற 82,499 வாக்குகள், பதிவான மொத்த வாக்குகளின் 4.37 சதவீதமாக இருந்தன. அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் 7 ஆசனங்களைக் கைப்பற்றிக்கொண்டது.
- சிலோன் இந்திய காங்கிரஸ் களமிறக்கியிருந்த 7 வேட்பாளர்களில் 6 பேர் வெற்றி பெற்றிருந்தனர். 72,230 வாக்குகளைச் சுவீகரித்த அந்தக் கட்சி பதிவான வாக்குகளின் 3.83 சதவீதத்தைத் தனதாக்கிக் கொண்டது.
- அதே வேளை, இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் குறிப்பிடத் தக்க வாக்குகளைப் பெற்றிருந்தன. 10 வேட்பாளர்களை நிறுத்தியிருந்த பொல்ஷேவிக் சமசமாஜ கட்சி 113,193 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டது. நாடளாவிய ரீதியில் பதிவான வாக்குகளில் 6 சதவீதமான வாக்குகள் அந்தக் கட்சிக்கு கிடைத்திருந்தன.
- சிலோன் கம்யூனிஸ்ட் கட்சி நாடளாவிய ரீதியில் 13 இடங்களிலேயே வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. எனினும் அவர்களில் வெறுமனே மூன்று பேரே வெற்றி பெற்றனர். 70,331 வாக்குகளைப் பெற்ற அந்தக் கட்சி பதிவான வாக்குகளில் 3.73 சதவீதத்தைத் தனதாக்கி வைத்திருந்தது.
- சிலோன் தொழிலாளர் கட்சி 9 இடங்களில் வேட்பாளர்களைக் களமிறக்கிய போதும், அவர்களில் ஒருவர் மட்டுமே வென்றார். எனினும் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு முக்கியத்துவம் கிடைத்தது. 38,932 வாக்குகளைப் பெற்ற அந்தக் கட்சி பதிவான மொத்த வாக்குகளில், 2.06 சதவீதத்தை வெற்றி கொண்டிருந்தது.
டி.எஸ். சேனநாயக்க பிரதமராக பதவியேற்றார்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் மீரிகம நாடாளுமன்றத் தேர்தல் தொகுதியிலிருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினருமான டி. எஸ். சேனாநாயக்கவை, ஐக்கிய தேசியக் கட்சியின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது நாடாளுமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்தனர். இதனையடுத்து, 1947 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி, அவர் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 1952 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி அவர் உயிரிழக்கும் வரை அந்தப் பதவியை தொடர்ந்து வகித்து வந்தார்.
இந்தத் தேர்தலையடுத்து, இலங்கைக்கு சுதந்திரம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் பிரித்தானிய ஆட்சியளர்களால் முன்னெடுக்கப்பட்டன. தேர்தல் இடம்பெற்று ஓராண்டுக்கு உள்ளாகவே, 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.