ஆசியாவிலேயே முதன் முறையாக குதிரை வண்டி அஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்டது இலங்கையில்தான் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்!
இலங்கையில் பிரித்தானியர்களால் புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பயணம் செல்வதற்கும் அஞ்சல் சேவையை மேற்கொள்வதற்கும் இந்த குதிரை வண்டிகளை அல்லது குதிரை ரயிலைத்தான் பயன்படுத்தியுள்ளனர். 1832ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி சேர் ரொபர்ட் வில்மோட் ஹோர்டன் என்ற ஆளுநரினால் இலங்கைக்கு முதலாவது மெயில் கோச் (Mail Coach) என அழைக்கப்படும் குதிரை வண்டிச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதுவரையில் ஆசியாவில் இந்த அஞ்சல் சேவை இருக்கவில்லை.
இதன் முதல் பயணம் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணமானது. இந்தப் பயணத்திற்கு 14 மணித்தியாலங்கள் எடுத்துக்கொண்டதாகவும், அங்கிருந்து மீண்டும் கொழும்பு வருவதற்கான பயண நேரம் 12 மணித்தியாலயங்களாக குறைந்ததாகவும் குறிப்புகள் சொல்கின்றன. அதேவேளை கொழும்பு காலி வீதியில் ஒற்றை குதிரை ரயிலும் சேவையில் இருக்கதாக சொல்லப்படுகின்றது. இதன் கட்டணம் ஒரு மைல் தூரத்திற்கு 7 பென்ஸ் எனவும் அறியப்படுகின்றது. பென்ஸ் என்பது பிரித்தானியர்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பணப் பெருமதியாகும். அதேவேளை கொழும்பிலிருந்து காலி வரை பயணிக்க இந்த குதிரை வண்டியின் கட்டணம் இரண்டு பவுண்ட்ஸ்களாம். இந்தக் Mail Coach ஆனது பின்னர் காலியிலிருந்து களுத்துறை நோக்கியும், கொழும்பு முதல் இரத்தினபுரிக்கும், கம்பளை முதல் நுவரெலியா வரையும், கண்டி ,மாத்தளை மற்றும் பொல்காவள முதல் குருநாகலை வரை பயணம் செய்துள்ளது.
குதிரை வண்டியின் இருபுறமும் அகலமான, நீண்ட இருக்கை இருந்தது. இந்த இருக்கைகளில் ஒன்றில் மூன்று பேர் வரை அமர முடியும். முன் வரிசையில் ஓட்டுநர் இருக்கை. அதேவேளை அடிப்பகுதியில் அமைந்திருக்கும் இருக்கையில் ஒன்று அல்லது இரண்டு பேர் அமரலாம். பின்புற பிரிவில் மற்றொரு வசதியான இருக்கை உள்ளது. பெரும்பாலும் காவலர்தான் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பாராம். குதிரை ரயில் வண்டியின் கூரை இரும்பு பட்டங்களால் அமைந்திருக்குமாம். அதற்கு மேலாக அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட துணி இருபுறமும் பொருத்தப்பட்டிருக்குமாம். இதனை பயணியின் தேவைக்கேற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாமாம்.
இந்த வண்டியை இழுக்க மிகவும் பலம் பொருந்திய குதிரைகளைத்தான் பயன்படுத்துவார்களாம். ஆனாலும் இதில் பெரும்பாலும் குதிரைப் பந்தயங்களுக்கு பொருந்தாத அல்லது அதிலிருந்து விளக்கப்பட்ட குதிரைகள்தான் இந்த ரயில் வண்டிக்கு பொருத்தப்படுமாம். ஒவ்வொரு குதிரை ரயில் வண்டியிலும் இரண்டு குதிரைகள் பொருத்தப்படுமாம். அந்த குதிரை ஒன்றின் பெருமதி அந்த காலத்தில் 50 முதல் 70 பவுண்ட்ஸ்கள் வரை இருந்ததாகக் கூறப்படுகின்றது. பயணிகள் தங்கள் உடமைகளை ரயிலின் கூரையிலும் பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கியையின் கீழ்புறபத்திலும் வைத்திருப்பார்களாம். வண்டி ஓட்டுனர் அடர் நீள நிற கோட், மற்றும் கருப்பு நிற சப்பாத்துகளை அணிந்திருப்பாராம். மெய்க்காப்பாளரும் கோட் அணிந்திருப்பாராம் ஆனால் சப்பாத்து அணிந்திருக்க மாட்டாராம்.
இந்தக் குதிரை ரயில் வண்டிகள் இயங்கும்போது தார் வீதிகள் இல்லை. வெணும் கல்லும் மண்ணும் நிறைந்த கரடுமுரடான வீதிகள்தான் இருந்தள்ளது. அதனால் வட்டியை இழுக்க குதிரைகள் பெரிதும் சிரமமப்பட்டுள்ளதாம். 1956 ஆம் ஆண்டில் புதிய வயது இதழுக்காக “குதிரை போக்குவரத்தின் வயது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிய படிகர முஹந்திராம் என்ற எழுத்தாளர் தம்மை துன்புறுத்தும் ஓட்டுனரக்ளை பழிவாங்க சில நேரங்களில் குதிரைகள் வண்டியை பெரிய குழிகளின் வழியாகவும் இழுத்து வரும் என்றும் அவர் எழுதியுள்ளார். குதிரை ரயில் ஆரம்பத்தில் ஆங்கில அரசாங்கத்தால் மாத்திரமே ஓடப்பட்டது, ஆனால் பின்னர் விளம்பரம் செய்யப்பட்டு தனியார்மயப்படுத்தும் விதமாக விண்ணபதாரர்களுக்கும் குதிரை ரயில் வண்டியை இயக்கும் வசதி செய்துதரப்பட்டது. அஞ்சலை எடுத்துச் செல்ல அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு தொகை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் செல்வந்தர்களானார்கள், சிலர் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர். ரோயல் மெய்ல் சேவையாக பின் உருவெடுத்த இந்த குதிரை அஞ்சல் சேவையானது பின்னர் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியார் நிறுவனமாக இயக்கப்பட்டது. இதற்கு மொத்தமாக 2000 பவுண்ட்ஸ்கள் தேவைப்பட்டதாகவும் இதன் 50 வீதம் பங்குகள் விற்கப்பட்டு பெறப்பட்டதாகவும் குறிப்புகள் சொல்கின்றன. அதன் ஆறு பங்குகள் இலங்கை ஆளுநர் சேர் ரொபர்ட் வில்மோட் ஹோர்டனிடம் இருந்ததாகவும் மீதமுள்ளவை ஐரோப்பியர்களாலும் , சொலமன் டய௧் பண்டாரநாயக்கவினாலும் மீதமுள்ள பங்குகள் பெறப்பட்டுள்ளது.
குதிரை வண்டியானது அதிகாலை 4 மணிக்கு புறப்படத் தொடங்குமாம். அதனால் வெயில் அடிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் பயணத்தை முடித்துக் கொள்ளலாம். அதெவேளை வண்டியின் ஔி விளக்குகள் பெரும் பிரகாசமாக இருப்பதால் இரவின் இருள் அபாயகரமானதாக இருக்காது என்றும் வண்டி ஓட்டுனர் பாதைகள் குறித்த தௌிவுடன் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அதேபோல் குதிரைகள் ஓய்வெடுக்கவும் அவற்றைக் கட்டி வைக்கவும் ஆங்காங்கே குதிரைத் தொழுவங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்தக் குதிரை தொழுவங்களானது கண்டி வரை இருந்துள்ளது. பல அனுபவங்களையும், மகிழ்ச்சியையும் புதிதாக பயணிப்பர்வகளுக்கு பயம் கலந்த உணர்வையும் கொடுத்து வந்த இந்த குதிரை ரயில் பயணமானது 1865ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. காரணம் அப்போதுதான் இலங்கையில் புகையிரதச் சேவையானது ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் இந்த குதிரைகளுக்கும் ஓய்வுகொடுக்கப்பட்டது. 1867 ஆம் ஆண்டில், அஞ்சல் சேவையானது புகையிரதச் சேவையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1921 ஆண்டு குதிரை ரயில் சேவையானது முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டது.