Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வீரத்தமிழனின் போர்கலைகளில் ஒன்றான சிலம்பம் | #தமிழ்பாரம்பர்யமாதம்

கராத்தே, குங்ஃபூ என கிழக்கத்தேய தற்காப்பு கலைகளை வியந்து பார்க்கும் நம்மவர்கள் தம்மிடையே தோன்றி தூர தேசங்கள் எல்லாவற்றையும் கவர்ந்த தற்காப்புக்கலைகளை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது நிகழ்காலத்தின் அவலம். போர்களங்களில் தாய்நாட்டை அந்நியர்களிடம் இருந்து பாதுகாத்த வீர மறவர்கள் கலை இன்று கோயில்களில் திருவிழாக்களில் கண்டுகளிக்கும் ஒரு கண்காட்சி என மாறிப்போன வரலாற்றை காண்போம்.

சிலம்பம்: கடந்து வந்த பாதை

சிலம்பம்‘ என்ற வார்த்தை சிலம்பு என்ற பெயரின் அடியை கொண்டது. சிலம்பு என்பது ஒலித்தல் அல்லது சத்தம் என்பதை குறிக்கும். இயற்கையின் கொடையாக விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும் இடைவிடாது ஓசையெழுப்பிக்கொண்டிருக்கும் மலையை ‘சிலம்பம்’ என அழைப்பது பழந்தமிழ் வழக்கம். இந்த மலைகளை ஆளும் முருகனை ‘சிலம்பன்’ என அழைப்பதும் வழக்கம். சிலம்பனாகிய முருகனிடம் இருந்து இந்த கலை அகத்தியருக்கு கிடைத்தமையாலும், சிலம்பம் சுற்றும் போது எழும் வீச்சொலிகள் இக்கலையின் ஆதராமக அமைவதாலும் இந்த பழந்தமிழ் பாரம்பரியம் சிலம்பம் எனப்பட்டது.

அகத்திய முனிவரும் ஆயக்கலைகளை சித்தரிக்கும் சிலைகளும்

சிலம்பம் குறித்தான செவிவழி, இலக்கியவழி செய்திகளுக்கு அமைவாக சிலம்பக்கலையை வடிவமைத்தவர் தமிழ் குறுமுனியான அகத்தியர். தமிழ் போர் தெய்வமான முருகனிடம் இருந்து தோன்றிய இந்த சிலம்பக் கலையை முறைப்பட வகுத்தளித்த அகத்தியர், அதனை 64 ஆயகலைகளுள் ஒன்றாக வரிசைப்படுத்தியுள்ளார். சிலம்பம் பற்றிய முதலாவது வரலாற்று ஆதாரமாக தமிழகத்தில் கண்டறியப்பட்டது ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொன்மங்களே. இன்றைய சிலம்பக்கலையில் பயன்படும் குறுவாள்கள், குத்துமுனைகள் போன்றவை அவ்வாராய்ச்சியில் கிடைத்தமை மூலம் சிலம்பக்கலை ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்னரே பூரணமான ஒரு தற்காப்பு போர்கலையாக வழக்கத்தில் இருந்தமை உறுதியாகிறது.

பழங்கற்கால ஆயுதமான சிலம்பம்

பழங்கற்காலம்.. இன்றைய நவீன நாட்களை போல தொலைபேசியில் உணவை வரவழைத்து வீட்டிலிருந்த படியே உண்ணும் காலமாக அது இருக்கவில்லை. அன்றாட உணவுக்காகவும், உயிருக்காகவும் நித்தமும் இயற்கையோடு போராட வேண்டிய நிலையில் வாழ்க்கையை நடாத்தி வந்தனர் நம் முன்னோர்கள். நம்முடைய இனத்தின் ஆதி மூலங்களான குரங்குகளிடம் இருந்து பிரிந்து தனியே வியத்தமடைந்த மானுடர்கள் தனியே தாவர உணவுகளில் மாத்திரம் தங்கியிராது விலங்குணவுகளையும் வேட்டையாடி உட்கொண்டனர். அதற்கென அவர்களுக்கு இயற்கையில் இருந்து கிடைத்த முதல் ஆயுதம் மரத்தடிகள். வலுவான மரத்தடிகளால் விலங்குகளை அடித்தும், கூரிய மரக்கொம்புகளால் விலங்குகளை குத்தியும் வேட்டையாடி வந்த ஆதிமனிதனின் இவ்வேட்டை முறை வேறு உயிரினங்களிடம் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு கலையாகவும் விருத்தியடைய ஆரம்பித்தது.

பழங்கற்காலம் மெல்ல முடிவுக்கு வந்த தருவாயில் உலோக ஆயுதங்கள் புழக்கத்தில் வந்தன. இந்த புதிய கற்காலத்தில் வேட்டைக்கு பயன்பட்ட சிறிய கூர்முனை கத்திகளும், கோடரிகளும் முன்பைப்போன்றே தற்காப்புக்கும் பயன்பட்டன. இயற்கையின் கடினமான போக்குகளை வெற்றிக்கொள்வதற்கு அடிப்படையாய் பயன்பட்ட இந்த உத்திகளே காலப்போக்கில் தமிழர் பாரம்பரியமான சிலம்பக்கலைக்கு ஆதரமாகியது.

இயற்கையோடு ஒன்றியது – சிலம்பம்

கம்பு வீசும் திறன், காலடி அசைவு, வேகம் இது மூன்றுமே சிலம்பத்தின் அடிப்படை திறன்கள். இயற்கையின் சவால்களை எதிர்கொள்ள உருவான இந்த கலையின் அடிப்படைகள் பலதும் அதே இயற்கையின் சாரமாக உண்டானவையே. கடற்கரையில் ஓடும் நண்டுகளிடம் இருந்து திசைகளையும், யானையின் துதிக்கையில் இருந்து சிலம்பத்தின் வீச்சு வகைகளையும், கழுகிடம் இருந்து பிடிமுறைகளையும், கரடியிடம் இருந்து தொடுதல் முறைகளையும், உந்திப்பாய்தல் என்ற பாய்ச்சல் முறைகளை குதிரைகளிடம் இருந்தும், பாம்புகளிடம் இருந்து வேகத்தையும் முறைப்பட தேர்ந்தெடுத்தே சிலம்பத்தின் திறன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சிலம்ப ஆசிரியர்கள் கூறுவது வழக்கம்.

சிலம்பத்தின் பயிற்சிகள் மற்றும் வகைகள்

சிலம்பம் கற்பதற்கு உரிய வயதாக 7-8 வயது இனங்காணப்படுகிறது. சுமார் 15 வயதாகும் வரை குருவின் கண்காணிப்பில் நடாத்தப்படும் பயிற்சிகளுக்கு பின்பு, சுமார் 5 வருடங்கள் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக்கொள்ளும் பயிற்சிகள் நேர்த்தியான சிலம்ப பிரயோகத்தை பெற்றுத்தரும். சிலம்பப்பயிற்சி மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி,குத்துவரிசை, தட்டு வரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

சிலம்ப பயிற்சியை சித்தரிக்கும் சில படங்கள்

அடிவரிசை முறையில்18 வகையாகவும், சிலம்பாட்ட வீச்சு முறையில்72 வகையாகவும் சிலம்பத்தை வகைப்படுத்தலாம். மேலும் துடுக்காண்டம், குறவஞ்சி, மறக்காணம், அலங்கார சிலம்பம், போர் சிலம்பம், பனையேறு மல்லு, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு என சிலம்பத்தில் பலவகைகள் உள்ளன. அதே போல பயன்படுத்தும் ஆயுதத்தை கொண்டும் சிலம்பம் வகைப்படுத்ப்படும். பொதுவாக சிலம்பம் என்ற பெயரை கேட்டதும் ஆளளவு உயரமும், ஒன்றே கால் அங்குல தடிப்பமும் கொண்ட மூங்கில் கொம்பை சுழற்றும் வீச்சு முறையே நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் சிலம்பம் என்பது அதனையும் கடந்தது. வளரி, வெட்டரிவாள், வீச்சரிவாள், செண்டாயுதம், கோடலிக்கேடயம், கட்டாரி, தீப்பந்தம், கல்துணி மற்றும் சுருள் வாள் என பல ஆயுதப்பிரயோகங்கள் சிலம்பத்தில் உள்ளன. நெடுங்கொம்பு(ஒற்றை கம்பை இருகைகளையும் கொண்டு வீசுதல்), இரட்டை கொம்பு(ஒருகையில் ஒரு சிறுதடி என இருகைகளாலும் வீசுதல்) என்ற வகையிலும் வகைப்படுத்த முடியும்.

சிலம்பத்தின் தனித்துவம்

சிலம்பம் நெடுங்காலமாக தமிழகத்தில் (தற்போதைய தமிழ்நாடு, கேரளம்) பயிலப்பட்டு வந்தமையால் ஒவ்வொரு பிரதேசமும் தமக்கே உரிய சில பிரத்தியேக சிலம்பம் முறைகளை கொண்டுள்ளது. ஊர்காட்டு ஜமீனின் சுக்குதேவர் வரிசை, பிராமண குலத்தாரின் ஐயங்கார் வரிசை, சொக்கம்பட்டி ஜமீனின் ஆரியமல்லு, சேத்தூர் ஜமீன் செல்வபாண்டிய தேவரின் வரிசை, ராமநாதபுரத்தின் அலங்கார சிலம்பம், சிவகங்கை மாவட்டத்தின் முரட்டு சிலம்பம், 8 சாண் நீளமுள்ள கம்புகளை கொண்டு ஆடப்படும் சொட்டடி சிலம்பம், 16 தடவைகள் தட்டிக்கொள்ளும் சில்லடி சிலம்பம் என பிரதேச மற்றும் இன ரீதியான தனித்துவத்தை சிலம்பத்தில் காணலாம்.

மருத்துவமும் நிறைந்த சிலம்பம்

சிலம்பம் போர்க்கலையாக மட்டுமில்லாது நல்ல உடல் பயிற்சியாகவும், ஒழுக்க முறையாகவும் பயிலப்பட்டு வந்தது. 15ம் நூற்றாண்டில் உருவான சித்தர்பாடல்கள் தொகுப்பான “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில் உள்ள பின்வரும் பாடலில் சிலம்ப பயிற்சியால் வாதம், பித்தம், கபம் ஆகியன சீராகும் என்கிறது.

காற்கூறு காய்தீறாற் காரிகையே பித்தம்போ
மேற்கூறு பாதிசுட்ட வெந்நீரான் மேற்கூறும்
வாதமோடு பித்தம்போம் வைத்தோடுநால் சென்றூண்டு
ரோதம் போமடி யொளிந்து

நரம்பு சீராக்கம், தசை இழக்கம், மூச்சுக்கட்டுப்பாடு, கை கால்களின் ஒன்றிணைந்த செயற்பாடு, ஒன்றிணைந்த மூளை செயற்பாடு என பல நன்மைகளை தரவல்ல இந்த சிலம்பக்கலை என்கிறது.

தமிழ் இலக்கியங்களில் சிலம்பம்

மூவேந்தர் காலத்தில் களரிப்பயட்டு போன்றே சிலம்ப பயிற்சியும் அனைத்து வீரர்களுக்கும் வழங்கப்பட்ட்டு வந்துள்ளது. இதற்கு சான்றாக தமிழிலக்கிய வரலாற்றின் ஆரம்ப காப்பியமான சிலப்பதிகாரத்தில் சிலம்பத்துக்கான ஆயுதங்கள் விற்கும் கடைகள் பற்றியும், அங்கு விரும்பிவந்து பொருட்களை வாங்கிச்செல்லும் வெளிநாட்டவர்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அது அல்லாது திருக்குறள், திருவிளையாடல் புராணம் ஆகிய தமிழ் நூல்களில் “கோல்” முதலிய பெயர்கள் மூலமாக சிலம்பம் குறிப்பிடப்படுகிறது.

திருவள்ளுவர் மற்றும் சிலப்பதிகார நாயகி கண்ணகியின் சிலைகள்

சோழர் காலத்து இலக்கிய வரிசையில் ஒன்றான கலிங்கத்துபரணியிலும் சிலம்பம் பற்றிய குறிப்புகள் உள்ளன. முதலாம் குலோத்துங்க சோழரின் கலிங்கத்து வெற்றியை பாடும் இந்நூலில் ‘வீசுதண்டிடை கூர்மழு ஒக்குமே‘ என்ற பாடல் வரிசை சிலம்பம் வீசுதலை கூறுகிறது.

மூவேந்தர் ஆட்சி தென்னகத்தில் முடிவுக்கு வந்ததன் பின்னர் சிலம்பத்தின் பிரபல்யம் சரிவடைய ஆரம்பித்தது. இருப்பினும் ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக பொற்கொடியேந்திய தென்னாட்டரின் கைகளில் சிலம்பம் விளையாடியது வரலாற்று உண்மை.

வீரபாண்டிய கட்டபொம்மனும் பூலித்தேவனும்

கி.பி 1799 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போர்க்களம் புகுந்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் போரில் சிலம்பம் ஆடியது பற்றி கட்டபொம்மன் கும்மிப்பாடல் ஒன்றில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. 

கொட்டுக்கொட்டென்று மேல் பொட்டிப் பகடையும்
கொல்வேன் என்றான் தடிக்கம்பாலே;
சட்டுச் சட்டென்று சிலம்ப வரிசைகள்
தட்டிவிட்டான் அங்கே பாரதன் வல்லை’

மேலும் ஊமைத்துரை, பூலித்தேவன், மருது பாண்டியர்கள் என தென்னகம் கண்ட புரட்சி வீரர்கள் எல்லாம் சிலம்ப வீரர்களே.

மீண்டும் புத்துயிர் பெரும் சிலம்பம்

களரிப்பயட்டு போலவே சிலம்பமும் ஆங்கிலேயே அரசுக்கு எதிராக பயன்படுத்தபடுவதை தவிர்க்க எண்ணிய பிரித்தானிய அரசு சிலம்பம் பயில்வதற்கும் பல கெடுபிடிகளை விதித்தது. இதனால் சிலம்பத்தின் பால் மக்களுக்கு இருந்த அறிவும், மதிப்பும் குறைந்து சென்றது.கோயில் விழாக்களில் கூத்துப்பொருளாக முடங்கிப்போனது சிலம்பக்கலை. சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கிய பின்னரே மீண்டும் தமிழகத்தில் சிலம்பக்கலைக்கு புத்துயிர் கிட்டியது. பலகாலம் கேட்பாரற்று இருந்தமையால் சிலம்பம் தன்னுடைய சில பழைய நுட்பங்களை இழந்திருந்தாலும் கூட பிற்காலத்தில் உருவான பல தன்னார்வம் மிக்கவர்களால் தற்போது பேணப்பட்டு வருகிறது.

பெண்களும் சிலம்பம் கற்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா மணிவண்ணன்

பொதுவான தமிழ்கலையாக இனங்காணும் நேரத்திலும் தென் தமிழ் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களிலேயே சிலம்பத்துக்கான கிராக்கியும், மதிப்பும் அதிகமாக காணப்படுகிறது. தமிழக அரசு இக்கலையை பாதுகாக்கும் எண்ணத்தில் தற்போது பாடசாலை விளையாட்டுகளில் ஒன்றாக சிலம்பத்தை அறிவித்துள்ளது. மேலும் மாவட்ட, மாநில ரீதியில் பல்வேறு போட்டிகளை நடாத்தியும் வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இன்று கேரளா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என தமிழர் செறிவு அதிகமாக உள்ள பல இடங்களில் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.

இன்றைய நாளில் ஆண் பெண் பேதமின்றி இருபாலரும் ஆர்வமுடன் கற்கும் கலையாக மாறிவரும் ஆதித்தமிழரின் சிலம்பம் மீண்டும் தலையோங்கும் என்பதில் ஐயமில்லை.

Related Articles