ஆங்கிலேயர் வரும்வரை இலங்கையில் பைலா இசை மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த நிலைமை மாறியுள்ளது. ஆங்கில அதிகாரிகளின் பொழுதுபோக்கிற்காக கொழும்பில் ஆங்கில நாடக அரங்கங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டுள்ளன.
முதலாவது ஆங்கில நாடகம் மேடையேறியது
1813ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி கொழும்பில் முதலாவது ஆங்கில நாடகம் மேடையேற்றப்பட்டது. அது ஜோர்ஜ் கொல்சனினால் எழுதப்பட்ட ‘தி எயார் அட் லோ’ என்ற நாடகமாகும். தனியார் நாடக சாலையில் அரேங்கேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் இந்த நாடகம் கொழும்பில் சரியாக எந்த இடத்தில் அரங்கேற்றப்பட்டது என்பதற்கான தகவல்கள் தெரியவில்லை. இந்த நாடகத்தை பார்க்க 5 ரிக்ஸ் டொலர்கள் அறவிடப்பட்டதோடு இந்த நாடகத்தின் மூலம் கிடைத்த வருவாய் நகரத்தில் வாழ்ந்த ஏழைகளுக்காக செலவழிக்கப்பட்டதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போதைய இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் அப்போது ‘புலோரல் ஹோல்’ மலர் மண்டபம் என்ற பெயரில் ஒரு அரங்கம் இருந்தது. இந்தக் கட்டடமானது அப்போதைய வேளான் சங்கத்தினால் கட்டப்பட்டது. அதன்பிறகு இதை கொழும்பு நகர சபை 4099 ரூபாவுக்கு விலைக்கு வாங்கியுள்ளது. விலைக்கு வாங்கிய நகரசபையினர் இதில் ஒரு மேடையை அமைத்து நாடகசாலையாக மாற்றியுள்ளனர். இந்த நாடக அரங்கத்தில் ஆரம்பித்தில் இந்தியாவிலிருந்தும் பாரிஸிலிருந்தும் வந்த நாடக குழு நாடகங்களை அரங்கேற்றியுள்ளது. இதில் ஆங்கில நகைச்சுவை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இது நடைபெற்றதாக சொல்லப்படும் காலம் 1833ஆம் ஆண்டுகளில் ஆகும்…
இலங்கையில் நாடக அரங்கங்கள் ஆங்கில நாடகங்களுக்காகவா திறக்கப்பட்டது?
முதலாவது நாடகமேடைக்கு பின்னர் நான்கு ஆண்டுகளுக்குள் கொழும்பில் பல நாடக அரங்கங்கள் திறக்கப்பட்டன. இவற்றில் ஆங்கில நாடங்கள்தான் அரங்கேற்றப்பட்டு வந்தன. இதில் கொழும்பு பெய்லி வீதியில் அமைந்துள்ள ‘கொவி பார்’ மிக முக்கியமானதொரு நாடக அரங்கமாகக் கருதப்படுகின்றது. அதேவேளை பிரேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள மக்கள் மண்டபம் (பப்ளிக் ஹோல்) மற்றும் அண்மைக் காலங்களில் திரையரங்கமாக மாற்றம்பெற்றுள்ள ‘எம்பெயர்’ அரங்கமும் மிக முக்கிய நாடக அரங்கமாக பார்க்கப்படுகின்றது.
1880ஆம் ஆண்டு பம்பாயின் எல்பிஸ்டன் நாடக சங்கமானது பலிவாலா தலைமையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்பில் பல நாடங்களை அரங்கேற்றியது. அதில் அலடின், அரிச்சந்திரன், ரோமியோ ஜூலியட், அரேபிய இரவுகளை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நாடங்கள் இவர்களால் அரங்கேற்றப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் அப்போது பிரபல நாடகக் கலைஞர்களாக இருந்த ‘அலன் வில்கி’ நாடகக் குழுவானது அவுஸ்திலேியாவுக்கோ அல்லது தூர தேசங்களுக்கோ நாடங்களுக்காக செல்லும்போது இலங்கைக்கு வந்து கொழும்பில் ஓரிரண்டு வாரங்கள் தங்கியிருந்து நாடங்களை அரங்கேற்றி சென்றுள்ளனர். இதில் பிரட்மன் ஒபேரா நாடகக் குழு அரங்கேற்றிய நாடகம் மிகவும் பிரபலம் பெற்றதாம். இந்த நாடகம் கொழும்புக்கு வெளியேயும் அரங்கேற்றப்பட்டதாம்.
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் நாடகங்களின் தோற்றம்…
இப்படியாக நகர்ந்துகொண்டிருந்த ஆங்கில நாடகங்களை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்று பிரபலப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் எவ்லின் பெட்ரிக் கார்ல்ஸ் லுடோவிக் (E. F. C. Ludowyk) என்ற பேராசிரியர்தான். 1926ஆம் ஆண்டு பிறந்த இவர் இலங்கை பறங்கியர் இனத்தைச் சேர்ந்தவர். காலியின் ரிச்மன்ட் கல்லூரியிலும் கொழும்பு வெஸ்லிக் கல்லூரியிலும் கல்வி கற்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். 1952ஆம் ஆண்டு பல்கலைக்கழக அழகியல் துறைக்கான வேந்தராகவும் நியமிக்கப்பட்டார். கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியின் நாடக சங்கத்தை பேராசியர் லுடோவிக் முதன்முதலாக ஆரம்பித்து வைத்துள்ளார். எதிரிவீர சரத்சந்திர ஆகியோரின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இந்த நாடக சங்கத்தினால் வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் பேர்னாட் ஷா ஆகியோரது நாடங்கள் அரங்கேற்றப்பட்டது.
விருது வென்ற நாடக கலைஞர் லயனல் வெண்டட்
இலங்கை நாடகத் துறையில் பெரிதும் பிரசிதிப்பெற்றவராக வளம்வந்தவர் லயனல் வெண்டட். விருதுவென்ற நாடக கலைஞரான லயனல் வெண்டட் காலமான பின்னர் லயனல் வெண்டட் மெமோரியல் பவுண்டேஷன் கொழும்பில் ஒரு நவீன தியேட்டரைக் கட்டத் தொடங்கியது. இதை லயோனல் வெண்ட்டின் சகோதரர் ஹெரி வெண்டட் தொடங்கினார். ஆனால் இதை கட்டிமுடிக்கும் முன்னரே அவர் இறந்துவிட்டார். ஆகவே இதை லயோனல் வென்ட் மெமோரியல் அறக்கட்டளை ஆர்வலர் ஹரோல்ட் பீரிஸ் கட்டிமுடித்தார்.
லயனல் வெண்டட் நாடக அரங்கு
பிரம்மாண்டமான மேடை மற்றும் ஒலி கட்டுப்பாட்டு அறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்ட லயோனல் வெண்டட் தியேட்டர் பின்னர் இலங்கை ஆங்கில நாடக அரங்கில் முதன்மையான அரங்கமாக மாறியது. லயோனல் வெண்டட் தியேட்டரில் முதல் நாடகம் 1953 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி அரங்கேறியது. மக்சிம் கார்க்கியின் ‘தி லோயர் டெத்ஸ்’ என்ற நாடகமே முதன்முதலாக மேடையேறியது. இந்த நாடகத்தில் ஐராங்கனி சேரசிங்க, வின்ஸ்டன் சேரரசிங்க மற்றும் பலர் பாத்திரமேற்று நடித்திருந்தனர். ஆங்கில நாடங்களில் தமிழ் கலைஞர்கள் பலரும் நடித்திருந்தனர்.
இதில் மிக முக்கியமானவர்களாக மொண்டி பொன்னையா மற்றும் கிறிஸ்டின் தம்பிமுத்து ஆகியோர் கருதப்படுகின்றனர். தற்போதுள்ள நாடக அரங்கங்களில் ஆங்கில நாடகங்கள் அரங்கேற்றப்படுவது அரிதுதான் என்றாலும் கூட அந்தக்காலகட்டத்தில் ஆங்கில நாடகங்களைத்தான் இலங்கையர்களும் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய நாடகங்களை அவர்கள் ரசித்து பார்த்துள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
பைலா கலையை ஓரங்கட்டிய இந்த ஆங்கில நாடகங்கள் தற்போது சம்பிரதாயப்பூர்வமாக அதாவது ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா, மக்சிம் கார்க்கி, டால்ஸ்டாய் போன்ற கம்யூனிஸ சிந்தனையாளர்களின் நாடகங்களைத்தான் அரங்கேற்றுகின்றன. புதிதாக எழுதப்பட்ட அல்லது சமகாலத்திலான ஆங்கில நாடகங்கள் காணக் கிடைப்பதில்லை. இதில் நாம் குறிப்பிட்ட அந்த இரண்டு தமிழ் நாடக கலைஞர்களான மொண்டி பொன்னையா மற்றும் கிறிஸ்டின் தம்பிமுத்து பற்றிய தகவல்களை எதிர்வரும் பதிவுகளில் தரக் காத்திருக்கிறோம்.