Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மதுரையின் வரலாற்றுத்தோற்றம்

சில ஊர்களின் பெயர்களை சொல்லும் போது அவை சுற்றுலா செல்வதற்கான இடமாக மட்டுமே தோன்றும். ஆனால் சில ஊர்களின் பெயர்களை கேட்கும் போது அதன் வரலாறும் அந்த மக்களின் வாழ்வியலும் நமது கண் முன் தோன்றும் அப்படி ஒரு ஊர் தான் மதுரை. மணமணக்கும் மல்லிகை, சுடசுட சுக்கு காபி போன்ற மென்மையான இட்லி, ஜில் ஜில் ஜிகர்தண்டா, பார்த்த இடமெல்லாம் நம் கண்ணைக் கவரும் கோயில் கோபுரங்கள், அது மட்டுமா அன்றே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரிய ஊர். இந்திய துணைக் கண்டத்திலேயே தொன்மையான வரலாற்று சிறப்பைக் கொண்ட நகரங்களில் ஒன்று. மதுரை மீனாட்சியம்மன் கோயில் உலகில் அனைவராலும் அறியப்பட்ட மிக பிரபலமான இடம்.

மதுரைக்கு பலவித பெயர்கள் உண்டான வரலாறு

2500 ஆண்டுகள் பழமையான மதுரை முந்தைய காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் கடம்ப வனம் என்றும் மருத மரங்கள் அதிக அளவில் இருந்ததால் மருதை என்றும் அழைக்கப்பட்டதாகவும், பின் காலப்போக்கில் மருதை மதுரையாக திரிந்ததாகவும் கூறுகின்றனர். அனைவரும் இங்கு கூடி இலக்கியப் பூர்வமான கலந்துரையாடல் செய்ததால் இதற்கு கூடல் நகர் என்ற பெயரும் உருவானதாக கூறப்படுகிறது. கோட்டையின் நான்கு வாயில்களிலும் நதிகள் சங்கமிப்பதால் நான்மாடக்கூடல் என்ற பழமையான பெருமை மிகுந்த பெயரும் உண்டு. நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர் என்பதால் இதற்கு ஆலவாய் என்ற ஒரு பெயரும் உண்டு. இந்த ஆலவாய் எனும் பெயர் வர புராண கதையும் உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த ரசனை மிகுந்த கதை இதோ. முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகராக விளங்கியது மதுரை மாநகர். பாண்டிய மன்னன் மதுரையை ஆண்ட சமயம் அம்மன்னன் மதுரையை விரிவுப்படுத்த எண்ணி இறைவனிடம் மதுரையின் எல்லையை வரையறுத்து தருமாறு வேண்டினான். இறைவன் அப்போது தன் கையணியாகி பாம்பிடம் எல்லையை வரையறுக்கும் படி ஆணையிட்டார். அதற்கிணங்க பாம்பும் தனது வாலை நீட்டி வலப்புறமாக தனது உடலை வளைத்தது. அந்த வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்று முதல் மதுரைக்கு ஆலவாய் எனும் சிறப்பு பெயர் அமைந்துள்ளதாக திருவிளையாடற் புராணம் எடுத்துரைக்கிறது. ஆலவாய் என்பதன் சொல் விளக்கம் ஆலம் என்பதற்கு நஞ்சு என்று பொருள். நஞ்சுடைய பாம்பினைக் குறிப்பதே ஆலவாய். மேலும் மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் ஆலவாய் என்னும் பெயர் உருவானதாகவும் ஒரு கதை உண்டு.

அடுத்ததாக மதுராபுரி எனும் பெயர் மதுரைக்கு வந்த கதையைப் பார்ப்போம். மதுரம் என்றால் இனிமை என்றும் பொருள். தனஞ்செயன் எனும் விவசாயி ஒரு முறை வனப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது கடம்ப மரம் ஒன்றின் கீழ் சுயம்பு லிங்கம் இருப்பதையும் கடவுளின் கடவுளான இந்திரன் அந்த சுயம்பு லிங்கத்தை வணங்கி கொண்டிருப்பதையும் பார்த்த அந்த விவசாயி அந்த செய்தியை உடனே குலசேகர பாண்டிய மன்னரிடம் தெரிவித்தார். பின் மன்னன் உடனே அந்த பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அந்த சுயம்பு லிங்கத்தை மையமாக வைத்து புதிய நகரம் உருவாக்கவும் உத்தரவிட்டார். அதே போல் நகரம் உருவாக்கப்பட்டது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மன்னர் மற்றும் அனைவரும் சிந்தித்த வேளையில் சிவப்பெருமான் அங்கு தோன்றி தனது தலை முடியிலிருந்து சில தேன் துளிகளை நகரின் மீது தூவி அந்த புதிய நகருக்கு மதுராபுரி என்றும் பெயர் சூட்டப்பட்டதாகவும் ஒரு கதை உண்டு.

Depictions In Temple (Pic: holidayiq)

பழமையான நாகரீகம்

உலகில் தோன்றிய மிக மிக பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்று. கி.மு.4000 முதல் கி.மு.2௦௦௦ ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறுப்பட்ட நாகரீகங்கள் தோன்றியிருந்தன. மத்திய அமெரிக்காவில் மாயன் நாகரீகம், தென் கிழக்கு ஆப்ரிக்காவில் எகிப்திய நாகரீகம், வட இந்தியா மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீகம், கிரேக்க மற்றும் ரோம் நாகரீகம் போன்ற பல நாகரீகங்கள் தோன்றிய காலக்கட்டத்தில் தான் தமிழகத்தில் வைகை நதி நாகரீகமும் தோன்றியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றான. இது நமக்கு பெரும் பிரமிப்பை ஏற்படுத்தினாலும் இந்த செய்தி சமீபத்தில் மதுரையில் நடந்த அகழ்வாய்வுகள், இன்று நம் பார்வைக்கு காட்சி வடிவாகயிருக்கும் மதுரையை விட மிக செல்வ செழிப்பு மிக்க நகரமாக இருந்தது என்பதை உறுதி செய்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பண்டைய காலம்தொட்டு இன்றைய நவீன எந்திரமயமான உலகம் வரை மதுரை மாநகரம் தமிழரின் பெருமையை பேவும் விதம் இருப்பதற்கு ஒரே காரணம், மூவேந்தர்களில் பாண்டியர்களே 16 ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சி ஆட்சி நடத்திய குறிப்பையும், அவர்களின் தொடர்ச்சியாக நாயக்கர்கள் பாண்டியர்களின் பெருமை மிகு நகரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சுவடுகளில் திருமலை நாயக்கர் மகாலும் ஒன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். இன்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே திருமலை நாயக்கர் மஹால் மிகச்சிறப்பாக சுற்றுலாத்துறையால் பராமரிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு கம்பீரமாகவும், தொன்மை தொணியிலும் காட்சியளிக்கின்றது.

மதுரை நகரின் அமைப்பு சிந்து சமவெளி நாகரிகத்தை ஒத்து உள்ளது. மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும் பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரையின் பொற்காலமாக இருந்து உள்ளது. இன்றைய மதுரையின் பெரும்பாலான மையப்பகுதிகள் நாயக்கர்களால் கட்டப்பட்டதே. எல்லா இன்பமான வாழ்விற்கு பின்னும் பல இன்னல்களும் சோதனைகளும் நிச்சயம் இருந்திருக்கும் அது போல் தான் மதுரையும். சுல்தான்கள் நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல சோதனைகளையும், சாதனைகளையும் கண்டுள்ளது மதுரை மாநகர்.

மதுரை மாநகரின் தனி சிறப்பே அந்த நகரின் வடிவமைப்பு தான். மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து அமைக்கப்பட்ட மாட, ஆவணி, மாசி வீதிகள் பழமையான மதுரையின் வரலாற்றுச் சான்றுகள். இந்தியாவின் மிகச் சிறந்த நகர வடிவமைப்புகளின் பட்டியலில் மதுரை மாநகரும் ஒன்று. ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும் ஊர் மதுரையாக மட்டுமே இருக்கமுடியும். எந்த நேரமும் மக்கள் விழாவோடும் மகிழ்ச்சியோடுமே இருப்பார்கள். மதுரையில் சில தெருக்களின் பெயர்கள் தமிழ் மாதங்களின் பெயரில் அமைந்துள்ளது. சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி வீதி. இது மட்டுமல்ல நீர் நிலைகளின் பெயரைக்கொண்டே தங்களின் ஊருக்கு பெயரை வைத்து நீருக்கு மரியாதை செய்தார்கள். மாடக்குளம், ஆத்தி குளம், கரிசல் குளம் போன்றவை இதற்கு உதாரணம். மதுரை மக்களுக்கு பெருமை அளிக்கும் விதமாக தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக உள்ளதால் தான் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் போன்ற பெரிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் மதுரையின் வரலாற்றுக்கென்றே ஒரு தனி கவன ஈர்ப்பு இருப்பதை நம்மால் உணர முடியும்.

Meenakshi Amnan Temple (Pic: phenomenalplace)

 

மதுரையின் சிறப்புகள்

மதுரையின் அடையாளமாக விளங்கும் மீனாட்சி அம்மன் கோயில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பு கட்டப்பட்டதாக சான்றுகள் உண்டு. பாண்டிய மன்னர்களால் முதலில் மதுரையில் கட்டப்பட்ட கோயில் இது. பின் இஸ்லாமிய படையெடுப்பினால் இந்த கோயில் அழிந்து போய் மீண்டும் 15 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியில் மீண்டும் புத்துயிர் பெற்று இன்று புதுப்பொலிவுடன் தமிழரின் கட்டிடக் கலையின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக அமைத்துள்ளது. சக்தியின் வடிவமான மீனாட்சி அம்மன் பிறந்து வளர்ந்து ஆட்சி செய்து தெய்வமான இடமாகவும் கருதப்படும் நகர் மதுரை. முக்கிய சக்தி தலமாக விளங்குகிறது மதுரை.  இன்றளவும் மீனாட்சி அம்மனின் கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு உதாரணம். மேலும் அன்றைய அரசரின் ஆட்சி சிறப்பை எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகிறது. உண்மையில் பலருக்கும் மதுரை என்றாலே அங்குள்ள மீனாட்சி அம்மன் திருகோயிலே முதலில் நினைவிற்கு வரும் இடமாக இருக்கும். உலகிலேயே அதிக நாட்கள் கொண்டாடப்படும் பிரமாண்டமான பண்டிகை இந்த சித்திரை திருவிழாவாக தான் இருக்கும். முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கும் அடுத்த 15 நாட்கள் அழகருக்கும் திருவிழா நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாணம் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மீனாட்சியம்மன் தேரோட்டம் புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க பல பொழுதுபோக்கு தளங்கள் மதுரையில் உள்ளது. கவின்மிகு கலைநயத்துடன் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மஹால், ஆயிரம் கால் மண்டபம், புது மண்டபம் போன்ற பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் இங்கு காணப்படுகிறது. மேலும் ராமகிருஷ்ண மடம், ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மண்டபம், காந்தி அருங்காட்சியகம் போன்றவை மதுரையின் சிறப்பை விளக்கும் விதமாக அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் காணப்படுகிறது. மதுரை மாநகரில் இயற்கை எழில் கொஞ்சும் பல அருவிகள் உள்ளது. வைகை ஆற்று கரையில் அமைந்துள்ள மதுரைக்கு அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி இங்கு உள்ளது. இந்த அருவி அறுநூறு அடி உயரத்தில் இருந்து விழுகிறது. கிளிமூக்கு அருவி, காட்டுப்பாறை அருவி, ஒத்தபாறை அருவி, கிளிநொச்சி அருவி மற்றும் மழைக்காலங்களில் மட்டும் தோன்றி மறையும் பல அருவிகள் மதுரையில் காணப்படுகிறது.

Waterfalls (Pic: myspb)

மலிவு விலையில் இரவு பகல் என 24 மணிநேரமும் சாப்பாடு தரும் ஊர். திரும்பிய இடமெல்லாம் விதவிதமான கடைகள் உணவகங்கள் சாப்பிட வருவோரின் சொர்க்க பூமியாகவே மதுரை திகழ்கிறது. அதிக வடை கடைகள் உள்ள ஊர் மதுரை மட்டுமே. இனிமையின் இயல்பே தமிழும் மதுரையும். பாலில் கலந்த நீரை எப்படி பிரிக்க இயலாதோ அதே போல் தமிழையும் மதுரையும் பிரிக்க இயலாதவை என்பது மறுக்க முடியாத உண்மையே. அதனால் தானோ என்னவோ மதுரையை புகழ்ந்த புலவர் பெருமான்கள் எல்லாம் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்துள்ளனர். புறநானூறு தமிழ்கெழு கூடல் என்று மதுரையை போற்றியுள்ளது. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் தாம் பாடிய சிருபாணாற்றுப்படையில் மதுரையை “தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று குறிப்பிட்டுள்ளார். உலகம் எல்லாம் இரவு தூங்கி போனாலும் மதுரை என்றும் தூங்கா நகரமாக ஜொலித்துக் கொண்டுள்ளது.

Web Title: Historical Facts Of Madurai, Tamil Article

Featured Image Credit: centralgovernmentnews

Related Articles