Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கீழடி: தமிழரின் தாய்மடி | பாகம் -1 | தடைகளும் வெற்றியும்

தன்னுடைய பழைமையை உணராதவன் நிச்சயம் தன்னுடைய வாழ்வில், தான் அடையக்கூடிய உச்சம் குறித்து அறிந்திருக்க மாட்டான். ஒட்டுமொத்த தமிழினத்துக்குமே அதன் பழைமை குறித்து இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது ஒரு தொன்மை வாய்ந்த நகரம். சமீபத்தில் தன்னுடைய ஐந்தாவது கட்ட ஆய்வுகளை முடித்துக்கொண்டு மண்ணுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தமிழர் தொல்நகரம் குறித்து விரிவான விவரங்களை ஆராயும் நோக்கத்தில் இந்த ஆக்கம் எழுதப்படுகிறது. 

வைகைக்கரையோரம் 

கீழடி அரசு உயர்நிலைப்பள்ளியின் வரலாற்றாசிரியராக பணியாற்றி வந்தார் திரு பாலசுப்பிரமணியம். தென்னதோப்பில் விளையாடிக்கொண்டு இருந்த சில பள்ளி மாணவர்கள் அங்கு கிடைத்த ஓரிரு பழைய பானையோடுகளை எடுத்துக்கொண்டு தங்கள் வரலாற்றாசிரியரிடம் வந்தனர். அவற்றை பார்வையிட்ட பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பானையோடுகள் கிடைத்த தென்னந்தோப்புக்கு சென்றார்.

தென்னந்தோப்பின் மேல்பரப்பின் சில அடி ஆழத்திலேயே அதிகளவு பானையோடுகள் கிடைப்பதை கவனித்த ஆசிரியர் அப்போதைய தமிழக தொல்லியல் துறையின் உயரதிகாரியாக இருந்த திரு வேதாச்சலம் அவர்களுக்கு கீழடியில் கிடைத்த பானையோடுகளை அனுப்பிவைத்தார். ஆனால் அப்போதைய சூழ்நிலையில் இது குறித்து மேலும் விரிவான ஆய்வுகளெதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான தொல்லியல் எச்சங்கள் கீழடியில் கிடைத்தது இதுவே முதன்முறை எனக்குறிப்பிடமுடியாது. கட்டட வேளைகளிலும், கிணறுக்கு குழி பறிக்கும் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு ஏராளமான எச்சங்கள் கிடைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை மக்கள் யாரும் பெரிதுபடுத்தவில்லை. ஒரு சிலரைத்தவிர. 

கீழடியில் அகழாய்வில் கிடைத்த பானை
படஉதவி : timesofindia.com

கீழடியில் தொல்லியல் எச்சங்கள் கிடைத்துள்ளன என்பதற்கான முதல் கட்ட அடியை எடுத்துவைத்து ஏறக்குறைய 40 ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தன. இந்திய தொல்லியல் துறையின் பெங்களூர் கிளையின் அதிகாரியாக பணிபுரிந்து வந்த திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் வடஇந்தியாவில் மேற்கொள்ளப்படுவதை போன்று தென்னிந்தியாவிலும் நதிக்கரையோர நகர நாகரிகங்கள் நிலவியதற்கான தொல்லியல் சான்றுகளை தேடும் நோக்கத்துடன் ஒரு குழுவை அமைத்தார். தனக்கு கீழ் இரு உதவி அதிகாரிகளையும், ஆறு மாணவர்களையும் கொண்ட அந்த  குழுவுடன் கள ஆய்வுக்கு பொருத்தமான இடத்தைத்தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பமானது.

தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் 
படஉதவி : caravanmagazine.in

சங்க இலக்கியங்களில் அதிகம் பாடப்பட்ட பெருமைக்குரிய மதுரையையும், வைகை நதியையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளையும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேகமலை தொடரின் வெள்ளிமலையில் உருவாகி, ராமநாதபுரம் மாவட்டத்தின் அழகன் குளத்தருகே கடலை அடையும் 257 km நீளமுள்ள வைகையாற்றின் இரு கரைகளிலும் சுமார் 4 km எல்லைக்குள் அமைந்திருக்கும் அனைத்து கிராமங்களிலும் களப்பணிகள் தொடங்கின. சிலமாதங்கள் தொடர்ந்த ஆய்வின் முடிவில் வைகை நதிக்கரை ஓரத்தில் 297 அடையாளம் காணப்பட்ட தொல்லியல் ஆய்வுக்களங்கள் குறிப்பிடப்பட்டன. மதுரைக்கு 30km வடக்கே இருக்கும் சித்தநத்தம், மாறநாடு மற்றும் மதுரைக்கு தென்கிழக்கே 13km தொலைவில் அமைந்த கீழடி ஆகியவை முக்கியப்புள்ளிகளாக குறிக்கப்பட்டன.

அகழாய்வு செய்யப்பட்ட பிரதேசம் 
படஉதவி : YouTube/Hiphop Tamizha

தமிழக நிலப்பரப்பில் நிலவிய நகரநாகரிகம் ஒன்றை வெளிக்கொண்டுவருவதே முதன்மையாக இருந்தபடியால், மதுரைக்கு மிக அருகில் உள்ளதும், நகர அமைப்பு காணப்படுவதற்கு அதிக சாத்தியக்கூறு நிலவியதுமான கீழடி, ஆய்வுக்காக தேர்வுசெய்யப்பட்டது. கீழடியில் களஆய்வுகளுக்காக கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய நான்கு பகுதிகளை சேர்ந்த மொத்தம் 110 ஏக்கர் நிலம் தொல்லியல் துறைக்கு தேவைப்பட்டது.  இந்த மொத்த நிலப்பரப்பும் பெரும்பாலும் தென்னந்தோப்புகளாக இருக்கிறது. கையகப்படுத்தப்படும் நிலத்துக்கோ, தென்னை மரங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லாது நிலம் மீளக்கையளிக்கப்படும் என்ற உடன்படிக்கையில் நிலவுடைமையாளர்கள் சம்மதத்துடன் நிலங்கள் பெறப்பட்டது. கள ஆய்வின் காரணமாக தொழிலை இழக்கும் நிலவிடமையாளர்களான விவசாயிகள் முறையான கூலிக்கு களஆய்வில் வேலைக்கும் அமர்த்தப்பட்டனர்.

படஉதவி : indiatoday.in

2014-2015 ஆண்டில் நடைபெற்ற முதற்கட்ட ஆய்வுகளுக்கு முன்னாள் தமிழக தொல்லியல் துறையின் அதிகாரியும், முதன்முதலில் கீழடி குறித்து தகவல்களை பெற்றவருமான திரு வேதாச்சலம் அவர்கள் வருகை தந்திருந்தார். இரண்டாம் கட்ட ஆய்வுகள் 2015-2016 இல் வெற்றிகரமாக பல்வேறு தொல்லியல் எச்சங்களின் கண்டுபிடிப்புடன் நிறைவடைந்து கொண்டிருந்தது. அப்போதுதான் கீழடி தொல்லியல் ஆய்வுக்களம் பெரும் நெருக்கடி ஒன்றை எதிர்நோக்க வேண்டியிருந்தது. 

அரசியல் ஆடுகளம் 

கீழடியில் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் ஆய்வுகளை தொடங்கி ஓராண்டு கழிந்திருந்த வேளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும், வேள்பாரி தொடரின் ஆசிரியரும், பிரபல பத்திரிகை எழுத்தாளருமான திரு சு.வெங்கடேசன் அவர்கள் கீழடியில் நடந்துகொண்டிருந்த ஆய்வுகள் குறித்து செவியுற்று அங்கு வந்து பார்வையிட்டார். மதுரைக்கு மிக அருகில் நடைபெறும் இத்தனை சிறப்புமிக்க அகழாராய்ச்சி குறித்து தமிழகமக்கள் எவ்விதத்தகவலும் அறியாது இருப்பது பெரும் வருத்தத்தை தருவதாக தெரிவித்த வெங்கடேசன், கீழடியின் முதல் இருகட்ட ஆய்வு விபரங்களையும், சங்க இலக்கியங்களையும் தொடர்புபடுத்தி “வைகைநதிக்கரையில் ஒரு நகர நாகரிகம்” என்ற தொடரை ஆனந்த விகடன் சஞ்சிகைக்கு எழுதினார். அத்தொடருக்கு வாசகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து கீழடியில் நடக்கும் ஆய்வின் மூன்றாம் கட்ட பணிகளுக்கு  அனுமதி வழங்கப்படாது என்று மத்திய தொல்லியல் துறை தெரிவித்தது. மேலும் முதல் இரண்டுகட்ட ஆய்வுகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட அனைத்து தொல்லியல் ஆதாரங்களும் மைசூரில் உள்ள இந்திய தொல்லியல் ஆய்வகமையத்துக்கு கொண்டுசெல்லப்பட போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

எழுத்தாளர் சு.வெங்கடேசன்
படஉதவி : firstpost.com

வெங்கடேசன் மீண்டும் தன்னுடைய பேனாவுக்கு வேலை கொடுத்தார். ஒற்றை கட்டுரையில் கீழடியின் ஆய்வு நடத்தப்பட வேண்டியதன் தேவையையும், அதற்கு மத்திய அரசு வழங்கும் அலட்சியத்தையும் செவ்வனே தொகுத்துரைத்தார். செப்டெம்பர் 26 2016 தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் வெளியான “யாசகம் கேட்கும் தொல்நகரம்” என்ற இந்த கட்டுரையின் எதிர்பார்த்ததை விட வேகமாகவே தன்னுடைய வேலையை செய்து முடித்தது. வெங்கடேசனின் கட்டுரை வெளியாகி இரண்டே நாட்களில் அதாவது 28/09/2016 இல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்கள் ஒரு பொதுநல வழக்கை தொடுத்தார். 

வழக்கறிஞர் கனிமொழி மதி
படஉதவி : hindutamil.in

கீழடியில் மத்திய தொல்லியல் துறை தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் 
கீழடியில் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.
கீழடியில் அகழ்ந்தெடுக்கப்படும் தொல்லியல் எச்சங்கள் அனைத்தும், கீழடியில் அமைக்கப்படும் அருங்காட்சியாகத்திலேயே வைக்கப்பட வேண்டும் என்ற அம்சங்களை உள்ளடக்கி தொடரப்பட்ட இவ்வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் நாகமுத்து மற்றும் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமர்விலேயே மத்திய தொல்லியல் துறையின் முடிவுகளுக்கு தற்காலிகத்தடை விதிக்கப்பட்டது.

நீண்ட வாதங்களுக்கு பிறகு கீழடியில் இனிமேல் கண்டெடுக்கப்படும் பொருட்களை சென்னை அருங்காட்சியகத்தின் கண்காணிப்பில் வைக்க பெங்களூர் தொல்லியல் ஆய்வகம் ஒப்புக்கொண்டது. ஆனால் முதலிருகட்ட ஆய்வுகளிலும் பெறப்பட்ட பொருட்கள் எல்லாம் மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது. மேலும் தொடர்ந்து மத்திய தொல்லியல் துறையே கீழடி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானமான முடிவை நீதிமன்றம் வெளியிட்டதால் மத்திய தொல்லியல் துறை அதற்கு சம்மதம் தெரிவித்தது. அத்துடன் கீழடியில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து தமிழக தொல்லியல் துறை ஆவணங்களை புகைப்பட வடிவிலும், காணொளிகளாகவும் சேகரித்து வைக்குமாறு நீதிமன்றம் தெரிவித்தது. 

கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள்

வழக்கில் சாதகமான முடிவுகள் கிடைத்தபோதிலும் கூட மத்திய தொல்லியல் துறை கீழடி விவகாரத்தை கிடப்பில் போட்டு விட்டிருந்தது. 2016 அக்டோபர் இறுதியில் கிடைக்கவேண்டிய அனுமதிப்பத்திரம் 2017ம் ஆண்டு தொடங்கியும் கிடைக்காதிருந்தது. 2017இன் ஆரம்பத்தில் தமிழகமே தன்னுடைய உரிமையான ஜல்லிக்கட்டுக்காக போராடியமையின் விளைவாக ஜல்லிக்கட்டு அனுமதியுடன் இலவச இணைப்பாக கீழடியின் 3ம் கட்ட பணிகளுக்கான அனுமதியும் 2017 ஃபெப்ரவரி இறுதியில் வழங்கப்பட்டது. எனினும் ஆய்வுகளுக்கான நிதியை ஒதுக்க ஒருமாதம் அவசாகம் கேட்டுக்கொண்டது மத்திய அரசு.

முதலிரு கட்ட ஆய்வுகளையும் மிகவும் அர்ப்பணிப்புடன் செய்துமுடித்திருந்த பெங்களூர் ASI அதிகாரியான திரு அமர்நாத் கிருஷ்ணனை மார்ச் 24ஆம் திகதியன்று அஸ்ஸாமுக்கு இடமாற்றம் செய்தது மத்திய தொல்லியல் துறை. மேலும் முதல் இரு கட்ட ஆய்வுகளுக்குமான ஆய்வறிக்கையை தயாரிப்பதற்கும் அமர்நாத் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுவரை காலமும் ஒரு ஆய்வைத்தொடங்கிய அதிகாரியே அதனை முழுமையாக செய்துமுடிக்கும் வழமை தொல்லியல் துறையில் இருந்துவந்த நிலையில் முதன்முறையாக இவ்வாறான இடமாற்றம் நடைபெற்றமை ஒரு அரசியல் ரீதியான நகர்வாகவே பார்க்கப்பட்டது.

படஉதவி : thehindu.com

அமர்நாத் அவர்களின் இடத்தை நிரப்புவதற்கு திரு ஸ்ரீராமன் என்ற ASI அதிகாரி நியமிக்கப்பட்டார். முதல் இரு கட்ட ஆய்வுகளில் மொத்தம் 103 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 3ம் கட்ட ஆய்வு இதுவரையில்லாத வகையில் உயர்ந்தபட்ச நிதியொதுக்கமான 40 லட்ச ரூபாய்களுடன் தொடங்கப்பட்டது. எனினும் ஸ்ரீராமன் குழுவினர் ஓராண்டில் வெறும் 12 லட்சங்கள் மட்டுமே செலவிட்டு 16 குழிகளை மாத்திரம் தோண்டி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். ‘முதல் இரு கட்ட ஆய்வுகளில் கிடைக்கப்பெற்றவாறு எந்த கட்டடங்களின் தொடர்ச்சியோ அல்லது புதிய கட்டடங்களோ கிடைக்கவில்லை என்பதால் மத்திய தொல்லியல் துறை இனியும் இங்கு ஆய்வைத்தொடர தேவையில்லை’ என்ற அறிக்கையை ஸ்ரீராமன் வெளியிட்டார்.

மீண்டும் மத்திய தொல்லியல் துறை கீழடி விவகாரத்தில் கரிசனை இன்றி நடந்துகொண்டமையால் வழக்கறிஞர் கனிமொழி மதி மீண்டும் தன்னுடைய வழக்கை மதுரை உய்ரநீதிமன்ற கிளையின் பார்வைக்கு கொண்டுவந்தார். இந்த முறை வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் M.M.சுந்தரேசன் மற்றும் சதீஷ்குமார் இருவரும் கீழடி ஆய்வுக்களத்தை நேரில் பார்வையிட்டு வந்து இவ்வாறான சிறந்த தொல்லியல் ஆய்வு தமிழகத்துக்கு அவசியம் எனவும் அதனை மத்தியதொல்லியல் துறை மேற்கொள்ளும் போதே சர்வதேச ரீதியான கருவிகள் மற்றும், பயிற்சி பெற்ற ஊழியப்படை மூலம் சிறப்பான ஆய்வுமுடிவுகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர். எனினும் மத்திய தொல்லியல் துறை திட்டவட்டமாக அதனை மறுத்துவிட்டது.

படஉதவி : YouTube.com

நிலைமை மோசமாவதை கண்டு இத்தனை காலமும் உறக்கத்தில் இருந்து இப்போதுதான் விழித்துக்கொண்டது போல தமிழக அரசைச்சார்ந்த தமிழ் மொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரான M. பாண்டிராஜன் மற்றும் மதுரையின் பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கீழடி ஆய்வுக்களத்தை நேரில் பார்வையிட்டு தமிழக தொல்லியல் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக மாநிலத்தொல்லியல் துறையே கீழடியின் ஆய்வுகளை தொடர்வதாக மதுரை நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்தனர்.

வடக்கே தொல்லியல் ஆய்வுகளுக்கும், சமஸ்கிருத மொழிக்கும் கோடிகளில் செலவு செய்யும் மத்தியரசு தமிழக தொல்லியல் துறை சொந்தச்செலவில் கீழடி ஆய்வு செய்வதற்காக விண்ணப்பித்த அனுமதிப்பத்திரத்தை வழங்க ஆறுமாதங்கள் எடுத்துக்கொண்டது. நீண்ட போராட்டத்துக்கு பின்பு கிடைக்கப்பெற்ற அனுமதியைக்கொண்டு தமிழக அரசு திரு உதயச்சந்திரன் தலைமையிலான குழுவினரின் கண்காணிப்பில் கீழடியில் 4ம் கட்ட ஆய்வுகளை 2017-2018 இல் நடாத்தி முடித்தது. இதன் இறுதி ஆய்வறிக்கை கடந்த செப்டெம்பர் மாதம் வெளியாகி உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது.

தமிழக தொல்லியல் துறை கீழடி ஆய்வுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து தன்னால் இயன்றவரை நவீன உபகரணங்களை பயன்படுத்தி ஆய்வை தொடர்ந்து வருகிறது. ஆய்வில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் தொடர்பான நேர்மறை கருத்துக்கள் பல எழுந்தவண்ணம் உள்ளன. இது பற்றிய மேலதிக விபரங்களை “ஆராய்ச்சிகளும் உபகரணங்களும்” எனும் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

Related Articles