
#prayfornesamani எம்மவர்களையும் விட்டுவைக்கவில்லை. யாரோ செய்த குறும்பு ஒன்றுமில்லாத கமென்ட் வடிவில் தொடங்கி உலக அளவில் பேசப்பட்டு, இந்த வினோத ஹேஷ்டேக் டிரெண்டிங் ROAR தமிழ் பக்கத்திலும் இடம்பிடிக்க வந்துவிட்டது. எங்கெல்லாமோ சுற்றிதிரியும் இந்த நேசமணிக்கு இலங்கையின் google search இல் “who is” பிரிவில் முதலிடம் கிடைத்திருக்கிறது.
எங்கே, யாரால் எப்படி உருவானது இந்த டிரெண்டிங்?
Civil Engineering Learners என்கிற பேஸ்புக் பக்கம் தான் இதற்கெல்லாம் மூலக்காரணம்.

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இந்தப் பக்கத்தில், சுத்தியல் ஒன்றின் படத்தை போஸ்ட் செய்து இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர் என்று விசாரிக்கப்போக அங்கே கமென்ட்டில் ஒருவர் செய்த குறும்பு இன்று உலக அளவில் டிரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது.

இதை படம் எடுத்து மீம் ஆக மாற்றியது Vera Level Comments என்கிற fb பக்கம். ஒரே நாளில் உலக அளவில் டிரெண்ட் ஆக்கிவிடுவார்கள் என்று தெரியாமலேயே இந்தச் சம்பவத்தை வெளியே கொண்டுவந்ததில் அந்தப்பெருமை எல்லாம் இவர்களையே சாரும்.
இந்தக் கமெண்ட் குறும்பை செய்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த விக்னேஷ் பிரபாகர். இவர் சிவில் இஞ்சினியராக துபாயில் பணிபுரிந்து வருவதாக இவரது பேஸ்புக் சொல்கிறது. உலக அளவில் பிரபலாமன #PrayForNesamani க்கு இவர் தான் காரணம் என்று அறிந்த இவரது நண்பர்கள் இவரது பேஸ்புக்கில் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.

இந்த ஹேஷ்டேக் விவகாரம் மெல்ல மெல்ல சூடு பிடிக்கத்துவங்கியது, மீம்களுக்கென்றே திறந்துவைக்கப்பப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பேஜ்கள் இதை வைரல் ஆக்கத்துவங்கியது. சோசியல் மீடியாக்களில் தினம் தினம் புதினத்தை தேடும் இளைஞர் கூட்டம் கரும்பு தின்ன கைக்கூலியா என்று கேட்டுவிட்டு நொடிக்கு நொடி இந்த செய்தியை பகிர்ந்திட வேடிக்கையின் உச்சம் கண்டது இந்த #PrayForNesamani ஹேஷ்டேக்!
டுவிட்டரில் டிரெண்டிங் சாதனை
இந்தியாவை திரும்பிப்பார்க்க வைத்த சில மணிநேரங்களிலேயே உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது டுவிட்டர் உலகம்! இந்தியாவில் #PrayForNesamani என்கிற Hashtag மோடியின் வெற்றியையும் (#ModiSarkar2) பின்தள்ளி முதலிடம் பிடித்து தொடர்ந்து டிரெண்டிங்கில் தடம் பதித்து வருகிறது. உலக அளவில் நேசமணி என்கிற பெயரை கூகிளில் தேடி வருவதை கூகிளும் உறுதிசெய்துள்ளது.


இதனைத்தொடர்ந்து இந்திய செய்தி ஊடகங்கள் ஒவ்வொன்றாக இந்த டிரெண்டிங் செய்தியை வெளியிட ஒருகட்டத்தில் BBC ஆங்கில ஊடகமும் இவ் டிரெண்டிங் பின்னால் இருக்கும் கதையை செய்தியாக்கியுள்ளது.

இதெல்லாம் வடிவேலு என்கிற தனி மனிதனுக்கு , நகைச்சுவை நடிகனுக்கு மக்கள் கொடுத்திருக்கும் இடம் எங்கிற செய்தியை அறித்து ஆச்சர்யத்தில் கலகலத்துப்போயுள்ளது வெளிநாடுகள்.
நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது?
இவ்வளவும் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் வடிவேலுவை தொடர்புகொண்டது நியூஸ்7 செய்திச் சேவை. இதுகுறித்த கேள்விக்கு, தன் பாணியில் பதிலளித்த வடிவேலு தனக்கு இது பற்றி தெரியாது என்றும் மீம்ஸ் எதையும் தான் பார்க்கவில்லை என்று நக்கலுடன் குறிப்பிட்டார். உலக அளவில் தன் பெயரை மக்கள் கொண்டுசெல்வது இறைவனின் அருள் என்றும் தெரிவித்தார். இறுதியாக தொலைபேசி அழைப்பை துண்டிக்க முன்னர் அவர் சொன்னது கவலையளிக்கும் செய்தியாகும். தன் மாமியார் இறந்து 10 நாட்கள் ஆகியுள்ளதையிட்டு தன் குடுபத்துடன் துக்க நிகழ்வுகளில் கலந்துகொண்டிருப்பதாக கவலையுடன் சொல்லி முடித்தார்.
இவ்வளவும் 24 மணி நேரத்தில் நடந்து முடிந்துள்ளது என்பது இன்னமும் ஆச்சர்யமளிக்கிறது.
இந்தியாவில் மாத்திரமின்றி தமிழர்கள் இருக்கும் எல்லா ஊர்களிலும் இந்த வினோதமான செய்தியை டிரெண்டிங் செய்து வருகிறார்கள் தமிழர்கள். இலங்கையின் தமிழ் வானொலி ஊடகங்களும் பேஸ்புக் பக்கங்களும் இந்த ஹேஷ்டேக் ஜோதியில் ஐக்கியமாகி இருக்கிறார்கள். கூகிளில் who is Nesamani என்கிற தேடல் பிரபல்யமடைந்து வருவதாக கூகிளின் தகவல் திரட்டு மையம் தெரிவிக்கிறது.
சமூக ஊடகத்தில் இருந்து நமது பார்வையில் சிக்கிய சில மீம்களை இங்கே தருகிறோம். உங்கள் கண்ணில் பட்டதை கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.





pinkvilla.com வெளியிட்ட செய்தி



