உலகிலேயே மிகவும் போற்றப்படும் இதிகாசங்களில் முக்கியமானது இராமாயணம். அந்த இராமாயணத்தின் பெரும் நிலப்பரப்பை ஆட்சிசெய்வது இலங்கைதான். அந்தப் பெருமையைப் பெற்ற இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய 59 இடங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதில் மிக முக்கியமான இடம்தான் சீதையை இராவணன் சிறைவைத்த அசோகவனம். அசோகவனத்திற்கு பலவிதத்திலும் விளக்கவுரைகள் இருக்கின்றன. சோகம் /அசோகம் என்பதுபோல சோகமற்ற வனமாக அசோகவனம் இருந்ததாகவும், அசோக மரங்கள் நிறைந்திருந்ததால் அதை அசோகவனம் என்று அழைப்பதாகவும் சொல்வதுண்டு. இந்தத் தகவலை 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கம்பன் விழாவின்போது இராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தித்திருந்தார். அத்தோடு இராமயணத்தில் இடம்பெற்ற இலங்கையில் அமைந்துள்ள பல இடங்கள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.
இந்த இராமாயணம் உண்மையில் நடந்ததா அல்லது கற்பனைக் கதையா என்ற வியாக்கியானத்திற்குள் நாம் செல்லவில்லை. அதன் பெயரில் அமையப்பெற்றுள்ள சிறப்பம்பசம் கொண்ட ஒரு இடத்திற்குத்தான் இந்த எழுத்துக்களின் ஊடாக நாம் பயணப்படப்போகிறோம்.
சீதையம்மன் கோயில் அடர்ந்த வனத்தில் மலைச் சரிவில் காணப்படுகிறது. கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையெங்கும் சிவப்பு நிறப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வெண்மையாக இருந்த மலர்கள் அனுமனின் கைப்பட்ட காரணத்தால் சிவப்பு நிறத்துக்கு மாறின என்ற ஐதீகம் உண்டு. மலைக்கு மேலே உயரமான இடத்தில் கோயில் அமைந்துள்ளதால் எப்போதும் குளிர்ந்த சூழலே நிலவிக்கொண்டிருக்கிறது. மலையைத் தழுவிச் செல்லும் கார்மேகம், மழை, எப்போதும் வீசிக்கொண்டிருக்கும் குளிர்ந்த காற்று, அருவி என இயற்கை மாறாத சூழலில் அம்மனைத் தரிசிப்பதே தனி அனுபவமாக இருக்கும்.
அசோக வனத்துக்குச் சீதையை இராவணன் தேரில் அழைத்து வந்தபொழுது இப்பகுதியை மிக வேகமாகக் கடந்தமையால் சீதையின் கூந்தல் – அதாவது கொண்டை – கலைந்ததாகவும் ஆகவே அது கொண்டை களை என அழைக்கப்படுவதாகவும் கூறுவார்கள்.
அனுமனின் கண்களுக்குத் தெரியாமல் பின் சீதையை மறைத்து வைக்க அசோக வனத்திலிருந்து அழைத்துச் சென்ற இடமாக இருப்பது கொத்(து)மலை பகுதியிலுள்ள இராவணாகொட என்று இன்றும் அழைக்கப்படும் இடமாகும். நெடிய மலைகளும் வளைவுகளும் கால்வாய்களும் கொண்ட இப்பகுதி இராவண ஆட்சியின் முதன்மையான பகுதி எனலாம்.
இராவணனால் கடத்தப்பட்ட சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம், சீதை நீராடி தவமியற்றிய தலம், இராமபிரானின் கணையாழியை அனுமன் கொடுத்த இடம், தொல்லியல் சான்றுகள் நிறைந்த தலம், இராவணன் கோட்டைக்கு எதிரே அமைந்த தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது உள்ள சீதாஎலியா திருத்தலம்.
புராண காலத்தில் அசோக வனம் என்று குறிப்பிடப்படும் இந்தப் பகுதி தற்போது இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா அருகில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இத்தலம் குழந்தைப்பேறு, தம்பதியர் ஒற்றுமைக்கு ஏற்றத் தலமாகத் திகழ்வதால், உள்நாட்டவர் பலரும் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இராமாயணம் தொடர்புடைய பழம்பெரும் தலங்களான ஹக்கல, மலிகடென்ன, ராமராசாலா, சீத்தாவாக்க, கெலனிய இன்றும் காணப்படுகிறது. இதேபோல, இராவணன் குகை, இராவண எல்ல எனும் இடங்கள் இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளன. இராவணனின் மற்றொரு கோட்டை தென்கிழக்கு கடற்கரைக் கோவிலாக இருக்கிறது.
சீதா எலியா ஆலயத்தின் எதிரே பிரமாண்ட மலை அமைந்துள்ளது. அதன் உச்சியில் இராவணன் கோட்டையும், அரண்மனையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மலையின் முன்பகுதியைப் பார்த்தால் அது அனுமனின் முகம் போல் காட்சி தருவதாகவும் சொல்லப்படுகின்றது.
அந்தப் பகுதியில்தான் அனுமனுக்கும் மிகப் பிரம்மாண்டமாக ஒரு கோவில் அமைக்ககப்பட்டுள்ளது. ரம்பொடை ஆஞ்சனேயர் கோவில்தான் அது.
சீதைக்கு அமையப்பெற்றுள்ள ஆலயமானது கண்டி – நுவரெலியா நெடுஞ்சாலையோடு சீதை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த இடமே சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் ஆகும்.
சாலையில் இருந்து சில படிகள் கீழே இறங்கி தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். உள்ளே இரண்டு கருவறை விமானங்கள் உள்ளன. ஒன்றில் பழைய மூல மூர்த்திகளும், மற்றொன்றில் புதிய மூல மூர்த்திகளும் உள்ளனர். எதிரில் அனுமன், ராமபிரானை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றார். இரண்டு கருவறைகளிலும் ராமபிரான், சீதை, லட்சுமணன் அருட்காட்சி வழங்குகின்றனர். ஆலயத்தின் தலமரமாக அசோக மரம் உள்ளது. பிரார்த்தனை செய்வோர் கட்டிய ஏராளமான துணி முடிச்சுகள் அந்த அசோக மரத்தில் காணப்படுகின்றன.
ஆலயத்தின் பின்புறம் சீதை ஆறு ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மறுகரையில் அனுமன் பாதங்களின் சுவடுகள் பாறையில் அமைந்துள்ளன. அதன் மேலே சிறிய மேடை அமைந்து, அதில் ராமபிரான் கொடுத்த கணையாழியை அனுமன் சீதையிடம் தரும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்புறம் மலைகள் நிறைந்திருக்க, அதில் அசோக மரங்கள் நிறைந்துள்ளன.ஆலயத்தை ஒட்டிய ஒரு பகுதி மண்ணின் நிறம் கருமை நிறமாகவும், மறுபகுதி இயல்பான நிறத்திலும் அமைந்துள்ளது. இதற்குக் காரணம், இலங்கையை அனுமன் எரித்ததால் ஏற்பட்டது என்ற ஐதீகம் கூறப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 2 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இராமாயணத்தைக் கதையாகப் படித்து, படமாகப் பார்த்த நமக்கு, அசோக வனத்தையும், சீதை அம்மன் திருக்கோவிலையும் கண்டு வணங்கி, அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களை எல்லாம் பார்த்து திரும்பும் போது, நம் மனதிற்குள்ளும் இராமாயண காலத்தில் வாழ்ந்த பிரமிப்பு ஏற்படும். அந்த மெய்சிலிர்ப்பை அங்கு செல்லும் எவராலும் தவிர்க்க இயலாது.
`ஆதிசக்தி சீதையம்மன் கோயில்’
அன்று இராவணனால் எந்த இடத்தில் சீதை சிறைவைக்கப்பட்டாளோ, அதே இடத்தில் பத்தினிக் கடவுளாக அருள்புரிகிறாள் சீதை. உள்ளூரில் இந்தக் கோயிலை `ஆதிசக்தி சீதையம்மன் கோயில்’ என்றும், ‘நுவரெலியா சீதாஎலியா’ என்றும் அழைக்கிறார்கள். `நுவரெலியா சீதாஎலியா’ என்பது சிங்களப் பெயர். கோயிலுக்கு வெளியே சிறு அனுமன் சந்நிதி ஒன்று காணப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிதறு தேங்காயை உடைத்துச் செல்கிறார்கள். அனுமன் சந்நிதிக்குப் பின்னால் இராமர், இலட்சுமணன் மற்றும் சீதை தேவி ஆகியோரின் விஸ்வரூப மூர்த்தங்கள் காணப்படுகின்றன. மூவரையும் வணங்கும் கோலத்தில் அனுமன் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார்.எப்போதும் வீழ்ந்துகொண்டிருக்கும் அருவியின் ஓசையைக் கேட்டபடியே கோயிலுக்குள் நுழைந்தால், கோயில் மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கோயிலில் இரண்டு சந்நிதிகள் காணப்படுகின்றன. வலதுபுற சந்நிதியில் அனுமன் அருள்புரிகிறார். இடது பக்கம் காணப்படும் சந்நிதியில் சீதாதேவி இராமர் மற்றும் இலட்சுமணனுடன் அருள்புரிகிறாள். சீதையை அவள் சிறை வைக்கப்பட்ட இடத்திலேயே வணங்கினால் அனைத்து குறைகளும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் இந்தியா போன்ற பல்வேறு வெளிநாட்டவரும் சீதை அம்மனை வணங்கி அவளது அருள் பெற்றுச் செல்கிறார்கள்.