கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்கூட “சாபம்“ என்கிறவொன்றின்மீது ஏதோவொரு அச்சம் இருந்துகொண்டேதானிருக்கும். அப்படி இலங்கையின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட ஓர் சாபம் அறிவியல் தாண்டியும் உண்மைதானோ என எண்ணும்வகையில், இன்றுவரையில் பலித்துக்கொண்டேதான் இருக்கின்றதென்றால் மிகையில்லை. ஆம், அது இலங்கையின் பூர்வகுடி பெண்ணான குவேனியின் சாபம்தான்! விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கும் இலங்கை வரலாற்றில் (கிமு 543 ) , அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் பூர்வகுடி பெண்ணான குவேனிக்கும் விஜயனுக்கு ஏற்படும் காதலில் இரு குழந்தைகளும் பிறக்கின்றனர். எனினும் தாம் உருவாக்கியிருக்கும் புதிய நகரங்களுக்கு விஜயனை மன்னராகும்படி கோரும் அவனது எழுநூறு நண்பர்களினதும் கோரிக்கைக்கிணங்க, பாண்டிய இளவரசியை மணந்துகொள்ளும் விஜயன், தன்னுடைய இரு குழந்தைகளையும் அரண்மனையில் விட்டுவிட்டு குவேனியை எங்காவது சென்றுவிடும்படி கூறுகின்றான். இதனால் மனமுடைந்த குவேனி தன் இறுகுழந்தைகளையும் அழைத்துக்கொண்டு “லங்காபுர “எனும் இடத்திற்கு செல்ல, அங்கே அவளது குலத்தவர்களே அவளை கொலை செய்ய முயல்கின்றனர் அங்கிருந்து தப்பியோடும் குவேனியின் குழந்தைகளே இன்றைய இலங்கையின் ஆதிவாசிகளின் முன்னோர்கள் என கருதப்படுகின்றது.
உண்மையில் விஜயனுக்காக பெரும் விலையைக் கொடுத்தவள் குவேனி. தனது இனத்தால் தனிமைப்படுத்தியதை ஏற்றுக் கொண்டது கூட விஜயனிடம் கொண்டிருந்த நம்பிக்கையால்தான். தனது இனத்தவர்களை (இயக்கர்களை) விஜயன் அழிக்க முடிவெடுத்தபோது அந்த அழித்தொழிப்புக்கு விஜயனுடன் ஒத்துழைத்தவள். விஜயன் தலைவனாவதற்கு உதவியவள். அப்படிப்பட்ட குவேனியால் விஜயனின் துரோகத்தை அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ள இயலுமா என்ன? அவள், தான் தற்கொலை செய்துகொள்ளும்முன் ஒன்பது சாபங்களை விடுகின்றாள், அந்த சாபங்கள்தான் இன்றுவரையில் இலங்கையை பாடாய்படுத்துகின்றது எனும் நம்பிக்கை சிங்கள மரபுவழி இன்றும் உள்ளது .
அந்த ஒன்பது சாபங்கள்
” இலங்கைத் தீவு நான்கு திசைகளாலும் அழிக்கப்படட்டும் ” எனும் முதல் சாபத்தின் பிரகாரம் சுனாமி போன்ற பேரழிவினை சிங்களவர்கள் குறிப்பிடுகின்றனர். “சாபுர்ன” என்றழைக்கப்படுகிற இரண்டாவது சாபத்தின்படி இலங்கைக்கு யார் எல்லாம் தலைமை தாங்குகின்றார்களோ அவர்கள் அழிந்து போகட்டும் என்பதே. மூன்றாவது சாபமான அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு சிக்கட்டும்” என்பதன்படி போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என ஆளப்பட்டு இன்று சீனா, இந்தியா, அமேரிக்கா என யாரின் பிடிக்குள் இருக்கின்றோம் என தெரியாமலே சிக்கியிருக்கும் சொப்பனசுந்தரி நிலையே இலங்கைக்கு. நான்காவதாக , ஹெல இனம் இரத்தத் தூய்மை இழந்து தனித்துவத்தை இழக்கட்டும் எனும் “பக்கி மவுரி” என்கிற சாபத்தின்படி இனத்தூய்மை இழந்து, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாக்காட்டுங்கள் என்கிற சபிப்பு ( சிங்கள வரலாற்றில் ஆட்சிக்காக எழுந்த சகோதர சண்டை காசியப்பன் முதல் ராஜபக்ஷே வரை தொடர்கின்றதோ என்னவோ), ஹெல தீவு இரண்டாகப் பிளந்து கடலுக்குப் பலியாகட்டும் எனும் ‘நிமி மினிச” என்கிற ஐந்தாவது சாபமானது இலங்கை இரண்டாக உடைந்து இறுதியில் சமுத்திரத்தில் மூழ்கட்டும் என்பதே, “தக்னிகா” எனும் ஆறாவது சாபமானது இலங்கையில் அறிவீனமான இனம் தோன்றட்டும் என்பதாகும் , ஏழாவது சாபமானது சூரியன், மழை, காற்று, கடல் மற்றும் நீர் என்பவற்றால் அனர்த்தங்கள் ஏற்படவேண்டும் என்பதே, குணமடைய முடியாததும் விரைவாக பரவக் கூடியதுமான நோய்களுக்கு எப்போதும் இலங்கை ஆளாகிக்கொண்டிருக்கட்டும் எனும் எட்டாவது சாபம், குவேனியின் இறுதி சாபம் என்னவென்றால், கடலில் மிதக்கும் மரக் குச்சி அலைகளுக்கு அகப்பட்டு இங்குமங்குமாக எந்தக் இலக்குமில்லாமல் இறுதியில் மூழ்கிவிடுவது போல எந்தக் கொள்கையும் இல்லாத மக்கள் இலங்கையில் உருவாகட்டும், அவர்கள் சிக்கி சீரழியட்டும் என்பதேயாகும் .
இலங்கை வரலாற்றைப் படிப்பவர்களுக்கு குவேனியின் சாபம் இன்றுவரை பலித்து வருவது தெரிய வரும். இலங்கையை ஆண்ட எந்த மன்னரும் இடையூறின்றி, நிம்மதியாக ஆட்சி செய்துவிட்டு மாண்டதில்லை. அவர்கள் அனைவருமே பீதியுடனும், போர்களுடனும், சதிகளை எதிர்கொண்டும்தான் ஆட்சி புரிய நேர்ந்தது. அது பண்டைய மன்னர்கள் தொடக்கம் இன்றைய நவீன அரசாங்கங்கள் வரை நீடிக்கின்றன என்பது கண்கூடு! மகா வம்சத்தின் (கிமு 543 கிபி 275) சிங்கள அரசர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் பலவீனமானவர்களாகவும் திறமையற்றவர்களாகவும் இருந்ததை மகாவம்சத்திலிருந்தே காணலாம். இந்த வம்சத்தின் 54 மன்னர்களில், 15 பேர் ஓர் ஆண்டிற்கும் குறைவாகவும், 30 பேர் நான்கு ஆண்டுகளுக்கு குறைவாகவும், 11 பேர் அரியணையில் இருந்து நீக்கப்பட்டனர், ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டனர், 13 பேர் போரில் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் அவர்களின் வாரிசுகளால் கொல்லப்பட்டனர். தொடக்ககால சிங்கள அரசர்களின் இருண்ட அவலமான பதிவு அரியணைக்கான இடைவிடாத போராட்டம், சகோதரக் கொலைகள், சதிகள் மற்றும் உள்நாட்டு சண்டைகள் ஆகியன இடம் பெற்றன.
சுதந்திர இலங்கையின் இன்று 73 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் இலங்கைத் தீவு வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாது ஒட்டாண்டி நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியாக ஆட்சி செய்த ராஜபக்ஷே வம்சம் அசிங்கப்பட்டு வரை நிற்கிறது. நெருக்கடிகள் ஒன்றா இரண்டா? அவை வரிசையாக எழுந்து நிற்கின்றன. நிதித் தட்டுப்பாடு, உற்பத்தி வீழ்ச்சி, பண வீக்கம், கோவிட், விலைவாசி ஏற்றம் , உயிர் காக்கும் மருந்துகள் , உணவுப்பொருட்கள் உற்பட அத்தியாவசிய பொருட்கள் இன்மை போன்ற நெருக்கடிகளை இலங்கை அரசாங்கம் எதிர் நோக்குகிறது.
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா என்ற கேள்வி எம்மை சிந்திக்கதான் வைக்கின்றது.