Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தெருக்கூத்தைக் கொண்டாடுவோம் | #தமிழ்பாரம்பர்யமாதம்

  • தெருக்கூத்து என்பது கிராமங்களில் திறந்த வெளிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் கலைவடிவம் ஆகும்.
  • பழமையின் சின்னமாகவும் பண்பாட்டின் எச்சமாகவும் விளங்கும் கூத்துக் கலையானது நாட்டுப்புற மக்களின் எண்ணங்கள்,செயல்,பண்பாடு வாழ்க்கை முறைகளை எடுத்துக்காட்டுகிறது.
  • “கூத்தாடி கிழக்கே பார்ப்பான் கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்” என்ற பழமொழி ஒன்று உண்டு. கூத்து விடிய விடிய நடைபெறுவதை இது குறிக்கும்.
  • நாடக மேடையோ காட்சித் திரையோ இல்லாமல் எளிய முறையில் திறந்த வெளியில்  தெருவிலே நடத்தப்படும் நாடோடிக்கலையே கூத்து ஆகும்.
  • பாரதக்கதை, இராமாயணக்கதை, அரிச்சந்திரன் கதை  போன்றவற்றை தெருக்கூத்தாக நடிப்பார்கள். ஆடலும் பாடலும் கூத்தின் முக்கிய அம்சமாகும்.
    ஒப்பனை அறை – படம் : சாரதி தாமோதரன்

    மழையை விரும்புவோர் விராட பருவத்தையும், மணம் விரும்புவோர் மீனாட்சு கல்யாணத்தையும், பிள்ளை பேறு வேண்டுவோர் சத்தியவான் சாவித்திரியையும் கூத்தாக நடத்துவர்.

  • தெருக்கூத்தின் ஆரம்பகாலத்தில் நாட்டுப்புற நாடக வடிவத்தைக் கொண்டிருந்தது. பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்த காப்பிய இதிகாச அல்லது புராணக் கதையை அடிப்படையாக கொண்டு கூத்து அரங்கேறும்.
  • தெருக்கூத்தை பற்றி கலைக் களஞ்சியத்தில்; “எளிய முறையில் அதே சமயம் மக்களுக்கு நீதி புகட்டும் கலையாக தெருகூத்து திகழ்ந்தது ” என்று குறிப்பிட்டள்ளது. தெருக்கூத்து ஆடப்பெரும் இடம் நிகழ்வோடு சம்பந்தப்பட்டது.
  • கோவிலோடு தொடர்புடைய கூத்துகள் திறந்த வெளியில் மின்விளக்கு இல்லாத முச்சந்திகளில் நடைபெறும்.
  • குடும்பத்தில் யாரேனும் இறந்து போனால் அக் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கேற்ப கர்ண மோட்சம் என்ற சில கூத்துகளை ஆடுகின்றனர்.
    ஒப்பாரி கூத்து கலைஞர் – படம் : சரவ் கதிர்

    தெருக்கூத்து என்ற கலைக்கு கட்டை கட்டியாடும் நாடகம் என்கிற விளக்கமும் உண்டு. மினுங்கும் கட்டையால் ஆன ஆடை அணிகலன்கள் அணிந்து பாடி ஆடுவதே தெருக்கூத்து.

  • ஆண்கள் மட்டுமே ஆடிவந்த கூத்தின் பின்னாட்களில் பெண்களும் ஆடிவந்தனர்.
  • காலம் செல்லச்செல்ல தெருக்கூத்தின் கருவும் சமுதாய முன்னேற்றக் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக மாறியது.
  • கூத்து தொடங்கும் முன்பு நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் வந்தனம் செலுத்தும் பாடல் பாடப்படும்.
  • சித்தூர் மக்களின் வந்தன பாடலுகு  சான்று :

    “நாடகக் கலைக்கு பெரும் நல்லாதரவு
    தந்த நாட்டு மக்களுக்கு ஒரு வணக்கம்!
    நாட்டு மக்களிடம் நல்லதோர் பாடுபடும்
    நாட்டு மக்களுக்கோர் வணக்கம் !
    பாட்டுக்கொரு ஒரு பாரதியார்
    ஏட்டுக்கொரு வள்ளுவனார் நின்ற
    தமிழர்க்கோர் வணக்கம்!
    ஏரோட்டும் மக்கள் துயர்போராட்டம்
    தீர்த்து வைக்கும் ஈ.வே.ரா.பெரியார்க்கு ஓர் வணக்கம்! “

  • கட்டியங்காரன் சான்று பாடல்
    “தட்டி ஜல்லடம் கட்டி
    தடியுடன் பிரம்புக் கோலும்
    அஷ்டதிக்குப் பாலகர் அங்கங்கும் எச்சரிக்க
    மட்டில்லா கீர்த்தி பெற்ற
    மன்னன் துரியன் வாசல் காக்கும்
    ஜல்மீசை முருக்கி கட்டியக்காரனும் வருகிறானே” பாட்டு
    வந்தானா நல்லா பாருங்க கட்டியக்காரன்
    வாரான்னு சொல்லப்பாரிங்க
    அக்கீனிச் சரங்கொடுத்து
    அறையில் கச்சை
    அழகான ஆடையுடுத்தி
    குந்திகுந்தி நடை நடந்து
    கோண குலாவும் பொட்டு வைத்து ( வந்தான் நல்லா பாருங்க )
    கட்டியங்காரன் – படம் : பழனிகுமார்

    தெருக்கூத்தின் சிறப்பம்சமே அது இன்றைய நாடக மேடைகளுக்கெல்லாம் முதன்மையானது. முழுவதும் பாடல்களால் அமைந்து ஏட்டிலன்றி வெறும் வாய்மொழி மரபாகவே போற்றப்பட்டது.

  • தெருக்கூத்தில் இடம்பெற்ற பற்பல பாட்டுகள் கூத்தில்லா சமயத்தில் மக்களால் களத்து மேடுகளில் வண்டிச்சாலைகளில் பாடப்பட்டன.தொடர்ச்சியாக பாடப்பட்ட பாடல்களே தனி நாடக வடிவைப் பெற்றன.
  • கூத்தில் பல்வேறு வகையுண்டு. ஆடும் மக்களின் வாழ்க்கை முறை இடம் கருப்பொருள் என கருத்துகளுக்கு ஏற்ப கூத்தின் வகைகள் மாறுபடும். அவற்றில் சில:
  • அம்மன் கூத்து:
    அம்மனைப்போல வேடம் அணிந்து அம்மன் கோவில்களில் ஆடுவதால் அம்மன் கூத்து என்று பெயர்.கணியான் கூத்திற்கு துணை ஆட்டமாகவும் பல மாவட்டங்களில் மக்கள் விருப்பத்திற்காகவும், அம்மன் அருள் சார்ந்தும் கருத்தப்படுகிறது.
  • அனுமன் ஆட்டம்:
    அனுமன் ஆட்டம் என்பது, இராமாயண அனுமனைப் போல் வேடம் புனைந்து ஆடும் ஆட்டமாகும். இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டமாகும். இவ்வாட்டமானது தமிழகத்தில் பரவலாகவும், தென் மாவட்டங்களில் வைணவ சாதியினர் வாழும் இடங்களில் சிறப்பாகவும் நிகழ்த்தப்படுகிறது. இது ஒரு கலையாகவும், தாளத்திற்கும், இசைக்கும் ஏற்ப ஆடப்படுகிறது.
  • ஆலி ஆட்டம்:
    ஆலி ஆட்டம் என்பது, ஆலி எனப்படும் பூத வடிவில் அமைந்த உள்ளீடற்ற ஒரு உருவ வடிவுக்குள் ஒரு மனிதன் நுழைந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். இந்த ஆலிகள் மூங்கிலாலும், காகிதத்தாலும் செய்யப்பட்டிருக்கும். அதற்கு வண்ணம் தீட்டித் தலையில் மாட்டிக்கொண்டு கலைஞர்கள் ஆடுவர். அதனுடன் கரடி, புலி, கிழவி போன்ற வேடங்களையும் புனைந்து ஆடுவர். இவ்வாட்டத்தில் ஆண்களே, பெண்வேடமணிந்து ஆடுவர். இது குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ஆட்டமாகும். இவ்வாட்டமானது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக நிகழ்கிறது. இது கோவில்களில் திருவிழாவின் போது நடத்தப்படுவதோடு, பிற நிகழ்ச்சிகளில் சமூகம் சார்ந்ததாகவும் நடத்தப்படுகிறது.
  • இருளர் இனமக்களின் ஆட்டம்:
    கோயமுத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற இருளர் என்ற மலை இன மக்களின் ஆட்டமாகும். தைப்பொங்கலின் போது இவர்கள் குரங்கு , புலி , கரடி போன்ற விலங்குகளின் வேடம் புனைந்து ஆடுவர். இந்த ஆட்டத்தில் ஆண்கள் , பெண்கள் ஆகிய இருவரும் பங்கு கொள்வர். ஆனால் ஆண், பெண் இருவரும் இணைந்து ஆடுவதில்லை. இந்த ஆட்டமானது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வேகமாகவும், மெதுவாகவும் ஆடப்படும் இயல்பைப் பெற்றதாக இருக்கிறது. பெண்கள் தங்கள் கைகளை அசைத்து ஆடும் இவ்வாட்டம், மிகவும் அழகு மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • ஒயில் கும்மி:
    ஒயிலாட்டத்துடன் கையில் கும்மியடித்துக் கொண்டே ஆடும் ஒருவகை ஆட்டமாகும். குறைந்த அளவிலான அசைவுகளைக் கொண்ட ஒருவகைக் கும்மி ஆட்டமாகும். இது ஒயிலாட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய கலை ஆகும்.நாட்டுக் கொட்டு ஆட்டம் என்றும், இக்கலை அழைக்கப்படுகிறது. இதற்கென, தனியானப் பயிற்சிகள் எதுவும் இல்லை. இக்கலையில் பானைத்தாளம், தோற்பானைத்தாளம் , சிங்கி ஆகிய இசைக்கருவிகளுள், ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர் . இந்நிகழ்ச்சியில் இடையர் , கள்ளர்போன்ற இடைநிலைச் சாதியினரே பங்கேற்கின்றனர் வேளாண் தொழிலில் செழிப்பு வேண்டியும் , வெப்ப நோய் குறைய வேண்டியும், மழையை எதிர்நோக்கியும், ஒயில் கும்மி நிகழ்த்தப்படுகிறது .
  • ஒயிலாட்டம்:
    ஒயிலாட்டம் என்பது, ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம். அழகு, அலங்காரம், சாயல், ஒய்யாரம் எனப் பல பொருள் தாங்கி நிற்கும் ஒயில் என்ற வார்த்தையே இவ் ஆட்டத்தின் பெயராகியுள்ளது. இது முற்றிலும் ஆண்கள் சார்ந்த கலை ஆண்மையின் கம்பீரத்தை உணர்த்தும் இந்தக் கலையாட்டத்தினைப், பெண்கள் கலந்து கொண்டு ஆடுவதில்லை. இந்த ஆட்ட அடவுகள், ஆண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் அம்சம் கொண்டவை ஆகும். பத்து முதல் 12 பேர் கொண்ட இந்த ஆட்டத்தில், எதிரெதிர் திசையிலோ, அல்லது நேர்த்திசையிலோ நின்று கொண்டு ஆடுவார்கள். சிறகை விரித்தால் மயிலாட்டம், சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம் என்று இக்கலையின் தன்மை வர்ணிக்கப்படுகிறது. பானைத்தாளம், தவில், சிங்கி, சோலக் போன்ற இசைக்கருவிகளை இந்த ஆட்டத்தில் பயன்படுத்துவதுண்டு. பானைத்தாளம் என்பது, குடத்தில் மாட்டுத்தோலைக் கட்டி இசைக்கப்படும் வல்லிசைக் கருவியாகும். பறைக்குப்பதிலாக இந்தக் கருவியை இசைக்கிறார்கள். இவைகளோடு கலைஞர்கள் காலில் அணிந்திருக்கும் சலங்கை இன்னுமொரு கருவியாக மாறி அடவுக்கேற்ப இசைக்கும். இந்த இசைக்கருவிகளைக் கட்டுப்படுத்தி வகைப்படுத்துவதே சிங்கி என்ற இசைக்கருவியின் வேலை. பாடலும், ஆடலும் நிறைந்த இக்கலையில், பாடத்தெரிந்தவருக்கு ஆடத்தெரிந்திருக்கத் தேவையில்லை. பாடலுக்குத் தகுந்தவாறு அடவு வைத்து ஆடற்கலைஞர்கள் ஆடுவார்கள்.
  • பெரும்பாலும் இராமாயணக்கதைகளே பாடல்களாகப் பாடப்படுகின்றன. இது தவிர பவளக்கொடி கதை, மதுரைவீரன் கதை, முருகன் கதை,  சிறுத்தொண்டர்கதை, வள்ளி திருமணக் கதைகளையும் பாடி ஆடுவதுண்டு. ரெட்டியார் மற்றும் முக்குலத்தைச் சேர்ந்த சில இனத்தினர், இக்கலையை மரபு ரீதியாக நிகழ்த்தினர். இப்போது தலித்துகள் உள்ளிட்ட பிற இனத்தினரும் இக்கலையாடலில் ஈடுபடுகின்றனர். மரபுசார்ந்து இயங்கிய பலர் கிறித்தவமதத்துக்கு மாறியதன் விளைவாக, கிறிஸ்தவ ஆலயங்களிலும் அண்மைக்காலமாக இக்கலை நிகழ்த்தப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் பைபிள் கதைகளைப் பாடி ஆடுகின்றனர்.
  • கணியான் கூத்து:
    கணியான் கூத்து எனப்படுவது கணியான் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக்கலை. மகுடம் என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை மகுடாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில்  இக்கலை நிகழ்த்தப்படுகிறது. முற்றிலும் ஆண்களைச் சார்ந்தே இயங்கும் இக்கலை 16ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஆதிக்கலை என்பது ஆய்வாளர்கள் கருத்து. இந்தக் கலையாடல் ஏராளமான வரைமுறைக்கு உட்பட்டது. இடைவெளியே இல்லாமல் இரவு முழுவதும் ஆடப்படும் இது தெய்வத்தின் எதிர்ப்புறத்தில் மட்டுமே ஆடப்படும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடிமாவட்டங்களின் கிராமப்புறக் கோவில் கொடை விழாக்களில் இக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகிறது.
    கணியான் கூத்து கலைஞர்கள் – படம்: 

    கரகாட்டம்,கரடியாட்டம், கழியலாட்டம்,காவடியாட்டம், கும்மியாட்டம், குரவைக் கூத்து, குறவன் குறத்தி ஆட்டம், கொக்கலிக்கட்டை ஆட்டம், கோணங்கியாட்டம், கோலாட்டம், சக்கையாட்டம்,சலங்கையாட்டம், சாமியாட்டம், சிலம்பாட்டம், சேவயாட்டம், தப்பாட்டம், துடும்பாட்டம், துணங்கைக் கூத்து, தெருக்கூத்து, தேவராட்டம், பரதநாட்டியம், பறைமேளக் கூத்து, பறையாட்டம், பாம்பாட்டம், பாவைக்கூத்து, புலி ஆட்டம், பூசாரிக் கைச் சிலம்பாட்டம், பெரியமேளம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம்,  குடிக் கூத்து, மயில் ஆட்டம் மரக்காலாட்டம், மாடாட்டம், ராஜா ராணி ஆட்டம், வள்ளிக்கூத்துவெறியாட்டு, ஜிக்காட்டம் போன்ற ஆட்டங்கள் அதற்கே உரிய வாத்திய கருவிகள் உதவியோடுஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்த்தப்பட்டன.

  • தெருகூத்தை காத்த கலைஞர்கள்  சிலரைப் பற்றிய தொகுப்பு

    பாவலர் திரு. ஓம்முத்துமாரி

    நாட்டுப்புற கலைகளில் ஆர்வம் கொண்ட பாவலர் ஓம்முத்துமாரி கணியன் கூத்து, கரகம், காவடி, ஒயில், கும்மி, தேவராட்டம், தெருக்கூத்து, சிலம்பம் என்ற பல கலைகளில் ஆர்வமும், அக்கறையும் கொண்டவர். அதுமட்டுமில்லாமல் நாட்டுப்புற கலைஞர்களின் சங்கத்தை நடத்தி, சங்கத்தின் விழாவினை ஆண்டுக்கு ஒருமுறை திருவேங்கடத்தில் விமரிசையாக நடத்துவார். மார்க்சிஸ்ட் மேடைகளில் ஏற்ற இறக்கத்தோடு ஆர்ப்பாட்டமில்லாமல் இவர் பாடுவது மக்களை ரசிக்கச் செய்யும். 

    சுதந்திரக்கிழவி கூத்தில் கிழவியாக ஓம் முத்து மாரி
  • ஓம்முத்துமாரி பத்திரிகைகளில் வரும் செய்திகளைச் சேகரித்து பாட்டு வடிவில் எழுதி, அதனை கிராமிய மெட்டமைத்துப் பாடும்போது கேட்பதற்கே ரம்யமாக இருக்கும். கிராமிய மெட்டில் மணிக்குறவர் பாட்டு, தனுஷ்கோடியில் 1964ல் ஏற்பட்ட புயல், ஆளவந்தார் கொலைவழக்கு, பாலாம்பாள் கதைகள் போன்றபல கடந்தகால நிகழ்ச்சிகளை அவர் மெட்டமைத்து பாடும்பொழுது கூட்டத்தை அப்படியே  கட்டுப்போடுவார்.
  • நாட்டுப்புறக் கலைஞர்கள் எப்போதும் இவரைச் சூழ்ந்திருப்பார்கள். சங்கரன்கோவில், தென்மலை, நத்தம்பட்டி, மணல்பட்டி, வரகனூர் போன்ற பகுதிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களோடு இணைந்து நாடகங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்துவார்.
  • பாவலர் ஓம் முத்து, கிராமங்கள் தோரும் நடத்தப்படும் கூத்தில் மக்களின் நிலை குறித்து பாடும் பாடல் ஒன்று

    “கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்கிறான் நாட்டுல-நீ
    கொறட்டை விட்டுத் தூங்காதப்பா வீட்டுல
    நாட்டத் திருத்தி நல்ல வழியில் நடக்க வழி தேடு-நீ
    இராப்பகலா பாடுபட்டும் கிடைக்கலயே சோறு- (தம்பி கூட்டுச் )”

  • ஓம் முத்துமாரியினுடைய பாடல்கள் சில..

    பாலாம்பாள் கொலைவழக்கில் மேடையில் பாடிய பாடல்:- 

    “ஆதியிலே பாண்டி மன்னர் ஆண்டுவந்த மகளிரே
    அவதரித்த எங்கள் குருவே சீரணி
    தாங்கள் அவனியெங்கும் புகழ்பெறவே
    மன்னர்கள் பாரம்
    அரும்பெரும் சபைதனிலே அற்புதக் கவிபடிக்கும்
    ஆதரிப்பார் உங்கள் கிருபை மணமுடித்து
    ஆதரிப்பார் உங்கள் கிருபை
    கந்தவலயத்திலே கண்ணியப்ப முதலியாராம்
    கண்ணுக்குக் கண்ணான மகனாம் வீரபத்ராவுக்கு
    காணா சித்தியராம் கிளிபோல கட்டழகி
    பாலாம்மாள் கல்யாணம் செய்து கண்ணியம்மா வாழ்ந்து வந்தானாம்”.

    ***

    தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலின் அழிவைப்பற்றிய ஓம் முத்துமாரியின் பாடல் 

    “வாரும் பெரியோர்களே சோதரரே
    வணக்கங்கள் பலகோடி ஜனங்களுக்கு
    வரம் கொடுத்த தனுஷ்கோடி நகரத்திலே
    வஞ்சகப்புயல் அடிச்ச சரித்திரத்தச் சொல்லிவரேன்
    வண்ணத்தமிழ் கவிபாடி சொல்லியே வரேன் அய்யா
    ஒருவர் இருவர் அல்ல
    எத்தனைப் பிணங்கள் என்று
    உறுதி தெரியவில்லையே இறந்தவர் உடலும் கிடைக்கவில்லையே.
    கரையோரத்தில் ஊதிப்போன பிணங்களைக்
    காக்கா வந்து உண்ட சேதி
    உள்ளங்கள் பொறுக்குதில்லையே
    அதை நினைச்சா ?
    உள்ளங்கள் பொறுக்குதில்லையே
    பாழாப்போன அறுபத்திநாலாம் வருடம் நடந்த
    பயங்கர புயல்பாரு அதே வருசம்
    பண்டிட் நேரும் மடிந்தாரு
    ஏப்பிரலில் பள்ளிக்கோடம் இடிந்து
    டிசம்பரில் புயலடிச்சு பலபேரு மாண்டு போனாரு…”

    ***

    கூடங்குளம் பிரச்சனையைப் பற்றி:-

    ஆத்தாமார்களே அருமை சகோதரிகளே
    அணு உலை கதையக் கேளுங்க…
    மத்திய அரசு அரசாங்கம் செய்யும் கூத்துங்க..
    அணுமின் நிலையம் அமைத்திட்டாங்க.
    14,000 கோடி ரூபாய் திட்டமிட்டாங்க
    அவசரமாக் கேரளாவில் அமைக்கப் பார்த்தாங்க
    அங்க ஆகாதுன்னு விரட்ட, கூடங்குளம் வந்தாங்க (ஆத்தா)
    தமிழ்நாடு கூடங்குளத்துல இடம்பிடிச்சாங்க
    பொய் தாறுமாறா சொல்லி அங்க தடம் பதித்தாங்க
    மக்களெல்லாம் ஆகாதுன்னு மறியல் செஞ்சாங்க- கெட்ட
    மத்திய அரசு அடக்குமுறையை ஏவி விட்டாங்க (ஆத்தா)
    கதிர்வீச்சு கருவிகளால் சேதாரமாகும் –நம்ம
    கடல் மீன்கள் உயிரினங்கள் அழிந்திட லாகும்
    கணக்கில்லாம புற்றுநோய்கள் சிக்கல்களாகும் –இது
    காலமெல்லாம் மனிதர்களின் கஷ்டங்களாகும் (ஆத்தா)

    ****

    தமிழர்களின் உரிமைகளுக்காகப் பாடியபாடல் :-

    தமிழர்களே தமிழர்களே
    தயவுடன் கொஞ்சம் கேளுங்கள்
    தயங்கிடலாமா ஒன்று சேருங்கள்
    தமிழர்களே தமிழர்களே
    தயவுடன் கொஞ்சம் கேளுங்கள்
    காவேரி தண்ணிக்கு கர்நாடகத்தானிடம்
    கண்ணீர் சிந்தி நிற்பதோ?
    கடலுக்குள் அமைந்த தீவினுள் நாமதினம்
    கரும் உடல்கள் எரிந்து சாவதோ?
    முல்லைப் பெரியார் அணைக்கு வராமல்
    தொல்லைகள் தமிழன் அடைவதோ?
    செல்லாக்காசாய் மத்திய அரசு
    செவிட்டுத் தனமாய் இருப்பதோ? (தமிழர்களே)
    போராட்டங்கள் உண்ணாவிரதம் தொடர்ந்திடலாச்சு – இங்கே
    புற்றீசலாய் அனுதினமும் முற்றுகையாச்சு
    பாராமலே மத்திய அரசு உறங்கிடலாச்சு
    இதை பாவலர் முத்துமாரி பாடிடலாச்சு (ஆத்தா)

  • இப்படியான பாடல்களைத் தற்கால அரசியல் நிகழ்வுகளை அந்தக்கால நாட்டுப்புற மெட்டில் பாடுவது ஓம்முத்துமாரியின் தனிநடை ஆகும். 
  • தமிழக அரசின் இயல், இசை, நாடகம் மன்றத்தின் கலைமாமணி விருதுபெற்ற ஓம் முத்துமாரி, தமுஎகசவால் முற்போக்கு முன்னணிக்கலைஞர் என்று பட்டம் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மூக்கையாத் தேவர்தான் அவருக்கு பாவலர் என்கிற பட்டத்தைக் கொடுத்தார்.
  • பாவலர் என்று தனது தோழர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஓம் முத்துமாரி, நாட்டுப்புறக் கலைச்சுடர், நவரசக் கலைஞர், இசை நாடக நகைச்சுவைக் கலைஞர், கிராமியக் கலைச்சக்ரவர்த்தி, கலை முதுமணி, மரகதமணி என்பது உட்பட பல்வேறு விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்.
  • சுதந்திர கிழவி கூத்தில் ஓம் முத்து மாரி அவர்களது காணொலி

    திரு. A.J. ஜெயராமன்

  • கடந்த மூன்று தலைமுறையாய் தனது 73 வயதிலும் கூத்து கட்டி வந்தவர் A.J. ஜெயராமன். அடி போட்டு ஆடுவதில் மிகச்சிறந்த கலைஞர். மற்ற கலைஞர்கள் ஆடும் போது இவரைக் குறிப்பிட்டு அவர் போல ஆடுவது எங்களுக்கு சாத்தியமில்லை என்று சொல்லும் அளவுக்கு தனது ஆட்டத்தை நேசித்தவர். சுமார் 25 கிலோ எடையுள்ள ஆடை கட்டை அணிகலன்கள் கட்டி தள்ளாத வயதிலும் கலையை தலைமுறை தலைமுறையாக கடத்திய பெருமைக்கு சொந்தக்காரர்.
  • பாஞ்சாலி துயல் கூத்தில் ஜெயராமன் அவர்களது காணொலி

    திரு. வ. தேவன்

  • காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள குண்டையார் தண்டலம் என்ற ஊரைச்சேர்ந்த இவர் வரதப்பா வாத்தியார் என்ற சிறந்த தெருக்கூத்து ஆசிரியரின் மகன். இவரது தந்தையிடமும், கலைமாமணி விருதுபெற்ற சித்தப்பா பாலகிருஷ்ணன் அவர்களிடமும், கலைமாமணி விருதுபெற்ற அண்ணன் தட்சிணாமூர்த்தி அவர்களிடமும் பயிற்சி பெற்றவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தெருக்கூத்து நிகழ்த்தி வருபவர். இன்று வாழும் கூத்தர்களில் மிகவும் புகழ்பெற்றவர். இவர்களின் குழுவில் முக்கிய வேடங்களை தரிக்கக் கூடியவர், பாரதம், இராமாயணம் முதலிய எல்லாக் கூத்துகளிலும் திறம்பட நிகழ்த்தக் கூடியவர். அருச்சுனன் தவம் கூத்தில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர். கலைச்சுடர்மணி விருதும் பெற்றவர்.

    திரு நா. இராமலிங்கம்

  • செய்யாறுக்கு அருகில் இருங்கூர் என்ற ஊரைச்சேர்ந்த கூத்து வாத்தியாரான இவர், புகழ் பெற்ற கூத்து வாத்தியாரான திரு நாராயணசாமி என்பவரின் மகன். இவரது மகனையும் கூத்துக்கலையில் நன்கு வளர்த்துவிட்டுள்ளார். சிறந்த கூத்தரான இவர் கண்ணன் வேடத்திற்கு பொருத்தமானவர். அருச்சுனன் தவம் என்ற கூத்தை மிகவும் சிறப்பாக நிகழ்த்துபவர். இரணியன், அபிமன்யு, துச்சாதனன் முதலிய வேடங்களில் சிறப்பாக வெளிப்படக் கூடியவர். இன்று வாழும் சிறந்த கூத்தர்களில் ஒருவர். தெருக்கூத்துக் கலைக்கு அவசியமான குரலும் அடவுகளும் நன்கு அமையப்பெற்றவர்.

    செல்லையா மெற்றாஸ்மயில்

  • ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அவர், அண்ணாவிமாரைக் கெளரவிப்பதிலும் அவர்கள் பற்றிய ஆவணங்களைத் தயாரிப்பதிலும் காத்திரமான பங்காற்றியவர். “வேழம்படுத்த வீராங்கனை” என்ற நாடகத்தை நெறியாழ்கை செய்து பல முறை மேடையேற்றிய பெருமையும் இவருக்குரியது. பாரம்பரியக் கலைகள் தொடர்பான பல நூல்களையும் இறுவெட்டுக்களையும் வெளியிட்டவர். பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகத்தின் அமைப்பாளராக இருந்தவர்.
  • பாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம், கரகம், காவடி, குதிரையாட்டம் போன்றவற்றைப் பயின்று ஆற்றுகை செய்திருக்கிறார்.
  • 1990 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கோவலன் கூத்தை மேடையேற்றி பாண்டியரசனாக நடித்தார். இந்தக் கூத்து இலங்கை தொலைகாட்சியில் (ரூபவாகினி) ஒளிபரப்பப்பட்டது.
  • குறிப்பாக இவர் 1993ஆம் ஆண்டில் இளங்கலைஞர் மன்றத்தில் ஆடிய ஒயிலாட்டம் நிகழ்வை விழா மலர் ஒன்றில் காணக் கிடைக்கின்றது. யாழ்ப்பாணம் குருசாமி அண்ணாவியாரிடம் ஒயிலாட்டம் கலையைக் கற்றவர்.
  • வேழம் படுத்த வீராங்கனை போன்ற நாட்டுக் கூத்து இசை வடிவங்களினூடாக சிறந்த நெறியளானாக யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
  • நாட்டுக்கூத்துக் கலைஞனாக விளங்கிய இவர், இசை நாடகக் கலையைப் பயில வேண்டும் என்ற ஆவலில் 1997 ஆம் ஆண்டு இசை நாடகத்தினை மூத்த கலைஞர்களிடையே பயின்று “சத்தியவான் சாவித்திரி” என்ற இசை நாடகத்தில் சத்தியவானாக நடித்தார். வள்ளி திருமணம் நாடகத்தில் விருத்தன் பாத்திரத்தை ஏற்று நடித்தார்.
  • இவரின் ஐந்து முக்கிய படைப்புக்களாக,
    • வன்னி வள நாட்டார் பாடல் (1981)
    • ஆனையை அடக்கிய அரியாத்தை (1993)
    • இசை நாடக மூத்த கலைஞர் வரலாறு (1999)
    • மண் வாசனையில் மூன்று நாடகங்கள் (2000)
    • மரபு வழி இசை நாடகங்கள் ஒன்பது (2001) போன்றவை குறிப்பிடத்தக்கவை.
  • அத்தோடு இவரது இரண்டு நூல்கள் வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்தியப் பரிசினையும், ஒரு நூல் மத்திய கலாச்சார அமைச்சின் கலைக்கழக சாகித்தியப் பரிசினையும் பெற்றுள்ளன.

    கிராமிய கலைகளில் முக்கியமான தெருக்கூத்து சமுதாய பண்பாட்டு சீரழிவு காரணமாக ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. கலைஞர்கள் சந்திக்கும் சாதியப்பாகுபாடு,பாலினப்பேதம், பாலியல் ரீதியான கொடுமைகள் ஏராளம். கூத்து கட்டும் மக்களின் பிள்ளைகள் வறுமையின் காரணமாக கூத்தினை கைவிட்டு வெவ்வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர். தற்சமயம் சில கூத்துக்களை கட்டவே ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  கூத்துக்கலைஞர்களின் வாழ்வாதார சிக்கல்கள், பழமையான கலைக்கு முட்டுக்கட்டையானது. இதற்கான முன்னெடுப்பை அரசு ஏற்படுத்தினால் மட்டுமே இந்த மாபெரும் கலையை நமது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் சொல்லலாம்.

கட்டுரை முகப்புப் படம் : minnambalam.com/
தகவல்கள் உதவி :  விக்கிபீடியா | சங்க காலம் - ப.சரவணன்.

Related Articles