
நெசவுக்கைத்தொழிலானது நூறு வருடங்களையும் தாண்டிய வரலாற்றை உடையதாக காணப்படுகின்றது. விஜய மன்னன் இலங்கைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் இயக்கர் குலப்பெண்ணான குவேனி நூல் நூற்றுக்கொண்டிருந்ததாக புராணக்கதைகளில் கூறப்படுகின்றது.

(pinimg.com)
கி.பி. ஆறாம் நூற்றாண்டு காலம் வரை நீண்ட வரலாற்றையுடைய இலங்கையில் நெசவுக்கைத்தொழிலானது குடிசைக்கைத்தொழிலாகவே ஆரம்பமாகியுள்ளது. தொழில் புரட்சி காரணமாக கைத்தறி நெசவுக்கைத்தொழில் வெகுவாக பாதிப்படைந்ததுடன் 1970 களில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு கரங்களால் செயற்படுத்தப்படக்கூடிய உபகரணங்களைக்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வந்த கைத்தறி நெசவுக்கைத்தொழிலானது அழிவின் விளிம்புக்குச்சென்றமையால், அது பலரின் ஜீவனோபாயத்தைப்பாதிப்பதாக அமைந்தது.
எனினும் இலங்கையில் கைத்தறி நெசவுக்கைத்தொழிலானது பூரணமாக மடிந்துவிடவில்லை. நிகழ்காலத்தில், உள்நாட்டில் நெசவு செய்யும் நம் நாட்டவர் தமக்கே உரிய நெசவுக்கலையொன்றை உருவாக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் சம்பிரதாய ரீதியான அலங்காரங்கள், வடிவங்கள் மற்றும் வர்ணங்களை ஒன்றுபடுத்தி கண்கவர் ஆடைகளை நெசவு செய்கின்றனர். பல்லாண்டு காலம் பழமையானதும் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வரக்கூடியதுமான நெசவுக்கைத்தொழிலின் சிறப்பை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்வதற்காக நம் நாட்டவர் தமது கலைத்திறனை பயன்படுத்தக்கூடிய விதம் மிகவும் அற்புதமானதாகும்.
விஜயனின் வருகைக்கு முன் இலங்கையில் கையுபகரணங்களைக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுவந்த கைத்தறி நெசவுக்கைத்தொழில்
இலங்கையில் கைத்தறி நெசவுக்கைத்தொழிலானது பல்லாயிரம் வருடங்களையும் தாண்டிய வரலாற்றை உடையது. விஜய மன்னன் இலங்கைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் இயக்கர் குலப்பெண்ணான குவேனி நூல் நூற்றுக்கொண்டிருந்ததாக புராணக்கதைகளில் கூறப்படுகின்றது. குவேனி தம்மன்னாவ என்ற வர்த்தக நகரத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணாக இருக்கலாமெனவும், அவள் நூல் நூற்றுக்கொண்டிருந்ததாகக்கூறப்படக்கூடிய விவரணத்தினடிப்படையில் அவள் ஆடைகளை தயாரிப்பதற்கான தொழிற்சாலையொன்றுக்கு உரித்துடைய ஒரு பணவசதிபடைத்த பெண்ணாக இருந்திருப்பாள் என்பதை வரலாற்றில் சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன.

(inserco.org)
அக்காலத்தில் இயக்கர் குலத்தவர்களிடம் இயந்திர உபகரணங்களை உருவாக்கக்கூடிய திறமை காணப்பட்டதுடன் அவர்களில் ஆண் மற்றும் பெண் இருபாலாரும் தம் அவயவங்களை மறைத்து ஆடை அணிந்திருந்ததாகவும் அறியப்படுகின்றது. இத்தகைய இயக்கர் குலத்தவரின் ஆடை ஒன்று தொடர்பான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. மகாகால சேன எனப்படும் இயக்கர் குல தலைவனின் திருமணம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் நிராயுதபாணிகளாக இருந்த அக்குழுவினரை எளிதாக கொலை செய்த விஜயனும் குழுவினரும் இயக்கர்களின் ஆடைகளை அணிந்துகொண்டதாக மாகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் இவ்வாறு செய்தமைக்கான காரணம் என்ன என்பதை அனுமானிக்க முடியாதபோதும் அது யுத்த தந்திரமாக இருக்குமென எம்மால் ஊகிக்க முடியும்.
பண்டைய காலத்தில் இலங்கை பூராகவும் பருத்தி நடப்பட்டிருந்ததாகவும், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், வரலாற்றில் கூறப்படுகின்றது. இலங்கையிலிருந்து பருத்தித்துணியை எடுத்துச்சென்ற ஒரு வியாபாரி தொடர்பாகவும் வரலாற்றுக்கதைகளுடன் தொடர்பான ஓவியக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கி.பி.1148இல் தம்பதெனியில் ஆட்சி செய்த புலமைமிக்க பெளத்த மன்னனான பராக்ரம பாகு மன்னன் ஒரே நாளில் பருத்திப்பஞ்சைப்பறித்து துணியாக நெசவு செய்து அதே தினத்தில் மாலை வேளையில் சிவுற எனப்படக்கூடிய 80 துணிகளை தயாரித்து தானம் செய்ததாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய இலங்கையில் எல்லோருடைய வீட்டுத்தோட்டங்களிலும் சில பருத்திச்செடிகள் நடப்பட்டு அதன் மூலம் பெறப்படக்கூடிய பஞ்சால் கிராமிய மக்கள் தமக்குத்தேவையான ஆடைகளைத்தயாரித்துக்கொள்வதற்கு பழக்கப்பட்டிருந்ததாக ரொபட் நொக்ஸ் என்பவர் தனது `எதா ஹெலதிவ` எனப்படும் நூலில் குறிப்பிடுகின்றார்.

(picdn.net)
“புடவை நெய்தல் கைத்தொழிலானது சிங்களவர் மத்தியில் குறைந்தளவான முன்னேற்றத்தையே கண்டுள்ளது. அயர்லாந்து நாட்டின் சில பிரதேசங்களில் காணப்படக்கூடிய முன்னேற்றகரமற்ற நெசவுத்தறிக்கு சமமானதாக அவர்களுடைய நெசவுத்தறி காணப்படுகின்றது. நிலத்தில் அமர்ந்தவாறு அதன் இயக்குனர் அதனை இயக்குவார். அவர் கால்களை தரையில் தோண்டப்பட்ட குழியொன்றில் வைத்துக்கொள்வார். முஸ்லின் எனப்படக்கூடிய வகையைச்சேர்ந்த துணி எமது நாட்டில் நெசவு செய்யப்படுவதில்லை. சாதாரண மக்கள் அணியக்கூடிய திடமான நீண்ட பாவனையையுடைய பருத்தித்துணியைத்தவிர ஏனையவை எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை”. – வைத்தியக்கலாநிதி ஜோன் டேவி என்பவரின் இலங்கையின் உள்ளகம் அதன் மக்கள் மற்றும் அத்தீவில் மேற்கொண்ட சுற்றுலா என்ற நூலிலிருந்து பெறப்பட்டது.
அசுர யுகத்தில் இலங்கையில் நெசவுக்கைத்தொழிலுக்கு விஷேடமான ஒரு இடம் வழங்கப்பட்டிருந்தது. பருத்திச்செடியிலிருந்து பறித்தெடுக்கப்படும் பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கப்படும். அத்தகைய நூலை பயன்படுத்தி புடவை நெசவு செய்வதற்காக பல்வேறு நெசவுத்தறி இயந்திரங்கள் அக்காலத்தில் காணப்பட்டன. அவை திறந்த பரப்பொன்றில் அமைக்கப்பட்டிருக்கும். பாரம்பரிய முறையில் நெசவு செய்வோர் கதிரையில் அமரமாட்டார்கள் . அவர்கள் நிலத்தில் ஒரு சிறிய குழியைத்தோண்டி தமது இரு கால்களையும் அதில் வைத்துக்கொள்வர். இதன்போது அவர்கள் உயர்ந்த தரையில் அமர்ந்தவாறு இருப்பார்கள் (பெலடியஸ் என்பவரின் இலங்கை பற்றிய புராண நூல்). இத்தகைய இயந்திரங்கள் இந்தியா மற்றும் புரூனையில் காணப்படுகின்றது. தற்போது உடுதும்பர பிரதேசத்தில் யக்தெஸ்ஸாகே என்ற பரம்பரைப்பெயரையுடைய மக்கள் நெசவுத்தறியை பயன்படுத்துகின்றனர்.
இலங்கையின் ஆடைகள் காஷ்மீர் அரசிகள் மத்தியில் பிரசித்தமடைந்திருந்தது.

(indianexpress.com)
கி.பி. 1500-1600 இற்குமிடைப்பட்ட காலத்தில் உலகம் பூராகவும் புடவை வகைகளை பகிர்ந்தளிக்கும் மத்திய நிலையமாக இலங்கை காணப்பட்டதாக காஷ்மீர் ராஜ தரங்கணி சாட்சிபகர்கின்றது.12 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரில் பிராமண இனத்தவரான கல்ஹான என்பவரால் தொகுக்கப்பட்ட ராஜ தரங்கணிய எனும் நூல் இலங்கையில் மகாவம்சத்தை ஒத்த முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று மூலமாக கருதமுடியும்.
இங்கு குறிப்பிடப்படப்படுவதன் படி எமது நாட்டவரால் பல்வேறு அலங்காரங்களுடன் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு காஷ்மீரில் கி.பி.5ஆம் நூற்றாண்டளவிலேயே உயர்ந்த கேள்வி நிலவிவந்துள்ளது. அரச குடும்பத்தவர்களுக்கு துணிமணிகளை வழங்கியதன் மூலம் இலங்கைக்கும் காஷ்மீருக்குமிடையிலான பொருளாதார தொடர்பு ஆரம்பித்துள்ளது. கி.பி.515 முதல் 530 ஆம் ஆண்டுவரை வட இந்தியாவை ஆட்சி செய்த மிகிரகுல எனப்படக்கூடிய மன்னன் இந்தியாவையும் இலங்கையும் ஆக்கிரமிப்புச்செய்ததற்கான சான்றுகள் ராஜ தரங்கணியவில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மிஹிரகுல மன்னனின் மனைவியின் ஹெட்டய எனப்படும் ஆடையே என்றால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். அவள் அணிந்திருந்த ஒரு ஆடையில் தங்க நிறத்தில் அலங்காரம் செய்யப்பட்ட பாதச்சின்னமொன்றினை கண்டு அவன் ஆத்திரமடைந்துள்ளான். சிலோன் தேசத்தில் அரசனின் பாத அடையாளத்தை ஆடைகளில் பொறிப்பதனால் சினமுற்ற அவன் இலங்கைக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டதாக கல்ஹான குறிப்பிடுகின்றார்.
புராதன நெசவுக்கைத்தொழிலின் சிறப்பை உலகுக்கு எடுத்துச்செல்லல்
1980 களின் பின் எமது நாட்டில் கைத்தறிநெசவு மூலம் தயாரிக்கப்படக்கூடிய அலங்காரங்களைக்கொண்ட புடவையுற்பத்தி உயர்தரமான உற்பத்தியாக புத்துணர்வு பெற்றுள்ளது. சுற்றுலா வர்த்தகத்தின் வேகமான வளர்ச்சியோடு ஆடைக்கைத்தொழிலை அடிப்படையாகக்கொண்ட தகுந்த சந்தை ஒன்றை அமைக்கவேண்டியேற்பட்டது. தற்போது கைத்தறி நெசவு செய்யப்பட்ட ஆடைகளுக்கு (Handloom) வெளிநாட்டு சந்தையில் மிக உயர்வான கேள்வி நிலவுகின்றது.

(theswadeshistore.com)
உள்நாட்டு சந்தையிலும் கைத்தறி நெசவு செய்யப்பட்ட சேலை, சாரன் போன்ற ஆடைகள் ரூபா 3000 ஐ விட கூடுதலான விலைகளில் விற்கப்படுகின்றது. ஆடை நெசவுக்கைத்தொழிலுடன் தனியார் துறை மட்டுமன்றி அரசும் தொடர்புபட்டுள்ளதுடன் 2015 ஆம் ஆண்டின் ஏற்றுமதி அபிவிருத்தி குழுமத்தின் ஆடை நெசவுக்கைத்தொழிலுடன் தொடர்பான தகைமை அறிக்கையின் படி தற்போது எமது நாட்டில் சிறு மற்றும் பாரியளவிலான 962 தொழிற்சாலைகள் செயற்படுவதோடு 8 மாகாண சபைகளுக்குட்பட்டதாக 771 தொழிற்சாலைகள் இத்தொழிலில் ஈடுபடுகின்றன.
இலங்கையில் நெசவு செய்யப்படும் ஆசன விரிப்புக்கள், திரைச்சீலைகள், கட்டில் விரிப்புக்கள், மேசை விரிப்புக்கள், கைக்குட்டைகள், ஆடைகள், கால்துடைப்பான், காபட், சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள் மற்றும் எழுதுகருவிகள் போன்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2014 இல் நெசவு செய்யப்பட்ட துணிகளின் முழு ஏற்றுமதிப்பெறுமதி 1.08 டொலர் மில்லியனாகும்.
2014 ஆம் ஆண்டின் ஏற்றுமதி அபிவிருத்தி குழுமத்தின் தகைமை அறிக்கையின்படி இலங்கையில் ஹேண்ட்லூம் ஆடைகளுக்கு சர்வதேச சந்தையில், ஐரோப்பிய சங்க நாடுகளிலும் (இத்தாலி, ஜெர்மன், ஐக்கிய இராச்சியம், ஸிவீடன், நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், டென்மாக்,பிரான்ஸ்) மாலைதீவு, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், மொரீசியஸ், கொரியா , ஜப்பன், தாய்லாந்து, ஸ்விட்சர்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளிலும் உயர்ந்த கேள்வி நிலவுகின்றது.

(roartamil.com)
இலங்கையில் கைத்தறித்தொழிலானது உடல் சிரமத்தை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் வியாபார நடவடிக்கையொன்றாகும்.பிரதானமாக மேற்கு, கிழக்கு, வட மேல், தென் மாகாணங்களில் இத்தொழில் பரவிக்காணப்படுகின்றது. கம்பஹா மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள திவுலபிடிய மடம்பெல்லே கிராமத்தில் கைத்தறித்தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் வாழ்கின்றனர். இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி குழுமம் மற்றும் நெசவுக்கைத்தொழில் திணைக்களம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள அம்பாரை மாவட்டத்தின் மருதமுனை கைத்தறி கிராமத்தில் உயர்தரத்திலான கைத்தறி நெசவு மேற்கொள்ளப்படுகின்றது.
அருகம்பே குடாவை அண்மித்த பகுதிகளில் உள்ள சுற்றுலாக்கைத்தொழில் காரணமாக அவர்களுடைய உற்பத்திகளுக்கு சர்வதேச மட்டத்திலான உயர்ந்த கேள்வி நிலவுகின்றது.இக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவுப்பயிற்சிப்பாடசாலை மூலமாக இத்தொழிலில் ஆர்வமுள்ளவர்களுக்கு நெசவுக்கைத்தொழில் சம்பந்தமான தகுந்த பயிற்சியுடன் நவீன தொழிநுட்பம் மற்றும் உபாய முறைகள் கற்றுக்கொடுக்கப்படும்.இதனால் அப்பிரதேசத்தவர்கள் பலர் தொழில்வய்ப்பைப்பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கக்கூடிய விடயமாகும்.
புராதன கைத்தறி இயந்திரங்கள் மூலம் நிர்மானிக்கப்பட்ட பருத்தியாடை ஒன்றின் அழகும் அதிலுள்ள அலங்காரங்களின் உயிர்ப்பும் பல நிறங்களையுடைய பருத்தி நூலாலான அலங்காரங்களின் கலப்பினால் பெறப்படக்கூடிய கவர்ச்சியும் நவீன தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி தயாரிக்கப்படக்கூடிய ஆடைகளில் ஒருபோதும் காண முடியாது.

கைத்தறி நெசவு ஆபரணங்கள் (roartamil.com)
தேசிய ரீதியாக தொழிலாளர்களின் ஆற்றல்களை பலப்படுத்தல், கைத்தறி நெசவுத்தொழிலாளர்களுக்கு அவசியமான தொழிநுட்ப சேவைகளை வழங்குதல், புதியவர்களுக்கு பயிற்சியளித்தல், அறிவுறுத்தல் செயற்திட்டங்களை மேற்கொள்ளல் போன்றவை தொடர்பிலும் தேசிய கைப்பணிகளுக்கு அரசால் உதவியளிப்பதற்கும், பாரம்பரிய கலைஞர்களின் ஆற்றல்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தையுடன் தொடர்புபடுத்துவதற்கும், அவர்களின் பாரம்பரிய திறமைக்கு சிறந்த மதிப்பைப்பெற்றுத்தருவதற்கும் , அவற்றை எதிர்கால சந்தத்தியினருக்காக பாதுகாப்பது தொடர்பிலும் பல்வேறு பயிற்சிச்செயற்திட்டங்கள் தற்போது நாட்டில் செயற்படுத்தப்படுகின்றது.
கைத்தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான அமைச்சு , நெசவுக்கைத்தொழிலமைச்சு, இலங்கை நெசவுக்கைத்தொழில் மற்றும் ஆடை நிறுவனங்கள், மொரடுவ பல்கலைக்கழகம், மற்றும் தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை இணைந்து இலங்கையின் கைத்தறி நெசவுக்கைத்தொழிலை பலப்படுத்துவதற்காகவும் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை முன்வைக்கவும் ஆர்வத்துடன் முன்னின்று செயற்படுகின்றன.
சிங்களத்தில் ; Aysha Maryam Cassim
தமிழில் ; Shareema Lafir