Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

சங்க இலக்கியங்களில் காதல்

பழங்கால தமிழ் மக்களின் வாழ்வியல், ஒழுக்கம், ஒழுக்காறுகள் (அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை நம் சங்க இலக்கிய பாடல்கள் ‘குன்றின்மேல் இல்ல விளக்கு’ போல் தெள்ளத்தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. நாம் அனைவரும் அறிந்த ஒன்றேயாயினும் ஒரு அடிப்படை விளக்கம் தேவையாதலால் சிறுகுறிப்பு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலப்பரப்புகளில் வாழ்ந்த மக்களின் மரபுகளை தேனாக சங்க இலக்கியம் எடுத்துரைக்கிறது. திணைகள் என்ற சொல்லிற்கு எண்ணற்ற பொருள் உண்டு. நிலம், மண், பூமி, ஒழுக்கம், நிகழ்விடம் போன்றவைகள் இருந்தாலும் நிலமும் பொழுதும் என்பனவற்றை அடிப்படையாக கொண்டே பிற பொருட்கள் விளக்கப்படுகின்றது. ஐவகை திணைகளில் வாழ்ந்த மக்களின் உலகியல் சார்ந்த வாழ்வை அறம் என்றும், இல்லறம் சார்ந்த வாழ்வை புறம் என்றும் பகுக்கப்பட்டுள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நூல்களில் அனைத்து பாடல்களும் அடக்கம்.

காதல் – தமிழரின் மரபு

பழந்தமிழரின் வாழ்வில் திருமணத்திற்கு முந்தைய காதல், வாழ்வியல் நெறிமுறையாகவே இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய ‘காதல் வாழ்வை’, களவொழுக்கம் என்றும், திருமணத்திற்கு பிறகு ‘அவர்களின் இல்லற வாழ்வு’, கற்பொழுக்கமாகவும் போற்றப்பட்டுள்ளது. இவை சார்ந்த நிகழ்வுகளும், அதன் கதாப்பாத்திரங்களும் அகப்பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றது. காதலனும், காதலியும் தலைவன், தலைவி என்று வர்ணிக்கப்பட்டாலும் பாங்கனும் (நண்பன்), பாங்கியும் (தோழி) இல்லாமல் எவ்வாறு காதல் வளர்ப்பது ?!!! ஒரு சில காட்சிகளை பாப்போம். பாடல்கள் மேற்கோள் இல்லாமல்.

Rose Bouquet (Pic: ukrainegiftdelivery)

முதல் சந்திப்பு

எதிர்பாராத சூழ்நிலையில் காதலன் காதலி சந்தித்தல், நல்ஊழின் ஏவலால் காதல் வயப்படுதல், இயற்கைப்புணர்ச்சி தெய்வப்புணர்ச்சி என்று கூறப்படுகிறது. அம்பு பட்ட யானை சினம் கொண்டு ஓடி வரும் பொழுது காதலன் காதலியை காப்பாற்றுகிறான். இருவருக்குள் காதல் மலர்கிறது. பெரும்பாலும் இவ்வகை காட்சிகள் குறுந்தொகையில் ஓவியங்களாக காண்பவர்களுக்கு புலப்படும்.

First Love (Pic: fluentin3months)

செவிலித்தாய் குறி கேட்டல்

குறி கூறும் குறத்தியிடம் தலைவியின் செயல்களில் மாற்றத்தை கண்ட செவிலித்தாய் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்று வினவுகிறாள். குறத்தி குறி சொல்லும் முன் வழக்கமாக பாடும் மலைகளை  பற்றிய பாடல்கள் அனைத்தையும் பாடுகிறாள். தலைவனின் மலை பற்றிய பாடல் பாடல் வரும் பொழுது அங்கே வரும் தோழி, “குறத்தி, அந்த மலையை பற்றிய பாடலை மட்டும் பாடு, பாடு, பாடிக்கொண்டே இரு” என்று சொல்லி செவிலித்தாயின் ஐயத்தை உறுதிபடுத்துகிறாள்.

சினம் கொண்ட யானையிடம் இருந்து தலைவியை தலைவன் காப்பாற்ற உருவான காதலையும், இருவருக்குள் இருக்கும் உறுதியையும் தோழி செவிலித்தாயிடம் கூறுகிறாள். தலைவனின் பண்புகள், குடும்ப சூழல், அழகு போன்றவற்றை தோழிக்கு ஆதராவாக விளக்குகிறாள்.

மற்றொரு பாடலில், பெண் யானையின் மூச்சு காற்றில் வரும் சுவாசத்தை நுகரும் ஆண்யானை அன்புடன் அதனை துதிக்கையிலே தழுவி அன்பு பாராட்டுவதை போல வரும் உவமைகள் மிளிரும். இரவில் தலைவியை சந்திக்க தோழியிடம் தலைவன் தூது அனுப்புகிறான். அதற்கு தோழி, இரவுக்குறி வந்து சந்திக்கும் செயல் கூட உங்கள் திருமணத்தை தாமதப்படுத்தும். தோழி உடல் பொலிவிழந்து வருகிறாள் என்பதை போல தலைவனின் ஒழுக்கத்தை கண்டிப்பதாக காட்சி அமையும்.

Women Friendly Elephant (Pic: earthintransition)

இடந்தலைப்பாடு

இருவரும் சந்தித்த இடத்திலே மீண்டும் சந்திப்பது இடந்தலைப்பாடு என்று பொருள். இருவரும் முதல் முறை சந்தித்த அதே இடத்தில் மீண்டும் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் இரண்டாம் நாளும் காணப்போவதை குறிப்பிடுவதாக அமையும்.

இருவரின் சந்திப்புக்கு சில தடைகள் ஏற்பட்டு சில நாட்கள் சந்திக்க முடியாமல் போனதால் தலைவன் தலைவியின் பிரிவால் உடல் இளைத்தான். சோர்வான அவன் முகம் கண்ட பார்ப்பான நண்பன் காரணத்தை உணர்ந்து தலைவனுக்கு துணை செய்கிறான் பாங்கன்.

Holding Hands (Pic: wallpaperclicker)

இரவுக்குறி

இரவுக்குறி இடத்திற்கு வரும் தலைவன், தலைவியிடம் தன் வருகையை தெரியப்படுத்த அங்கிருந்த ஒரு மரத்தின் மீது ஒரு சிறு கல் ஒன்றை எறிவான். அங்குள்ள பறவைகள் சத்தமிடும். இதே போல பறவைகள் ஓசையை உணர்ந்த தோழி ஆவலுடன் வந்து காண அது வேறொரு காரணமாக இருக்கிறது. தலைவன் இல்லாத ஏமாற்றம் அல்லகுறிப்பிடுதல்  என்று விளக்கப்படுகிறது.

தலைவன் மனதில் திருமண என்னத்தை தோழி விதைக்கிறாள். மலையின் மேல் உள்ள சிறு கொம்பிலே காய்த்திருக்கும் பலாப்பழம் எவ்வாறு முதிர்ச்சி அடைந்தவுடன் தானாக கீழே விழுந்து சிதையுமோ அது போல “நீ இவளை மணந்து கொள்ளாது போனால் தன்னை தாங்கி நிற்கும் உயிரை விட்டு விடுவாள்”. ஆகையால் இவளை ஊரரிய நீ மணப்பாயாக” என்று தோழி கூறும்படி பாடல் அமையும்.

திருமணத்திற்கு வரைபொருள் வேண்டி தலைவன் தலைவியை பிரிகிறான். பாட்டுடைத்தலைவனின் குன்றை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். தலைவியின் மனம் அறிந்த தோழி தலைவனின் மலையில் மலர்ந்த காந்தள் மலரை தலைவிக்கு அளிக்கிறாள். தலைவனின் குன்றை காணும் பொழுது தம்முடைய பசலை நோய் தீருகிறது என்று என்கிறாள் தலைவி.

பொதுவாக அகம் சார்ந்த பாடல்களில் புலவர்கள் காட்சியை விளக்க தோழி கதாப்பாத்திரத்தை பயன்படுத்தி கொண்டார்கள் போலும். தலைவன், தலைவி சிறப்புகள் மற்றும் அவர்களின் உணர்வுகள் தோழியின் மூலம் அதிகம் வெளிப்படுவதை நாம் காணலாம்.

பொருள் ஈட்ட தலைவன் தலைவியை பிரிதலும், பிறகு ஏற்படும் சில நிகழ்வுகளும் பாலைத்திணையின் உரிப்பொருளாக கொண்டது. அகநானூற்றில் இதன் பாடல்கள் அதிகம்.

தலைவன் தலைவியை பிரிந்து பொருள் தேட கானகத்தின் வழியே வேற்று நாடு நோக்கி செல்லும்பொழுது உருவான காதலின் வலியை உணர்த்துவது போல அமைந்த பாடல் ஒன்றில், போர்முனையில் அகப்பட்டு கொண்டதை போல கை, கால்கள் கட்டப்பட்டுள்ளது என்று தனிமையின் நிலையையும், நடந்து வந்த களைப்பையும் தலைவன் குறிப்பிட்டு பாடுகின்றான். வீடுகளும் சிதைவுற்று, பெரிய முதுகினை உடைய யானை உராய்வதால் நன்கு செதுக்கி அமைத்த வீட்டின் விட்டமும் சாய்ந்து இருப்பதை போல தன்னுடைய நிலை இருப்பதை காதலி உணர (வெளிக்காட்ட) மாட்டாள். கார் கூந்தலும் சிவந்த அணிகலன்களும் கொண்ட அவள் நள்ளிரவில் பெருமூச்சு விட்டு, அவளின் கண்களில் நீர் பெருக்கோடு தனிமையில் இருப்பாள். அவள் கண்களிலிருந்து வழிகின்ற நீரை தன் மெல்விரல் நகத்தால் வழித்து எறிவாள். இவ்வாறு செல்லும் பாலைத்திணையின் வர்ணனைகள்.

மருதத்திணையில் தலைவன் தலைவிக்கு இடையிலான ஊடலும், ஊடல் நிமித்தமும் பாடல்களாக நிறைந்துள்ளது. கணவன் பரத்தையிடம் சென்று விட்டு திரும்புதல் போன்ற நிகழ்வுகளும் இதில் அடக்கம். பரத்தை என்ற சொல்லிற்கு ஆடல், பாடலில் சிறந்தவர் அல்லது மற்றொரு பெண்டிர் என பல பொருள்படுகிறது. இந்த திணையில் துணை கதாபாத்திரமாக பாணன் உண்டு. பரத்தமை வீட்டிற்கு சென்ற கணவன் மீண்டும் வீடு திரும்ப பாணனிடம் தூது விடுகிறான். தலைவியிடம் வந்த பாணன் தலைவனின் தேர் பரத்தமை சேரிக்கு இதுநாள் வரை சென்றதில்லை என்கின்றான். மாயத்தலைவனின் சொற்களை மற்றொரு பரத்தமை நம்பி இருப்பாள். அவளின் ஊடலை நீ சென்று தீர்ப்பாயாக என்று தலைவி கூறுவாள். ஊடல், ஊடல் தணிந்து இருவரும் சேர்த்தல், விருந்தோம்பல் போன்றவை சுவைபட இத்தினையில் உண்டு.

Beyond Love (Pic: masessaynotosexism)

இறுதியாக, இல்லற வாழ்வில் இருவரும் நுழைந்த பிறகு மனம் ஒத்து வாழ்க்கை நடத்துவதுடன் அறநெறிகளையும் கடைபிடித்ததை சங்க இலக்கியங்கள் நமக்கு எடுத்துரைத்து வழிகாட்டியாக திகழ்கிறது. பெண்ணீயம் தொடர்பான முற்போக்கு சிந்தனைகள் அவர்களுக்கு இருந்துள்ளது. அகத்திணை அவர்களின் இல்லற வாழ்வை விளக்குவதைப்போல, புறத்திணையில் பெண்களின் கல்வி, வீரம், புலமை, புகழ் போன்றவற்றை நாம் காண முடிகிறது. இல்லற வாழ்விற்கு அவர்கள் அளித்த விழுமியங்கள் நிகழ்கால சமூகத்திற்கு ஒரு சான்று என்றால் அது மிகையாகாது. !!!

Web Title: Love In Tamil Sangam Literature, Tamil Article

Featured Image Credit : violet.vn

Related Articles