Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

செவ்விந்திய தலைவர் துவாமிஷ் உரையும் மண் மீதான மக்களின் காதலும்

சியாட்டில், அமெரிக்க பூர்வகுடிகளான செவ்விந்திய மக்களின் இரு இனங்களுக்கு தலைவராக இருந்தவர்கள். சுக்குவாமிஷ் மற்றும் துவாமிஷ் இன மக்கள் வாழ்ந்து வந்த பகுதியினை பணத்திற்காகவும், அமெரிக்காவின் உள்கட்டுமானத்திற்காகவும் விற்க வேண்டுமென அமெரிக்காவின் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்கடன், இம்மக்களுக்கு விடுத்த அழைப்பினை தொடர்ந்து 1854ஆம் ஆண்டு அதற்கான பதிலாக இந்த உரையை வெளிப்படுத்தினார் சியாட்டில். அந்த இடத்திற்கு பதிலாக அமெரிக்காவில் வெறொரு இடத்தில் வசிப்பதற்காக நிலமும், அம்மக்களுக்கு பாதுகாப்பினையும் வழங்குவதாக ஜார்ஜ் வாஷிங்டன் கூறியிருந்தார்.  வாஷிங்கடனில் இருக்கும் பிளேக் தீவில் சுக்குவாமிஷ் இனத்தில் பிறந்தார். இவர் தாயின் வம்சமான துவாமிஷின் தலைவராக இருந்தவர் இவரின் தாய் மாமன். அவரிடமிருந்து இந்த தலைமை பொறுப்பு அவருக்கு கிடைத்தது.  இவரை ஞாபகம் கூறும் வகையில் வாஷிங்கடனில் இருக்கும் ஒரு நகரத்திற்கு சியாட்டில் என்று பெயர் வைத்திருக்கின்றது அமெரிக்க குடியரசு. இத்தனை வருடங்கள் கழித்தும் இந்த உரை சிறப்புமிக்கதாக இருக்கின்றது என்றால் அதற்கு காரணம், ஒரு மனிதனுக்கும் அவனின் இயற்கை அன்னைக்கும் இடையேயான ஒரு உறவுமுறையை பழங்கால செவ்விந்திய சமூகம் எப்படி செய்து வந்தது என்பதையும் அதை வெள்ளை இன மக்கள் எப்படியாய் பாதுகாக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்திய விதம் தான்.

 

நம் நிலம், நம் மக்கள், நம் காடுகள், நமக்கான மலைவழிப் பாதைகள். இவை நமக்கானவை அன்று. நம்முடைய பொருளும் அன்று. நம் வருங்காலத்திற்காக நம் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட கடன் அது. ஆயிரமாண்டு காலம் நம் மூச்சில் கலந்து, உயிரில் உறவாகி ஒன்றிப்போன நம் மண்ணை அந்நியர்கள் ஆக்கிரமிக்கும் போது என்ன செய்யும் இம்மனது. முதலில் எதிர்ப்பினை வெளிப்படுத்தும், பின்பு போராட எத்தனிக்கும், தன் வலிமையெல்லாம் திரட்டி எதிரிகளை வெளியேற்றி தமக்கான இடத்தின் பாதுகாப்பினை உறுதி செய்ய நினைக்கும். தக்கன தப்பிப் பிழைக்கும் என்ற விதி மனிதர்கள் விலங்குகள் என்ற வித்யாசம் இன்றி அனைவருக்கும் பொருந்தும். அந்நியர்களிடத்தில், தன் மண், தன் நாடு, தன் நிலம், தன் கலாச்சாரம் என அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு அடிமையாய் வாழ்ந்து மறைந்த, மறைந்து கொண்டிருக்கின்ற செவ்விந்தியர்களின் கதை இது.

இன்றைய அமெரிக்கா யாருடைய பூர்வீகம்?

க்றிஸ்டோஃபர் கொலம்பஸ் என்ற பயணியின் அதி அற்புத கண்டுபிடிப்பு அல்லது ஸ்பெயின் நாட்டின் அற்புத கண்டுபிடிப்பு தான் புது உலகம் என்று அழைக்கப்பட்ட இன்றைய அமெரிக்க கண்டங்கள். உலகத்தின் ஒவ்வொரு அசைவினையும் உறுதி செய்யும் வல்லரசாக இருக்கும் இன்றைய அமெரிக்க குடியரசினை வெள்ளை இனத்தவர்கள் தனியே கட்டமைத்துவிடவில்லை. ஒவ்வொரு தெருவின் மூலையினையயும், ஒவ்வொரு பண்ணையின்  ஒவ்வொரு பயிரின் வளர்ச்சியினையும் ஆப்பிரிக்கர்களும், அமெரிக்காவின் பூர்விக குடிகளான செவ்விந்தியர்களும் அவர்களின் உழைப்பினைக் கொண்டு தீர்மானம் செய்தார்கள். செவ்விந்தியர்கள் தங்களின் பூமிகளை ஐரோப்பியர்களுக்கு கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களின் பண்ணைகளில் அடிமைகளாக வேலை செய்தார்கள். இப்படி அடிமை சாசனம் எழுதித் தர மறுத்த ஒரு இனத்தின் கூக்குரல் எப்படியிருக்கும். அனைத்தையும் இழந்த பிறகும், அம்மண் மீது தீராத காதலுடன் இருக்கும் ஒரு இனத்தின் தலைவன் தன் எதிரிகளுக்கு எப்படியான உரையினை தருவான். இதை தரும் போது அவன் இழப்பதற்கென்று அவனிடம் ஒன்றும் இல்லை. நூறாண்டுகள் கழித்தும் வாசித்து அவனின் வலியை புரிந்து கொள்ள அவனின் இந்த வார்த்தைகளை தவிர அவனிடம் அன்று ஒன்றுமே இல்லை. இவ்வார்த்தைகள், தன்னுடைய மண்ணை இழந்த அத்தனை மக்களிற்குமான ஒரே குரலாக இன்றும் பிரதிபலிக்கின்றது.

துவாமிஷின் உரைக்கு செல்வதற்கு முன்பு, ஐரோப்பியர்கள் எவ்வாறாய் அமெரிக்காவின் ஒவ்வொரு பழங்குடி இனத்தினையும் வென்று, அம்மண்ணை தமக்கென உரியதாக மாற்றிக் கொண்டார்கள் என்பதற்கு முதலில் ஒரு உதாராணத்தை அறிந்து கொள்வோம். சியாட்டில் இனத்தலைவரின் உரை நிகழ்த்தப்பட்டது என்னவோ 19ம் நூற்றாண்டில் தான். ஆனால், இந்த டைனோ இனமக்கள் தான், ஐரோப்பிய வருகைக்கு அமெரிக்க மண் கொடுத்த முதல் இனபலி…

Existence of Taino (Pic: bigthink)

கொலம்பஸ்ஸின் வருகையும், அமெரிக்க பூர்வகுடிகளின் இனஅழிப்பும்

அமெரிக்க கண்டங்களானது பல்வேறு செவ்விந்திய இனக்குழுக்களை உள்ளடக்கிய பெரும் காடுகளை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. கொலம்பஸ் ஸ்பெயினில் இருந்து மேற்கொண்ட பயணத்தின் விளைவாக 1492ல்  கண்டறிந்த பகுதி தான் இன்றைய ஹைத்தி மற்றும் டொமனிக்கா குடியரசினை உள்ளடக்கிய ஹிஸ்பேனியோலா. இது ஆண்ட்டிலிஸ் பகுதியில் அமைந்திருக்கும் தீவுக்கூட்டங்களில் முக்கியமான ஒன்று. தீவுகள் ஒவ்வொன்றாக அடைந்த பின்னரே பெரிய நிலப்பரப்புகளை நோக்கி முன்னேறினார்கள் ஐரோப்பியர்கள்.  டைனோ இனமக்கள், க்யூபா, ட்ரினிடாட், ஜமைக்கா, போர்ட்ட ரிக்கோ, மற்றும் ஹிஸ்பானியோலா தீவுகளில் வசித்த பெரும்பான்மை மக்கள் ஆவார்கள். ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் இங்கு வருவதற்கு முன்பு இம்மக்களின் எண்ணிக்கை தோராயமாக ஒரு மில்லியன் என்ற அளவில் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஸ்பெயின் நாட்டு காலனிகளை இங்கு நிறுவ அதிக அளவில் உழைக்கும் வர்க்கத்தினரை  இந்த டைனோ பழங்குடிகளில் இருந்து எடுத்துக் கொண்டார்கள் ஸ்பெயின் நாட்டுக்காரர்கள். தன்னுடைய இரண்டாவது அமெரிக்க பயணத்தின் போது கொலம்பஸ் ஐரோப்பாவில் இருந்து கரும்பினை அமெரிக்க நிலத்திற்கு அறிமுகப்படுத்தினார். அந்த கரும்பு பண்ணைகளில் இம்மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். இனக்கலப்பு என்பது தடுக்க இயலாத ஒன்றாகிவிட்டது.  பயிர்கள் மட்டுமன்றி  ஐரோப்பாவின் விலங்குகளையும், வியாதிகளையும் கூட இந்த தீவுக் கூட்டங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள் ஐரோப்பியர்கள். சின்னம்மை போன்ற ஐரோப்பிய வியாதிகளை தாங்கிக் கொள்ளும் சக்தியற்ற அமெரிக்க பூர்வகுடிகள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தார்கள். ஐரோப்பியர்கள் தொடர்ந்து வந்து செல்லும் பகுதியாக ஹிஸ்பானியோலா மாறிப்போக, டைனோ இனமக்களின் பிரதான எதிரிகளான கரீபிய கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதல்களுக்கு இரையானது ஹிஸ்பானியோலாவின் தென்மேற்கு கடற்கரைப் பகுதி.  அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும், மீதியிருக்கும் கொஞ்ச நஞ்ச மக்களை காப்பாற்றவும் அவர்கள் தீவுகளின் வடகிழக்கு பகுதிகளுக்கு குடி பெயர்ந்தார்கள். ஐரோப்பியர்கள் இந்த தீவுகளில் கால்வைத்த கால்நூற்றாண்டுகளில் இவ்வினத்தின் எண்ணிக்கை வெறுமனே சில ஆயிரங்களில் குறைந்து போனது. அவர்களின் வடகிழக்கு நகர்வின் விளைவு, அவர்களின் கடற்கரைகளை மெல்ல மெல்ல டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள் என ஆக்கிரமித்துக் கொண்டார்கள். ஸ்பெயின் ஆக்கிரமிப்புக்காரர்களின் கண்கள் மத்திய இலத்தீன் அமெரிக்க தேசத்தில் நிலைபெற, இத்தீவுகளில் அவர்களின் போக்குவரத்து குறைந்து போனது. ஆனால் அழிந்து போன இனத்தின் மீட்சி என்பது??? 16ம் நூற்றாண்டின் இறுதிக்குள் ஒருவாராக டைனோ இனமக்கள் என்று சொல்லும் அளவிற்கு கூட அத்தீவுகளில் யாரும் இல்லை.

Christopher Columbus (Pic: gnosticwarrior)

துவாமிஷின் உரை

இது போன்ற ஆயிரக்கணக்கான செவ்விந்திய பூர்வகுடிகள் அமெரிக்க வரலாற்றில் இருந்து அழிந்து போகத் தொடங்கினார்கள். அப்படியாக தொலைந்து போன இனம் தான் துவாமிஷ் என்னும் இனம். அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் வேண்டுதலை தொடர்ந்து பெரிய படைபலம் இல்லாத ஒரு இனம் தன் நிலத்தையும், தன் மன வலியினையும் இப்படியாய் பகிர்ந்தது. தன் நிலத்தினை விட்டுத்தர துணிந்துவிட்ட அவர், அவர்களின் வெள்ளைச் சகோதரர்களிடத்தில் வைக்கும் வேண்டுதலாய் இருக்கின்றது இவ்வுரை. இவ்வுரையில், தாங்கள் வணங்கிய மண், காற்று, நீர், இறைவன், மூதாதையார்கள், அம்மண்ணின் விலங்குகளை துவாமிஷ் இன மக்கள் எப்படி நடத்தினார்களோ அப்படியே வெள்ளையர்களும் நடத்த வேண்டும் என்று வேண்டுகின்றார். 1854ல் நிகழ்த்தப்பட்ட இவ்வுரையினை 1887ல், டாக்டர். ஹென்றி எ.ஸ்மித் சியாட்டில் சண்டே ஸ்டாரில் எழுத்துவடிவமாக்கினார். இந்திய மொழியான மலையாளத்தில் பால் சாக்கரியாவின் மொழிபெயர்ப்பினை தமிழிற்கு தந்தவர் எழுத்தாளர் யூமா வாசுகி. பூவுலகின் நண்பர்கள் அவர்களின் பிரசுரத்தில் பூமியில் தனிமைக்கென்று இடமில்லை என்ற புத்தகமாக இந்த உரையின் தமிழ் வடிவம் கிடைக்கின்றது.

இந்த உரைப் பற்றி வரலாற்று ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கின்றது. 1854ன் உரையை 1887ல் ஹென்றி எ. ஸ்மித் பிரசுரித்தார். ஆனால் அந்த உரை உரையாக வெளியிடப்பட்டதா அல்லது எழுத்து வடிவம் மூலம் அரசிற்கு அனுப்பப்பட்டதா என்ற குழப்பம் மட்டும் தீரவில்லை.

Dhuwanish (Pic: indianz)

காற்று

“சிவப்பு மனிதனுக்கு காற்று மிகவும் மதிப்புடையது. ஏனென்றால் எல்லா உயிர்களும் பகிர்ந்துகொள்வது ஒரே சுவாசத்தைத் தான். விலங்கும் மரமும் மனிதனும் ஒரே சுவாசத்தைத் தான் சுவாசிக்கிறார்கள். வெள்ளை மனிதன், தான் சுவாசிக்கும் காற்றை அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை. நாட்கணக்காக இறந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் போல அவன் துர்நாற்றத்திடம் கூட மரத்துப்போன தன்மையைத்தான் வெளிக்காட்டுகிறான்.”

“நாங்கள் உங்களுக்கு நிலத்தை விற்றால், காற்று எங்களுக்கு மிகவும் மதிப்புடையது என்றும் அது துணை செய்யும் எல்லா உயிரினங்களிடத்திலும் காற்று அதன் ஆன்மாவின் சாரத்தைப் பங்கிடுகிறது என்றும் நினைவிருக்க வேண்டும். எங்கள் தாத்தாவுக்கு முதல் சுவாசமளித்த காற்று தான் அவரின் இறுதிச் சுவாசத்தையும் கையாள்கிறது. நாங்கள் உங்களுக்கு நிலம் விற்றால் நீங்கள் அதை வேறொன்றாக, பரிசுத்தமாக, வெள்ளை மனிதனும் புற்பரப்பில் பூக்களின் மன்ம் தோய்ந்த காற்று வாங்கச் செல்லும் இடமாகப் பாதுகாக்க வேண்டும்.”

Air (Pic: pixabay)

நீர்

“ஆறுகளிலும், நதிகளிலும் மின்னி வரும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் முன்னோர்களின் இரத்தம். நாங்கள் உங்களுக்கு நிலத்தை விற்றால் இந்த நீர் புனிதம் என்ற நினைவு உங்களுக்கு இருக்க வேண்டும்.”

“நீரின் முணுமுணுப்பு என் தந்தையின் தந்தையினுடைய குரல்”

“நதிகள் எங்கள் சகோதரர்கள். அவர்கள் எங்கள் தாகத்தைத் தீர்க்கிறார்கள். எங்கள் படகுகளைச் சுமக்கிறார்கள். எங்கள் குழந்தைகளின் பசியாற்றுகிறார். நாங்கள் உங்களுக்கு எங்கள் நிலத்தை விற்றால், நதிகள் எங்களுக்கும் உங்களுக்குமான சகோதரர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். அதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவும் வேண்டும். அதுமட்டுமல்ல, அன்று முதல் நீங்கள் எந்தவொரு சகோதரனிடமும் காட்டும் கருணையை நதிகளிடமும் காட்ட வேண்டும்.”

Water (Pic: pixabay)

மூதாதையர்கள்

“வெள்ளை மனிதனுக்கு எங்கள் வழிமுறைகள் புரியாது என்று எனக்குத் தெரியும். அவனுக்கு பூமியின் எந்தவோர் இடமும் மற்ற எந்தவோர் இடம்போலத்தான். ஏனென்றால் இரவில் வந்து பூமியிலிருந்து வேண்டியதையெல்லாம் எடுத்துக் கொண்டு போகும் ஓர் அந்நியன் அவன். பூமி அவனது சகோதரன் அல்ல. எதிரி. அதை ஓர் இடத்தில் வெல்லும் போது அவன் அடுத்த இடத்திற்கு செல்கின்றான். தந்தையரின் கல்லறைகளை அவன் பின்னால் கைவிட்டுச் செல்கின்றான்.  அதில் அவனுக்கு வருத்தம் இல்லை. தன் சொந்த குழந்தைகளிடமிருந்து அவன் நிலத்தை தட்டிப் பறிக்கின்றான். அதில் அவனுக்கு துயரமில்லை. அவன் தன் தந்தையின் கல்லறையையும், தன் குழந்தையின் பிறப்புரிமையையும் மறக்கப்பட்டவையாக்குகின்றான். பூமியையும், சகோதரனான ஆகாயத்தையும் அவன் பார்ப்பது, வாங்கவும், கொள்ளையடிக்கவும், ஆடுமாடுகளைப் போலவோ நிறம் தோய்ந்த மணிமாலைகளைப் போலவோ விற்பதற்குமான பொருட்களாகத்தான். அவனது பேராசை பூமியை விழுங்கும். ஒரு பாலைவனத்தை மட்டும் மிச்சம் வைக்கும்.”

Ancestor (Pic: nationalgeographic)

விலங்குகள்

கதிர்காணாக் கிளி தனிமையில் அழுவதையோ இரவில் குளக்கரையில் தவளைகள் நடத்தும் வாதத்தையோ கேட்க முடியவில்லை என்றால் பிறகு வாழ்க்கை என்ன வாழ்க்கை.

விலங்குகள் இல்லாமல் மனிதன் என்ன ? விலங்குகளெல்ல்லாம் கடந்து சென்றால் மனிதன் ஆன்மாவின் மிகப் பெரிய தனிமையில் இல்லாதாகிவிடுவான். ஏனென்றால் விலங்குகளுக்கு நடப்பது எதுவோ, அதுதான் விரைவிலேயே மனிதனிக்கும் ஏற்படும். எல்லாமும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டது.

எங்கள் இடத்தை வாங்குவதற்கான உங்கள் ஆலோசனையை நாங்கள் பரிசீலிக்கின்றோம். அதை ஏற்றுக் கொள்ள முடிவுசெய்தால் நான் ஒரு நிபந்தனையை முன்வைப்பேன். வெள்ளை மனிதன் இந்த மண்ணின் விலங்குகளை தன் சகோதரர்களைப்போலக் கருதி நடந்து கொள்ள வேண்டும்.

Dinosarous ( Pic: Pixabay)

மண்

இந்த மண் எங்களின் பாத ஸ்பரிசத்திற்குத் தரும் அன்பு உங்கள் கால்களின் கீழ் உங்களுக்கு கிடைக்காது. ஏனென்றால் அது எங்கள் முன்னோர்களின் சிதைச் சாம்பல்தான். அதன் கருணையைப்பற்றி பிரக்ஞையுள்ளவை தான் எங்கள் பாதங்கள். அந்தளவு இந்த மண் எங்கள் இனத்தின் உயிரால் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் வயலிலும், பண்டகச் சாலையிலும் கடையிலும் பாதையிலும் காட்டின் அமைதியிலும் நின்று கொண்டு அவர்கள் தனித்திருப்பதாக நினைக்கும் போது அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். பூமியில் தனிமைக்கென்று ஓர் இடமில்லை.

Spoiled Land (Pic: pixabay)

எதையும் வியாபார நோக்கோடு பார்த்துப் பழகிய கண்களுக்கு சியாட்டில் கூறிய உரையில் இருக்கும் இயற்கையின் மீதான மதிப்பினை உணருவதென்பது கடினம் தான். ஆனால், இன்றும் தன் நாட்டில், தன் மண்ணில், தன் மக்களுக்கென தொடங்கும் எந்த ஒரு உரையும், போராட்டமும் கூட இப்படியாகத் தான் நடைபெறுகின்றது. அமிலக்காற்று கலக்காத சுத்தமான காற்றினை சுவாசிக்கவே எந்த ஒரு மண்ணை மதிக்கும் மனிதமும் விரும்புகின்றது. பாட்டனும், பூட்டனும் செப்பனிட்டு சென்றுவிட்ட மண்ணில் அந்நியர்களின் பொருளாதார கொள்கைகளுக்கு வழிவிட்டு செல்வது எங்கனம்? நம் நிலம், நம் காற்று, நம் நதி, நம் முன்னோர்களின் பூமி என அனைத்தும் இயற்கையோடு இயற்கையாகவே வாழ்ந்து பழகியது. அதனை வேரோடு பறித்துச் செல்ல முற்படுகையில் ஒவ்வொரு எதிர்ப்பும் ஒவ்வொரு வகையாக வெளிப்படும். இந்த பூமியில் தனிமைக்கு எப்படி இடம் இல்லையோ அது போல் தனித்து தலையோங்கும் முதலாளித்துவத்திற்கும் ஒரு நாள் இடமில்லாமல் போய்விடும் என்பதை சியாட்டில் வெகு முன்னதாகவே அறிந்திருக்கின்றார். தன் மண் இது என கர்வம் கொள்ளும் ஒவ்வொரு உயிரின் ஆத்மாவிலும் இயற்கை அன்னை கலந்து இருக்கின்றார்கள். அவள் ஒருவரையும் தனிமையுடன் இப்பூமியில் நடமாடவிடுவதில்லை.

Web Title:  Red Indian’s Love And Respect On Their Own Land 

Featured Image Credit: warfare2

Related Articles