இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் யாழ்ப்பாணத்திற்கு 113 கிலோமீற்றர்கள் தெற்கிலும் மட்டக்களப்பிற்கு 69 கிலோமீற்றர்கள் வடக்கிலும் அமைந்துள்ள திருகோணமலை இலங்கைத் திருநாட்டின் இயற்கை வனப்புக்கும் எழில்மிகு தோற்றத்துக்கும் சான்றாக விளங்கும் ஓர் நகராகும்.
அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைத் தனது எல்லையாகக்கொண்ட திருகோணமலையின் இயற்கையாக அமைந்த கடற்கரை அழகு உள்நாட்டவர் முதல் வெளிநாட்டவர் வரை திருகோணமலையைத் தங்கள் நினைவுகளில் நீங்கா இடம்பெற்று நிற்கச் செய்கின்றது. இருப்பினும், இவையனைத்தையும் தாண்டி, திருகோணமலையானது மிகத் தொன்மையான வரலாற்றுக் கதைகளையும் தனது சுற்றுலாத்தளங்களுக்குள் உள்ளடக்கி நிற்கிறது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகவும் திருகோணமலை விளங்கி நிற்கின்றது.
வரலாற்றுடன் கலந்த சுற்றுலாப்பிரதேசங்களை அனுபவிக்கின்ற எவருக்குமே திருகோணமலை ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தளமாகவிளங்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கையின் சுற்றுலாத்துறை சம்மேளனத்தின் வருடாந்த அறிக்கைக்கமைவாக, 2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளில் 74.1% சதவீதமானவர்கள் இலங்கையின் கிழக்குக்கடற்கரைப் பகுதிகளுக்குப் பயணம் செய்துள்ளார்கள் என்பதே அதனை நிரூபிக்கப் போதிய சான்றாக உள்ளது.
இயற்கையாக மூன்று பக்கங்களிலும் மலையால் சூழப்பட்ட இயற்கைத் துறைமுகத்தைக் கொண்ட திருகோணமலைப் பிரதேசமானது ஆதி முதல் ஆங்கிலேயர் வரை பிரசித்தம்பெற்றிருந்தமைக்கு, இந்நிலம் தாங்கியுள்ள வரலாற்று எச்சங்களே சான்றாக உள்ளன.
திருகோணமலையின் அழகை ஏற்கனவே கண்டு ரசித்த ஒருவர் மீண்டும் அங்கு செல்லும்போது, தான் பார்த்த இடங்களின் மற்றுமொரு பரிமாணத்தையும், புதிதாக செல்ல இருப்பவர்களுக்கு முழுமையான சுற்றுலா அனுபவத்தையும் இந்த ஆக்கம் நிச்சயம் வழங்கும்.
கன்னியா வெந்நீரூற்றுக்கள் (Kanniya Hot Water Springs)
இலங்கையை ஆண்ட இராவணன் என்கிற மன்னனால், தனது தாயின் கிரியை நிகழ்வுகளுக்காக உருவாக்கபட்ட ஏழு கிணறுகளுமே இதுவாகும் என இராமாயண வரலாறு கூறுகிறது. இந்த ஏழு கிணறுகளும் வெவ்வேறு விதமான வெப்பநிலையை வெளிப்படுத்தும் ஊற்றுக்களாக அமைந்துள்ளதுடன், குறுகிய தூர இடைவெளியில் அமைந்துள்ள இவ்வூற்றுக்களின் வெப்பநிலை வேறுபாட்டுக்கான காரணங்கள் இதுவரையிலும் அறிவியல்பூர்வமாகக் கண்டறியப்படவில்லை என்பது பெரும் விந்தையாகும்.
இந்துக்களால் இறந்தவர்களின் ஆத்ம கிரியைகளுக்குப் புனித இடமாக பயன்படுத்தபடுகின்ற இவ்விடம், தற்போது இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம் மூலமாக, நாட்டின் பாதுகாக்கப்படவேண்டிய இடங்களின் பட்டியலில் உள்ளடக்கப்படுகின்றது. இனமத பேதமின்றி அனைத்து மக்களும் இந்த அபூர்வ வெந்நீர் ஊற்றுக்கு வருகைதருவது இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
திருக்கோணேஸ்வர ஆலயம் (Koneswaram Temple)
திருகோணமலையின் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த புனிதஸ்தலங்களில் முதன்மை பெறுவது இந்த திருக்கோணேஸ்வர ஆலயமே! பல நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்த ஆலயம் மலைமீதே அமைந்திருக்கிறது என்பது பலரது எண்ணம். ஆனாலும், குறித்த ஆலயத்தின் தொன்மை, குறித்த ஆலயம் அமைந்துள்ள மலையடிவாரத்தில் கடலுடன் முழுமையாகப் புதைந்து காணப்படுகிறது.
முன்னொரு காலத்திலே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் ஏற்பட்ட கடற்கோளில் ஆட்கொள்ளப்பட்டதன் விளைவால் அங்கு காணப்பட்ட பழமையான கோவில் கடலுக்குள் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.
படகின் மூலமாக கோணேஸ்வர மலையின் பின்புறமாகப் பயணிப்பதன் மூலம் இக்கோயில்களின் எச்சங்களை தற்போதும் பார்வையிடக் கூடியதாக உள்ளது. திருக்கோணேஸ்வர ஆலய தரிசனம் மட்டுமன்றி அங்கு ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்ட புராதன கோட்டைகளில் ஒன்றான பிரெட்றிக் (Fort Frederick) கோட்டையின் எச்சங்களையும் பார்வையிட முடியும்.
வெல்கம் விகாரை (Velgam Vehara)
இலங்கையின் ஆரம்பகால பெளத்தவரலாறுகளில் மிக முக்கியமான பங்கை வகிப்பவன் மன்னன் தேவநம்பியதீசன். இம்மன்னனது காலப்பகுதியில் அமைக்கப்பட்டு, பின்னர் பாத்திய திஸ்ஸ அரசரினால் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட, பல வரலாற்றுக் கல்வெட்டுக்களைத் தன்னகத்தே தாங்கிநிற்கும் இந்த மிகப்பழமையான விகாரை திருகோணமலையின் மற்றுமொரு வரலாற்றுச் சின்னமாகும்.
சுவாரஸ்யமாக இவ்விகாரையின் கட்டுமானப் பணிகளுக்காகப் பல தமிழ் மன்னர்கள் நன்கொடை வழங்கிய வரலாறையும் இவ்விகாரைக் கல்வெட்டுக்கள் கொண்டுள்ளன. இப்பழைமைவாய்ந்த விகாரையின் எச்சங்கள் மிகுந்த காலம்கடந்து இலங்கைத் தொல்பொருள் ஆய்வாளர்களால் 1929ம் ஆண்டிலேயே கண்டறியப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
2ம் உலகப்போரின் நினைவுச் சின்னங்கள்
இந்துசமுத்திரத்தில் உள்ள இச்சிறியயதீவாம் இலங்கையின் எழில்மிகு இத்திருகோமலை இந்து மற்றும் பெளத்தமத காலச்சுவடுகளை மட்டுமல்லாது, நவீனகால வரலாற்று எச்சங்களையும் தன்னகத்தே தாங்கி நிற்பது இப்பிரதேசத்தின் பெறுமதியை உலகுக்குப் பறைசாற்றுவதாய் அமைகிறது. இயற்கையாக பாதுகாப்பு அரணாக அமைந்த சீன வளைகுடா (China Bay), 2ம் உலகப்போரில் பிரித்தானியார்களால் ஒரு போர்த்தளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீன வளைகுடாவின் தரைத்தோற்றம் பிரித்தானியர்களின் போர் முறைமைகளைக் கொண்டுநடாத்த ஏதுவாக அமைந்திருந்ததே இதற்கான காரணமாகும். இதற்கு ஆதாரமாக, மிகசிறப்பான முறையில் பராமரிக்கபடுகின்ற 2ம் உலகப்போரில் உயிர்நீத்த போர்வீரர்களின் சமாதி இன்னும் திருக்கோணமலையைத் தரிசிக்கச் செல்லும் சுற்றுலாப்பயணிகளால் பார்வையிடக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கை உள்நாட்டு போரின் நினைவிடங்கள்
அண்மையில் முடிவுக்குவந்த இலங்கையின் இருதசாப்தகால உள்நாட்டுப் போரில் இலங்கைக் கடற்படையினால் பெறப்பட்ட வெற்றிகள் மற்றும் சவால்களைக் காட்சிப்படுத்தும் நினைவகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது புனரமைக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டுக்கான டச்சுக் கடற்படை ஆணையாளரின் இல்லமாகும். இலங்கையின் 65ஆவது சுதந்திர தினத்தின் நினைவையொட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.
கூடவே, இந்த நினைவிடங்களுக்கு அண்மித்ததாகவுள்ள சிறு சோபர் தீவுகளில் (Sober Island) முழுநாளையும் செலவிடக்கூடியவகையில் கடற்படையின் உதவியுடன் இலங்கை அரசு, சுற்றுலாதள வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
நிலாவெளி – புறாத் தீவு
திருகோணமலையின் கரையோர சுற்றுலாதளங்கள் என்றதுமே நினைவுக்கு வருவது, நிலாவெளி கடற்கரையும் அதனைச் சார்ந்ததாக அமைந்துள்ள புறாத் தீவுமே ஆகும். திருகோணமலை நகரிலிருந்து 21Km தொலைவில் இப்புறாத்தீவு அமைந்துள்ளது.
1963ம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்தப் புறாத் தீவு. (இந்த தீவு கண்டறியப்பட்ட காலம்முதல் பெருமளவிலான புறாக்களின் வசிப்பிடமாக இது அமைந்திருந்ததால், இன்றும் இது புறாத்தீவு என்றே அழைக்கப்படுகிறது. ஆயினும், மனித நடமாட்டம் அதிகரித்தபின்பு, இங்கு புறாக்களின் வருகை குறைவடைந்து விட்டது.) இலங்கை அரசினால் பாதுகாத்துப் பராமரிக்கபடுகின்ற 17வது தேசிய பூங்காவாகவும் 2ஆவது தேசிய கரையோரப் பூங்காவாகவும் இப்புறாத்தீவு அறிவிக்கபட்டது.
இத்தீவு பல்வேறுபட்ட முருகைக்கற்பாறைகளின் களஞ்சியமாகக் காணப்படுவதோடு, அண்ணளவாக நூறு இன முருகைக்கல் பாறைகளையும் முன்னூறுக்கும் அதிகமான முருகைக்கல்வாழ் மீனினங்களையும் கொண்டது.
குறிப்பு – பொலித்தீன் மற்றும் பிளாஸ்திரிக் பாவனை முற்றிலும் தடைசெய்யப்பட்ட தீவாக இது அமைந்துள்ளது.
மார்பிள் கடற்கரை (Marble Beach)
மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா கடல் மற்றும் காலியில் அமைந்துள்ள ஜங்கிள் (jungle Beach) கடற்கரை போன்றவொரு அனுபவத்தை திருகோணமலை சுற்றுலாவின்போது பெற்றுக்கொள்ளக்கூடியதொரு தளமாக இம்மார்பிள் கடற்கரை அமைந்துள்ளது. திருகோணமலையின் கிண்ணியா கடற்பரப்பில் அமைந்துள்ள இந்தக் கடற்கரை, இலங்கையின் அருகிவரும் முருகைக்கற்பாறைகளை கொண்டவொரு கடற்கரைகளில் ஒன்றாக உள்ளது.
குறிப்பு – பொலித்தீன் மற்றும் பிளாஸ்திரிக் பாவனை முற்றிலும் தடைசெய்யப்பட்ட இடமாக இது அமைந்துள்ளது.
கடற் சுற்றுலா (Whale & Dolphin Watching)
அண்மைக்காலத்தில் திருகோணமலையின் பிரசித்தம் பெற்ற மற்றுமொரு துறையாக இந்தக் கடற் சுற்றுலா மாறிவருகிறது. குறிப்பாக, திமிங்கலம் மற்றும் டொல்பின் பார்வைடுதலுக்கு இலங்கையின் உகந்த இடங்களில் ஒன்றாக திருகோணமலை காணப்படுகிறது.
பசுபிக் சமூதிரத்துக்கு அண்மையில் இலங்கையின் கடற்பரப்பு அமைந்துள்ளது இதற்கு ஏதுவாக உள்ளது. குறிப்பாக, மே மாதம் முதல் அக்டோபர் (May-October) மாதம் வரை இந்த பார்வையிடலுக்கு உகந்த இடமாக திருகோணமலை உள்ளது. இலங்கை கடற்படையினால் பாதுகாப்பான முறையில் ஒழுங்குசெய்யப்பட்ட படகுகள் மூலம் இந்த சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.
2727 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட இத்திருகோணமலை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழும் ஓர் பிரதேசமாக விளங்குகின்றது. கிழக்கு மாகாணத்தின் ஒரு சிறிய நிலப்பரப்பில் இத்துணை பெறுமதிவாய்ந்த இயற்கை, கலை, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த இடங்கள் காணப்படுவது இம்மண்ணிற்கேயுரிய தனிச்சிறப்பென்று போற்றினால் அது மிகையாகாது.
குறுகிய வார விடுமுறைகள் அல்லது வார இறுதி நாட்கள் என இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முழுமையாகக் கண்டுகளிக்கக்கூடிய சுற்றுலாத்தளமாக இதனைக்கொள்ளலாம். தனது வியத்தகு சுற்றுலாத் தளங்களைக்கொண்டு பயணிகளை மீண்டும் மீண்டும் தன்புரமீர்க்கும் இத்திருகோணமலை உங்கள் விடுமுறை அனுபவத்தை மென்மேலும் மெருகூட்டவல்லது!
இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவியரீதியில் சுற்றுலாவிரும்பிகள் பார்வையிடவேண்டிய தலங்களின் வரிசையில் திருகோணமலை முக்கிய இடம்பெற்று வீற்றிருப்பது இலங்கை மண்ணுக்கும் அதன் வரலாற்றுச் சிறப்பிற்கும் பெருமை சேர்த்துக்கொண்டே இருக்கும்!