
மலேசியா என்கிற தேசம் எப்படி பரந்துபட்டதோ, எப்படி பல்வகைமை கொண்ட கலாச்சாரங்களையும் ஒரே இடத்தில் கொண்டிருக்கிறதோ, அதுபோல உணவு வகையிலும் எண்ணிலடங்காத வகைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. மலாய் மக்களின் தன்னிகரில்லா தனித்துவமான உணவுகளானாலும் சரி, வந்தேறு குடிகளான இந்திய வம்சாவளியுடன் இணைந்த உணவுவகைகளானாலும் சரி, மலேசிய வாழ் சீனமக்களின் தாக்கம் கொண்ட உணவுவகையாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றும் அவற்றுக்குரிய தனித்துவத்தை கொண்டதாக மலேசியாவின் வீதியோரங்ககளையும், விலைமதிப்பில்லாத உணவகங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கின்றன.
உலக சுற்றுலாவில் ஆர்வமுள்ளவர்களுக்கு, எப்போதாவது மலேசியா என்கிற நாட்டையும் உங்கள் சுற்றுலா பயணத்தில் இணைத்துகொள்ளும் எண்ணம் இருப்பின், அங்கு கட்டாயமாக ருசிபார்க்கவேண்டிய உணவுகள் எவையென இப்பொழுதே குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
நாசி லெமாக் (Nasi Lemak)
இலங்கையர்களுக்கு எப்படி சோறு இல்லாமல் வாழ முடியாதோ, அதுபோலவே மலேசியர்களுக்கும் சோற்றினை தவிர்த்துவிட்டு வாழ்வது கடினம் போல! அதனால்தான் என்னவோ, தமது தேசிய உணவாக நாசி லெமாக் எனும் சோற்றினை அடிப்படையாகக் கொண்ட உணவினைக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும், நாசி லெமாக் இலங்கையின் லம்ப்ரைஸ் போல வாழையிலை அல்லது மலேசியாவுக்கே உரித்தான பைன்மர (Bandan Leaves) இலைகளின் உதவியுடனே தயாரிக்கப்படுகிறது.

(wacana.co)
பாரம்பரிய மலேசிய முறையில் தயாரிக்கப்படும் நாசி லெமாக்கில் தேங்காய் பாலுடன் வேகவைக்கப்பட்ட சோறு, நிலக்கடலை கறி, காரமான சம்பல், வேகவைத்த முட்டை மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை கொண்டதாக பரிமாறப்படுகிறது. விரும்பியபோது இதனுடன் வேறுபட்ட இறைச்சி வகைகளும் (பன்றி தவிர்ந்து) இணைத்து பரிமாறப்படும். பெரும்பாலும், மலேசிய மக்கள் இதனை காலை உணவாக அல்லது மதிய உணவாக உட்கொள்ளுகின்றார்கள்.
இதே உணவை, மலேசியாவில் உள்ள இந்தியர்கள் சமைக்கும்போது, தமக்கு ஏற்றவகையில் அறுசுவை கறிகளையும் கொண்டு வாழையிலையில் பரிமாறுவதுடன், சீன மக்கள் சமைக்கும்போது, மேலதிகமாக பன்றி இறைச்சி கறியையும் அதனுடன் இணைத்துகொள்ளுகிறார்கள்.
நாசி லெமாக் போல, நாசி கிரபு (Nasi Kerabu) என்கிற உணவும் மலேசியாவில் பிரபலமாக உள்ளது. இதுவும், நாசி லெமாக் போல தயார் செய்யப்பட்டாலும், இதற்கு பயன்படும் அரசி ஒருவகை நீலநிற அரிசியாக உள்ளமை இதன் விசேடமாகும்.
விலை – RM4-RM10 (LKR136 – LKR340)
ரொட்டி கனாய் (Roti Canai)

(atablefortwo.com.au)
பெயர் ஏதோ வித்தியாசமாக இருந்தாலும், இது நம்மை போன்ற இலங்கை-இந்திய மக்களுக்கு பரிச்சியமான ஒரு உணவுவகைதான். நமக்கு புரிந்த மொழியில் சொல்ல வேண்டும் என்றால், இதனை “பரோட்டாவும் கறியும்” என அழைக்கலாம். இதில் மலேசிய மக்களின் தனித்துவம் என்னவெனில், இந்த ரொட்டி கனாய்யினை தயாரிக்க அவர்கள் பயன்படுத்தும் வெண்ணெய்யே இதனை நமூர் பரோட்டாக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. மலேசிய மக்களின் அன்புபோல, இவ்வகை வெண்ணெய்களும் தாராளமாகவே ரொட்டி கனாய்யில் இருக்கிறது. இவ்வகை ரொட்டியுடன் எவ்வகை கறிகளையும் சேர்த்து உண்ண முடியும்.
விலை – RM1 (LKR34) (கறி தவிர்த்து) , One Portion Price – RM3-RM5 (LKR102-107) (கறிவகைகளுடன் சேர்த்து)
ரொட்டி ஜாலா (Roti Jala)

(i.ytimg.com)
நம்மவர்களின் சுருட்டப்பம் வகையறாவை சேர்ந்ததாக இது இருந்தாலும், சிறு சிறு வித்தியாசங்களுடன் இது வேறுபடுகிறது. பான் கேக் வகையான கலவையை கொண்டு தயாரிக்கப்பட்டாலும், இவை சிறு சிறு இடைவெளிகளைக் கொண்ட இடியப்பம் போல தயாரிக்கப்பட்டு பின்பு உருட்டப்பட்டு நீள் உருளை வடிவத்தை அடைகிறது. பெரும்பாலும் மலேசியாவாழ் மக்களின் மாலை நேர உணவாகவுள்ளது.
ரொட்டி ஜாலா தனியாகவும், மாமிச கறிகளுடனும் இணைத்து பரிமாறப்படும் வழக்கத்தினை கொண்டுள்ளது. ஆனால், இவை பெரும்பாலும் மாலைநேர தேநீரை அலங்கரிக்கும் விருந்தாக உள்ளது.
விலை – RM 0.60 – RM 3 (LKR 20 – 102)
அசாம் லக்சா (Asam Laksa)

(papparich.com)
நாம் நூடில்ஸ் உணவையும், சூப் பானத்தையும் தனித்தனியே உணவாக அருந்தியிருப்போம். ஆனால், இவ்விரண்டு வகைகளையும் சேர்த்து அருமையான உணவாக அசாம் லக்சாவை மலேசியாவில் பரிமாறுகிறார்கள். மலேசியாவில் கடலுணவுகளுக்கு பஞ்சமில்லை என்பதானால், பெரும்பாலான அசாம் லக்சா உணவுகளை கடலுணவு வகைகளுடன் சேர்த்தே பரிமாறுகிறார்கள். பெரும்பாலும் காரசாரமான சூப் பானம், பெரியவகை நூடில்ஸ் ஆகியவற்றறை இந்த உணவில் காண முடியும். கடலுணவுகள் நம்மவர்கள் சமைப்பது போல முழுமையாக சமைக்கப்படாது, அரை அவியலாக இருப்பதால் அனைவருக்கும் இவ்வகை உணவு ஒத்துவராது. எனவே, புதியவகை உணவை ருசிபார்க்க விரும்புவர்களுக்கு இது ஒருவகை சுவாரசியமே!
விலை – RM 6.90 RM 10.50 (LKR 234.6 – LKR 357)
சாட்டே (Satay)

(kreserve.com)
மலேசியாவில் எவ்வாறு இரவுநேர (முழுநேரமும் உள்ளவை உண்டு) வீதியோர உணவகங்கள் பிரபலமோ, அதுபோல சாட்டே உணவுவகையும் அங்கு மிகவும் பிரபலமானது. அரேபியர்களின் கேபாப்(Kebab) வகை உணவுகளை போல, குச்சிகளில் விதவிதமான மாமிசங்களை நெருப்பில் அழுத்தமாக வேகவைத்து சமைக்கும் ஒருவகை உணவாக உள்ளது. கேபாப் உணவில் மரக்கறிவகைக்கும் இடம் உண்டு. ஆனால், சாட்டே உணவில் தனியே மாமிசம் மட்டுமே உண்டு. அது மட்டுமல்லாது சாட்டே உணவுகையில் மலேசியாவின் பெயரை அழுத்தமாக பாதிக்கும் வகையில் நிலக்கடலை சோஸ் (sauce) உம் தடவப்பட்டே தயாரிக்கபடுகிறது.
விலை – RM 0.60 – RM 2.60 (One Piece) (LKR 20.4 – 88.40)
மீ கோரெங் (Mie Goreng)

(cias.rit.edu)
நூடில்ஸ் வகை உணவாக இருந்தாலும், இது நாம் சாப்பிடும் வழமையான நூடில்ஸ் வகை உணவில்லையென்பதனால் ஒருமுறை ருசிபார்க்க முடியும். சென்னையில் உள்ள பர்மா மக்களால் சமைக்கப்படும் தடிப்பமான நூடில்ஸ் வகையை பயன்படுத்தியே இந்தவகை உணவும் தயாரிக்கப்படுகிறது. மலேசியர்கள் கொஞ்சம் காரசாரமான உணவுக்கு பெயர் போனவர்கள் என்பதனால், இந்த நூடில்ஸ் வகையும் கொஞ்சம் உறைப்பு அதிகமானதாகவே இருக்கும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
நூடில்ஸ்ஸுக்கு பதிலாக சோற்றினை பயன்படுத்தி செய்யும் உணவினை நாசி கோரெங் (Nasi Goreng) என அழைக்கிறார்கள். இது நம்மவர்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சியமானதே!
விலை – RM 3 – RM 8.5 (LKR 102 – 289)
சார் குஎய் டோவ் (Char Kuey Teow)

(angsarap.net)
வாயில் நுழையாத பெயர்போல கொஞ்சம் சிக்கலாக தயாரிக்கப்படும் உணவு வகையாகவே இது உள்ளது. மீ கோரெங் உணவிலிருந்து இது வேறுபட காரணம், இங்கு பயன்படுத்தப்படும் நூடில்ஸ் வடிவமேயாகும். இங்கு நன்கு தடித்த, அகலமான அரிசிவகை நூடில்ஸ் பயன்படுத்தப்படுகிறது. சீன கடைகளில் பெரும்பாலும் இவ்வகை உணவானது பன்றி இறைச்சி கொழுப்பினை பயன்படுத்தியே சமைக்கப்படுவதனால், சாப்பிட போகும் முன்பாக ஒருகணம் முழுமையாக விசாரணை செய்து கொள்ளுங்கள்.
விலை – RM 5.50 – 10.50 (LKR 187 – 354)
அபம் பாலிக் (Apam Balik)

(curiousnut.com)
நம்மூர் வகை சுருட்டப்பத்தின் வேறு விதமான வடிவமே அபம் பாலிக். நமம்வர்களை போல, மலேசியர்கள் இதனைச் சுருட்டாமல், தட்டையாக ஒப்பீட்டளவில் பருமனாக தயாரிக்கிறார்கள். பெரும்பாலும், சுருட்டப்பத்தில் தேங்காய் சுண்டல் இருக்கும். ஆனால், மலேசியர்களின் உணவில் நிலக்கடலையை பயன்படுத்தி செய்யும் சுண்டல் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இதனை தவிரவும், அபம் மாலிக்கில் சுண்டலுக்கு பதில் பாலாடைக்கட்டி, பழங்கள் ஆகியவற்றையும் பயன்படுத்துவார்கள்.
விலை – RM 1.50 – RM 7 (LKR 51 – 238)
ஓட்டக்-ஓட்டக் (Otak-Otak)

(asianinspirations.com.au)
ஒரேவகை உணவுகளையே தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாக உணர்ந்தால், இவ்வகை உணவுகளையும் ருசிபார்க்கலாம். பெரும்பாலும் ஓட்டக் எனும் இவ்வகை உணவை புரியும் படியாக சொன்னால், மீனை பயன்படுத்தி செய்யும் ஒருவகை கேக் எனலாம். இந்த உணவின் பிறப்பிடம் இந்தோனேசியாவாக இருந்தாலும், மலேசியாவிலும் இதன் தாக்கம் உண்டு. இதற்கென பிரத்தியேகமான மீனை கேக் போன்ற வடிவில் துண்டுகளாக்கி, அதனுடன் மரவள்ளிச் சாறு மற்றும் வாசனைத்திரவியங்களை உள்ளடக்கி, பைன்மர இலைகளால் அல்லது வாழையிலையினால் முழுமையாக மூடி, நெருப்பில் வாட்டி உருவாக்கப்படும் உணவாகும். இவை உடனடியாக சமைக்கப்படுபவையாக அல்லது பதனிடப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுவகையாக உள்ளன.
விலை – RM 5 (LKR 170)
இவற்றினை தவிரவும், அயம் பெரிக் (Ayam Perik), ரெண்டங் (Rendang), புபூர் (Bubur), சம்பல் உடாங் (Sambal Udang) என்கிற மலேசிய வாசனைத்திரவியங்களையும், கடலுணவுகளையும், மாமிசங்களையும் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்படுகின்ற வேறுபட்ட கறிவகைகளும் உள்ளன. மலேசியா அரிசி சார்ந்த உணவுகளை அதிகமாக கொண்டுள்ளதால், இவ்வகை கறிகளையும் விதவிதமாக அவற்றுடன் இணைத்து இவற்றின் சுவையினை அனுபவிக்க முடியும்.
மலேசியா எப்படி பரந்துபட்ட எல்லைகளைக் கொண்டுள்ளதோ, அதுபோலவே அதன் உணவுசார்ந்த எல்லைகளும் ஒரு ஆக்கத்தில் அடக்கமுடியாத பல்வகமையைக் கொண்டுள்ளது. இதுதவிரவும், மலேசியாவுக்கென பெயர்போன தனித்துவமான குடிபான வகைகள் வேறாக உள்ளன. அவற்றினையும், அதன் வரலாற்றினையும் கண்டறிய தனி ஆக்கமே வேண்டும்.
மேலே குறிப்பிட்ட மலேசிய உணவுவகைகள் தவிர்த்து, நான் தவறவிட்ட ஏதேனும் சுவாரசியமான உணவுவகைகள் இருப்பின், மலேசியாவில் உள்ளவர்களோ அல்லது மலேசியா சென்று வந்தவர்களோ முகநூல் வழியாக அல்லது கருத்துரை வழியாக ஏனையவர்களுக்கு தெரியப்படுத்தலாம்.