Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

அகோரிகளின் நகரமா காசி?

காசிக்கு நீங்கள் எப்பொழுது சென்றாலும், காசி உங்களுக்கு பல புல்லரிக்கும் அனுபவத்தைக்  கொடுக்கும். அதற்கு  நீங்கள் ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம்  இல்லை. அப்படிப்பட்ட அனுபவம் எங்களுக்கும் கிடைத்து. மணி 7 ஆகும்போது போய் ‘’கங்கா ஆர்த்தி’’  பாருங்க கண்டிப்பா உங்களுக்குப்  புடிக்கும்னு படகோட்டி தாத்தா சொல்ல, நானும்  நண்பனும் ‘’கங்கா பூஜா கரானாகே’’ என்று ஹிந்தியில் வழிகேட்டு , ஒரு வழியாய் கங்கா படித்துறைக்குச்  சென்றோம் . நல்ல கூட்டம் பாதிக்குப்  பாதி வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்தான் கையில் ஒரு கேமராவோடு  இருந்தார்கள். அந்த பூஜையை கங்கை ஆற்றின் மீது படகில் இருந்தபடியே பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். இருந்தாலும் நமக்கு அது கட்டுப்படி ஆகாது என்பதால் கூட்டத்தோடு ஐக்கியமாகி நின்றோம் ( இங்கும் 2௦௦ கேக்குறாங்க ,நிக்கிற படகுக்குமாடா ! ).

வாரணாசி. pixabay

நான்கு இளம்வயது பூசாரிகள் ஒரே மாதிரி பட்டுடை அணிந்து, அவர்களுக்கென  இருந்த இடத்திற்கு வந்து நின்றார்கள். அவர்களின் முன் பூசை பொருட்கள் இருந்தது . நால்வரும் மண்டியிட்டு கங்கையை வணங்கி அவர்களிடம் இருந்த சங்கை ஒவ்வொன்றாக ஊதினார்கள் . அந்த ஓசை நதிக்கரையின் மறுபுறம் பட்டு எதிரொலித்த அந்த உணர்வு உண்மையில் புல்லரித்துதான் போனது. பின் ஏதோ ஒரு ஹிந்தி சாமி பாடல் ஒளிபரப்பானது , அதற்கு தகுந்த வண்ணம் மந்திரம் ஓதிக்கொண்டே பூசையைத்  துவங்கினார்கள் அப்படியென்றால் அது கடவுள் மந்திரம் செபிக்கும் பாடல்தான் என்று புரிந்து கொண்டோம். அருகில் இருந்த  வெளிநாட்டுக்காரர் எதற்கு இப்படி உடல் அசைவுடன் கூடிய ஒரு வழிபாடு என்று அவரின் வழிகாட்டியிடம் ஆங்கிலத்தில் கேட்க ,நடனத்தின் கடவுளே சிவன் தான் என்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த வழிகாட்டி.

கங்கா ஆர்த்தி.  pixabay

முதலில் சாம்பிராணி , மயிலிறகு ,பின் ஒரு மெல்லிய துணி என்று ஒவ்வொரு பொருளைக் கொண்டும் நான்கு புறமும் பூசை செய்ய ஆரம்பித்தார்கள் ,பின் பல அடக்கு தீபத்தைக்  கொண்டு கங்கையைப்  பூசித்தார்கள், ஒவ்வொரு முறையும் பூசை முடிந்த பின்பு  பயன்படுத்திய  அந்த பொருளை நீர் விட்டு சுத்தம் செய்தபின்தான் வைத்தார்கள் .இப்போது அனைவரும் உற்சாகமாக  “ஹர ஹர மஹா தேவா” என்று ஒற்றை குரலில் சொல்ல நாக வடிவிலான  தீபத்தால் பூசை செய்தார்கள் ,அவர்கள் நெருப்புடன் ஒரே நேர் கோட்டில் நின்று, பின் குனித்து, சுற்றி என செய்த அனைத்தும் பக்தியைத்  தாண்டி ரசிக்கும்படியும் இருந்தது .நெருப்பு கையில் இருந்தும் இசைக்கு தகுந்தாற்போல் நான்கு புறமும் அதை அவர்கள் கையாண்ட விதமும் சுத்தி இருக்கும் பக்தர்களின் ஒற்றை கோஷமும் என அந்த இடம் தரும் அனுபவம் முற்றிலும் புதிதுதான்.பூசை முடிந்ததும்  அனைவரும் தீபங்களை வாங்கி ஆற்றில் விட ஆரம்பித்தார்கள். வழக்கம்போல் 2௦ரூபாய் தீபத்தை கொடுத்து 20௦ என வெறி ஏத்திக்கொண்டிருந்தனர். பொட்டுவைக்கவோ , சடங்குகளை பின்பற்றவோ வெளிநாட்டவர் எந்த தயக்கமும் காட்டவே இல்லை நண்பன் ஆங்கிலத்தில் ஒரு வெள்ளைக்காரப்  பெண்ணிடம் இதைக்  கேட்டும் விட்டான் ( அடப்பாவி ஆரம்பத்துல இருந்து ,அது என்ன பாத்து சிரிச்சுட்டே இருந்துசு. இவன் பேசிட்டானே என்ற கடுப்பில் நான் அருகில் இருந்தேன் ) கடவுள் எல்லாம் ஒருத்தர்தான், நாமதான் நமக்கு பிடிச்சமாதிரி கும்புடுறோம்னு கண்களை சிமிட்டியபடி சொல்லி பறந்தது அந்த வெளிநாட்டு பறவை .

கங்கா ஆர்த்தி-2. pixabay

இரவு கார்ணிக்கா படித்துறைக்கு (மயானம்) அருகில் இருக்கும் குறைந்த விலை விடுதி ஒன்றில் அறை எடுத்தோம்( வெறும் 4௦௦ ரூபாய்தான்) . அந்த விடுதியை எங்களுக்குக்  காட்டிய நபர் உங்களுக்கும் புகைக்க வேண்டும் என்றால் கீழே வாருங்கள் என்று புன்னகைத்தார். “ஆம் கஞ்சாவே தான், காசியில் இதற்கு அனுமதி உண்டு, பயப்பட வேண்டாம் என்றும் சொன்னார்”. நான் நண்பனைப்  பார்க்க பெரிய கும்புடு போட்டு என்னை அழைத்துச் சென்றான். விடுதி வாசலைத்  தாண்டினால் மயானம், போய்தான் பார்ப்போமே என்று வந்தோம். ஆர்பாட்டமே இல்லாமல் பிணம் ஒன்றை முழுவதும் துணியால் சுற்றிக் கொண்டு வந்தார்கள். நதிக்கரையில் வைத்துதான் எரிக்கிறார்கள் நான்கு பிணம் எரிந்துகொண்டிருந்தது. நண்பன் வழக்கம்போல் போட்டோ எடுக்க ஆரம்பித்தான் .அப்போது ஒரு கை என் தோளைத்  தொடவே, திடுக்கிட்டு திரும்பினேன் , அதே கஞ்சா ஆசாமி நின்றார் புகைத்துக்கொண்டே.

 

எரிக்கப்படும் பிணங்கள்

“ஒரு நாளைக்கு எத்தனை பிணம் எரியும்?”என்றேன் .கணக்கு இல்லை என்றார். ஆனால் அதிலும் சில கட்டுப்பாடு இருக்கிறது ,1௦ வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் , அகோரிகள் ,சிவனடியார்களை எரிக்க மாட்டர்களாம் அவர்கள் சிவனின் அங்கமாகப்  பார்க்கிறார்கள். நாங்கள் பேசுவதைக்  கேட்ட எரிக்கும் நபர் “இப்போது இங்கும் மின்மயானம் வந்துவிட்டது, இருந்தும் இந்த நெருப்பு அனைவதே இல்லை” என்றார். ஆண்களின் மார்புப்  பகுதியும், பெண்களின் இடுப்புப்  பகுதியும் நீண்ட நேரம் எரியுமாம். சில நேரம் அதை ஆற்றில் விட்டுவிடுவோம் என்றார் .( இது தெரியாம 2, 3 தடவ குழுச்சுட்டேனே ! ) அது போன்று மேல் சொன்ன சிவ வடிவமாக பார்க்கும் நபர்களையும் அப்படியே ஆற்றில் விட்டுவிடுவார்களாம். இது தவிர்த்து ஹரிசந்த்ரா படித்துறையும் மயானமாக உள்ளது என்றார்.

கங்கையில் விடப்படும் பிணம்

( ராஜா ஹரிச்சந்திரா இந்த நாட்டை ஆண்ட மன்னன் எனவும், அவரும் விதி வசத்தால் வெட்டியானாக இருந்தார் எனவும், அதனால் அந்த இடத்திற்கு  அவர் பெயர் எனவும் கூறுகிறார்கள். நமக்கு நம்ம ஊர் அரிச்சந்திர மயான காண்டம் நினைவுக்கு வருது..)

“ஆமா அகோரிங்கள எங்க பாக்கலாம்?” என்றேன். பலமாகச்  சிரித்துவிட்டு “அகோரிங்க சாதாரணமாக சாமியார்  மாதிரிதான் சுத்துவாங்க, தங்களை அகோரின்னு காட்டிக்க மாட்டங்க. நாம அவங்கள பின் தொடர்வது பிடிக்காமதான், அவுங்க உடைகள் இல்லாம திருநீற பூசி சுடுகாட்டுல இருக்காங்க. ஆனா நாம அப்படியும் அவுங்கள விடுறது இல்லை”னு சொல்லி மீண்டும் சிரித்தார். “மனுஷ கரி சாப்பிடறது உண்மையா அத பாக்க முடியுமா ?” என்றேன். “இங்க வரவங்கலாம் இப்படித்தான், இங்க இருக்க அகோரி  எல்லாரும் மனித மாமிசம் சாப்டுவாங்கனு நினைக்குறீங்க. ஆனா உண்மை என்னன்னா மிகவும்  கம்மியான அகோரிங்க மட்டும்தான் அப்படிப்  பண்றாங்க அதுவும் ஒரே ஒரு பிரிவு அகோரிங்க மட்டும் தான். ( தங்களை யாரும் அணுகக்  கூடாது என்பதற்காக, இறந்த அந்த நபருக்கு மோட்சம் கொடுக்க என்று பல கதைகள் சொல்லப்படுகிறது.) பெரும்பாலும் கால பைரவரை முதன்மையாகக்  கொண்டு இயங்கும் நாக அகோரிகள்தான் அப்படிச்  சாப்பிடுவது” என்று கூறினார்.

அகோரி. pixabay

‘சென்ற மாதம் உங்க தமிழ்நாட்டுல இருந்துகூட ஒரு அகோரி வந்தார் ,அவரும் இப்படித்தான் விளக்கம் சொன்னார்’ என்று  நம்ம கஞ்சா ஆசாமி ஆரம்பித்தார். இங்க திடீருன்னு கும்பலா , தனியானு  வருவாங்க நதிக் கரைக்கு அந்த பக்கம் தங்கி நதியில வர பிணத்தை வச்சோ, சுடுகாட்லயோ பூசை பன்னுவாங்க. ஆனா யாரையும் தொந்தரவு செய்யமாட்டங்க என்றார். ‘நண்பா போடோஸ்லாம் செம ! ஒரு வாரத்துக்கு பேஸ்புக் செத்துச்சு’ என்று வந்தான் பிரபா. திரும்பினால் கஞ்சாஆசாமியோ, எரிகாட்டில் இருந்த நபரோ யாரும் இல்லை. அங்கு பிணம் மட்டும்  தீ சுவாலையில் எரிந்துகொண்டிருந்தது. வந்தவங்க அகோரியா  இருக்குமோ? என்று யோசிக்கும்போது, “அறையில் பைகளை வைத்துவிட்டு நாளை காலையாவது சாமியைப்  பார்க்கவேண்டும் வா!” என்று .அறைக்கு இழுத்துச்  சென்றான் நண்பன். என் கண்கள் அவர்களையே தேடியது.

காலை ,கோவிலை நோக்கிச்  சென்றோம் .வழியெல்லாம் ஒரே  லஸ்ஸி கடைகள் தான் ,வித விதமான லஸ்ஸிகள். 1௦ ரூபாயில் இருந்து 1௦௦ ரூபாய் வரை இருந்தது .கண்டிப்பாகப் பருகலாம், மிகச் சிறந்த ருசி. மிகக்  குறுகிய பாதையின்  வழியாக கோவிலுக்குச்  சென்றோம் .பெண்களை சோதிக்க பெண் போலீஸ் இருந்தாலும் தனி வரிசையோ தனி இடமோ இல்லை அவர்கள் பெண்களைச்  சோதிப்பதை பார்க்கும்போது அத்தனை கோபம் வந்தது. மிகச் சிறிய கோவிலாகத்தான் இருந்தது ( தொடர் படையெடுப்பில் அழிந்துவிட்டது அல்லவா) அங்கேயும் தனி பூசைகள் செய்ய பூசாரிகள் வரிசையாக உள்ளனர் . மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்தில் இருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார்.லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத்  தகடு உள்ளது. லிங்கத்தின்மேல் ஒரு பாத்திரம் கட்டித்  தொங்க விட்டுள்ளார்கள் .அதிலிருந்து கங்கா தீர்த்தம் சொட்டுச்  சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிசேகம் செய்கிறது. இங்கிருக்கும் லிங்கம் மிகவும் புனிதமான லிங்கமாக கருதப்படுகிறது.

காசி விசுவநாதர். indianmandirs

மோட்சத்தின் கடவுளை அருகில் இருந்து பார்த்தாகி விட்டது என பிரபா சொன்னான் ,அன்பே சிவம் என்று நான் சிரிக்க .அன்று இரவு பஞ்சாப்பில் இருக்கும் பொற்கோவிலை பார்க்க ரயில் புக்கிங் உறதியாகிவிட்டது என்று நண்பன் நினைவூட்ட அறையை நோக்கிச்  சென்றோம். இப்போதும் சொல்லிவைத்தார் போல் பிணம் எங்களுக்கு முன் சென்றது. ஏன்டா நம்ம ஊர்லலாம் பிணம் வீட்டத்  தாண்டி போனா  குடம் நெறைய தண்ணியக்  கொண்டுவந்து வீட்டு வாசல்ல ஊத்துவாங்க . இங்கலாம் என்ன பண்ணுவாங்கடா ! யோசிப்பது போல் முகத்தை வைத்துகொண்டு கேட்டான் பிரபா. மரணத்தை வரவேற்கும் ஊரு பங்காளி இதுவும் கடந்துபோகும்னு போயிருவங்கனு சொல்ல மீண்டும் புகைபடம் எடுக்க ஓடினான் .

இரவு பஞ்சாப்பிற்கு  ரயில் ஏறனும். மீண்டும் 1௦௦௦ கி.மீ பயணம் அங்கு எங்களுக்கு நடக்கபோகும் சில சம்பவங்கள் பற்றி கொஞ்சமும் தெரியாமல் பயணத்திற்கு தயாரானோம். விடுதியின் வாசலை அடைந்ததும் ,அப்போதுதான்  ஒரு பிணத்திற்குக்  கொல்லி வைத்துச்  சத்தமாக சங்கை ஊதிப்  பாடத்  தொடங்கினார்  வெட்டியான். இறப்பு உறுதி என்று தெரிந்தும் ஆடும் மனிதா இறந்த பின்னாவது அமைதிகொள் . ஹர ஹர மஹா தேவ்….

( அவர் ஹிந்தியில் தான் பாடுனாரு மொழிபெயர்ப்பு நம்ம தோடா தோடா ஹிந்தி மாலும் நண்பன் பிரபா)

Related Articles