வாகனத் தட்டுப்பாடு, பேரூந்துகளில் சன நெரிசல், கடமைகளுக்கு உரிய நேரத்தில் சமுகமளிக்க முடியாது திண்டாடும் ஊழியர்கள் என தனது அன்றாட வாழ்க்கையில் அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளில் தங்கியிருக்கும் நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள் அவதியுற்று மனம்குமுறிய ஓர் நாளைக் கடந்திருக்கிறோம். வீதிப்போக்குவரத்து சம்பந்தமாக வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. எது சரி, எது பிழை, எது யாருக்கு நல்லது இப்படி பல கேள்விகளோடும் ஆய்வுகளோடும் மணிகள் கடந்தவண்ணம் இருக்கின்றன.
பாதீட்டில் முன்மொழியப்பட்டு டிசம்பர் மாத ஆரம்பத்திலிருந்து அமுலுக்கு வருவதாகக் கூறப்பட்ட வீதிப்போக்குவரத்தில் இடம்பெறும் 7 விதி மீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகையாக ரூபா 25,000 இனை நீக்கக்கோரி 28 பேரூந்து மற்றும் முச்சக்கரவண்டித் தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவிலிருந்து ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பே இதற்குக் காரணமாகும்.
பெரும்பாலான தனியார் பேரூந்துகளும் முச்சக்கரவண்டிகளும் நேற்று நள்ளிரவிலிருந்து இப்பணி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதீட்டில் குறிப்பிடப்பட்ட அவ்வேழு விதிமீறல்களும் யாவை?
வீதிப்போக்குவரத்தில் குறைந்தபட்ச அபராதம் ரூபா 25,000 விதிக்க முன்மொழியப்பட்ட விதிமீறல்கள் பின்வருமாறு;
- மதுபோதையில் வாகனம் செலுத்தல்,
- செல்லுபடியாகும் வாகன காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தல்
- செல்லுபடியாகும் வாகன சாரதி அனுமதிபத்திரம் இன்றி வாகனம் செலுத்தல்
- விதிக்கப்பட்டதை விட அதிகரித்த வேகம்
- இடதுபக்கத்தால் வாகனத்தை முந்திச் செல்லல் ,
- பாதுகாப்பற்ற தொடரூந்து கடவைகளில் வாகனம் செலுத்துதல்
- உரிய வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் இன்னொருவரை தமக்குரிய வாகனத்தை செலுத்தப் பணித்தல்
இப்பணிப் பகிஷ்கரிப்பு எமக்குச் சொல்லும் பாடம் என்ன?
குறித்த ஏழு விதிமீறல்களையும் ஆராய்வோமாயின், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளில் ஏற்படும் குழறுபடிகள், வீதி விபத்துக்கள், பொருள் மற்றும் உயிர்ச் சேதங்கள் போன்ற, மக்களது அன்றாடப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்ற நடைமுறைகளுக்கு அஸ்திவாரமே இவ்வாறான விதிமீறல்கல்தான் என்றால் மிகையல்ல. இவை எவ்வாறாயினும் தவிர்க்கப்படவேண்டியனவே! அதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்னும் சொல்லப்போனால், இவ்வாறான விதிமீறல்கள் களையப்பட்ட வீதிப்போக்குவரத்தே ஆரோக்கியமானதுகூட.
இப்படிப்பட்ட விதிமீறல்களுக்கான அபராதத்தை மீள்பரிசீலனை செய்ய விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கைமூலம் வாகன தொழிற்சங்கங்கள் கூறவிழைவது என்ன? இவ்விதிமீறல்கள் எப்போதும் அவர்களால் புறக்கணிக்க இயலாதவை அத்தோடு தொடர்ந்தும் இவ்வாறான விதிமீறல்கள் நிகழ்ந்தவண்ணமே இருக்கப்போகின்றன, இதற்காக ஒவ்வொரு முறையும் இப்பெரும் தொகையை செலுத்துவது எம்மால் இயலாத காரியம், போக்குவரத்து ஒழுங்கு மற்றும் நாட்டு மக்களின் நலன் பற்றிக் கவலையில்லை, இப்பணிநீக்கம் மூலம் யாருடைய சகஜ வாழ்வு சீர்கெட்டாலும் பரவாயில்லை, நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்படப்போவதில்லை என்ற செய்தியை எமக்கு பறைசாற்றுவதாகவே உள்ளது. இப்படிப்பட்ட கோரிக்கைகளைப் பகிரங்கமாக முன்வைத்து வேலைநிறுத்தம் செய்யும் கலாச்சாரம் எமது நாட்டுக்கு வந்துசேர்ந்த துர்ப்பாக்கிய நிலை இந்நாட்டு மக்களனைவரும் சற்று நிதானித்துச் சிந்திக்கவேண்டிய ஓர் விடயமும் கூட.
பாதையில் ஒழுங்குவிதிமுறைகளை சரிவரப் பின்பற்றி செல்லும்போதும், வருகிறவன் எம்மீது மோதிவிடக்கூடாது என்ற பீதியிலும், கைவந்த பாட்டிலெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக தாறுமாறாய் வாகனம் செலுத்துபவனைத் திட்டித் தீர்த்தபடியுமே அனேகரது பயணங்கள் தொடர்கின்றன. இப்படியே போனால், சில விதிமீறல்கள் அனைவருக்கும் பழகிப்போன ஓர் விடயாமாக புறக்கணித்து விடப்படும் காலம் வந்தாலும் வரலாம்.
இது தொடர்பாக அரசின் நிலை என்ன?
இவ்வேலைநிறுத்தம் மக்களின் அன்றாடப் போக்குவரத்தில் ஏற்படுத்தப்போகும் இடர்பாடுகளை இயன்றவரை குறைக்கும் பொருட்டு மேலதிகமாக 6500 அரச பேரூந்துகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த தொழிற் சங்கங்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து இவ்வபராதம் தொடர்பான மீள்பரிசீலனை பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதில் 1. விதிக்கப்பட்டதை விட அதிகரித்த வேகத்தில் வாகனத்தைச் செலுத்துதல் மற்றும் 2. இடதுபக்கத்தால் வாகனத்தை முந்திச் செல்லல் போன்ற விதிமீறல்களின் அபராதத்தின் மீள்பரிசீலலனை குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாத தனியார் பேரூந்துகள் மற்றும் முச்சக்கரவடிகளும் கடமையில் ஈடுபட்டிருந்த அரச பேரூந்துகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கொழும்பு-நீர்கொழும்பு புகையிரதப் பாதையை மறித்து முச்சக்கரவண்டிச் சாரதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவல் துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நாட்டின் பல இடங்களிலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன.
இதனிடையே பேரூந்து சங்கங்கள் தங்களது போராட்டத்தை உடனடியாகக் கைவிடுவார்களேயாயின் அவர்களது கோரிக்கை தொடர்பாக மீள்பரிசீலணை செய்வதுபற்றிய பேச்சுவார்த்தைக்குத் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் இவ்வேலைநிறுத்தம் தொடருமாயின் தனியார் பேருந்து உரிமையாளர்களின் வழித்தட அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போராட்டம் மூலம் தொடர்ந்துசெல்லும் போக்குவரத்துத் தொடர்பான இடர்பாடுகள் மற்றும் அதன்மூலம் ஏற்படுத்தப்படும் விளைவுகளைக் கருத்தில்கொண்டு வழமைபோல அரசு இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமா? இல்லை தனது முடிவுகுறித்து உறுதிநிலையைப் பேணுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இச்சட்டதிட்டங்கள் மூலம் நினைத்த பலன் கிட்டுமா?
ரூபா 25,000 என்பது இன்றைய நாட்டின் நிலைமையில் ஓர் பெரும் தொகை. மேற்குறிப்பிட்ட விதிமீறல்களோ நொடிக்கொருதரம் சர்வ சாதாரணமாக நிகழ்த்தப்படுபவை. இலங்கையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் எந்தவொரு குடிமகனுக்கும் இச்சட்டம் தொடர்பான ஓட்டைகள் தெளிவாக விளங்கும்.
நடக்கின்ற எல்லா விதிமீறல்களும் காவல்துறையின் கவனத்திற்கு வரப்போவதில்லை. அவ்வாறு காவல்துறையால் இனங்காணப்படுகின்ற விதிமீறல்கள் தொடர்பான செயன்முறைகள் அபராதப்பணமான ரூபா 25,000 இனைப் பெற்றுக்கொள்ளும் வரையில் நீளுமா இல்லையா என்பது இங்கு எழும் பெரும் கேள்வி. அப்படி நடக்கின்ற ஒவ்வொரு விதிமீறல்களுக்குமான அபராதத் தொகைகள் ஒரு வார காலம் முழுமையாக வசூலிக்கப்பட்டாலே இலங்கை எங்கேயோ போய்விடும். இது சாத்தியமா? சாத்தியம் இல்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன? யாரை நாங்கள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்போகிறோம்? மூளையைக் குடைந்து யோசிக்க இதுவொன்றும் அப்படியொரு ஏவுகணை விஞ்ஞானம் அல்ல.
பாதீட்டில் இப்படியொரு சட்டத்தை இயற்றத் தயாரான அரசுக்கு மட்டும் இது தொடர்பில் உள்ள ஓட்டைகள் தெரியாமல் போனது எப்படி? இது இன்னுமொரு பெரும் தலைப்பு. இப்போது பொதுமக்களாகிய எமது நிலையைப்பற்றி சிந்திக்க முற்படுவோம்.
பொதுமக்களின் நிலை?
அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் இவ்விருதரப்புக்குமிடையே எல்லாவகையிலும் சிக்கித்தவிப்பது நடுத்தர மற்றும் ஏழை மக்களே. இச்சட்டம் அமுலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் இவ்விரு நிலைகளிடையே போராட்டங்களாக வெடித்தாலும் பாதிப்பு என்னவோ பொதுமக்களுக்கே. விதிமீறல்களினால் ஏற்படும் பொருள், உயிர்ச் சேதங்களும் அவர்களுக்கே, போராட்டகாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், வாகன வசதியின்மை போன்ற காரணங்களால் அவதியுறுவதும் அவர்களே, இச்சட்டதிட்டங்கள் நடைமுறைக்கு வந்தாலும் இவர்கள் படப்போகும் பாடு முற்றாக முடிந்துவிடாது என்பதும் உண்மையே.
இருந்தாலும் இச்சட்டங்களின் அமுல்படுத்தல்மூலம் இவ்விதிமீறல்கள் ஓரளவேனும் குறைக்கப்படும் என்னும் உண்மையையும் மறுப்பதற்கில்லை. எனவே இருக்கின்ற தேர்வுகளின் அடிப்படையில், அதிகாரிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகள் கணிசமான அளவு நடக்கும் பட்சத்திலும் நாட்டுக்காகவும், நாட்டின் சட்ட ஒழுங்குகளை நிலைநாட்டவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பல அதிகாரிகளும் எம்முள் இருக்கின்றனர் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. எது எவ்வாறாயினும், இப்போராட்ட காலத்தில் ஏற்படுகின்ற அல்லலை ஓர் உயரிய நோக்கத்திற்காக பெருமனம்கொண்டு பொறுத்து எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஓர் பெரிய சமூக மாற்றத்துக்கான ஆரம்பமாய் இத்தருணத்தை எதிர்கொள்வதே சாலப்பொருத்தமாக அமையும்.