Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தலையெடுக்கும் வேலையில்லா பிரச்சனை

இன்றைய இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்த நிலையில், இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க “வெளிநாடுகளில் வாழும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட திறன்மிகு தொழிலாளர்களை” இலங்கைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, கடந்த வருடம் இடம்பெற்ற மனித மூலதன மாநாட்டில் தெரிவித்திருந்தார். இங்கேயே வேலையில்லா திண்டாட்டம் உள்ளநிலையில், திறன்மிகு தொழிலார்களை மேலும் நாட்டிற்குள் கொண்டுவருவதென்பது நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றா? இதன்மூலம், எத்தகைய நன்மை, தீமைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?

வெளிநாடுகளில் உள்ள திறன்மிகு தொழிலாளர்களை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாட முன்பு, இலங்கையில் உள்ள வேலையின்மை நிலையின் மோசமான சூழலை அறிந்துகொள்வது அவசியமாகிறது.

தெற்காசியாவில் இலங்கையின் வேலையின்மை நிலை

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து இலங்கையின் வேலையில்லா பிரச்சினை குறைவாக உள்ளது ஓர் சிறப்பான அறிகுறியாகும். குறிப்பாக, இலங்கையில் வேலையில்லா பிரச்சனையின் அளவு 5.1% ஆக உள்ள நிலையில், இந்தியா 8.0% ஆகவும், பாக்கிஸ்தான் 6.5% ஆகவும், வங்கதேசம் 5% ஆகவும், நேபாளம் 46% ஆகவும் உள்ளது. ஆயினும், இலங்கையை விட அபிவிருத்தியில் பின்தங்கிய பூட்டானில் இது 2% ஆக உள்ளமை கவனிக்கபட வேண்டியதாகும்.

இலங்கையின் இளைஞர் வேலையின்மை நிலை

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் (static.ft.lk)

இலங்கையின் ஒட்டுமொத்த வேலையில்லா பிரச்சினையில், இளைஞர் வேலையின்மை நிலையானது, மோசமானதாகவே உள்ளது. இந்த வேலையின்மை நிலையை நாம் இரு வகையாக பார்க்க முடியும்.

  • முற்றுமுழுதாக வேலையின்மை நிலை.
  • தகுதிக்கான வேலையின்மை நிலை.

குறிப்பாக, 15-19 வயதுக்குட்பட்டவர்களில் 2014-ல் 21.4% மானவர்களும், 2015ல் 24.1%மானவர்களும் வேலையின்றி இருந்திருக்கின்றனர். அதுபோல, 20-24 வயதுக்குட்பட்டவர்களில் 2014 மற்றும் 2015ல் 19.9% மானவர்கள் வேலையற்றவர்களாக உள்ளார்கள் என இலங்கை மத்தியவங்கியின் தரவுகள் குறிப்பிடுகிறன. இலங்கையில் மேற்கூறிய வயதெல்லை சாதாரண தரத்திற்கும், பட்டபடிப்பினை முடிப்பதற்கும் இடைப்பட்ட காலப்பகுதியாக உள்ளதால் பெரும்பாலானவர்கள் வேலையற்றவர்களாக இருப்பது தொடர்பில் இலங்கையில் உள்ளவர்கள் சிந்திப்பதில்லை. ஆனால், இந்த வயதெல்லையில் உள்ள எத்தனைபேர் உயர்தர கல்வியை முறையாக கற்கிறார்கள்? எத்தனை பேர் மேற்படிப்புக்கான தகுதியினை பெற முடியாமல் உள்ளார்கள்? என்பது தொடர்பில் கவனத்தில் எடுப்பதில்லை.

மத்தியவங்கியின் தரவுகளுக்கு அமைய சாதாரண கல்வித்தகுதியுடன் 2014ல் 37.7% ஆனவர்களும், 2015ல் 34.4% ஆனவர்களும் வேலையற்றவர்களாக உள்ளார்கள். உயர்தர கல்வித்தகுதியுடன் 2014ல் 22.4% ஆனவர்களும், 2015ல் 24.4% ஆனவர்களும் வேலையற்றவர்களாக உள்ளார்கள். பல்கலைக்கழக தெரிவில் காட்டப்படும் இறுக்கமான நிலை, தனியார்கல்வியில் ஏற்பட்டுள்ள செலவின அதிகரிப்புக்கள் என்பன இவ்வாறு வேலையற்று இருப்பவர்களில் பலரும் மேற்படிப்பினை தொடர்வதில் பிரச்சனையாக உள்ளது. இதனால், சாதாரண மற்றும் உயர்தர கல்விநிலையுடன் உள்ளவர்கள் சந்தையில் பொருத்தமான தொழிலையோ அல்லது தொழிற்துறையினையோ தேர்வு செய்வதில் சிக்கல் நிலையை எதிர்கொள்ளவேண்டி உள்ளது.

20-24 வயதுக்குட்பட்டவர்களில் 2014 மற்றும் 2015ல் 19.9% மானவர்கள் வேலையற்றவர்களாக உள்ளார்கள் என இலங்கை மத்தியவங்கியின் தரவுகள் குறிப்பிடுகிறன (dailynews.lk)

இலங்கையை பொறுத்தவரையில் இரண்டாம் நிலையான தகுதிக்கான வேலையின்மை நிலை ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுக்க தொடங்கியுள்ளது. எளிமையாக விளக்குவதெனில், படித்த படிப்பிற்கு பொருத்தமான வேலையினை பெற்றுக்கொள்ள முடியாமல், கிடைத்த வேலையினை செய்கின்ற நிலையாகும். இது, முற்றுமுழுதாக வேலையின்மை நிலையில் உள்ளவர்கள் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதிலும் அதிகமாக தாக்கத்தை செலுத்துவதாக அமையும்.

உதாரணமாக, இலங்கையில் உள்ள சுமார் 7.8 மில்லியன் வேலையாட்களில் 1.2 மில்லியன் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களாக உள்ளார்கள். இது ஒட்டுமொத்த வேலையாட்கள் தொகையில் 15.4% ஆகும். இந்த தொகையில் 28 வயதுக்குட்பட்டவர்கள் 28% ஆகவும், 38 வயதுக்குட்பட்டவர்கள் 67% ஆகவும் உள்ளார்கள். இவர்களில் சரிபாதிக்கு மேலானவர்கள் சாதாரண மற்றும் உயர்தர கல்வியினை முறையாக பூர்த்தி செய்தவர்களாகவே உள்ளார்கள். இதனை விடவும், வருடம்தோறும் குறித்த வயதெல்லைக்குட்பட்ட 14% ஆனவர்கள் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களாக இணைந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே, அடிப்படை கல்விக்கு அப்பால் தொடர்ச்சியாக கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளவர்களாக, உடனடியாக குடும்பம்சார் பொருளாதார நிலையினை சீர்படுத்தவேண்டிய தேவை இருப்பவர்களாக, படிப்பிற்கு இணையான தொழிலை பெற்றுக்கொள்ளுவதில் சிரமநிலை காணப்படுபவர்களாக முச்சக்கரவண்டிக்குள் வாழ்க்கையை தொலைத்தவர்களாக உள்ளார்கள்.

மேற்கூறிய முச்சக்கரவண்டி உதாரணமானது, குறித்த ஒரு துறையில் இலகுவாக எடுத்துக்காட்டக்கூடிய தகுதிக்கான வேலையின்மை நிலையாளர்களின் நிலையாகும். இதனால், உண்மையிலேயே முச்சக்கரவண்டியை ஆதார வருமானமாக நம்பியிருக்கும் சொற்ப தொகையினரும் தமது வருமானத்தை படித்த அல்லது தகுதிக்கான வேலையினை பெற்றுகொள்ள போராடும் இளம் சமூகத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு பகிரவேண்டிய நிலை உள்ளது. இதுபோன்று, வெவ்வேறு துறைகளிலும் சங்கிலித் தொடராக இந்த குறைபாடு நிலவிக்கொண்டே இருக்கிறது.

வேலையின்மை நிலை Vs திறன்மிகு தொழிலாளர் இறக்குமதி

(chinadaily.com)

மேற்கூறிய தரவுகளும், விடயதானங்களும் வேலையின்மை நிலை இலங்கையில் எவ்வாறு உள்ளது என்பதனை ஓரளவுக்கேனும் உணர்த்தி இருக்கும். இந்த நிலையில், திறன்மிகு தொழிலார்களை இலங்கைக்கு கொண்டுவருகின்றபோது அதன் மூலமாக தகுதிக்கான வேலையின்மை நிலை மேலும் அதிகரிப்பதுடன், அது முற்றுமுழுதாக வேலையின்மை நிலையில் உள்ளவர்களையும் பாதிக்கவே செய்யும். எனவே, இத்தகைய நிலையினை ஈடுசெய்ய இலங்கை தயாராக உள்ளதா? என சிந்திக்கவேண்டிய கட்டத்தில் நாம் உள்ளோம்.

இலங்கையை பொறுத்தவரையில், நாம் தற்போது வேகமான அபிவிருத்தி நிலையில் உள்ளோம். இந்தநிலையில், நம்மை மேலும் வளப்படுத்திக்கொள்ள திறன்மிகு தொழிலாளர்களின் வழிகாட்டலும், உதவியும் இன்றியமையாததாக உள்ளது.

உதாரணத்திற்கு, சுற்றுலாத்துறையில் தற்போதைய காலகட்டமானது மிகவும் முக்கியமான காலகட்டமாகும். பெரும்தொகையான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு படையெடுக்க தொடங்கி உள்ளார்கள். எனவே, இவர்களுக்கு ஏற்ற சேவையினை வழங்கக்கூடிய அளவுக்கு பொருத்தமான திறன்மிகு சேவையாட்களை நாம் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், யதார்த்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் குறைபாடுகளில் ஒன்று பொருத்தமான சேவை வழங்குனர்கள் இன்மை என்பதாகும். இதனால், திறன்மிகு தொழிலார்களை இலங்கைக்குள் கொண்டுவருவது தவிர்க்கமுடியாததாக அமைகிறது. ஆனாலும், அவ்வாறு கொண்டுவரப்படுபவர்கள் தனியே சுற்றுலா பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்பவர்காளாக மட்டுமல்லாது, சேவை வழங்கல் தொடர்பில் இலங்கையில் உள்ள ஊழியப்படைக்கு பயற்சிகளை வழங்குபவர்களாக அமைய வேண்டும். இந்த பொறிமுறையே இலங்கைக்கு தற்போதைய நிலையில் அவசியமானதாக உள்ளது. இதன்மூலமாக, சுற்றுலாப்பயணிகளிடத்து இலங்கையின் தரத்தினை பேணமுடிவதுடன், எதிர்காலத்தில் இலங்கையில் உள்ளவர்களையே பயன்படுத்தி எந்தவித தரக்குறைவுகளுமின்றி சேவையினை வழங்கக் கூடியதாக அமையும்.

இவ்வாறே, சகலதுறைகளிலும் திறன்மிகு வெளிநாட்டு தொழிலார்களை தனியே நிகழ்கால தேவையை பூர்த்திசெய்ய மட்டுமே பயன்படுத்திக் கொள்ளாமல், அவர்களைக்கொண்டு இலங்கையின் ஊழியப்படையை எதிர்காலத்துக்கு ஏற்றால்போல தயார் செய்துகொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. இதன்விளைவாக, முதலில் தகுதிக்கான வேலையின்மை நிலையினை குறைக்கவோ அல்லது இல்லாது அழிக்கவோ முடியும். இதன்விளைவாக, முற்றுமுழுதாக வேலையின்மை நிலையில் உள்ளவர்களுக்கு வேலையினை பெற்றுகொள்ளக்கூடிய சாத்தியநிலை உருவாக்கப்படும்.

அதுமட்டுமல்லாது, தனியே அரசு திறன்மிகு தொழிலார்களை இலங்கைக்கு கொண்டுவருவதில் அக்கறை செலுத்துவதிலும் பார்க்க, இலங்கைக்கு பொருத்தமான புதிய வேறுபட்ட தொழிற்துறையை உருவாக்ககூடிய திறன்மிகு முதலீட்டாளர்களையும், அவர்கள்சார் தொழிலாளர்களையும் முதலீட்டு சலுகைகள் ஊடாக இலங்கைக்குள் கொண்டுவருவது அவசியமாகிறது. இதன்மூலமாக, புதிய தொழிற்துறைகள் இலங்கைக்குள் உருவாவதுடன், அதன்மூலமாக வேலையின்மை நிலைக்கும் தீர்வு ஒன்றினை வழங்ககூடியதாக அமையும்.

எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு அரசுமே முற்றுமுழுதாக வேலையின்மை நிலையினை இல்லாதொழித்துவிடமுடியாது. அதற்கான தீர்வை வழங்குவதும் சிக்கலான பொறிமுறையாகும். ஆனால், வேலையின்மை திண்டாட்டநிலை ஏற்படாதவகையில் பொறிமுறைகளை வகுப்பதும், அதுதொடர்பிலான திட்டங்களை நடைமுறைபடுத்துவதும் திறன்மிகு அரசினால் நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றாகும். அதனை இந்த நல்லாட்சிக்கான கூட்டு அரசானது செயல்படுத்துமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Articles