Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வரவு-செலவுத்திட்டம் – 2017, அறிந்துகொள்ளவேண்டியவை

கடந்தகாலங்களில் விலை மற்றும் வரியில் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட நிலையற்ற மாற்றங்கள், மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையீனங்கள் மற்றும் IMFஐ சமரசம் செய்வதுபோல இம்முறை வரவு-செலவுத்திட்டம் அமையப்போகிறது என்பதுபோன்ற பிரச்சாரங்கள் அனைத்துமே இம்முறை வரவு-செலவுத்திட்டம் தொடர்பிலான எதிர்பார்ப்பினை குறைவடையச் செய்திருந்தது எனக் கூறலாம்.

சொல்லிவைத்தாற்போல இம்முறை வரவு-செலவுத்திட்டமும் ஒருவித தெளிவற்ற தன்மையையே ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் மக்களின் எதிர்பார்ப்புக்களான சம்பள அதிகரிப்பு, ஓய்வூதிய அதிகரிப்பு, மானிய வழங்கல் போன்ற அம்சங்கள்   இடம்பெறாமல் போனமையும் வரவு-செலவுத்திட்டம் தொடர்பில் மக்களின் கவனத்தை ஈர்க்கத்தவறிவிட்டது என்றே சொல்லலாம்.

இம்முறை கவனிப்பாரற்று கிடக்கும் இவ்வரவு-செலவுத்திட்டம் எப்படியானது ? யாருக்குச் சாதகமானது? மக்கள் கவனிக்கவேண்டியவை என்ன ? பாதகமான விடயங்கள் என்ன ? பார்க்கலாம்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 70வது வரவு-செலவு திட்டம் எப்படியானது?

 

சாதாரண பொதுமகனின் பார்வையில், குறுகியகாலத்திற்கான (Short Term) எவ்வித நலனையும் கொண்டிராத ஒருவகை திட்டமாக இது தெரிந்தாலும், சற்று ஆழ்ந்து நோக்கும்போது இலங்கைக்கு நீண்டகாலத்தில் (Long Term) மிகப்பெரிய நலன்களை கொண்டுவந்து சேர்க்கும் அல்லது இலங்கை அபிவிருத்திப் பாதையில் பொருத்தமானவகையில் பயணிக்க உகந்த வரவு-செலவு திட்டமாக இது அமையும். 2020ம் ஆண்டில் ஏற்படுத்தவிருக்கும் அபிவிருத்திகளை அடிப்படையாகக் கொண்டு இம்முறை வரவு-செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இந்நீண்டகாலத் திட்டங்களுக்காக மக்கள் சில தியாகங்களை செய்யவேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றனர்.

வரிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன ?

படம் - expatica.com

இதுவரைகாலமும் மறைமுக வரிகள் மூலமே இலங்கை அரசு வருமானமூலங்களை ஈட்டி வந்தது. ஆயினும், இனிவரும் காலங்களில் நேரடி வரி வருமானத்தை 20%வீதத்திலிருந்து  40%வீதமாக  அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மறைமுக வரியினை 80%வீதத்திலிருந்து 60%வீதமாக குறைக்க முடிவு செய்யப்படுள்ளது. படம் – expatica.com

1. தனிநபர் வருமான வரி (Personal Income Tax)

கடந்த காலத்தில் தனிநபர் வருமான வரிக்கான ஆகக்குறைந்த வருடாந்த வருமான எல்லையாக ரூபா 500,000/- நிர்ணயிக்கபட்டிருந்தது. இம்முறை அந்த எல்லை ரூபா 600,000/- ஆக அதிகரிக்கப்படதுடன், உட்சபட்ச வருமானத்தை பெறுபவர்களின் வருமான வரி விகிதத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கவனிக்க வேண்டியவை அரசாங்கம் நேரடியாக ஊதிய அதிகரிப்பை சிபாரிசு செய்யாத போதிலும், வரிவிதிப்பிற்கான குறைந்தபட்ச எல்லையை அதிகரித்ததன் மூலம், வரிசுமையை குறைத்து இருக்கிறது. இதன்மூலம், கடந்தகாலங்களில் வரிவிதிப்புக்குள்ளானவர்கள் வரிச்சலுகையை அனுபவிக்க முடியும்.

2. PAYE (Pay As You Earn)

தனிநபர் மாதாந்த வருமானம் கடந்த வருடத்தில் ரூபா 65,000 க்கு மேலதிகமாக பெறப்பட்டபோது PAYE வரி அறவிடப்பட்டு வந்தது. தற்போதைய புதியவிதிமுறைகளின்படி, தனிநபர் மாதாந்த வருமானம் ரூபா 100,000 க்கு மேலதிகமாக பெறுபவர்களுக்கே இந்த வரி பொருந்தும்.

கவனிக்க வேண்டியவை அரசாங்கம் நேரடியாக ஊதிய அதிகரிப்பை சிபாரிசு செய்யாத போதிலும், வரிவிதிப்பிற்கான குறைந்தபட்ச எல்லையை அதிகரித்ததன் மூலம், வரிச்சுமையை குறைத்திருக்கிறது.

3. நிறுவன வருமான வரி (Corporate Income Tax)

இம்முறை நிறுவனங்களுக்கான வருமானவரி மூன்றுவகையாக முன்மொழியப்பட்டுள்ளது. நிறுவனங்கள், துறைகள், வருமானம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த மூன்றுவகை பிரிவு முன்மொழியப்பட்டிருக்கிறது.

மேலும் பொருத்தமான நிதி (Funds), பங்கிலாபங்கள்(Dividends), திறைசேரி ஊண்டியல்/முறி (Treasury Bond/Bill) ஆகியவற்றின் வரி 10% இலிருந்து 14% வரை அதிகரிக்கபட்டுள்ளது.

படம் - s3-eu-west-1.amazonaws.com

சமூகப் பங்களிப்பை பொருத்தமான வகையில் வழங்குவோருக்கு குறைந்த வரியையும், சமூகத்தில் பாதக தாக்கத்தை செலுத்தும் துறைகளுக்கு வருமானத்தில் அதிகவரியினையும் செலுத்தும் நிலையினை ஏற்படுத்தி இருக்கிறது. படம் – s3-eu-west-1.amazonaws.com

கவனிக்க வேண்டியவை கடந்தகாலங்களில் அனைத்து நிறுவனங்களுமே ஒரே மாதிரியான வரிவிகிதத்தில் தனது வருமானங்களை அடிப்படையாகக்கொண்டு வரியினை செலுத்தி வந்திருந்தன. ஆனால், இம்முறை சமூக பொறுப்புணர்வுக்கு ஏற்றாற் போல, சமூகப் பங்களிப்பை பொருத்தமான வகையில் வழங்குவோருக்கு குறைந்த வரியையும், சமூகத்தில் பாதக தாக்கத்தை செலுத்தும் துறைகளுக்கு வருமானத்தில் அதிகவரியினையும் செலுத்தும் நிலையினை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம், சமூகத்திற்கு பொறுப்புவாய்ந்த துறைகளில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க முதலீட்டாளர்களை ஊக்குவிக்க முடியும்.

4. With Holding Tax (WHT)

இம்முறை WHT 5% சதவீதமாக அதிகரிக்கபட்டுள்ளதுடன், கடந்த ஆண்டுகளில் சேமிப்பு வைப்பில் ரூபா 60,000/- க்கு குறைவான வருடாந்த சேமிப்பை பேணுபவர்களுக்கு சலுகை வழங்கப்பட்ட வரைமுறை நீக்கபட்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை இந்தவரி முறையானது கடந்தகாலங்களைவிட அதிகரித்து உள்ளமை பாதகமானது. 2.5% இலிருந்து 5% மாக அதிகரிக்கபட்டமை வருமான வழியில் தாக்கத்தை ஏற்படுத்தகூடும்.

5. பெறுமதிசேர் வரி (VAT)

வரவு-செலவுத்திட்டத்திற்கு முன்னதாக அதிகரிக்கப்பட்ட 15% என்கிற வரிவரம்பு தொடர்வதுடன், முதலீட்டு செயற்பாடுகளுக்கென கொள்வனவு செய்யப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பனவற்றுக்கும் வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

கவனிக்க வேண்டியவை நாளாந்த செயற்பாடுகளில் பெறுமதிசேர் வரியின் இறுதி நுகர்வோராக வாடிக்கையாளர்களே உள்ளமையால், இந்த வரி அதிகரிப்பு நேரடியாக பொதுமக்களை தாக்கமடையச் செய்வதுடன், வரிச்சலுகை வழங்கப்பட்ட முறைமை முதலீட்டாளர்களுக்கே நன்மை பயப்பதாகவுள்ளது.

6. நிதி பரிவர்த்தனைகளில் கட்டணம் அறவிடுதல் (Financial Transaction Levy)

இம்முறை வரவு-செலவுத்திட்டத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இம்முறைமை மூலம், ரூபா 10,000 பெறுமதியான பண பரிமாற்றங்களை வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் இலகு பணப்பரிமாற்றல் முறை (Easy Cash System) மூலமாக மேற்கொள்ளும்போது, அவற்றுக்குத் தலா 5/- ரூபா வீதம் அறவிடப்படும்.

கவனிக்க வேண்டியவை வங்கி உட்பட இலகு பணபரிமாற்றல் முறைகளின் ஊடாக ஒவ்வருமுறையும் பணத்தை திரும்பபெறும் போது 0.05% வீதமான கட்டணம் அறவிடப்படும். அதிகரித்துவரும் பணபரிமாற்றல் முறைகளை இதன்மூலம் அரசு தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளது.

7. மோட்டார் வாகன கட்டணம் அறவிடுதல் (Motor Vehicle Levy)

இம்முறை 1000cc க்கு குறைவான மோட்டார் வாகனங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதுடன், முச்சக்கர வண்டிகளின் பாவனையை குறைத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக்கொண்ட (Renewable Energy) மோட்டார் வாகன பாவனைக்கு ஊக்குவிக்கு வழங்க, முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு சலுகைக் கடனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை இலங்கை முழுவதும் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு சிறிய ரக வண்டிகளை எவ்வகையில் மாற்றங்களை அரசு செய்யப் போகிறது என்பதற்கு தெளிவானதன்மை இல்லாத போதிலும், இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு மானிய உதவிகளை செய்ய அரசு முன்வந்துள்ளமையானது இலங்கை அரசின் இதுதொடர்பான தீவிரத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது.

8. மூலதன ஆதாய வரி (Capital Gain Tax)

இம்முறை வரவுசெலவுத்திட்டத்தின் பிரகாரம், மூலதன ஆதாய வரி அறிமுகம் செய்யப்படுகிறது. ஒவ்வரு மூலதன ஆதாய பரிமாற்றத்தின்போதும் 10% வரி அறவிடப்படும்.

9. கார்பன் வரி (Carbon Tax)

எரிபொருளை பயன்படுத்துகின்ற அனைத்து வாகனப்பாவனையாளர்களும் கார்பன் வரியினை செலுத்தவேண்டியவர்கள் ஆவார்கள். இவ்வரியினை அறவிடும் பொறுப்பினை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொண்டிருக்கும்.

10. தொலைத்தொடர்புகள் கட்டணம் அறவிடுதல் (Telecommunication Levy)

இணைய சேவைகள் வழங்குனர்களின் 10% கட்டணங்களுக்கு மேலதிகமாக அதை  25% சதவீதமாக அதிகரிப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

படம் - static01.nyt.com

தனியே இணைய சேவையின் அதிகரிப்பு அத்தியாவசியபொருள் ஒன்றின் விலை அதிகரிப்பாக நோக்குவது அர்த்தமற்றது. ஆனாலும், தொடர்ச்சியாக இணையசேவைகளில் வரி அதிகரிப்பு என்பதும் கவனிக்கதக்க ஒன்றாகும். படம் – static01.nyt.com

கவனிக்க வேண்டியவை இணைய சேவைகள் என்பவை அத்தியாவசியம் சார்ந்த பொருள் அல்ல. ஆனாலும், இன்றைய நிலையில் அவை அத்தியாவசியமாக நுகரப்படுகின்ற ஆடம்பர சேவையாக உள்ளது. தனிநபர்களின் தேவைக்கு அதிகமான இணைய நுகர்வு அல்லது இணைய அடிமைத்தன்மை அவர்களது செலவினங்களை அதிகரிப்பதான மாயையை உருவாக்கியுள்ளது. எனவே, தனியே இணைய சேவையின் அதிகரிப்பு அத்தியாவசியபொருள் ஒன்றின் விலை அதிகரிப்பாக நோக்குவது அர்த்தமற்றது. ஆனாலும், தொடர்ச்சியாக இணையசேவைகளில் வரி அதிகரிப்பு என்பதும் கவனிக்கதக்க ஒன்றாகும்.

பாதீட்டில் தனிநபர்கள் கவனிக்கவேண்டிய ஏனையவை

  • வெளிநாட்டவர்கள் இலங்கையில் குடியிருப்புக்களை வாங்க அனுமதி அளிக்கபட்டுள்ளதுடன், 40%மான பெறுமதியை உள்நாட்டு வங்கிகளின் கடன் வசதியுடன் பெற்றுக்கொள்ள முடியும்.

கவனிக்க வேண்டியவை இதன் காரணமாக, உள்நாட்டு குடியுருப்புக்களின் விலையில் அதிகரித்த போக்குநிலை ஏற்படலாம். வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்க்கும் இத்தகைய திட்டம், நேரடியாக இலங்கையில் வாழ்பவர்களின் இயலுமைக்கு மேலான விலை நிர்ணயிப்பை ஏற்படுத்தக்கூடும்.

  • பிரமிட் முறையிலான வணிக செயல்பாடுகளை கண்காணிக்க இலங்கை மத்தியவங்கி தலைமையில் இறுக்கமான செயல்திட்டங்களை அறிமுகம் செய்தல்.

கவனிக்க வேண்டியவை இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இத்தகைய வணிக செயல்பாடுகளின் காரணமாக பாதிப்படைகின்ற மக்கள் அதிகமாக உள்ளனர். எனவே, இந்த இறுக்கமான சட்டமூலங்கள் தொடர்பில் இவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

  • சீனி இறக்குமதி மீதான வரி கிலோவொன்றிற்கு 2 ரூபாவிலிருந்து 5 ரூபாவாக அதிகரிக்கபட்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை இந்த அதிகரிப்பு இறுதி நுகர்வோரான பொதுமக்களின் விலைகளில் தாக்கம் செலுத்தாது. மாறாக, உற்பத்தியாளர்களின் லாபத்தை குறைவடைய செய்யும்.

  • தொலைபேசி சிம்களை செயல்படுத்துவதற்கான குறைந்த கட்டணமாக 200/- நிர்ணயிக்கபட்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை இதன்மூலம், தேவையற்ற வகையிலான தொலைபேசி சிம்களை பயன்படுத்தும் செயல்பாடு குறைவடையும் என எதிர்பார்க்கபடுகிறது.

  • தொழில்நுட்ப வசதிகளை கொண்ட வகுப்பறைகளை அமைக்க நிதி ஒதுக்கபட்டுள்ளதுடன், விருந்தோம்பல் முகாமைத்துவம் (hospitality management), ஆடை வடிவமைப்பு (fashion design) , தொழில்நுட்பம் (technology), மேலாண்மை போன்றவற்றை உயர்கல்வி (A/L) பாடத்திட்டத்திலேயே உள்வாங்குதல்.

கவனிக்க வேண்டியவை இதன்மூலமாக, எதிர்கால சந்தை தேவையான பயிற்றுவிக்கப்பட்ட மனிதவளத்தினை பெறமுடிவதுடன், வேலை வாய்ப்புக்களையும் இலகுபடுத்திக் கொள்ளமுடியும்.

  • உள்நாட்டிற்குள் வருகைதருகின்ற உல்லாசப்பயணிகளின் வெளிநாட்டு நாணய அளவு 15000 USD அளவிலிருந்து 40000 USD ஆக அதிகரிக்கபட்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை வெளிநாட்டு நாணயங்களின் அதிகரிக்கபட்ட உட்சவரம்பு மூலம் இலங்கையில் வெளிநாட்டவர்கள் செலவிடும் பணஅளவினை அதிகரிக்க முடியும். இது மற்றுமொரு வழியாக, வருமானமாக மக்களையும் அரசையும் சென்றடையும்.

  • நகர எல்லைக்குள் அமைந்துள்ள விடுதிகளின் குறைந்த அறை வாடகையை 2018ல் நீக்க தீர்மானிக்கபட்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை 2018ம் ஆண்டில் புதிய விடுதிகள் நகர எல்லைக்குள் திறக்கபடவுள்ளன. எனவே, இந்த நீக்கத்தின் மூலம் சந்தையில் போட்டிதன்மையை உருவாக்குவதுடன், தெற்காசிய வலயத்திலும் இலங்கை நோக்கி உல்லாச பயணிகளை கவரமுடியும்.

இவற்றுக்கு மேலதிகமாக நிறைவான முதலீட்டாளர்கள் சார்ந்த சலுகைகள் இம்முறை வரவு-செலவுத்திட்டத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவை அனைத்தையுமே குறிப்பிட்டு ஆய்வு செய்வது சாத்தியமற்றது.

முழுமையாக இம்முறை வரவு-செலவுத்திட்டத்தை பார்ப்போமாயின், குறுகியகால நலன்களை கொண்டிராதபோதிலும், நீண்டகாலத்தில் வாழ்க்கைத்தர உயர்வு, தொழில் வாய்ப்பு, திறன் தொழிலாளர் மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி என்பனவற்றின் மூலமாக மக்களுக்கான பல்வேறு பயன்களை கொண்டிருக்கின்றது.

இன்று நடும் கன்று, நாளை விருட்சமாக பலருக்கு பயன்தரும் என்பதுபோல இம்முறை வரவு-செலவு திட்டம் உள்ளது. ஆயினும், இந்த கன்றை முறையாக விருட்சமாக வளர்த்தெடுக்கும் ஆற்றலும் திறனும் இன்றைய நல்லாட்சி அரசுக்கும், அதனுடன் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்டா என்பது கேள்விக்குறியே!

 

 

 

 

 

 

 

Related Articles