Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

சர்வதேச தாய்மொழி தினம்

மனித இனம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழி குறித்து மிகப்பெரிய அளவில் பெருமித்தத்தைக் கொண்டிருக்கின்றது. அந்த பெருமிதத்தின் ஒரு வெளிப்பாடாகத்தான் மொழி “தாய்மொழி” என குறிப்பிடப்படுகின்றது. அப்படிபட்ட மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த சில இளைஞர்களை நினைவுகூரும் நாளே “தாய்மொழி தினம்” என மாறியது. தத்துவார்த்த ரீதியில் சொல்வதென்றால், மொழி மனித இனத்தின் நாகரீக பரிணாமத்தின் ஆரம்பப் படிநிலைகளில் ஓன்று. மொழி என்பது தகவல் தொடர்பிற்கு பயப்படும் ஓர் கருவி மட்டுமே.  ஆனால் பொதுப்பார்வையில் மொழி என்பது அதுமட்டுமல்ல,  அது   பேசப்படும் சமூகத்தின், நிலப்பரப்பின் பண்பாட்டோடும் கலாசாரத்தோடும் பின்னிப்பிணைந்து ஒரு சமூகத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனமாக திகழ்வதே மொழி என கருதப்படுகின்றது. 

ஒரு சமூகத்தின் கலாசாரம் எந்த அளவிற்கு மேன்மையும் தொன்மையும் கொண்டது என்பதற்கான குறியீடாக பார்க்கப்படுவதும் மொழியே. ஒரு மொழி பேசுபவர்கள்மீது இன்னொரு மொழியை திணிக்க முயல்வது என்பது வெறுமனே மொழியை திணிப்பது மட்டுமல்ல, மொழித் திணிப்புக்குள்ளாவோரை இரண்டாந்தர மூன்றாந்தர குடிமக்களாக மாற்றிவிடும் முயற்சியே அது. அங்கு திணிக்கப்படுவது மொழி மட்டுமல்ல கலாசாரமும்தான் .மொழித்திணிப்பின் மூலம் கலாசார போராக தொடங்கி ஆயுதப்போராக பரிணமித்த போர்கள் ஏராளம். உலகில் நடைபெற்ற பல போர்களுக்கு காரணமாக இருந்ததும் மொழிதான். ஒரு மொழியை மற்றொருவர் மீது திணிக்க முயல்வதும் திணிப்புக்கு உள்ளாவோர் அதை தடுக்க முயல்வதும் அதற்காக போரிடுவதும் ரத்தம் சிந்துவதும் என மொழியினால் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட உலக சரித்திரத்தின் வரிகள் ஏராளம்.

கால் நூற்றாண்டுகாலமாக தெற்காசியாவையே பதற்றப்பட வைத்த ஈழத்தமிழர் போராட்டத்திற்கு அகரமாக இருந்ததும் மொழி பிரச்சினைதான். 1965ஆம் ஆண்டு சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவிக்க இலங்கை அரசு எடுத்த முயற்சிகளை எதிர்த்து தந்தை செல்வா தொடங்கிய போராட்டமே பின்னர் ஆயுத புரட்சியாக பரிணாமம் பெற்று வங்காள விரிகுடாவை செங்கடலாக மாற்றியது . அப்படிதான் வங்கத்தில் சிந்தப்பட்ட ரத்தம் தாய் மொழி தினத்தை உருவாக்கியது. தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ” எனக்கூறி ஹிந்தி திணிப்புக்கு எதிராக இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் போராடி தம் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

புகைப்படவிபரம்: Tamil.oneIndia.com

தாய் மொழித் தினத்தின் வரலாற்றினை தெரிந்துகொள்ள நாம் குறைந்தது ஒரு நூற்றாண்டேனும் பின்னோக்கி பார்க்கவேண்டியுள்ளது . இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் நிகழ்ந்த ரத்த சரித்திரம் அது . ஆம் வங்காளம்! பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்தபோதே பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லாதது. ஹிந்து,  முஸ்லிம்களை சரிபாதியாக கொண்டிருந்த இந்த மாகாணம் பிரிட்டிஷின் பிரித்தாளும் தந்திரத்திற்கு களம் அமைத்துக்கொடுத்தது . 1905ஆம் ஆண்டு நிர்வாக ரீதியிலான காரணங்களைக்கூறி வங்கம் இரண்டாக பிரிக்கப்பட்டது. எனினும் கடும் போராட்டங்களுக்கு பின் 1911இல்   வங்கம் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டது. ஆனால் ஜின்னாவின் தனிநாடு கோரிக்கையினால் 1940களில் வங்கத்தில்  மீளவும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது .  1947ஆம் ஆண்டு உலகின் மிக வேகமான மக்கள் நகர்வாக உலக சரித்திரத்தில் இடம்பெறும் வகையில் இந்திய பாகிஸ்தான் பிரிவினை உருவானது. 

பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டனர்.  முஸ்லிம்களை அதிகமாக கொண்டிருந்த ஒரே காரணத்தினால் புவியியல் ரீதியாக சாத்தியப்படாவிட்டாலும் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது கிழக்கு வங்காளம். 1948இல் உருது மொழியை பாகிஸ்தான் ஒற்றை ஆட்சி மொழியாக மாற்றும் முயற்சியை தொடங்கியது. இதற்கு கிழக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை காட்டியது. வங்க மாணவர்கள் போராட்டங்களை தொடங்கினர்.  ஆட்சி மொழி என்கிற போர்வையில் ஒரு மொழி திணிக்கப்படுகின்றபோது அது இயல்பாகவே அனைவருக்கும் பொதுமொழி/ பயிற்றுவிக்கும் மொழி  என்றாகிவிடும். இதனால் உடனடியாக பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். கல்வி, தொழில் வாய்ப்பு என எல்லாவற்றிலும் அவர்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் . அவ்வளவுநாள் அவர்கள் கற்ற கல்விக்கே அர்த்தமற்றதாகிவிடும். உருதுவை ஆட்சிமொழியாக கொண்டுவந்த பாகிஸ்தான் அரசு கல்வி தேர்வில் இருந்த வங்கமொழியை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. இதனால் கடும் போராட்டங்கள் எழுந்தன.  ரூபாய் நோட்டுக்களிலிருந்தும் தபால் தலைகளில் இருந்தும், கடற்டபடை பணிக்கான தேர்விலிருந்தும் வங்காளத்தை நீக்கியது. இதனால் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பொது வேலை  நிறுத்தத்திற்கான அழைப்பிதழை விடுத்தனர். இந்த போராட்டம் அரசின் அடக்குமுறையினால் வன்முறையாக மாறியது.

சாகித்து மினார் (உயிரீந்த மாணவர் நினைவுத் தூண்) 1952இ பிப்ரவரி, 21 வங்காள மொழிப் போராட்டத்தைக் நினைவூட்டும் இடம் -புகைப்படவிபரம்:Wikipedia.org

இப்படியாக நீண்ட இந்த பிரச்சினை 1952 பிப்ரவரி 22திகதி டாக்கா பல்கலைக்கழக மற்றும்  மருத்துவ கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் அரசு நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். இதனால் போராட்டம் உக்கிரமடையவே 1956இல் வங்க மொழியும்  ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. எனினும் இந்த மொழியினால் ஏற்பட்ட விரிசல் 1979இல்  வங்கதேசம் தனிநாடாகும் வரையில் கனன்றுகொண்டேயிருந்தது. வங்கமொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவாகவே ஒவ்வொரு வருடமும்  பிப்ரவரி 21 திகதி உலக தாய் மொழி தினமாக 1999இல் யுனெஸ்கோ அறிவித்தது . 2000ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21 திகதி உலக தாய்மொழி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. “தக்கன தப்பிப்பிழைக்கும்” என்கிற இயற்கை நியதியின் அடிப்படையில் தகுதியிருந்தால் நம் மொழி நிலைத்து நிற்கும். ஒரு மொழி அழிக்கப்படுகின்றதெனில் அந்தமொழியை பேசுகின்ற சமூகத்தின் அடையாளங்கள் அழிக்கப்படும் முயற்சிகள் தொடங்கிவிட்டன என்பதே உண்மை .

உலகின் தொன்மையான நாகரீகமாக கருதப்படும் மாயன் நாகரீகத்தினை பற்றி ஓரளவுக்குமேல் அறிந்துகொள்ள இயலாமல் போனமைக்கு அவர்களது மொழிகள் வழக்கொழிந்து போனமையும் ஒரு காரணம். உண்மையில் பண்டைய அமெரிக்காவில் முழு எழுத்து வடிவம் பெற்ற மொழியைக்கொண்டிருந்தவர்கள் மாயன் நாகரீகத்தினர்  மட்டுமே.  மொழி எவ்வளவு தொன்மையானதாக இருந்தாலும் சரி அது எவ்வளவு உன்னதமான இலக்கியங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் சரி வழக்கொழிந்து போய்விட்டால், இலக்கியங்களெல்லாம் வெற்றுக் கிறுக்கல்களே. அப்படி பல தொன்மையான இலக்கியங்கள் வெற்றுக் கிறுக்கல்களாகிப்போன கதைகளை வரலாறு நமக்கு சொல்லியிருக்கிறது .மொழிக்கான போராட்டங்கள் யாவற்றையும் இந்தக்கோணத்திலேயே பார்க்கவேண்டும்.

தாய்மொழி தினம் நமக்கு சொல்லும் செய்தி யாதெனில் நம்முடைய மொழியை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பெருமிதத்தோடு நினைக்கலாம். உலகின் தொன்மையான மொழி நம்முடையதுதான் என புளங்காகிதம் அடையலாம். ஆனால் அதையே  காரணமாக்கி மற்றைய மொழிகளை சிறுமைப்படுத்த நினைத்தால் அது மானுட அறத்தை உடைக்கும் செயல்!

Related Articles