மீட்க வேண்டியது சின்னத்தை மட்டுமல்ல..மக்களின் நம்பிக்கையையும் தான்!
இந்தியத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தமிழகத்தில் கடும் வரட்சி நிலவுவதால் வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும், நதிகள் இணைப்பு, வரட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை அமைப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 35 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவற்றின் உச்சமாக நிர்வாணப் போராட்டம் கூட நடத்தி விட்டனர்.
முற்றிலும் துறத்தலுக்கு பின்னர் இழப்பதற்கு எதுவும் அற்ற நிராயுதபாணிநிலை அது! ஆனாலும் பிரதமர் நரேந்திரமோடி இதுவரை தமிழக விவசாயிகளை சந்திக்கவில்லை. ஆனால் தமிழக பா.ஜ.க பிரமுகர்களோ, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை எந்த பிரதமர்களும் சந்தித்தது இல்லை. நேரு காலத்தில் இருந்தே இது தான் மரபு என்கின்றனர். விவசாயத்துறை உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் சந்தித்துள்ளனரே என்கின்றனர். தலைநகரில் நிர்வாணமாய் நின்றும் சந்திக்க மறுக்கும் பிரதமர்….பிரதமரை சந்தித்து கோரிக்கையை விளக்காமல் டெல்லியை விட்டு கிளம்பாமல் உறுதியோடு இருக்கும் விவசாயிகள் என இதை மட்டும் கணக்கிட்டால் தற்போதைய தமிழகத்தின் வறுமை கண்களில் நிழலாடும்.
இன்னொரு புறத்தில் அதே டெல்லியில், தமிழக அரசியல்வாதிகளின் வழமையும் நிழலாடுகிறது. இழந்து போன இரட்டை இலை சின்னத்தை பெற சசிகலா அணி தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், டெல்லியில் ஒரு கோடியே முப்பது லட்சத்துடன் இடைத்தரகர் கைதும் செய்யப்பட துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாழை இலை 5 ரூபாய், வெற்றிலை 2 ரூபாய்…ஆனால் இரட்டை இலை மட்டும் 50 கோடியாம்!!! என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் பறக்கிறன.
உண்மையில் சின்னம் அத்தனை வெகுமதி உடையது தானா? அந்த அளவிற்கு கிராமத்து மக்களோடு ஒன்றி,. ஊறிப்போய் உள்ளது இரட்டை இலை சின்னம். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பிளவுபட்ட நேரம் சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி, தீபா அணி என மூன்றாக பிரிந்தனர் அதிமுக தொண்டர்கள். ஆனால் மேல் மட்ட நிர்வாகிகள் பலரும் இரட்டை இலை சின்னம் எந்த அணியில் உள்ளது என்பதை பார்த்து முடிவு செய்யக் காத்திருந்ததும் நடந்தது. அந்த அளவுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு தமிழகத்தில் அறிமுகமும், அடையாளமும் உள்ளதே இதற்கு காரணம். அதற்கு வித்திட்டவர் அமரர் எம்.ஜி.ஆர். அதற்கு அவர் கொடுத்த விலை உழைப்பும், மக்களிடம் இருந்து பெற்ற நம்பிக்கையும் மட்டும் தான்.
சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, தனது ஓய்வறியா உழைப்பினால் கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் இருந்தார். பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, பொருளாளர் என்ற முறையில் திமுகவில் கணக்கு கேட்டதால் கருணாநிதியால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை 1972ம் ஆண்டு தொடங்கினார் எம்.ஜி.ஆர். 1973ம் ஆண்டில் அதிமுக முதல் தேர்தலை சந்தித்தது. அது திண்டுக்கல் தொகுதிக்கான இடைத் தேர்தல். இரட்டை இலையில் வென்ற முதல் நபர் என்ற பெருமையை அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத் தேவர் பிடித்தார். 1977ல் நடந்த பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, முதல்வரும் ஆனார் எம்.ஜி.ஆர்.
அப்போது அவர் வாக்களித்த மக்களுக்கு எழுதிய ஒரு கடிதம் இது. இனி அது அப்படியே…
என்னை வாழவைக்கும் தெய்வங்களே! அமரர் அண்ணாவின் சீரிய கொள்கைகளான ஊழலற்ற, லஞ்சக் கொடுமைகளற்ற, “எல்லோரும் ஓர் குலம்”, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “எல்லோரும் ஓர் நிலை, எல்லோருக்கும் ஓர் விலை” என்ற அறவழியில் நல்லாட்சி அமைய உங்கள் ஆசியுடன் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கிறேன். உயர்திரு ஓமந்தூரார், மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா போன்ற மேதைகள் இருந்து ஆட்சி செய்த இடத்தில் உங்களை மட்டும் நம்பியே அமருகிறேன்.
அமரர் அண்ணாவின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் என்னை இதுவரை ஆதரித்துத் துணைநின்றது போல் இந்த மாபெரும் பொறுப்பினை நிறைவேற்றும் போதும் எனக்குத் துணை நிற்க வேண்டுமாய் தமிழகத்து மக்களாகிய உங்களைக் கைகூப்பி வேண்டுகிறேன். அன்பன், எம்.ஜி.ராமச்சந்திரன் 30-06-1977” என அந்த கடிதத்தில் இருந்தது.
கடிதத்தின் முதல் வரியை படியுங்கள். ஊழற்ற, லஞ்ச கொடுமைகள் அகற்ற அண்ணாவின் ஆட்சியை தருவேன் என்றார் எம்.ஜி.ஆர். ஆனால் இன்று எம்.ஜி.ஆர் வென்றெடுத்த இரட்டை இலை சின்னத்துக்கே லஞ்சம் கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ளது நிலமை. அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தை இழப்பது இதுவே முதல் முறையும் அல்ல. 1987ல் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவினாலும் அக்கட்சி இரட்டை இலை சின்னத்தை இழந்தது. 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணியினர் சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும் போட்டியிட்டனர். இதில் ஜானகி அணி படு தோல்வி அடைந்தது.
ஜானகி அணியில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்ட பி.எச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார். இப்போது அவர் ஓ.பி.எஸ் அணியில் உள்ளார். மிகப்பெரிய சரிவு ஜானகிக்கு தன் நிலையை உணர்த்தியது. அரசியலை விட்டு ஒதுங்கினார். ஒன்று பட்டது அதிமுக. இரட்டை இலை மீண்டும் கிடைத்தது. இதே போலத்தான் ஜெயலலிதா மறைவிலும் நடந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது தோழி சசிகலா பொதுச் செயலாளர் ஆனார். தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் அவரை முதல்வராகவும் வலியுறுத்தினர்.
இதனால் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் அவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் எதிர்த்து நின்றார். நத்தம் விஸ்வநாதன், கல்வித்துறை அமைச்சராக இருந்த மாபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் முனுசாமி என பெரும் படையே அவரோடு சேர்ந்தது. இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு, பெங்களூரு சிறைக்கு செல்ல, அவர் குடும்பத்தில் இருந்தே தினகரன் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆனார். இதே போல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என தனி கட்சி/அமைப்பு/இயக்கம் கண்டார். இதில் அது எந்த நிலை என அதில் அங்கம் வகிப்போருக்கே தெரியவில்லை.
M.A.D என அதன் சுருக்கக் குறியீடாய் சமூக வலை தளங்களில் வேகமாய் பரவி, அதன் தமிழ் அர்த்தத்தை பகிர்ந்து சிரித்தனர். ஜெயலலிதா மறைவால் காலியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சசி, ஓ.பன்னீர் செல்வம் என இரு அணியினரும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால், அந்த சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது. அத்துடன் அ.தி.மு.க. என்ற பெயரை இரு அணியினரும் பயன்படுத்த தடை விதித்த தேர்தல் கமிஷன் சசிகலா அணிக்கு அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரையும், தொப்பி சின்னத்தையும் ஒதுக்கியது. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரும், இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டது.
ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அதிமுக சார்பில் ஓட்டுக்கு நான்காயிரம் கொடுத்தததாக பகிரங்கமாகவே புகார் எழுந்தது. வாக்கு வங்கியை தக்க வைக்க திமுகவும் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி வரை பண பட்டுவாடா நடந்ததாக மத்திய அரசுக்கு தகவல் சென்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் செய்த ஆய்வு, அதிமுகவின் சுகாதாரமின்மையை வெளிச்சம் போட்டு காட்டியது, 89 கோடிக்கான வரவு, செலவுகளை அக்கவுண்ட் நோட் போட்டு பற்று வைத்திருந்த ஆவணங்கள் வெளியானது. வருமான வரித்துறை ஆய்வின் போது அத்துமீறி விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்ததாகவும், அதிகாரிகளை மிரட்டியதாகவும் அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோர் மீதும், ஆவணங்களை கடத்திச் சென்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் கட்சியை தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ளவும், வெளியேறியவர்களையும் வறித்துக் கொள்ளவும் இரட்டை இலை சின்னத்தை மீட்க தினகரன் தரப்பு முயற்சித்தது, இதற்கு துணை நின்றதாக இடைத்தரகர் பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் (27) என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் ரொக்க பணமும், விலை உயர்ந்த இரு சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையே நடைபெற்ற செல்போன் உரையாடலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெல்லி போலீஸார் கூறிய நிலையில், டிடிவி. தினகரன் அவர் பெயரே தெரியாது என மறுத்துள்ளார். ஆனால் சின்னத்தை பெற 50 கோடி பேரம் பேசியதாக உறுதியாக சொல்லும் டெல்லி போலீஸ், டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 8 (அரசு ஊழியரை சரிக்கட்டும் வகையில் சட்டவிரோதமாகவும், ஊழல் வழியிலும் லஞ்ச பணம் பெறுவது), இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 170 (அரசு ஊழியராக தன்னை காட்டிக்கொண்டு மோசடி செய்தல்) மற்றும் 120பி (கிரிமினல் சதியில் ஈடுபடுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சஞ்சய் ஷெராவத் இது தொடர்பான வழக்கிற்கு சென்னைக்கு வருவதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவ்வழக்கில் தினகரன் கைது கூட செய்யப்படலாம் என யூகத் தகவல்கள் கசிகின்றன. அதே நேரத்தில் சசிகலா ஆதரவு அணி எம்.எல்.ஏக்களும் சென்னைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்துபேச தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இவை அத்தனையும் ஒரு பக்கம் இருக்கட்டும். ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாகத் தான் தெரிவிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பின்னர் உடல்நிலை மோசம் அடைந்ததாகவும், நுரையீரல் தொற்று, உடலில் அதிக சர்க்கரை, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு ஹார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு, அடுத்தநாள் டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் 5க்கு பின்னர், இன்று வரை தமிழகத்தின் நிலமை என்ன? ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களில் எல்லாம் கையெழுத்து ஆகியிருக்கிறது. தமிழக உரிமைகளில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்துள்ளது. ஆனால் ஆளும் கட்சியான அதிமுகவுக்கோ சொந்த கட்சியின் பிரச்னைகளில் இருந்தே மீண்டு வர முடியவில்லை. நான்கரை மாதங்களை காவு வாங்கிய நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்பட இப்போது ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளன. அவை சாத்தியமும் ஆகலாம். சசிகலா குடும்பத்தினர் இல்லாத அதிமுக மலரலாம். மலராமலும் போகலாம். ஆனால் சின்னத்துக்குத் தான் வாக்கா? என்பதே இங்கு மிகப்பெரிய கேள்விக் குறி,.
எம்.ஜி.ஆர் என்னும் மக்கள் சக்தி உயிரோடு இருந்த வரையும், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையும் சின்னத்துக்கே வாக்கு இருந்தது. காரணம் இவர்கள் இருவருமே மக்கள் சக்தியின் நிழலில் இருந்து அரசியல் செய்தனர். இவர்கள் மீதும் குறைகளும், அதிருப்திகளும் இருந்தாலும் அதையெல்லாம் மறக்கச் செய்கின்ற வசீகரத்தையும் அறிந்திருந்தனர். ஆனால் இன்று அப்படியான தலைவர்கள் அதிமுகவில் இல்லை. அதனால்தான் இவர்கள் இருவரும் சுட்டிக் காட்டிய இந்த இரட்டை இலை சின்னத்தை பெற இத்தனை வலிமைமிகு பிரயோகங்கள். 50 கோடி என்பது அத்தனை சாதாரணத் தொகையா?
ஒரு சட்டசபை தொகுதிக்கு ஆண்டு ஒன்றுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக எம்.எல்.ஏக்களுக்கு ஒதுக்கப்படும் தொகை 2 கோடி. அந்த வகையில் கணக்கிட்டால் 25 தொகுதிகளின் ஓராண்டு வளர்ச்சி நிதி இது. இதோ இப்போது எம்.ஜி.ஆர் முதல்வரானதும் எழுதிய கடிதத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை தருகிறேன் என மக்களுக்கு கடிதம் எழுதியவரின், கட்சி சின்னத்துக்கே லஞ்சம்…அதையொட்டிய வழக்குப் பதிவுகள். உரிமைக்காக தமிழக விவசாயிகள் போராடும் அதே டெல்லியில் தானே, 50 கோடிக்கான சின்ன மீட்பு லஞ்ச விவகாரமும் நடந்துள்ளது.
திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுக வைத்த துவங்கப்புள்ளி, ஆர்.கே நகரில் அதிமுக மையப்புள்ளியாய் எழுந்து நிற்கிறது. சின்னம், ஓட்டு, ஆட்சி, அதிகாரம் என அத்தனையையும் பணம் கொடுத்து பெற்று விடலாம். ஆனால் மக்களின் நம்பிக்கையை எப்படி பெறப் போகின்றன அரசியல் கட்சிகள்?