Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

அதிகார வலையில் சிக்கிய மீனவர்கள்

ஏன் நண்பா இலங்கை அரசு கரை தாண்டுற இந்திய மீனவர்களுக்கு 2 கோடி அபராதமும் சிறை தண்டனையும் விதிப்போம்னு அவுங்க ஊர்ல மசோதா நிறைவேத்தி இருக்காங்களாம்!. கச்சதீவு நாம குடுத்ததுதானே அங்க நமக்கு மீன் பிடிக்க உரிமை இல்லையா?. இலங்கை மீனவர்கள் இந்திய கரையை தாண்டும் போது நாம இப்டியா நடந்துக்குறோம். இடையில் என்னை கொஞ்சம் கூட பேச வாய்ப்பு தராமல் கொட்டி தீர்த்தார் நண்பர் ஒருவர். அவர் கடற்கரை பகுதியை சார்ந்தவர் கூட இல்லை.

(frontpage.lk)

தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறைப்பிடிக்கப்படும்போது, தமிழக மக்களின் பெரும்பாலானோரின் மனநிலை இதுதான். ஆனால் இங்கு அறிவியல் ரீதியாகவோ, அல்லது  இரண்டு கடல் எல்லை சார்ந்தோ, மக்களிடம் விளக்கம்  அளிக்கவோ இரண்டு நாட்டு அரசுகளும் முயற்சிக்கவில்லை. முயற்சிக்கவும் மாட்டார்கள். ஏனென்றால் மக்கள் புத்திசாலியாக மாறிவிட்டால் பிறகு யார் வந்து ஓட்டு போடுவது

கச்சதீவை இந்திய அரசு இலங்கைக்கு கொடுத்ததற்கு பல அரசியல் காரணங்கள் இருக்கலாம் அதற்குள் நாம் போக வேண்டாம், அது பெரும் கதை. இப்பொழுது பிரச்சனை என்பது கரை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றியது. முதல் கேள்வி இந்திய மீனவர்கள் ஏன் இலங்கை எல்லையில் மீன் பிடிக்க செல்கிறார்கள்? இந்திய கரையோரம் மீன் வளம் என்பது மிகவும் குறைந்து விட்டது என்பதுதான் முதன்மை காரணம். அப்போ உங்க நாட்டுல மீன் இல்லைனா அடுத்த நாட்டுக்கு போய் மீன் பிடிப்பீங்களா? என்ற கேள்வி தோன்றலாம் .

(tamilnet.com)

இந்தியா இலங்கைக்கு இடைப்பட்ட கடல்வெளி இடைவெளி என்பது வெறும் 53km-80km  தான். நாட்டிக்கல் மைல் என்ற கணக்கில் பார்த்தோம் என்றால் அது இன்னமும் குறையும். சரி விஷயத்துக்கு வருவோம் கச்சதீவு வரை சென்று மீன் பிடித்த மீனவர்களின் எல்லை சுருங்கிய பின் அவர்கள் கீழ் நோக்கி வர இயலாது அங்கு தான் “ராமர் பாலம்” என்று அழைக்கப்படும் இயற்கை மணல் திட்டு உள்ளது . அங்கு ஆழம் குறைவு எனபதால் இயற்கையாகவே மீன்வளம் குறைவு அங்கு மீன் பிடிக்க மீனவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள் .

அடுத்து இலங்கையை தவிர்த்து அதிக தூரம் சென்று மீன் பிடிக்கலாம் என்றால், அவ்வளவு தொலைவு செல்லும் அளவுக்கு நவீன படகுகள் இந்திய மீனவர்களிடம் இல்லை. இது தொடர்பாக ராமேஸ்வர மீனவ நண்பரிடம் பேசிய போது, நீங்களாம் சினிமால பாக்குற மாதி மொத்த ராமேஸ்வர மீனவர்களும் ஒரே நாள் கடலுக்கு போய் மொத்தமாலா மீன் பிடிக்க மாட்டோம் . இங்க இருக்குற மக்கள் பகுதிவாரியாதான் போவோம். அப்பத்தான் மீன் கெடைக்கும் இப்ப ஒரு நாள் முழுசா நின்னு வலைபோட்டலும் கெடைக்காத பட்சத்துல தப்புனாலும் கரைதாண்டி போகத்தான் மனசு சொல்லும் நம்ம கிட்ட இருந்த தீவு தானேனு போவோம்! அதுக்காக மனுஷன சுடுவான்களா? சோறுக்கு இல்லாம தானே போறோம் மீன் புடுச்சு மாடியா கட்டிட்டோம் என்றார்.

(gophotoweb.com)

இதை வெறும் இந்திய  மீனவர்களின் பார்வையில் இருந்து மட்டும் பார்ப்பது தவறு. தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு இலங்கை மீனவர்கள் சொல்வது இதுதான், “இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள். அவர்களின் படகுகள் எங்களின் வலைகளையும் அறுத்து விடுகிறது. நாங்களும் மீன்கள் இல்லாமல்தான் தவிக்கிறோம் எனவே இந்திய மீனவர்களை எங்கள் பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்க முடியாது” இதுதான் அவர்களின் ஒரே குரலாக இருக்கிறது.

அவர்கள் சொல்வதும் உண்மையே! இந்திய மீனவர்கள் இயற்கை மீன்பிடி முறையில் இருந்து சற்று மாறித்தான்விட்டாரகள். ஆனால் அது அரசு அவர்களிடம் செய்த புரட்சி என்று தம்பட்டம் அடிக்கிறது. ஒருவனின் இயற்கை தொழில்முறையில் மாற்றத்தை கொண்டுவந்து அவனை நிற்கதியில் விடுவது எப்படி நியாயம்?.

(mages.indianexpress.com)

இதற்கான தீர்வுதான் என்ன?, ஒன்று ராமர்பாலம் என்று சொல்லப்படும் மணல் திட்டை ஆழப்படுத்தி அங்கு மீன் வளத்தை ஏற்படுத்தி தருவது. ஆனால் அது கடவுள் நம்பிக்கை சார்ந்த ஒன்று. அப்டியே இந்திய அரசு அதை சரி செய்து துறைமுகமாக மாற்றினாலும், அப்பொழுதும் கப்பல்களுக்கு இடையூறு என்று மீனவர்கள் அங்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அடுத்த வாய்ப்பு என்பது இந்திய மீனவர்களுக்கு அதி நவீன படகுகள் கொடுத்து அதிக தொலைவு சென்றும் மீன் பிடிக்க வசதி செய்துதரவேண்டும். ஆனால் இந்திய அரசு ஒரு பேச்சுக்கு கூட அதை மீனவர்களிடம் சொல்லவில்லை. அதற்கு அதிக செலவாகும். அவர்களுக்கு அந்நியமுதலீடு மீது இருக்கும் அக்கறை, இந்தியாவில் கிடைக்கும் வளங்களின் மீது இல்லை. அதற்காக மீன் பிடிப்பதால் அரசிற்கு எதோ இலாபமே இல்லை என்பது போல கட்டுகிறார்கள்.

 

(conservationindia.org)

இந்தியா 2014-15 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 10,50,000 மெற்றிக் தொன் மீன்களை 75 நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறது. இதனால் 5.51 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது. இது தவிர்த்து இந்தியாவில் 16.5 மில்லியன் மக்கள் மீன் பிடிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ளனர். எனவே இவ்ளோ மக்களுக்கு வேலையும் அரசுக்கு லாபமும் தரும் ஒன்றை ஏன் அரசு கவனிக்க மறுக்கிறது? இதில் மத்திய மாநில மீன்வளத்துறை அமைசர்கள் வேறு!.

கடைசி ஒன்று இந்தியா கச்சதீவு ஒப்பந்தத்தை மீண்டும் சீர் செய்ய வேண்டும் . வலை, படகு போன்றவற்றில் கட்டுப்பாடுகள் விதித்து நம் மீனவர்களையும் இலங்கை மீனவர்களையும் பேச வைக்க வேண்டும். இலங்கை மீனவர்களுக்கு மற்றொரு மீனவனின் பசி என்னவென்று தெரியும்.

(mgrtv.com)

இலங்கை அரசிடம் கண்டிப்பாக எல்லை தாண்டும் மீனவர்களை சுடக்கூடாது என்று இந்திய அரசு கேட்டுக்கொள்ள வேண்டும். காரணம் நடுக்கடலில் சுவர் எதுவும் கட்டிவைக்கவில்லை! எனவே கடலில் எல்லை என்பது பல சமயம் அறியாமலேயே கடக்கக்கூடிய ஒன்றே, மீனவர்களிடம் மிக சிறந்த GPS வசதியெல்லாம் இல்லை. இந்தியாவில் கரைதாண்டி வந்த இலங்கை மீனவர்கள் சுடப்படுகிறார்களா? என்றும் இலங்கை அரசு பார்க்கவேண்டியது கடமை. அவர்கள் இங்கு வரவே இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. பின் கச்சதீவில் இருக்கும் அந்தோனியார் கோவில் திருவிழாவிற்கு அதிக நபர்களுக்கு அனுமதி தரவேண்டும். எந்த ஒரு இனத்தின் வழிபாட்டையும் தடுப்பது மிகவும் தவறு.

இந்த பிரச்சனை என்பது இரண்டு நாட்டு மீனவ மக்களின் வாழ்கை பிரச்சனை. ஆனால் அவர்களை வெறும் ஓட்டாக பார்க்கும் அரசியல்வாதிகளுக்குத்தான் இது புரிவதில்லை. இதை வெறும் செய்தியாக பார்க்கும் நமக்கும் அவர்களின் மீன்களின் மேல் இருப்பது கடல் நீர் மட்டும் அல்ல அவர்களின் இரத்தமும்தான் என்று என்றைக்குமே உணரப்போவதும்இல்லை .

 

 

 

Related Articles