Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

குழந்தைக்கு உண்மையில் எந்த வகையான உணவு தேவை?

நாங்கள் உயிர்வாழ்வதற்கு சரியான ஊட்டச்சத்துக்கள் அடிப்படையானவை. குழந்தை ஒன்றின் ஆரம்பகால உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் முக்கியமானவை. அதற்கான காரணங்கள் இவைதான்!

நாங்கள் உயிர்வாழ்வதற்கு உணவு மிக முக்கியமானது, ஆனால் என்ன வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் உண்பது முறையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவினை உட்கொள்ளும் பலனைக் கொடுக்காது. வளர்ந்தவர்கள் முக்கியமாக கொழுப்பு மற்றும் சீனி ஆகியவற்றை மாத்திரமே கவனத்தில் கொள்கின்றனர். சிறுவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு முறையாக கவனத்தில் கொள்ளப்பட்டு, அவர்கள் வளர்வதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றனவா என்பதனை உறுதிசெய்ய வேண்டியது அவசியம்.

குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சி ஆரோக்கியமானதாக அமைய அத்தியாவசியமான மூன்று முக்கிய விடயங்களில் ஊட்டச்சத்தும் ஒன்று. மற்றைய இரண்டு விடயங்கள் மனத்தூண்டுதலும், அன்பும் ஆகும். பெற்றோர்களினால் போதுமான உணவினை அல்லது ஊட்டச்சத்து நிறைந்த உணவினை குழந்தைகளுக்கு வழங்க முடியாமையினால் இலங்கையில் பல சிறுவர்கள் போ~hக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

2016 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சனத்தொகை மற்றும் சுகாதார கணக்கெடுப்பின் பிரகாரம், 21 வீதமான குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடை அற்றவர்களாக இருக்கின்றனர். இவர்களில் 4 வீதமானவர்கள் எடை குறைவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மெலிந்த தோற்றம் கொண்டவர்களாக 17 வீதமானவர்களும், இவர்களில் 3 சதவீதத்தினர் கடுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 17 வீதமானவர்கள் வயதிற்கு ஏற்ற உயரம் அற்றவர்களாக இருக்கின்றனர். இவர்களில் 4 வீதமானவர்கள் மிகவும் குள்ளமாக இருக்கின்றனர்.

ஒரு குழந்தையின் முதல் மூன்று வருடங்களிலேயே அதிக வளர்ச்சியும், அதிக மாற்றங்களும் ஏற்படுகின்றன. குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்தும், கவனமும் வழங்கப்படாவிட்டால் அதன் தாக்கங்கள் இந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

குழந்தை உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்களில் 75 வீதமானவை அதன் மூளை வளர்ச்சிக்கே செல்கின்றது. குழந்தை மூன்று வயதை அடையும் போது அதன் மூளை வளர்ச்சியில் 80 சதவீதம் நிறைவடைந்து விடுகின்றது. மிகவும் முக்கியமான உறுப்பான மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவிட்டால் அது எவ்வாறு விருத்தி அடைய வேண்டுமோ அவ்வாறு விருத்தி  அடையாது. மூளை முழுமையாக வளர்;ச்சி அடையாவிட்டால் அது குழந்தையின் இயற்கையான வளரும் செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அவசியமான ஊட்டச்சத்துக்கள் குறைவாக கிடைத்தால் அது நோயெதிர்ப்பு சக்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தையை பாதுகாப்பதற்கு நோய் எதிர்ப்பு திறன் இல்லாவிட்டால், இலகுவில் பல நோய்க்கிருமிகள் குழந்தையைத் தாக்கும். அதிகப்படியான உணவினை உட்கொள்வதால் குழந்தை அதிக உடல் எடை அல்லது பருமனான சரீரத்தைப் பெறும். இது அவர்களின் இரத்தக் குழாய்களில் அடைப்பினை ஏற்படுத்தலாம். அத்துடன் உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் செயற்பாடுகளில் அவர்களில் பங்குபற்றுவதையும் இது தடுக்கும்.

குறைவான உணவினை உட்கொள்வதால் குழந்தை எடை குறைவாக இருக்கும் மற்றும்ஃஅல்லது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருக்கும்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து உண்மையில் நீண்ட பட்டியலே உள்ளது. இந்த பிரச்சினை குறித்து குழந்தைகள் நல மருத்துவர் குமுதினி குரே குறிப்பிடுகையில், “ஊட்டச்சத்துக் குறைபாடுடைய சிறுவர்கள் காசநோய் போன்ற நாள்பட்ட நோய்த்தொற்றுக்கள் மற்றும் கற்றல் குறைபாடுகளுக்கு இலகுவில் ஆளாகின்றனர். இலங்கையில் ஊட்டச்சத்துக் குறைபாடுடைய சிறுவர்கள் வயிற்றுப்போக்கு, நிமோனியா, உளக்குறைபாடு மற்றும் உடல் பருமன் ஆகிய குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர்.”

ஊட்டச்சத்துக் குறைபாடுடைய சிறுவர்களின் மிக முக்கியமான பிரச்சினை விட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடு. இரும்புச்சத்துக் குறைபாட்டினால் இரத்தச்சோகை மற்றும் பொட்டாசியம் குறைபாட்டினால் தசைகளில் பலவீனம் என இவை பல ஆபத்துக்களை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து நிறைந்த உணவினை குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைகளில் இருந்து மாத்திரமன்றி மேலும் பல பிரச்சனைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்கலாம்.

வறுமையும், ஊட்டச்சத்தும் 

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவின் அவசியம் குறித்து பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் உலகளாவிய பிரச்சாரங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன. இந்த பரிந்துரைகளில் பல திருத்தங்கள், பல விடயங்கள் சேர்க்கப்பட்டு தொடர்ச்சியாக மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றது. 

எனினும், வறுமையின் பிடியில் உள்ள நாடுகளில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து வெறுமனே பிரச்சாரங்களை முன்னெடுப்பதால் எதுவும் மாறப்போவதில்லை. ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு மிக முக்கியமான காரணி வறுமை. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்கவே பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால் அவர்களினால் அதனை வழங்க முடியாதுள்ளது.

இலங்கையில் ஏழ்மையில் வாடும் பல குடும்பங்கள் உள்ளன. 2016 ஆம் ஆண்டில், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள இலங்கையர்களின் வீதம் 4.1 ஆக காணப்பட்டது. வறுமை காரணமாக குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிசெய்வதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு பெற்றோர்களினால் முடியாதுள்ளது என்பதனை சொல்லத் தேவையில்லை.

உணவினை போதுமான ஊட்டச்சத்து நிறைந்ததாக மாற்றுவது எது?

முக்கியமான உணவுப் பிரிவுகளில் இருந்து, பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் கிடைக்கும் போது அது முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருக்கும். ஆரோக்கியமான மூளை மற்றும் தசை வளர்ச்சிக்கு தேவையான புரதம் மற்றும் கொழுப்பினை அதிகம் கொண்ட விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவுகளான கோழி, இறைச்சி, முட்டை மற்றும் மீன் ஆகியவற்றை இது உள்ளடக்கியிருக்கும்.

அரிசி, பாண் மற்றும் பாஸ்தா போன்ற கார்போஹைதரேட்டுக்கள் நிறைந்த உணவுகள் அதிக சக்தியை அளிக்கும். உதாரணமாக வெள்ளை அரிசியை விட சமிபாடடைவதற்கு அதிக நேரம் எடுக்கும் சிவப்பு அரிசி நீண்ட நேரத்திற்கு சக்தியை வழங்கும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் பல்வேறு விட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளன. உடலிலுள்ள காயங்களை ஆற்றுவதற்கும், மறுசீரமைப்பதற்கும், மேலும் பல்வேறு செயற்பாடுகளுக்கும் அவசியமானவை. பால் மற்றும் பாலாடை போன்ற பாற்பொருட்கள் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவசியமானவை.

எனினும், நல்ல விடயங்கள் அதிகமானாலும் ஆபத்து என்பதனை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதிகமாக உண்பதனால் உடல் பருமன் ஏற்படும். முக்கியமாக அதிக கலோரிகளைக் கொண்ட இனிப்பான பதார்த்தங்கள், மாவுச்சத்து மற்றும் எண்ணெய் தன்மையான உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும். கவனமாக திட்டமிடப்பட்ட உணவுத்திட்டமானது, குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை  பரிந்துரைக்கப்பட்ட அளவினை விட அதிகம் கொடுக்காமல் சரியான அளவில் கொடுக்க உதவும்.

டாக்டர் கூரே: “குழந்தைகள் ஊட்டச்சத்து மற்றும் கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். பெற்றோரின் உணவு பற்று அவர்களின் குழந்தையின் ஊட்டச்சத்தை பாதிக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன் ”

ஆபத்தான உணவுப் பழக்கங்கள்

ஊட்டச்சத்து என்பது அடிக்கடி விவாதிக்கப்படும் ஒரு தலைப்பு. தற்போதுள்ள சமூக ஊடகங்களில் இருந்து, பாரம்பரியமான ஊடகங்கள் வரை ‘பெற்றோருக்கு எது சிறந்தது என்று தெரியும்’ என பலராலும் குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் புதிய அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. வயது வந்தவர்களுக்கான புதிய உணவுப்பழக்கங்கள் தற்போது பிரபலம் பெற்றுவருகின்றன. உதாரணமாக பழச்சாறுகளை மட்டும் அருந்துவது அல்லது ஸ்மூத்தி எனப்படும் பழக்கலவைகளை உட்கொள்வது என பல்வேறு உணவு பழக்கங்களை  அவ்வப்போது பலரும் ஆர்வத்துடன் பின்பற்றுகின்றனர். துரதிஷ்டவசமாக பெற்றோர்கள் இந்த பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துகின்றனர். இந்த உணவுப் பழக்கம் அவர்களுக்கு சிறந்ததாக இருந்ததால் குழந்தைகளுக்கும் உதவும் என நம்புகின்றனர். ஆனால் இந்த உணவு முறை பெரியவர்களுக்கு நன்மையை அளித்திருந்தாலும் கூட, குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு உண்மையில் ஆபத்தாக அமையும். “குழந்தைகள் ஊட்டச்சத்து நிறைந்த, கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவினை உண்டு மகிழ அனுமதிக்க வேண்டும். பெற்றோர்களின் உணவுப் பழக்கம் குழந்தையின் ஊட்டச்சத்தினை பாதிக்கக்கூடாது,” என வைத்தியர் குரே இந்த நிலைமை தொடர்பில் தனது கருத்தினை பகிர்ந்துகொள்கின்றார். இந்த உணவு முறைகள் தகுதிவாய்ந்த ஊட்டச்சத்து நிபுணரினால் பரிந்துரைக்கப்படா விட்டால், பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

எங்களது வாழ்வில் ஊட்டச்சத்துக்கள் மிக முக்கியமானவை. உணவு என்பது ஆடம்பரம் அல்ல. அது உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானது. எமது உடலில் உள்ள உறுப்புக்கள் செயற்படுவதற்கு உணவு அவசியம். அது இல்லாவிட்டால் உடல் செயற்படாது.

குழந்தைகள் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அபாயத்தில் உள்ளனர். அதனால் தான் உடலின் வளர்ச்சி, சரிசெய்தல் மற்றும் மேம்படுத்துவதில் உணவின் பங்கினை புரிந்துகொள்வது அவசியமாகும். இதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வதை எங்களால் உறுதி செய்ய முடியும்.

பெற்றோர்கள் சிறுவர்களுக்கு சிறந்ததையே வழங்குவதற்கு யுனிசெப் www.betterparenting.lk வலைத்தளத்தை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்துகின்றது. இது குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் ஆகிய நான்கு பிரிவுகளில் தகவல்களை கட்டுரைகள், காணொளிகள் மற்றும் அனிமேஷன் மூலமாக வழங்கவுள்ளது.

Related Articles