“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”.
–குறள். 45
இல்வாழ்க்கையின் பண்புகளாக அன்பையும், அறத்தையும் முன்வைக்கிறார் வள்ளுவர். எனவே அதையே முன்வைத்து இந்தக் கட்டுரையைத் துவக்குவதுதான் பொருத்தமாகும் என்று நினைக்கிறேன்.
திருமண உறவின் பிரிவைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும் முன்பு அதன் பாதிப்புகளை விவாதிப்பது நல்லது. சமீபத்தில் இசுலாமியக் குடும்பங்களின் நடைமுறையில் உள்ள “முத்தலாக் என்பது சட்டத்திற்குப் புறம்பானது” என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆனால் நம் நாட்டில் இன்று எத்தனையோ இல்லங்களில் முத்தலாக் சொல்லாமலே ஒரே வீட்டிற்குள் தனித்தனியாக வாழ்கின்றனர். இதில் பெண்கள் மட்டும்தான் பாதிக்கப்படுகின்றார்களா? இல்லை ஆண்கள் மட்டும்தான் பாதிக்கப்படுகின்றார்களா? இருவருமே இல்லை. பாதிக்கப்படுவது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், அவர்களின் எதிர்காலமும்தான்.
மனிதகுல வளர்ச்சியின் அடிநாதமாய் விளங்கும் இந்த உறவுக்குள் அப்படி என்னதான் பிரச்சனை? கருத்து வேறுபாடுகள் என்றால், கண்டிப்பாக வெவ்வேறு சூழ்நிலையில் பிறந்து வளரும் இருவருக்குள் கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதது. இந்தக் கருத்து வேறுபாடுகள் தவறு கண்டுபிடிக்கும் உளவியலை உருவாக்குகிறது. தவறு செய்யாத மனிதர்கள் இவ்வுலகத்தில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தவறு செய்யாதவர்கள் மனிதர்களே இல்லை. அப்படியென்றால் தவறு செய்பவர்கள் நியாயம் சொல்லிக்கொண்டு நிம்மதியாக இருக்கலாமா? இல்லை பாதிக்கப்பட்டவர்கள் விட்டுக்கொடுத்துப் போகிறேன் என்ற பெயரில் ஏமாந்து கொண்டுதான் இருக்கலாமா?ஆனால் அன்பு என்ற இணைக்கோடுதானே இது ஏற்படுத்துகிற இடைவெளியைக் குறைக்க முடியும். முதலில் கணவன் மனைவி இருவரும் சமம்தான் என்கிறது சட்டம். ஆனால் அப்படித்தான் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொள்கிறார்களா? இந்தியச் சமூக அமைப்பும், வேதங்களும் இங்கு அதற்கும் இடமளிக்காத ஒரு போக்கையே உருவாக்கி வைத்திருக்கிறதே!
இங்கு பாதிக்கப்பட்ட மனக் குமுறல்களின் வெளிப்பாடே முத்தலாக் பிரச்சனை. இப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிவு ஒன்று மட்டுமே விடையென்று சொன்னால் உதாரணம் காட்ட இங்கு ஒரு குடும்பம் கூட மிச்சம் இருக்காது. எல்லோரும் தனிநபர்களாக மட்டும்தான் இருப்பார்கள் . ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து தம்முடைய சுக, துக்கங்களைப் பகிர்ந்து தன் இனத்தையும், அடுத்த தலைமுறையையும், சமுகத்தையும் கொண்டுவரும் அமைப்பே குடும்பம்.
அப்படிப்பட்ட குடும்பங்கள் பல பிரச்சனைகளால் சீரழிகின்றன. கணவனும் மனைவியுமே இதற்குப் பொறுப்பாகிறார்கள். கணவன் தன் மனைவியை நடத்தும் விதத்திலும், மனைவி தன் கணவனை நடத்தும் விதத்திலுமே பிரச்சனைகள் உண்டாகின்றன. தங்கள் இணையின் திறமைகளை அங்கீகரிக்கிற, மனதாரப் பாராட்டுகிற ஆண்களும், பெண்களுமே இன்று மிகக் குறைவு. தங்கள் இணையிடம் கிடைக்கக்கூடிய அங்கீகாரம்தானே என்றுமே மற்றவைகளைக் காட்டிலும் பெரியது.
“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை” .
குறள் – 41
அதாவது பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். இதில் தங்கள் இணையின் இலட்சியங்களையும், பணியையும் கூடக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அங்கீகரிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை அவர்களது கனவுகளையும், விருப்பங்களையும், இலட்சியத்தையும் ஒரு பொருட்டாகவாவது நினைக்கிறார்களா? என்றால் அதற்கும் இல்லை என்பதே வேதனைதரும் பதிலாக வருகிறது பெரும்பாலான தம்பதிகளிடம்.
உதாரணத்திற்கு சானியா மிர்சா தனது கனவில் ஜெயிக்க, இந்தியாவைப் பெருமைப்பட வைக்க, திருமணமாகியும் குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டால் பெருமையாகப் பேசுவார்கள். ஆனால் தங்கள் வீட்டிற்குள் அப்படி ஒரு இலட்சியப் பெண்மணி இருந்துவிட்டால் அவ்வளவுதான்! இது பெண்களுக்கும் பொருந்தும்.
உண்மையாக அவர்களுக்கு உண்டான பிரச்சனை ஒருபுறம் இருக்க பெரிய பிரச்சனையாக உருவெடுப்பது வேறு 2 விஷயங்களே.
- தவறு செய்தவர் செய்த தவறை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் அதற்கு நியாயம் கற்பிப்பதும்
- மன்னிப்புக் கேட்க தயங்குவதும் கேட்காமல் இருப்பதுமே…
அதாவது “நீ இப்படி நடந்து கொண்டதால்தான் நான் இந்த தவறை செய்தேன்” என அவர்கள் மீதே தவறை திருப்புவது இல்லையென்றால் தான் செய்தது சரிதான் என்று ஆறுதல் சொல்லிக் கொள்வதும் தவறாய் முடிகிறது. அது மேலும் வெறுப்பையே பெற்றுத் தருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்லதே செய்தாலும் அதன் விளைவு மோசமானதாகத்தான் இருக்கும்.
ஒருமன்னிப்புக் கேட்டுவிட்டால் அனைத்தும் சரியாகிவிடுமா? எனக் கேட்பது புரிகிறது. ஆனால் அவ்வாறு மன்னிப்புக் கேட்கும் பொழுதுதானே குறைந்தது அந்த உறவை நிலை நிறுத்திக்கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. அப்போதுதான் அந்த வாய்ப்பைத் திருத்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் அது ஏதோ காரணத்தால் வெறுப்பான மனதைக் கூட இலகுவாக்குகிறது.
கண்ணகி கோவலன் தன் தவறை உணர்ந்து மனம் திருந்தி வந்த பொழுதுதான் ஏற்றுக் கொண்டாள். ஒருவேளை “நான் இப்படித்தான் இருப்பேன்” என்று கோவலன் சொல்லியிருந்தால் பாண்டிய நாட்டிற்கு பதிலாக சோழ நாடு தீக்கிரையாகியிருக்கும்.
அதுமட்டுமல்லாமல் இதைப் பார்த்து வளரும் குழந்தைகளும் எதிர்காலத்தில் அப்படியே பிரதிபலிப்பார்கள். இந்நிலையில் இதை உணராத தம்பதிகள் சமுதாயத்திற்கு ஒரு தவறான சந்ததியை உருவாக்கி விடுகிறார்கள் என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல முடியும். குறிப்பாக குழந்தைப் பருவத்தில் அவர்கள் மனதில் பதியும் சம்பவங்கள், வார்த்தைகள், குணங்கள், நடவடிக்கை எல்லாம் மேலோங்கும் குணமாகவோ அல்லது மனநிலையில் ஏற்படும் கட்டளை உணர்வாகவே அமையும். எனவே பிள்ளைகள் முன் தவறாக பேசுவது, தவறாக நடந்து கொள்வதை நிறுத்துவதே இதற்கான் தீர்வெனலாம்.
உதாரணமாக ஒருவேளை மனைவியை அடிக்கும் பழக்கமுள்ள அப்பாவிடமிருந்து மகன் இப்படி அடித்தால்தான் நானும் ஆண்மகன் என்ற உணர்வைப் பெறலாம். அது தவறான பழக்கம் என்ற உணர்வும் ஏற்படாமல் போகலாம். பெண் என்பதும் சக மனிதருள் ஒன்றுதான், அவளுடைய உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது அந்த குழந்தைக்கு அந்த வயது முதலே இல்லாமல் போகவும் வாய்ப்புண்டு.
சதா கண்ணாடிமுன் நிற்கும் அம்மாக்களிடமிருந்து மகள் அதையே கற்றுக்கொள்கிறாள். இப்போதெல்லாம் முகநூலிலும், கட்செவி அஞ்சலிலும் நேரம் செலவிடும் தாய்மார்கள் ஒரு முறை அப்படியே அவர்கள் மகள்கள் என்ன செய்கிறாள் என்று பார்த்தால்தான் தெரியும் அவள் அம்மாவின் முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு இருப்பது. இன்றைய காலகட்டத்தில் மொபைல் முக்கியம்தான். ஆனால் குடும்பமும், குழந்தையும் அதைவிட முக்கியம்.
தினமும் குடித்துவிட்டு வரும் அப்பாவைக் காணுகின்ற மகன் ஒரு கட்டத்தில் அப்பாவை வெறுக்கலாம். இல்லையென்றால் தானும் எப்படி அந்த பொருளைப் பெறுவது என்ற தேடலில் இறங்கலாம். இந்தச் சூழ்நிலையில் வளரும் போதுதான் குழந்தைகளுக்கு தவறான சகவாசத்தை பிரித்தறிய தெரிவதில்லை. போதை பழக்கங்களுக்கு அடிமையாகி போகின்றனர். இப்படிப் பிள்ளைகளை தொலைத்துவிட்டு பின் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதால் எல்லாம் சரியாகிவிடுமா?
இதுபோன்ற சில பழக்கங்களே குடும்பத்தில் பிரச்சனை உருவாக முக்கியக் காரணமாக இருக்கிறது
அதுபோல கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும் .
வன்முறையில் கொடியது குடும்ப வன்முறையே. ஏனென்றால் நிறைவான வாழ்க்கைப் பயனே இன்புற்றும் வாழும் இல்லறத்தில்தான் உள்ளது என்கின்றபோது அதைத் தொலைத்துவிட்டு எதை அடைய முடியும். குடும்பத்தை விட மகிழ்ச்சியான ஒன்று, அவரவர் வீட்டைத் தாண்டி நிம்மதியான ஒரு இடம் இருக்கிறது என்று எவராலும் சொல்லிவிட முடியாது. அதைக் காப்பாற்ற வேண்டியதுதானே அனைவருக்கும் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
எனவே நிறை குறைகள் அனைவரிடமும் உண்டு. அதை யார் முதலில் திருத்திக் கொள்கிறார்கள் என்பதிலேயே அந்த குடும்பம் மீண்டு வரும்.
மன்னிப்புக் கேட்கவும், மனம் விட்டு பாராட்டவும், உறுதுணையாய் இருப்பதற்கும், பிறர் உணர்வை மதிப்பதற்கும், காப்பதற்கும் தயங்காதபோது உறவுக்குள் சொல்லப்படாத அந்த முத்தலாக்கை உடைப்பது மிக,மிக எளிது.