Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இயலாமைக்கும் வறுமைக்கும் இடையிலான உறவு

உலக மக்கள் சனத்தொகையில், 15% (அல்லது 1 பில்லியன் மக்கள்) ஏதோவொரு விதமான இயலாமையுடன் வாழ்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையொன்றின் படி, இச் சமூகத்தில் சுமார் 2-4% இயலாமையுடையவர்களின் வாழ்வாதார நிலைமைகள் மிகவும் கடுமையான சிரமத்துடன் காணப்படுகின்றன. 

சமீபத்திய ஆண்டுகளில், வயோதிபர்கள் தொகை காரணமாகவும், நீண்டகால நோய்நிலைமைகளின் உலகளாவிய உயர்வு காரணமாகவும் (நீரிழிவு, மன நோய், இருதய நோய்கள் போன்றவை) இயலாமை உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய எண்ணிக்கை 1970 களின் உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளை விட அதிகமாக உள்ளது, இது சுமார் 10% ஆகும்.

சுகாதார நிலைமைகள், சுற்றுச்சூழல் பாதிப்புக்கள், சாலை விபத்துகள், இயற்கை பேரழிவுகள், போர்கள், உணவு மற்றும் போதைப் பொருள் துஷ்பிரயோகம் போன்ற முக்கிய காரணிகள் இந்த அதிகரிப்புக்கு காரணங்களாக இருப்பதாக இவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் வாழும் இயலாமையுடையவர்களுக்கு மோசமான சுகாதார நிலைகள், குறைந்த கல்வி சாதனைகள், குறைந்த பொருளாதார பங்கேற்பு மற்றும் இயலாமை அற்றவர்களைக் காட்டிலும் அதிக வறுமை விகிதங்கள் உள்ளன என்றும் இவ் ஆய்வு கூறுகின்றது.

பட உதவி: Photo by Anas Aldyab from Pexels

இவ் வேற்றுமை மற்றும் பாகுபாட்டுக்கு சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, தகவல் அறிதல் மற்றும் போக்குவரத்து போன்ற இயலாமை அற்றவர்களுக்கு இலவசமாக கிடைக்கக்கூடிய சேவைகளை அணுகுவதற்கான தடைகளும் காரணங்களாக அமைகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் – சமூக கொள்கை மற்றும் மேம்பாட்டு பிரிவு நடாத்திய கணக்கெடுப்பொன்றின் படி, வறுமை மற்றும் இயலாமை ஆகியவை இணைந்தே செயற்படுகின்றன, இயலாமையானது வறுமைக்கு காரணமாகவும் அறிகுறியாகவும் காணப்படுகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக, இயலாமையுள்ளவர்கள் வருவாயை அல்லது வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது, எனவே, வறுமையை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகமாகும். அதேசமயம் வறுமையில் வாடுவோர் முறையான சுகாதாரத்தைப் பெறுவதும் குறைவாகும், இதனால் அவர்களின் உடல்நிலை மேலும் மோசமாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இவ்வாறு இயலாமை உள்ளவர்களை மேம்படுத்துவதன் மூலம், வறுமை ஒழிப்பது மேலும் ஓரளவு சாத்தியமாகலாம். ஆனால் ஏன் இவை இன்னும் நடைமுறையில் சாத்தியமற்றவையாக உள்ளன என்பது கேள்விக்குரிய விடயமே!

தரவு மூலம்: உலக வாங்கி

புறக்கணிக்கப்படுத்தல் 

குறிப்பாக இலங்கை போன்ற குறைந்த நன்மை பயக்கும் சமூகங்களில் வாழுபவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இயலாமையுடையவர்கள் முறையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதை தடுப்பதில் புறக்கணிப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது என ‘இனவழி ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் (ஐசிஇஎஸ்)’ 2018 ம் ஆண்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள், பல பெற்றோர்கள் தங்களின்  இயலாமையுடைய குழந்தைகளை ‘மறைத்து’ விடுவார்கள், பெரும்பாலும் சமூகத்தில் அவர்களது குடும்பத்திற்கு எதிராக ஏற்படக்க்கூடிய பின்னடைவுகள்  குறித்த அச்சத்தில் அவர்களை வீட்டிலேயே தடுத்து வைப்பார்கள். இயலாமையுடைய குடும்ப உறுப்பினரொருவரைக் கொண்டிருப்பது மற்ற உறுப்பினர்களுக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், ஒருவரின் திருமணத் தகுதியையும் பாதிக்கும்.

இயலாமையுள்ளவர்கள் பெரும்பாலும் துன்புறுத்தல்களுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும் மற்றும் வழிகேடுகளுக்கும் இலக்காகிறார்கள், ஆகவே இவை, இவர்களை  செயற்திறன் மிக்க உறுப்பினர்களாக சமூகத்தின் மேன்மையில் பங்கேற்பதைத் தடுக்கின்றன.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

இலங்கையில், செயல்பாட்டு சிரமங்களைக் கொண்ட மொத்த இயலாமையுள்ளவர்களில் 96% சதவிகிதமானோர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. சுமார் 54,311 இயலாமையுடைய மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்குச் செல்கிறார்கள்.

ஐ.பி.எஸ் அறிக்கையின் படி, 5-19 வயதுடைய 88,740 அறிவுசார்  மற்றும் உடல்சார் இயலாமையுடைய குழந்தைகள் உள்ளனர், அவர்களில் 62% சதவிகிதமானோர் ஆரம்ப பள்ளி மூலம் கல்வியை பெற்றனர், 34% சதவிகிதமானோர் எந்தவிதமான கல்வியையும் பெறவில்லை. இவ் கணெக்கெடுப்புகள் மிகவும் கடுமையான செயற்பாட்டு இயலாமை உள்ள குழந்தைகளுக்கு, இலங்கைப்  பள்ளி அமைப்பில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

போதியளவு முறையான கல்வி கிடைக்கப்பெறாவிடின், இக் குழந்தைகளுக்கு தேவையான கல்வியறிவு இன்றி அவர்களால் சமுதாய செயற்பாடுகளில் பங்கு பெறவும் அதனை வழிநடத்த பொருத்தமான திறன்களை பெற்றுக்கொள்ளவும் முடியாது. இது பெரும்பாலும் அவர்களை தன்னிறைவு பெற்ற சுயாதீன நபர்களாக வாழுவதைக் காட்டிலும் ஏனையோரை பிரதானமாக குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்து வாழ்பவர்களாக மாற்றிவிடுகிறது.

அவர்களுக்குரிய தரமான கல்வியை வழங்க மறுப்பதன் மூலம், அவர்களுக்குரிய செயலாண்மையும் சுயமாக வாழக் திறனும் மறுக்கப்படுகின்றது. 

ஆனால் வேலைவாய்ப்புக்கள் அமைக்கப்படும் போது இயலாமையுடைவர்களுக்கான நலன் பேணலுக்கான சிறப்பு நடவடிக்கைள்  எவையும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஐ.சி.இ.எஸ் நடாத்திய ஆய்வின்படி, இலங்கையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் கல்வித் தகுதிகளைக் கருத்திற்கொள்ளாமல் இயலாமையுடையவர்களை வேலைக்கு அமர்த்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள், பெரும்பாலும் அவர்களை வெவ்வேறு திறன்களைக் கொண்ட நபர்களாகப் பார்ப்பதை விட அவர்களின் இயலாமையையே கருத்திற்கொள்கின்றனர். 

ஆய்வில் பங்கேற்று பதிலளித்த இயலாமையுடையவர்களின் வேலைவாய்ப்பைக் கையாளும் அமைப்புகள்,  இலங்கையில் பொதுவாக இயலாமையுடையவர்களை அடிமட்ட ஊழியர்களாகவே, முதலாளிகள் கருதுவது மிகவும் இயல்பான விடயம் என்பதை வெளிப்படுத்தினர்.

அணுகுமுறை

இலங்கையில் காணப்படும் பெரும்பாலான கட்டிடங்கள், பொதுப் போக்குவரத்து என்பன இயலாமையுடையவர்கள் புழங்குவதற்கு ஏற்புடையதற்றதாகவும், பொருத்தமற்றதாகவும்  இருப்பதால், இவற்றை பயன்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சக்கர நாற்காலிக்கான பாதைகள் இந் நாட்டில் அரியதொரு காட்சியாகவே இருந்தன, மேலும் பல பொது இடங்களில் சக்கர நாற்காலிகளுக்கான தனிப்பாதைகள் இன்னும் சரிவர அமைக்கப்படவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, அணுகல்தன்மைக்கு, ஏனைய வழிகளிலும் தடைகள் ஏற்படுகின்றன. ‘என் உரிமை’ -MyRight  அமைப்பின் இலங்கை நாட்டின் ஒருங்கிணைப்பாளரான திரு.  அசங்க ருவான் பெரேரா, இந் நாட்டில் செவிப்புலன் குறைபாடுள்ளவர்கள் “சைகை மொழி உரைபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறையால் பின்தங்கியவர்கள்” ஆகிறார்கள் என்பதை எடுத்துரைத்தார், மேலும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு ஏற்ற தனித்துவமான சைகை மொழியினை கற்றுக்கொள்ள கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் ‘திறமை மிக்க தொழில்முறை உரைபெயர்ப்பாளர்கள் கிடைக்கும்போது அவர்களின் தகவல்தொடர்பில் இடையூறுகள் ஏற்படுகின்றன” என்றும் தெரிவித்தார்.

சைகை மொழியில் தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு நிலவும் கடுமையான பற்றாக்குறை காரணமாக, செவிப்புலன் குறைபாடுள்ள குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் ஆசிரியர்களுக்கு சைகை மொழியைக் கற்பிப்பவர்களாக காணப்படுகின்றனர் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இவ்வாறான பின்னடைவுகள் குழந்தைகளின் தொடர்பாடல் மற்றும் அறிவுசார் வளர்ச்சிகளுக்கு  தடைகளாக அமைகின்றன. 

இயலாமையுடையவர்களுக்கு தொழில்நுட்பமும் அதிகளவில் அணுக முடியாததொரு வளர்ச்சியாக காணப்படுகின்றது ஏனெனில் ஒவ்வொரு புதிய பயன்பாட்டு செயலியும் அல்லது தொழிநுட்ப சாதனமும் உலகளவில் பரந்து வாழும் இயலாமையுடைய வாடிக்கையாளர்களை கருத்திற்கொள்ள தவறிவிடுகின்றது. 

இயலாமையுடையவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடியதாகவும் அவர்களுக்கு தகவல்தொடர்புகளை எளிதாக்குவதற்கும் புதிய முறைகளைக் கண்டுபிடித்த ஒரு சில ஆரம்பநிலை நிறுவனங்கள் காணப்பட்டாலும், பெரும்பாலான தொழில்நுட்பங்கள் இன்னும் அவர்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்படவில்லை.

பட உதவி: Photo by Ahmet Arslan on Unsplash

சமூகத்தில், இயலாமையுடைய பெண்கள் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை முதல் அவர்கள் பெண்கள் என்பதால் வெறுமனே கல்வி வழங்கப்படாதது வரை பல்வேறுபட்ட பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படுவதால் அவர்கள் மேலும் ஒடுக்கப்படுகிறார்கள்.

சமுதாயத்தால் அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள இறுக்கமான வரம்புகளிலிருந்து விடுபட முயற்சிக்கும் சூழலில் அவர்கள் சிக்கியுள்ளதால், அவர்கள் தங்களது கல்வி, இனப்பெருக்க உரிமைகள், வேலைவாய்ப்பு மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராட வேண்டிய நிலையில் உள்ளனர். 

குறிப்பிடப்படவேண்டியவை 

மார்ச் 2020 இறுதியில், அரசு ஊரடங்கு உத்தரவுகளை விதித்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் ஏற்பட்ட அசாதாரண சுழ்நிலைகளால், இலங்கையில் அதிக ஆபத்துள்ள சில பகுதிகள் நீண்டகாலமாக முடக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் கூட்டு முன்னணியின் (DOJF) ரசாஞ்சலி பதிரகே கூறுகையில், இத்தகைய நிச்சயமற்ற காலங்களில், மாற்றுத்திறனாளிகள் சமூகம் அடிப்படை வளங்களின் தேவைசார்ந்து மட்டுமல்லாமல், துணை, கொள்கை மற்றும் உதவி ஆகியவற்றின் அடிப்படையிலும் எதிர்மறையாக பாதிக்கப்பட்டது என்று கூறினார்.

“மளிகைப் பொருள்களைப் வாங்க பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட போதெல்லாம், குறைபாடுடைள்ளவர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர், ஏனென்றால் அவர்கள் மற்ற பொதுமக்களைப் போல வெளியேற முடியாது; குறிப்பாக பார்வைப்புலனற்ற நபர்கள் அல்லது சக்கர நாற்காலிகளின் உதவியுடன் இயங்குபவர்கள் போன்றவர்கள். பிந்தங்கிய சமூகங்களில் வசிக்கும் இவர்களில் சிலர் தமக்கு சமீபமாக உள்ள கடைக்குச் சென்றுவரவும் நீண்ட நேரம் தேவைப்படும். உங்களிடம் பணம் இருந்தாலும், சிரமம் மட்டும் தீராது ”என்று ரசாஞ்சலி விளக்கினார்.

இது தவிர, லாட்டரி சீட்டுகள் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யும் சாலையோரங்களில் தங்கள் தொழில்களை அமைத்த மாற்றுத்திறனாளிகள், பிறவசதிகளுடன் சேர்த்து, வாழ்வாதாரத்தையும் இழந்தனர். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மளிகை பொருட்களையும் மருந்துகளையும் பெறமுடியாத நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன எனவும் ரசாஞ்சலி கவலையுடன் தெரிவித்தார். தொலைபேசிகளினூடாகவே பெரும்பாலான தகவல்தொடர்பாடல்கள் நடந்துவருவதால் செவிப்புலன் அற்றோர் அல்லது  குறைபாடுகளுடையோரை யாரும் தொடர்பு கொள்ள முடியாதநிலையில் அவர்களில் பலருக்கு உதவிகிடைக்காது இருந்தனர்.

இவ்வாறான தடைகளுக்கிடையில் மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு உதவ DOJF தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருந்தபோதிலும், இன்னும் நிறைய விடயங்கள் குறித்து அக்கறைபடவேண்டியுள்ளது. முக்கிய செய்தித்தகவல்களைப் பரப்புகையில் ​​சைகை மொழியில் ஒரு பதிப்பைச் சேர்ப்பதை அரசாங்க ஆதாரங்கள் கருத்தில் கொள்ளவில்லை.

ஊடகங்கள் கூட, இத்தகு சந்தர்ப்பங்களில் நிகழ்பவற்றை தெளிவுறுத்தும்போதும், ​​பெரும்பாலும் மாற்றுத்திறனாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பற்றி  அதிகம் செய்தி பகிரவில்லை. அல்லது உத்தியோகபூர்வ பத்திரிகையாளர் சந்திப்புகளில் சைகை மொழி உரைபெயர்ப்பாளர்களை இணைக்கவும் இல்லை.

“அதற்கு மேலாக, நமது நாட்டில் குறைபாடுடையவர்களின் எண்ணிக்கையை பதிவுசெய்யவும் அவர்களின் இயலாமையின் தன்மையை ஆவணப்படுத்தவும் முறையான தரவுத்தளம் ஒன்று இல்லை, இது ஒரு எளிய பணியாகும்” என்று ரசாஞ்சலி மேலும் கூறினார்.

“பேரழிவுகளுடன் கூடிய சம்பவங்கள் இடம்பெரும்போது, குறிப்பாக; வெள்ளம், நிலச்சரிவு அல்லது வேறு ஏதேனும் இயற்கை பேரழிவு ஏற்பட்டால், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய உத்திகள் உள்ளன. ஆனால் நீங்கள் ஒரு மாற்றுத்திறனாளி நபராக இருந்தால் என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்? அது ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை. ” என்றும் அவர் கூறினார்.

COVID-19 முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை எடுத்துக்கொண்டால், ​​நிலைமை அதேவண்ணமே உள்ளது. மாற்றுத்திறனாளி சமூகத்தில் பலருக்கு பராமரிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள், உண்மையிலேயே சமூக தூரத்தை கடைபிடிக்க முடியாது, அல்லது பார்வையற்றோர் ஒரு மீட்டர் தூரத்தை பராமரிக்க முடியாது என்ற உண்மையை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் கருத்தில் கொள்ளவில்லை.

COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது என்பதை ஒப்புக் கொண்டாலும், இயலாமை சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்தவொரு நீண்டகால திட்டங்களையும் குறிப்பிடாதது குறித்து ரசாஞ்சலி கவலைகளை எழுப்பினார். “செயற்கை அங்கங்கள் அணிந்த காலலை இழந்த ஒருவரின் பாதத்தைப் பயன்படுத்தி எவ்வாறு பாதத்தின் உதவியுடன் இயங்கும் நீர்க்குழாய்கலை இயக்க முடியும்?” என கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பரப்பு ஒன்றை முன்னிலைப்படுத்தி அவர் இந்தக் கேள்வியை கேட்டார்.

அதிகாரம் 

இயலாமையுடையவர்களுக்கும் இயலாமையற்றவர்களுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி விரிவடைவதால், பொருளாதாரமே இச் சுமைகளின்  தாக்கத்தை  தாங்குகிறது. கைவிடப்படுதல், பொருத்தமான சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, கல்வி இல்லாமை அல்லது வேலை வாய்ப்புகள் இல்லாமை  ஆகியவற்றின் காரணமாக வறுமையுடன் வாழும் மாற்றுத்திறனாளிகளின்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வறுமை என்பது பன்முகத்தன்மை வாய்ந்ததொரு விடயமாகும் மற்றும் எந்த வகையிலும் ஒரே தீர்வில் முடிவுறும் பிரச்சினையுமல்ல இது, ஆனால் வறுமையை ஒழிப்பதற்கான முக்கியதொரு படியாக சமூகத்தை பாரியளவில் பாதிக்கும் மிகப் பெரிய பின்னடைவுகளில் ஒன்றான இயலாமையுடையவர்களை மேம்படுத்துதலால் இதனை கட்டுப்படுத்த முடியும்.

இயலாமையுடையவர்களை மேம்படுத்தி அவர்களுக்குரிய உரிமைகளை அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும், அவர்கள் சமூக செயற்பாடுகளில் பங்களிப்பாளர்களாக பங்கேற்கும்போது அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வழிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இயலாமையுடையவர்களை சமுதாயத்தில் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பதற்கு, முதலில் இயலாமைக்கு எதிராக இச் சமூகத்தில் காணப்படும்  களங்கத்தைத் களைய வேண்டும். 

இதனைத் தொடர்ந்து, தெளிவான மற்றும் நிலையான பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குதல், உள்ளூர் கல்வி முறையை மேம்படுத்துதல், பொது போக்குவரத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுதல் மற்றும் இயலாமையுடையவர்களுக்கு சமமான சேவைகள் மற்றும் நியாயமான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

Related Articles