நதிநீர் மாசுபாடு, கடலில் குறைந்து போன மீன் வளம், காணாமல் போன சிட்டுக் குருவிகள் உட்பட பல அறிய வகை உயிரினங்களின் அழிவு, ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமயமாதல், மண் வளத்தின் அழிவு,இப்படி எத்தனையோ செய்திகளைக் கேட்டும் சூழலியல் பாதுகாப்பு சார்ந்த முயற்சிகள் சிறிதளவேனும் வளர்ந்ததாகத் தெரியவில்லை. வளர்ந்துவரும் வேகமான உலகத்தில் அனைத்தும் வேதிப் பொருட்களாகவும்(chemicals) ,பிளாஸ்டிக் பொருட்களாகவும் பயன்படுத்தி இப்போது எதுவரை உண்மையென்று விளங்காத பிளாஸ்டிக் அரிசி வரை வந்துவிட்டோம். ஆனால் அதன் பாதிப்புகள் குறித்து யோசிக்காமல் கடந்து செல்வது பேரழிவை நோக்கிய பயணத்தில் மனிதகுலம் சென்றுகொண்டிருப்பதையே காட்டுகிறது.சூழலியல் குறித்து எத்தனையோ விழிப்புணர்வுகளைப் பல அமைப்புகள் தொடர்ந்து முன்வைத்தாலும் தவிர்க்க முடியாமலும், அலட்சியப் போக்கினாலும் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை மட்டும் நம்மால் தவிர்க்கவோ, குறைக்கவோ முடியவில்லை. இந்நிலையில் நிலத்தையும், சூழலியலின் உயிர்ப்பையும் தக்கவைக்க பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து அவ்வப்போது இதுபோன்ற கட்டுரைகள் மூலம் விவாதித்துக் கொண்டாவது இருப்பது காலத்தின் கட்டாயமே.
டச்சு நாட்டைச் சேர்ந்த ஓசியன் கிளீனப் (Ocean Clean-up) என்கிற சூழலியல் ஆய்வுக் குழு பெருங்கடல்களில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 1.15 முதல் 2.41 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகளின் வழியாகக் கடலில் வந்து கலப்பதாகக் கூறியது.
இதில் சீனாவின் யாங்ஜி நதி முதலிடத்திலும், இந்தியாவின் கங்கை நதி இரண்டாமிடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை சொல்கிறது. உலகிலேயே மூன்றாவது நீளமான யாங்கஜி நதி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.3 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளையும்,இரண்டாம் இடம் பிடித்துள்ள கங்கை 1.15 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுளையும் கடலில் சென்று சேர்க்கிறது. இத்தனைக்கும் கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்கு இப்போதுள்ள நடுவண் அரசு ரூபாய் 3,703 கோடி ஒதுக்கீடு செய்து அதில் 2,600 கோடி ரூபாய் வரை செலவும் செய்துதான் இந்த இரண்டாம் இடச் சாதனையை எட்டியுள்ளது (“Swatch Bharath” திட்டம் மூலம் இன்னும் பல சாதனைகளை எட்டவும் வாய்ப்புள்ளது). அடுத்து வரும் கும்பமேலா முடிந்ததும் கங்கையை முதலிடத்துக்கு உயர்த்தும் பணியை அகோரிகள் பார்த்துக் கொள்வர்கள். சமீபத்தில் தான் ஆசியாவில் உள்ள ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை படைத்திருந்தது. தற்போது கங்கைத் தாயும் இந்தியாவின் புகழை உலகளவில் பரப்பிக் கொண்டிருக்கிறாள்.
உலகம் முழுவதும் ஓராண்டுக்கு 50 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.ஒவ்வொரு நிமிடத்திற்கும் 10 லட்சம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது.மற்ற நாடுகளை விட இந்தியாவில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. காய்கறி முதல் அனைத்து பொருட்களின் விற்பனையும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடுக்கு மாறிவிட்டன.
பிளாஸ்டிக் பைகளை அழிப்பது மிகவும் கடினமானது. பிளாஸ்டிக் பைகள் முழுமையாக அழியக் குறைந்தது 300 ஆண்டுகளாவது ஆகிறது. பயன்பாட்டிற்குப் பின் குப்பைக்குச் செல்லும் பிளாஸ்டிக் பைகள் அழிக்க முடியாமல் பூமியின் நிலப்பரப்பில் பல இடங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளிலும் கூட மிதந்து கொண்டிருக்கின்றன.
பூமியின் நிலப்பரப்பில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளைத் தின்று அவைகளைச் செரிமானம் செய்ய முடியாமல் பல கால்நடைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. பூமியினுள் மேலாகப் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக் பைகள் மழைநீரை பூமிக்குள் செல்லவிடாமல் தடுத்து விடுவதால் நிலத்தடி நீரின் அளவும் குறைந்து கொண்டே இருக்கிறது. இதனால் வருங்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது.
நகர்ப்புறங்களில் சிறிய வகை பிளாஸ்டிக் பைகளில் வந்த ஷாம்புகள், குளியலறை, கழிவறை கழுவான்கள், ஆசிட், பினாயில் போன்ற இரசாயனங்களாலும், ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் சேரும் பிளாஸ்டிக் பைகளாலும் அவை பெருமளவில் மாசடைந்து அவற்றில் வாழும் உயிரினங்கள் சிறிது, சிறிதாக அழிந்து வருகின்றன.நீரில் வாழும் சில உயிரினிங்கள் இன்று முழுவதும் அழிந்துவிட்டன. இன்னும் பல அழிவை நோக்கிய நிலையில் உள்ளன.முன்பு அனைத்துக் குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் போன்ற அனைத்து நீர்நிலைகளிலும் மழைக்காலங்களில் தெருக்களிலும் கூட தவளைகள் அதிகமாகக் காணப்பட்டன. ஆனால் இன்று அடை மழையில் கூட அவைகளைக் காண முடியவில்லை.தவளை கத்தினால் மழை வரும் என்று கிராமத்தில் ஒரு பேச்சு உண்டு. கழிவு நீர் கால்வாய்களிலும், மரஇடுக்குகளிலும் கூட வசித்து வந்த தவளைகள் இன்று தேடினாலும் கிடைப்பது அரிது. இவை சிறு பூச்சிகள், கொசுக்கள் ஆகியவற்றைத்தான் விரும்பி உண்ணும். இன்று தவளைகள் பெருமளவில் அழிந்துவிட்டதும் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமானதற்கும், அதனால் சிக்குன்குன்யா, டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் மனிதர்கள் உயிரிழப்பதும் அதிகரித்து விட்டது.
சமீபத்தில் முதுமலை வனப்பகுதியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் யானைகளின் சாணக் கழிவுகளில் 60 சதவீதம் பாலித்தீன் பொருட்களும், குளிர்பானப் புட்டியும் இருந்தது தெரிய வந்தது.யானைகள் நகரும் இடங்களில் பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகளை வீசும் பழக்கம் அதிகரித்ததன் விளைவாகவே யானையின் கழிவுப்பொருட்களில் பாலித்தீன் பைகளும், பிளாஸ்டிக் பொருட்களும் இருக்கின்றன. இதனாலேயே யானைகள் குடல் நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கின்றன.
அழகிய வண்ணங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் பல் துளக்கி முக்கியமான கழிவுப்பொருளோடு இணைந்து கொண்டிருக்கிறது மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல். ஆண்டொன்றிற்கு தனிமனிதர் சராசரியாகப் பயன்படுத்தும் பல்துலக்கியின் எடை சுமார் 150 கிராம் உள்ளது. இதை 138 கோடி மக்கள் பயன்பாட்டில் கணக்கிட்டால் தூக்கி எறியும் பல்துலக்கியில் உள்ள பிளாஸ்டிக்கின் எடை 2.07 இலட்சம் மெட்ரிக் டன்களாக உள்ளது. உலகம் முழுவதுமுள்ள 700 கோடி மக்கள் பயன்பாட்டுக் கணக்கில்இது 10.5 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக இருக்கும். அன்றாட வாழ்க்கையில் இந்த பிளாஸ்டிக் பல் துலக்கிகள் ஒதுக்கித் தள்ளிவிட முடியாத ஒன்றாக ஆகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இதுபோல் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளது.
இந்தியாவில் 20 மைக்ரான் கனம், அளவிலுள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு தடை உள்ளது. ஆனால், இந்த தடையைச் செயல்படுத்துவதில் அரசாங்க அதிகாரிகள் அக்கறை கொள்ளாததால் நாடு முழுக்க பிளாஸ்டிக் பைகள் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால், கால்நடைகள் நலனுக்காகப் பாடுபடும் தொண்டு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், பிளாஸ்டிக் பைகளின் தவறான பயன்பாடு கால்நடைகளுக்கு மட்டுமின்றி வருங்காலத் தலைமுறையினருக்கும் ஆபத்தாக இருப்பதால் அது முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அல்லது உற்பத்தியாளர்கள் பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்திட வேண்டும் என்றும்,இதுகுறித்து இந்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு குறிப்பாணை அனுப்பவும் உத்தரவிட்டது.
அதிகரித்து வரும் மக்கள் தொகை, தண்ணீர் பாட்டில்கள், சோடா கேன்கள் போன்ற செலவழிப்பு பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகங்கள் அதிகரித்ததால் அவை காலப்போக்கில் குவிந்துஉலகின் குப்பை அளவு அதிகரிக்கிறது.இவையனைத்தும் இயற்கை சூழலைப் பாதிப்பதோடு தாவரங்கள், பறவைகள்,விலங்குகள் மற்றும் மனிதர்களின் ஆரோகியமான வாழ்வியல் சூழலுக்கு அச்சுறுத்தலாகி விடுகிறது.
மக்கள்தொகை அதிகரிக்க, அதிகரிக்க மதிப்புமிக்கதாக மாறும் நிலத்தில் விரைவில் குப்பைகளை அகற்றுவதற்கு இடங்களை கண்டுபிடிப்பது கடினமாகிப் போகும். அதோடு நீர்நிலைகளும் முற்றிலும் அழிந்து நீராதாரமும் நாசமாகி அனைத்து உயிரினங்களும் குடிநீருக்கே அல்லாடும் நிலை வெகு தொலைவில் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க முயற்சி செய்வோம். அதற்கு முதலில் இயன்றளவு ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து பிளாஸ்டிக் பயன்பாட்டினைக் குறைத்துக் கொள்வதும், மறுசுழற்சிக்கு உட்படுத்துவதும், பிளாஸ்டிக் குப்பைகளைப் பகுப்பாய்ந்து பிரித்து அழிப்பதும் கடமையாக மேற்கொள்ள வேண்டும். பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டே படைக்கப்படுகின்றன. எனவே மானுட சிந்தனை மேலோங்க அனைத்து உயிரிங்களின் நேசமிகு மனிதர்களாக சூழலியல் பாதுகாப்பில் சிறிதளவேனும் அக்கறையோடு செயல்படுவோம்.