ஆள் பாதி; ஆடை பாதி என்பது நம்மிடையே அதிகம் புழங்கும் ஒரு சொல்லாடலே. ஒரு நபரின் ஆடையணிகலன் என்பது அந்நபரின் தனிப்பட்ட அம்சத்தை மட்டுமல்லாது, அவரின் சமூக கலாச்சார பின்புலத்தையும் வெளிப்படுத்தும் அங்கமாக நோக்கப்படுகிறது. அந்தவகையில் ஆடைக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவம் ஆபரணங்களுக்கும் வழங்கப்படுகிறது. காலத்தின் போக்கில் பல்வேறு வகையான பாரம்பரிய ஆபரணங்கள் நவீனத்துவம் அடைந்து வளர்ச்சியடைந்து வந்தாலும், சில ஆபரண வகைகள் இப்போது ஏறக்குறைய முற்றிலுமாக வழக்கொழிந்தே போய்விட்டன. அவற்றில் முதலிடத்தில் இருப்பது காதணிகள்.
வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலாரிடையேயும் காதணிகள் என்பது அன்றாட ஆடைகளில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக அமைந்துவந்தது. குறிப்பாக பெண்களிடையே காது ஆபரணங்கள் மங்கலம் மற்றும் செல்வாக்கின் அடையாளமாக கருதப்பட்டன. வெற்று காது மடல்கள் பெண் விதவையாகிவிட்டதை குறிப்பதாக அமைந்திருந்தன. இதற்கு மேதிகமாக, நீளமான காது மடல்கள் அழகு மற்றும் நாகரிகத்தின் அடையாளமாக இருந்தன. காது வளர்த்தலும், காதுகளை தங்க ஆபரணங்களால் அலங்கரித்துக் கொள்வதும் தமிழ் சமூகத்தின் தொன்மையான நடைமுறைகளாக இருந்தன என்பதற்கு ஆலய சிற்பங்களே போதுமான எடுத்துக்காட்டாக அமைகிறது.
ஒருவரின் காதுகளை நீட்டிக்கும் செயல்முறையானது, குழந்தை பிறந்த முதல் சில வாரங்களிலேயே தொடங்கிவிடும். குழந்தை சிசுப் பருவத்தில் இருக்கும் போதே காது மடலில் சிறிய துளையிடப்படும். அக்காயம் ஆறிய பின்னர் இறுக்கமாக உருட்டப்பட்ட சிறிய பனையோலை சுருள் அவ்வெட்டினுள் செலுத்தப்படும். இவ்வாரம்ப நாட்களில் குழந்தைக்கு காதில் தொற்றுகள், அழற்சிகள் எதுவும் உண்டாகாதிருக்க பாலூட்டும் தாய் பத்தியமான உணவையே உட்கொள்வார்.
ஆண்களிடையே கடுக்கன் எனப்படும் ஏதேனும் இரத்தினக்கல் பொருத்தப்பட்ட எளிய தங்க ஆபரணம் அணிந்து கொள்ளும் வழக்கம் 19ம் நூற்றாண்டு வரையில் பிரபலமாக இருந்துவந்தது. ஆனால் ஐரோப்பிய காலனித்துவத்துக்கு பின்னர் ஆண்களிடையே கடுக்கன் அணியும் பழக்கம் ஏறக்குறைய முற்றாக நின்றுவிட்டது. தற்போது பிராமண சமூகங்கள் மட்டுமே கடுக்கன் அணியும் வழக்கத்தை தொடர்ந்துவருகின்றனர். அதே போல தற்போதைய பெண்களிடையேயும் பாரம்பரிய தமிழ் காதணிகள் அணியும் வழக்கம் முற்றாக குன்றிவிட்டது.
தென் தமிழ்நாட்டின் கிராமங்களிலும், ஆங்கிலேயே ஆட்சியில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஊழியர்களாக கொண்டு செல்லப்பட்ட தமிழ் சமூகங்கள் மத்தியிலும் வாழும் மூதாட்டிகள் மட்டுமே இன்றும் இவ்வழகியல் அம்சத்தை பேணி வருகின்றனர். ஆனால் அண்மைக் காலத்தில் மீண்டும் சில பெண்களிடையே இந்த பாரம்பரிய காதனிகளின் சில கூறுகள் பிரபல்யமடைந்து வருவது, இவ்வழகியல்கூறு எதிர்காலத்திலும் பிழைத்துக் கொள்ளும் என்ற சிறியதொரு நம்பிக்கையை நமக்களிக்கிறது.