Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

நாட்டார் இலக்கியம் ஓர் அறிமுகம்

நாட்டார் என்ற சொல் அபிவிருத்தி என்கின்ற செயற்பாட்டுக்கு உட்படாத, பிறரின் வாழ்க்கைக் கோலத்தோடு தன்னை ஒப்பிட்டு ஏற்றத்தாழ்வு கண்டறியாத பெரும்பாலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பள்ளிப்படிப்பறியாத பாமர மக்களைச் சுட்டி நிற்கின்றது.

நாட்டுப்புற மக்கள் அக்காலத்தில் முறையான கல்வியைப் பெற்றிருக்கவில்லை இருந்தும் “வாழ்க்கைக்காக வாழ்க்கைமூலம் பெறப்படும் அனுபவமே கல்வி" எனும் கல்விக்கொள்கைக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டினர். படம் - dollsofindia.com

நாட்டுப்புற மக்கள் அக்காலத்தில் முறையான கல்வியைப் பெற்றிருக்கவில்லை இருந்தும் “வாழ்க்கைக்காக வாழ்க்கைமூலம் பெறப்படும் அனுபவமே கல்வி” எனும் கல்விக்கொள்கைக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டினர். படம் – dollsofindia.com

அன்றைய கிராமப்புறமக்கள் பாடசாலைகளின் படிகளைக்கூட மிதித்தறியாதவர்களாகவும், மொழியொன்றின் இலக்கண இலக்கியம் கற்றுத் தெரிந்துகொள்ளாதவர்களாகவும், பண்டைய இலக்கியங்களைப் படித்தறியவேண்டிய தேவையும் ஆர்வமும் இல்லாதவர்களாகவும் காணப்பட்டனர். மேலும் இவர்கள் கல்வி கேள்விகளில் நாட்டமுற்று வாழ்ந்த நாகரிகமடைந்த நகர்ப்புற மக்களின்னின்றும் வேறுபட்டுத் தாம் வாழும் சூழலுக்கு இசைவாக்கம்பெற்றுச் சீவனோபாயத்திற்கான அடிப்படைத் தொழில்களான வேட்டையாடுதல், விவசாயம் செய்தல், மீன்பிடித்தல், பெருந்தோட்டங்களில் கூலிக்கு வேலைசெய்தல் முதலான தொழில்களில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

தங்களது அன்றாடச் செயற்பாடுகள், தொழில், தொடர்பாடல் போன்றவற்றில் உடனடியாகப் பாடல்களை இயற்றிப் பாடும் வல்லமை இந்நாட்டுப்புற மக்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது. படம் - dollsofindia.com

தங்களது அன்றாடச் செயற்பாடுகள், தொழில், தொடர்பாடல் போன்றவற்றில் உடனடியாகப் பாடல்களை இயற்றிப் பாடும் வல்லமை இந்நாட்டுப்புற மக்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது. படம் – dollsofindia.com

பாமர மக்களாயினும் இவர்கள் தொழில் அனுபவங்களாலும், மக்கட் பண்புகளாலும், மனித நேயத்தாலும் மேம்பட்டிருந்தனர். “வாழ்க்கைக்காக வாழ்க்கைமூலம் பெறப்படும் அனுபவமே கல்வி” என்ற கல்விச் சிந்தனையாளர்களின் கருத்திற்கொப்ப இம்மக்கள் தமது வாழ்வின் அனுபவங்களை அவ்வப்போது பாடல்களாகவும்; கருத்துத் தொடர்களாகவும் வெளிப்படுத்திச் சென்றுள்ளனர். மண்வளச் சொற்களையும் ஆழமான பொருள் நயத்தையும் கொண்டு படிப்பவர்களால் சுவைத்து இன்புறக்கூடியனவாய் நவரச உணர்ச்சிகளின்பால் இவை மனிதர்களை ஈர்த்துள்ளன. ஓசை நயமும், ஒத்த ஒலியும், பொருட்செறிவும் கொண்டு சந்தர்ப்பங்களுக்கேற்ப அவ்வப்போது உடனுக்குடன் பாடல்களைப் பாடுவதில் முதியோர், வளர்ந்தோர், இளைஞர், சிறுவர் என்கின்ற வயதுப் பாகுபாடின்றி எல்லோரும் நாட்டார் பாடல்களைப் பாடியுள்ளனர்.

தத்தமது உலக அறிவு, தொழில் பாண்டித்தியம், தாம் தொடர்பாடுகின்ற மக்கள், தாம் வாழும் சூழல் போன்றவற்றிற்கேற்ப அவர்களது நாட்டார் பாடல்களின் நோக்கமும், உட்கருத்தும், சொல்லுகின்ற பாணியும் அமைந்திருக்கும். உதாரணமாக; அன்றைய நாட்டு வைத்தியர்கள் தமது வைத்தியக் குறிப்புக்களின் இரகசியம் கருதி நோயாளிகள் மத்தியில் பேசும்போது தன் எவலாளர்களிடம் மறைமுகமான சொற்களைக் கவிவடிவில் வெளியிட்டுள்ளனர்.

அக்காலத்தில் அநேகமான வைத்தியக் குறிப்புக்கள் மற்றும் மூலிகைகளின் விபரங்கள் போன்றன பாடல்களாகவே பாடப்பட்டன. படம் - myanmarinsider.com

அக்காலத்தில் அநேகமான வைத்தியக் குறிப்புக்கள் மற்றும் மூலிகைகளின் விபரங்கள் போன்றன பாடல்களாகவே பாடப்பட்டன. படம் – myanmarinsider.com

மருந்தொன்றை நோயாளிக்குக் கொடுக்க மூலிகை கொண்டுவரும்படி தன் ஏவலாளனைப் பணிக்கும்போது; “இருகுரங்கின் கைச்சாறு கொண்டா” என்கிறார் வைத்தியர். அது மொசுமொசுக்கைக் கொடியிலுள்ள இலைகளைப் பிழிந்தெடுத்த சாறு. “மொசு” என்றால் குரங்கு. “மொசு மொசு” என்ற பதத்தை இரு குரங்கு என்றும் அப்புறம் கைச்சாறு. இதனைத்தான் “இருகுரங்கின் கைச்சாறு” என்று மறைபொருளில் தொடராக்கினர்.இவ்வாறே;

“மாங்காய்க்குத் தேங்காய்

வருக்கைக்கு வெந்நீர்

தூங்கு கதலிக்குச் சுக்கு” என்று பாடினர்.

அதாவது மாங்காயைப் பச்சையாகச் சாப்பிட்டால் ஈற்றில் ஒரு தேங்காய்க் கட்டியைச் சப்பி உண்ணவேண்டும். வருக்கைப் பலாப்பழம் சாப்பிட்டால் ஈற்றில் வெந்நீர் குடிக்க வேண்டும், வாழைப்பழம் சற்று அதிகமாகச் சாப்பிட்டால் “வேர்க்கொம்பு” எனப்படும் சுக்குப் போட்டுத் தேநீரோ கோப்பியோ குடிக்க வேண்டும். இவ்வாறு வைத்தியம் முதல் விவசாயம், மீன்பிடி, கப்பலோட்டுதல்… என தொழில்களிலும், தாலாட்டு, ஊஞ்சல் பாட்டு, சிறுவர் பாடல்கள், காதல், ஊடல், வறுமை, செழுமை, ஒப்பாரி, பிரார்த்தனை, வாழ்த்துதல், வைதல் என எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாட்டார் பாடல்கள் தோன்றிக் காலத்தால்  மறைந்து கைக்கெட்டாது போயிருப்பினும் அவற்றில் பலவற்றை இலக்கியவாதிகள் தேடிப்பிடித்துத் தொகுத்து வழங்கியுள்ளனர். அவ்வாறு வழங்கியவர்களில் புலவர்மணி ஆ.மு ஷரிபுத்தீனின் ‘கனிந்த காதல்’, ஏ.ஆர்.எம் சலீமின் ‘நாட்டார் பாடல்’, எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களின் ஒப்படைத் தொகுப்பு, கவிஞர் முத்து மீரானின் தொகுப்பு என்பவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

இலக்கியவாதிகளிடம் அகப்படாமலும், ஏடுகளில் இடம்பெறாமலும் நழுவிப்போன பல நாட்டார் பாடல்கள் சங்ககாலப் பாடல்களோடும், திரைப்படம், நாடக உலகம், நாவல் இலக்கியம் என்பனவற்றோடும் அன்றும் இன்றும் எவ்வாறு இணைந்து செல்கின்றன என்பதனைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

உலகம் மாறும் இயல்புகொண்டது. மாற்றங்களைப் புரிந்துகொண்டு மனிதன் மிக வேகமாக மாறி வருகிறான். இதனால் கிராமங்கள் நகரங்கள் என்ற அந்தஸ்த்தைப் பெறுகின்றன. இருந்தாலும், நாட்டார் பாடலின் பேச்சுவழக்குச் சொற்கள் சில நம்மவர்க்குச் சங்ககால இலக்கியங்களிலுள்ள சொற்களைப்போன்று தோன்றலாம். உதாரணமாக, கத்தரிக்காய் என்றும், வாழைக்காய் என்றும் இன்று பேசப்படும் சொற்கள் அன்று “வழுதுலங்கா”, “வாழக்கா” என்று பேசப்பட்டன. நாட்டார் பாடலொன்றில்:-

“வாழக்கா மாந்தம்

வழுதுலங்காயோ கெரந்தி                                                                                                                                            

கீர குழும – என்ர

கிளி மொழிக்கு என்ன கறி” என்று இடம்பெற்றுள்ளது.

இப்பாடல்கள் இலக்கண இலக்கிய மரபுவழிக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் அவை கொண்டுள்ள பொருளடக்கம், உணர்ச்சிகள், இடத்திற்க்கேற்ப பாடும் திறம், மொழிவளம் போன்றவற்றில் சிறந்து நிற்கின்றது. தனது அன்புக்குரியவளின் என்று கூறுவதற்குப் பதிலாக என்ர “கிளிமொழிக்கு” அதாவது கிளியின் பேச்சைப்போல் இனிமையான குரலுடையவளுக்கு என்று பேசுகிறது அப்பாடல். மேற்படி பல பாடல்கள் நாட்டின் பல பிரதேசங்களில் அப்பிரதேசங்களின் செயற்பாடுகளோடு பின்னிப் பிணைந்து வெளிப்பட்டிருக்கின்றன. மலைவளம் நிறைந்த நம்நாட்டிலே தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும்போது:-

“பாட்டுக்குப் பணிய லயம்

பந்தடிக்க மேட்டு லயம்

பேச்சுக்குப் பீலிக்கர

வாச்சுதடா உந்தனுக்கு” என்றும் பாடப்பட்டுத் தொடர்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள் தமிழ்ப் பாரம்பரியத்துக்கு உரியவர்கள். தங்கள் நீண்டநேர தோட்டத் தொழில், அவற்றில் அவர்களுக்குள்ள இன்னல்கள், இடையிடையே நடக்கின்ற சுவாரசியமான விடையங்கள் போன்றவற்றை அவர்கள் பாடல்கள் மூலமாகவே வெளிப்படுத்தினர். படம் - matatraders.com/fair-trade-movement

தோட்டத் தொழிலாளர்கள் தமிழ்ப் பாரம்பரியத்துக்கு உரியவர்கள். தங்கள் நீண்டநேர தோட்டத் தொழில், அவற்றில் அவர்களுக்குள்ள இன்னல்கள், இடையிடையே நடக்கின்ற சுவாரசியமான விடையங்கள் போன்றவற்றை அவர்கள் பாடல்கள் மூலமாகவே வெளிப்படுத்தினர். படம் – matatraders.com

விளையாட்டு நிமிர்த்தம் கிட்டிப்புள்ளுப்பாடல், ஊஞ்சல் பாடல், சடுகுடு விளையாட்டுப் பாடல், கபடியாட்டப்பாடல், பந்தாட்டப்பாடல், பல்லாங்குழிப் பாடல் என நாட்டார் பாடல் பரந்துகிடக்கின்றன. அதுமட்டுமன்றி வெள்ளப்பெருக்கு அழிவு, சூறாவளி அழிவு, வேலை வாய்ப்புத்தேடி வெளிநாடு சென்று திரும்பியவர்களின் கைசேதம், சுனாமியழிவு, கடற்கோள் அழிவு இப்படி அனைத்திற்கும் பாடல்கள் நாட்டார் பாடல்களிலிருந்து நடைபயில்கின்றன.

அன்று உலகப்போர் நடைபெற்றுமுடிந்து அமெரிக்காவும், ஜப்பானும், கசப்பான உணர்வுகளோடு இருப்பதையறிந்த பெண்ணொருத்தி தன்னோடு நீண்ட நாட்களாகப் பேசாதிருக்கும் தனது மைத்துனிக்கு விடுவிக்கும் செய்தியில்,

இங்கிலிசும் ஜப்பானும்

எனசமதியாப் போனானுகளாம் – எங்கிட

கோப்ப பிங்கானுகளக்

குடுத்தனுப்புங்கோ மதினி” என்று பாடுகிறாள்

நாட்டார் பாடல்கள் பொருட்செறிவுக்குப் பஞ்சமற்றவை. நாட்டார் பாடல்களைப் பாடிய மக்கள் முறையான கல்வியைப் பயிலவில்லையேயொழிய அவர்களது பாடல்களில் பேசப்படும் விடயப்பரப்புக்கள் விரிந்தே செல்கின்றன. படம் - webneel.com ஓவியம் - எஸ் இளையராஜா

நாட்டார் பாடல்கள் பொருட்செறிவுக்குப் பஞ்சமற்றவை. நாட்டார் பாடல்களைப் பாடிய மக்கள் முறையான கல்வியைப் பயிலவில்லையேயொழிய அவர்களது பாடல்களில் பேசப்படும் விடயப்பரப்புக்கள் விரிந்தே செல்கின்றன. படம் – webneel.com ஓவியம் – எஸ் இளையராஜா

உலகப் போருக்குப் பாடல், உள்நாட்டுப் போருக்கும் ஓராயிரம் பாடல். தேர்தல் காலங்களில் பக்கச் சார்பாகவும் எதிர்க்குத்தலாகவும் பாடல்களைப் பாடி வாழ்த்தவும் வையவும் நாட்டார் பாடல்கள் தவறவில்லை. ஆழமான கருத்துள்ள சொற்கள் அவர்களின் நாவுகளில் நாட்டியமாடி வெளிப்பட்டன.

பிறந்தால் தாலாட்டு, இறந்தால் ஒப்பாரி. போழுதுபோக்கப் பொல்லடிப்பாடல், கும்மிப்பாடல், கோலாட்டப்பாடல், கரகத்திற்கும் காவடிக்கும் பாடல். கூத்துமேடைகளில் பல சரித்திரங்கள் நாட்டார் பாடல்களாகவே அரங்கேற்றப்பட்டன. “நல்ல தங்கள் சரிதம்”, “கண்டிராசன் ஒப்பாரி”, “அரிச்சந்திர புராணம்”, முதலானவை இவற்றுள் அடங்குகின்றன.

கூத்துக்கலை தமிழர்களின் ஓர் பாரம்பரிய கலை வடிவமாகும். சினிமா மற்றும் புதிய ஊடகங்களின் ஆக்கிரமிப்புக்கு முன் கூத்து மற்றும் நாடகக்கலை போன்றவை மக்களிடையே பிரசித்தம்பெற்ற போழுதுபோக்கம்சமாக விளங்கியது. இலக்கியங்களையும் இதிகாசங்களையும் நாட்டார் பாடல் வடிவிலேயே கூத்துக்களாக மேடையேற்றினர். படம் - thehindu.com

கூத்துக்கலை தமிழர்களின் ஓர் பாரம்பரிய கலை வடிவமாகும். சினிமா மற்றும் புதிய ஊடகங்களின் ஆக்கிரமிப்புக்கு முன் கூத்து மற்றும் நாடகக்கலை போன்றவை மக்களிடையே பிரசித்தம்பெற்ற போழுதுபோக்கம்சமாக விளங்கியது. இலக்கியங்களையும் இதிகாசங்களையும் நாட்டார் பாடல் வடிவிலேயே கூத்துக்களாக மேடையேற்றினர். படம் – thehindu.com

இன மத பாகுபாடின்றித் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நாட்டுப்புற மக்கள் பாடிய நாட்டார் பாடல்கள் ஆரம்பகாலத்தில் வாய்வழித் தோன்றி செவிவழியாகப் பாய்ந்து உள்ளங்களில் தஞ்சமடைந்து உவகையூட்டின. அண்மைக்காலத்தில் அவை ஆய்வுநோக்கமாகவும், அரங்கேற்றங்களாலும் ஏடேறி எழுத்துருப்பெற்றுள்ளன. பாடல்கள் உணர்ச்சிகளின்பால் பிறப்பது இயல்பு. அவற்றை உலக வழக்குடன் ஒட்டிப் பிறப்பிப்பது கவிஞனின் தனிச் சிறப்பு. அவ்வாறு பிறப்பிக்கப்பட்டவற்றின் சுவையை வகைவகையாகப் பிரித்துச் சுவைத்துப்பார்க்க நம் தேடல்கள் தொடரும்.

Related Articles