வடக்கின் மறக்கப்பட்ட நட்டார் இலக்கியங்கள் 04 “ஆனை மறி காரன் மகள்”

விலங்குகளுக்கும்  மனிதனுக்குமான உறவு எல்லைப்படுத்தப்பட முடியாத ஒன்று. மனிதனை நாகரிக விலங்கு என்று அழைப்பதுவும் இந்த எல்லையற்ற உறவின் விகுதிதானோ என்று பலமுறை நான் எண்ணியதுண்டு. மனித வர்ணனைகள் விலங்கியலுக்குள் ஊடுருவுவதும் இதன் தாக்கம் தான். கண்களை மீன்கள் என்பதுவும், நடையை அன்னநடை என்பதுவும், கோபத்தில் எருமை மாடு என்பதுவும் விலங்கியலோடு பின்னிய வாழ்வியலை எடுத்துக்காட்டுகிறது.

அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைக்கூட இந்த விலங்குகள் திசைப்படுத்துகின்றன என்பது தமிழர் வாழ்வியலை பேணும் சமூகத்திற்கு தெரிந்த ஒன்றே. பூனை குறுக்கிடுதல், கன்றுக்குட்டி ஓடி ஒழித்தல் , பல்லி சொல்லல் என சில சம்பிரதாய கோட்பாடுகள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சில விலங்குகளை தெய்வத்திற்கு சமானமாக கொண்டாடுவது இந்துக்களின் வழக்கம்.

அதிகமாக, குடியிருப்புக்களை முதன்மைப்படுத்திய விலங்கு வளர்ப்பு சுவாரஸ்யமானதாகும். இவனோடு அறுவர் என்னும் பதங்கள் பெரும்பாலான செல்லப்பிராணி வளர்ப்பு வீடுகளில் அதிகம் ஒலிப்பதாகும். இந்த அன்னியோன்யம் எதனால் என்ற விளக்கம் இப்போதைக்கு அவசியம் இல்லை. ஆனால் இந்த அன்னியோன்யம் ஒருவகையான மனநோய்க்கு காரணமாக இருந்துவிடுகிறது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். எது எப்படியோ பூனையின் கால்களில் காயம் வந்துவிட்டால் மணிக்கணக்கில் அழுது , உணவை தவிர்க்கும் குடும்பங்களும் எம்மத்தியில் உண்டு.

இது ஒருபக்கம் என்றால், என் தலைப்பு மறுபக்கம். காதை கிழிக்கும் அலறல் ஒலிகள். மான்களும் பசுக்கன்றுகளும் குருவிகளும் கத்திக்கொண்டு ஓடவும் பறக்கவும் செய்கின்றன. தூரத்தில் கொஞ்சப்பேர் ஏதோ விபரீதமாய் கத்திக்கொண்டு காடுகளின் இடுக்குகள் வழியே மேடுகளில் கால்கள் இடரிட சாரமும் பெனியனுமாய் ஊருக்குள் குதிக்கின்றார்கள். அவர்கள் எல்லாரையும் மீறிய சத்தம்.

காட்டின் தூரத்தில் மேல் மரங்கள் அசைவதை மட்டும் காணக்கூடியதாக உள்ளது. காட்டுக்குள் பலமணிநேரம் அது செலவிடாது என்பதை அவ்வூரினர் நன்றாய் அறிந்திருந்தனர். கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்னராக இதே எச்சரிக்கைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த நாள் இரவு கருப்பன் கோவில் திருவிழாவுக்காக ஊரே சேர்ந்திருந்தது. யாரும் தொழிலுக்குச்  செல்லவில்லை. வருடம் ஒருமுறை வரும் இந்த திருவிழா தான் அந்த ஊரினதும் அயல் ஊரினதும் கொண்டாட்ட நாள். ஊர் ஜனங்கள் எல்லாம் ஒன்றாகி சமையல், சாப்பாடு , வழிபாடு, விளையாட்டு, கூத்து , நாடகம் கேளிக்கைகள் என பிரமித்துப்போய் இருந்தது.

(vikatan.com)

இரவை போக்குவதற்காக படங்கெடுக்க இரு வாலிபர்கள் தங்கள் வீட்டை நோக்கி சென்றிருந்தார்கள். இருளில் மூழ்கியிருந்த அவர்களது குடிசைகளில் லாந்தர் விளக்கில் எல்லாம் அலங்கோலமாய் இருந்தது தெரிந்தது. என்ன நடந்ததென்று அறிந்திராதவர்கள் குடிசைகளை நோக்கி விரைந்தனர்.திருடர்களின் பயம் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால் கட்டைகளை ஏந்திக்கொண்டு விரைந்தார்கள். பக்கங்களை பார்த்தவர்கள் சமயோசிதமாக இது மனிதர்களால் ஏற்பட்டதல்ல என்று உணர்ந்து கோயிலுக்கு ஓடினார்கள். ஒரே பிடி …… அப்பிடியே தூக்கி மதகோடு போட்டு அடித்து உசுப்பியது அந்த யானை. பீறிட்ட ரத்தம் மதகை சிவப்பாக்கியிருந்தது. இராக் கொண்டாட்டத்தில் போனோர்களை மறந்துபோய் இருந்தனர் ஊரவர், சில சகபாடிகள் அவர்கள் அங்கேயே தங்கியிருக்க கூடும் என்று எண்ணினார்கள்.

பொழுது புலர்ந்தது, அதிகாலை பண்டமெடுப்பதற்காக சிலர் அரசடி பிள்ளையார்கோவிலுக்கு சென்றிருந்தனர். வழியில் மதகைத்தாண்டி செல்லும் போது கசங்கியிருந்த ,உருத்தெரியாத அளவு கொடூரமாய் தாக்கப்பட்டவர்களையும், அங்கால் பீடித்திருந்த சீரின்மையையும் கண்டுகொண்டனர். பயத்தாலும் கவலையாலும்   வெருண்டுபோனவர்கள் கூவிக்கொண்டு ஊரவர்களை அழைத்தார்கள் , ஊரே அலங்கோலத்தின் அடையாளமாய் காட்சி தந்தது. அந்த எண்பது வயது மூதாட்டியின் வீடு விறகுக்கு குவித்த மரக்குவியல் போல் சிதைந்திருந்தது. மணல் சுவர்கள் எல்லாம் இடிந்துபோயும் சில தெம்பான குற்றிகள் வளைந்துபோயும் இருந்தன. ஆறேழு வீடுகளின் சுவார்ப்பக்கங்கள் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தன. வயல் நடுப்பக்கங்களில் பெரிய பெரிய கால்த்தடங்கள் அரையாடிக்கொருக்கால் பதிந்திருந்தது. தடங்களில் மாட்டுப்பட்ட நெற்கதிர்களெல்லாம் தலை சாய்ந்து போய் காணப்பட்டன. வாழைத்தோப்புகள் எல்லாம்  அரைவாசியாகவும் அடியோடும் பிடுங்கப்பட்டு வாழைக்குலைகள் கவ்வப்பட்டும் இருந்தன. அவ்விடம் ஒரே வாழை சாற்று வாடையாய் இருந்தது. தடித்த நீண்ட பனைமரங்களும் தென்னை மரங்களும் குலுக்கப்பட்டு சாய்த்துவிடப்பட்டிருந்தன. குவித்து வைக்கப்பட்டிருந்த நெற்கள் எல்லாம் சிதறிப்போய் கிடந்தன. நெல்மணிகள் எல்லாம் தூரத்தூர விதைந்துபோய் இருந்தன. இறந்தவர்களின் குடும்பத்தினரும் அயலவர்களும் ஒப்பாரிவைத்துக்கொண்டு இருந்தனர். இதையெல்லாம் நினைவு படுத்திக் கொள்கிறார்கள்.

பாடல் 01

சொல்லக்கேளும் வன்னி மன்னனே

துன்பமெல்லாம் இங்கு கூறவே

அல்லல் ஒண்டிரண்டல்லவே

ஆனை செய்யும் அட்டகாசமே

கொல்லை புலம் வயல் யாவுமே

கூறுந்தரமல்ல நாசமே

தென்னை பனை பலா மாவெல்லாம்

சின்னாபின்னமாக வீழ்ந்ததே

முன்னால் குவிந்த நெற் போரெல்லாம்

முற்றாக தின்று முடிந்ததே

இன்றுமெங்கள் குடில் கொட்டில்கள்

எல்லாம் பிடுங்கியே வீசுதே

நாங்கள் மிரட்டி துரத்தவே

நம்மை நாடிச் சாடி ஓடுதே

எத்தனை பேர் இருந்தார்களோ

எண்ணிக்கணித்தார் யாவரே

முத்து நிறைந்திடு கொம்பனே

முற்றும் பரப்பும் சுணங்கனே

சுத்த முளமதோர் ஏழாதே

மத்தக மித்திரை மீதிலே

பாடல் 02

இது யானை பிடிக்கும் பணிக்கர்கள் வாயிலாக கூறுவதாகவுள்ளது,

சொல்லக்கேளும் வன்னி மன்னனே – இந்த

தொண்டு செய்வாரில்லை திண்ணமே

வல்லதொருவருமில்லை – மத

யானை படுத்திடல் தொல்லையே

சொல்ல வொண்ணாத்துயர் தாங்கியே – சென்று

சேர்ந்து மடிந்தனர் ஏங்கியே

எல்லையுண்டோ இறந்துற்றவர் – இந்த

யானைமுன்னே கண்ணிற்பட்டவர்

மந்திர தந்திர சாலமே -எங்கள்

மாயமெல்லாம் வெறும் சாலமே

எந்த விதத்துமடங்கிடா – திந்த

யானை எவர்க்கும் மொடுங்கிட

நன்றோ நாம் சென்று மடிவதே – நாட்டில்

நமக்கிலையே புவி வாழ்வதே

இன்று நீர் எம்மீத்திறங்கியே – எங்கள்

இன்னுயிர் காத்தருள் தாங்கியே

அலைகடல் போலவே முழங்குமே – அந்த

அதிர்ச்சியில் அண்டம் நடுங்குமே

மலையெனவே முழம் ஏழதே – அதன்

மத்தகம் இத்தரை மீதிலே

மேனி முற்றுபடர் சுணங்கனே – அதை

மேதினியில் காண்டோர் பிணங்களே(வேழம்படுத்த வீராங்கனை – பக் 32)

பாடல் 03

இம்மதயானை குறித்து ஒப்பாரி பாடல் ஒன்றிலே

நாகன் திருக்கோவிலிலே என அஞ்சுகலை

நஞ்சையுண்ட அஞ்சாத ஐங்கரனே அப்பரே ஆத ரவே

அங்கே நிற்குதாம் நல்ல கொம்பன்

எங்காள் ஆகாது எங்காளை யாளும் சின்ன வன்னி யனாரே – அது

ஏழு முழ யானையல்லோ

அது கோபமுள்ள யானையது

எங்களையாளும் சின்னவன்னியனாரே – அது

குளறுதே மாமுகில் போல்.

மதம்கொண்ட யானையால் எந்நேரமும் பாதிப்புவரும் , எந்நேரமும் ஊருக்குள் இறங்கிவிடக்கூடும் என்ற பயத்தினை வன்னி அரசனுக்கு கூறிய வழிமுறைப்பாடல்கள் தான் மேற்கூறியவை.ஊரின் வளங்களெல்லாம் ஒன்றுசேர கருங்கல்லாலும், இறுக்க மண்ணாலும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது சின்ன வன்னியனின் அரச பீடம். ஊரவர் நிலையை உணர்ந்து கொள்கிறான் சின்னவன்னியன். அவன் சிற்றரசின் கீழ் இருந்த ஏழு ஊர்களின் பணிக்கர்கள் குறித்த கிராமத்திற்கு அழைக்கப்படுகிறார்கள். பல ஊர்களின் யானை அச்சத்தை போக்கிய வீரப்பின்னணி இந்த ஏழு பணிக்கர்களது. அதிலும் வேழப்பணிக்கன் ஆகச்சிறந்தவன். எத்தனையோ மதங்கொண்ட யானைகளை அடக்கி, மீண்டும் ஊர்ப்பக்கம் வரவிடாமல் செய்து மக்களின் மனங்களில் நீங்காத இடத்தில் வீரனாய் இருப்பவன். இருந்தும், இன்றைய நிலவரம் இதுவல்ல. வேலப்பணிக்கனுற்க்கும் இது தெரியாத ஒன்றல்ல. கூட்டம் கூடிற்று

பாடல் 04

ஏழு ஊருப் பாணிக்கரும் என்

அஞ்சுகலை நஞ்சையுடைய ஐங்கரனே

அன்பரே ஆதரவே – அவர்

எழுதிவிட்டார் ஓலை தனை

எல்லாப்பணிக்கருமாய் இன்பமுடன்

தான் நடந்து அன்புடன் நீங்கள் சென்று -அந்த

ஆனைக்கட்டி வாருமெண்டார்.

தனியொருவராக அடக்கமுடியாது என்பதை அறிந்திருந்த சின்ன வன்னியர், எல்லாப்பணிக்கருமாய் சேர்ந்து அடக்கி விட முடியும் என எடுத்துரைக்கிறார். பணிக்கர்கள் முகங்களில் மரண பயம் தோன்றுகின்றது. தங்களால் அடக்கிவிட முடியாது என்பதை – வேலப்பணிக்கரால் அடக்கிவிட முடியும் என பதிலளிக்கின்றனர். இது வேலப்பணிக்கர் வீரத்தை உயர்த்தினாலும்  மற்றையோரின் கீழ்மையை எடுத்துக்காட்டுகிறது.

பாடல் 05

இந்த ஆனை கட்டிவர

எங்களை ஆளும் சின்னவன்னியரே – எங்களால்

ஆகாது, வேலப்பணிக்கனால் ஆகுமென்றார்.

அதிலொருவன் நின்றுகொண்டு,

வேலப்பணிக்கனால் ஆகாது

வேலப்பணிக்கன் பெண்சாதியினால் ஆகுமென்றார்.

இந்த கருத்து யாரையும் அங்கே அதிர்ச்சியுற செய்யவில்லை, மாறாக வேலப்பணிக்கனை தலைகுனிய செய்தது. வேலப்பணிக்கனின் மனைவி அரியாத்தை. பெயரை போலவே அரி போன்று வீரம் மிக்கவள். முன்னரே சில யானைகளை அடக்கி வீரத்தை வெளிக்காட்டியவள். ஆனால் அதெல்லாம் அவ்வளவு கஷ்டமான விடயங்கள் அல்ல. இந்த முறை எல்லாப்பணிக்கர்களாலும் இயலாது என தெரிந்தும் அரியாத்தையை இக்கணக்கிற்கு இழுப்பது வேலப்பணிக்கனுக்கு மன உளைச்சலை தந்தது. மற்றைய பணிக்கர் வம்பிற்கே கூறியிருப்பினும், வேலப்பணிக்கனுக்கு அது அவன் வீரத்திற்கு ஏற்பட்ட இழுக்காகவே தோன்றியது. சோகங்களை கட்டிக்கொண்டு வீடு திரும்பிகிறான்.நடந்தவற்றை மனைவியிடம் கூறி கவலையுறுகிறான்.

பாடல் 06

இத்தனைக்கோ நீர் சலித்தீர்

என்னுயிரே ஆண்டவனே – எழும்பி

நீர் சாப்பிடன்றாள்

ஆனால் அரியாத்தைக்கு இது பெரிய விடயமாகவே தெரியவில்லை, அவள் இதை எண்ணி சோர்வுறவும் இல்லை மாறாக, கணவனுக்கு ஆறுதல் மொழியே அளிக்கிறாள். கணவனின் ஒப்புதலோடு , குறை மனதாகவே வேலப்பணிக்கன் அவளை அனுப்புகிறான் என்று எந்த சான்றும் இல்லை – அவள் மதயானையை அடக்க விரைகிறாள்.

பாடல் 07

வாற பொழுதிலையோ ஆனையது

மும்மதமும் தான் பொழிந்து

கை மடித்து தான் குளறி – அரியாத்தை முன்பு

கொம்பன் வந்து நின்றதுவே

யானையைக்கண்டவுடன்

வேலப்பணிக்கன் பெஞ்சாதி – அரியாத்தை அவ

கால் கை தடுமாறி நின்றாள்.

பாலை மரம் வீரை மரம்

வேலப்பணிக்கன் பெண்ஜாதி – அரியாத்தை அவ

படு மரத்தோடு நின்றாவே

காலாலே மண்ணை அள்ளி

தந்த வீர பத்திரனே

மால் மருக வேல் முருக – உன்

தஞ்சம் என முன் போட்டாள்

கற்புடையாள் நானாகில்

ஆனையடி ஆனையடி

ஆணமறி க்காரன் மகள்

ஆனை மயில் வாகனமே – உன்

கையைத்தான் நீட்டுமென்றாள்.

அந்த மொழி கேட்டவுடன்

ஆனையடி ஆனையடி

ஆனை மறி காரன் மகள்

ஆனை மயில்வாகனமே – உன்

ஆனை கையைத்தான் நீட்டியதே

கையாலே கை பிடித்து

அஞ்சகலை நஞ்சையுண்ட

அஞ்சாத ஐங்கரனே

அன்பரே ஆதரவே – அதன் மேல்

கொடு முத்தல்லவோ

காலிலிரு தேமலல்லோ

யானையடி யானையடி

யானை மறி காரன் மகள்

ஆனை மயில் வாகனமே -உனது

காலிரண்டும் நற்தேமலல்லோ

பொல்லை எடுத்தல்லவோ

வேலப்பணிக்கன் பெஞ்சாதி – அவ

போட்டாளே ஆனை முன்பு

பொல்லை எடுத்து என் கையிலே

ஆனை மத யானையது

வேலப்பணிக்கன் பெஞ்சாதி

நாச்சன் அரியாத்தை கையில்

பொற்புடனே தான் கொடுக்க

உன் காலைத் தா தா கந்தா

ஆனையடி ஆனையடி

ஆனை மறி காரன் மகள்

ஆனை மயில்வாகனமே – நானும்

கனத்த வடம் போட்டு இறுக்க

முன்னங்கால் தான் கிளப்பி

வேலப்பணிக்கன் பெஞ்சாதி

நாச்சன் அரியாத்தைக்கு

முடுக்கிட்டு நின்றதுவே

மான் வார்க்கயிறு எடுத்து

வேலப்பணிக்கன் பெஞ்சாதி – அவ

மனங்குளிர போட்டிறுக்கி

முன்னங்கால் முடக்கு கந்தா

ஆனையடி ஆனையடி

ஆனை மறி காரன் மகள்

ஆனை மயில்வாகனமே

நானயடியாள் பெண் பேதை – உன்

குப்பத்தில் பயந்து ஏற

முன்னங்கால் தான் மடிக்க

வேலப்பணிக்கன் பெஞ்சாதி

முன்னே நின்று தோள் பிடிக்க

உக் கோட்டைத் தா கந்தா

ஆனையடி ஆனையடி

ஆனை மறி காரன் மகள்

ஆனை மயில்வாகனமே

வேலப்பணிக்கன் பெஞ்சாதி- யானையிட

குப்பத்தில் ஏறினாளே

செவியைத் தா கந்தா

ஆனையடி ஆனையடி

ஆனை மறி காரன் மகள்

ஆனை மயில்வாகனமே

நானயடியாள் பெண் பேதை

துறட்டிதனை போட்டிறுக்க

செவியைத் தான் கொடுக்க

துறட்டிதனை போட்டிறுக்க

வேலப்பணிக்கன் பெஞ்சாதி அரியாத்தை

செப்பினாள் ஓர் வசனம்

தன் துணிச்சலாலும், தனது கற்பின் சிறப்பாலும் அரியாத்தை மதயானையை அடக்கி முடிக்கிறாள் – என்பதாக பாடல் முடிகிறது. வடக்கு நாட்டார் இலக்கியங்களில் ஒரு பெண்ணின் வீரம் கற்பு என்பவை இவ்வளவு விமர்சையாக தெரிவிக்கப்படுவது வேறெங்கிலும் இல்லை. மத யானையை அடக்கியதற்காக அரியாத்தை அரசவையில் சிறப்பிக்கப்படுகிறாள்.

பாடல் 08

வெள்ளை விரும்பித்தாளே

எங்களையாளும் சின்ன வன்னியர்

பெண்சாதி, அரியாத்தை தான் இருக்க

மேலாப்பு போடுவித்தாள்.

பதினெட்டு வரிசைகளும் பெற்றவள், வீடு திரும்புகிறாள். இது வரை வீரம் கொளித்த புராணம் – சூழ்ச்சிகளாலும் வஞ்சனைகளாலும் சூழப்படுகிறது . இருள் நிறைந்த வானில் அரியாத்தை என்னும் மின்மினியும் அடங்கிப்போகிறது. இடையிலே வரும் சில காரணங்கள் கர்ண பரம்பரைக்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவை .

அரியாத்தை வீடு திரும்புகிறாள், தன்னில் நிலை மாற்றங்களை உணரத்தொடங்குகிறாள் வழியில். அவளின் கண்கள் கடிப்பதாகவும் , கால்கள் என்றும் இல்லாதவாறு மிக சோர்வு அடைவதாகவும், கண்கள் இரண்டும் மயங்கிப்போவது போலவும், வாய் வரள்வதாகவும் ,வீடு செல்ல வழி தெரியவில்லை என்றும் கூறியவாறே குலதெய்வம் நாகதம்பிரானை துதித்துக்கொண்டே  இருண்டு போகிறாள். வழியிலேயே மடிந்து போகிறாள். இதற்க்கான காரணம் அரசவையில் யாரோ ஒரு பணிக்கன் , அரியாத்தை செய்தது ஆண் குலத்திற்கு அவமானமாக கருதி அவள் உண்ணும் வெற்றிலையில் நஞ்சு தடவி கொடுக்கிறான், – கர்ண பரம்பரைக்கதை. இருந்தும் எம்மவர் வரலாற்றில் இறப்பிற்க்கான சரியான காரணம் பதியப்படவில்லை. அது சரி இக்கால நவீன இறப்புகளுக்கே காரணம் தெரியாத பொழுது, அரியாத்தையின் இறப்பின் மர்மம் பெரிய பொருட்டல்ல. ஆனால் மரணத்தின் பின்னணியில் ஆண் வர்க்க மேலாதிக்கம் காரணம்செலுத்துகிறது என்பது மிக பெரிய அழுக்கே.

வேலப்பணிக்கருக்கு சேதி செல்லுகிறது. செய்தியை கேட்டவுடன் வேலப்பணிகரின் செய்கை தான் மற்றைய ஆண்களால் அவர்களின் வர்க்கத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்கிறது. சேத்தி அறிந்த வேலப்பணிக்கர் அரியாத்தையுடன் உடன்கட்டை ஏற முடிவு செய்கிறார். இதனை அறிந்த மக்கள் அவனை ஒரு இடத்தில் கட்டிப் போட்டுவிட்டு அரியாத்தையை எரிக்க கொண்டு செல்கிறார்கள். கட்டுண்டு துன்பத்தால் துவண்ட வேலப்பணிக்கர்

பாடல் 09

கற்புடையாள் நீரானால்

என்னுயிரே கண்மணியே

எனக்கிணங்கும் நாயகியே – என்னுடைய

கையில் கட்டு தெறியாதோ

என உரைக்கிறான்.

கலங்கியழும் பொழுது வேலப்பணிக்கனுடைய

கைக்கட்டு தெறித்திட்டதே

கைக்கட்டு அறுந்து விட அரியாத்தையுடன் உடன்கட்டை ஏறுகிறான்

வேலப்பணிக்கன் என்னும் வீரன்.

இத்தோடு அரியாத்தை காதை முற்றுகிறது , கூடவே நாட்டார் இலக்கியங்களின் முதல் பாகம் நாட்டார் பாடல்களும் நிறுத்தப்பட்டு மற்றைய பாகங்களுக்குள் அடுத்ததடுத்த தொடர்களில் செல்லலாம் என எண்ணுகிறேன்.

மேலும் படிக்க

பாகம் ஒன்று

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டுப்புற இலக்கியங்கள் அறிமுகம்

பாகம் இரண்டு

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் – 02

பாகம் மூன்று

வடக்கின் மறக்கப்பட்ட நட்டார் இலக்கியங்கள் 03 மன்னார்

(படங்கள் – pixarbay.com)

Related Articles

Exit mobile version