வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 05 – “காவடி”

மனித நாகரீகம் வளர்ந்து உச்சத்தை அடைந்திருக்கும் – என கருதப்படுவதாக எண்ணுகிறேன், இந்த காலகட்டத்தில்  மானிட மனங்களால் பல வழமைகளின்  அல்லது நிகழ்வுகளின்  தொடர்ச்சியினை பின்பற்ற முடியாமல் போகின்றது. இந்த தொடர்ச்சியற்ற போக்கு ஒரு விதத்தில் காலத்தின் தேவைதான். சில வழக்காறுகள் அழிந்து போவதே உசிதம்.

பழையன கழிதல் நாகரீக எழுச்சிக்கான அடிப்படை என்பது எனது சொந்த கருத்து. இதில் பழையது என்பது குறித்துநிற்கும் அளவுகோல் எது என்பதில்தான் நாகரீக எழுச்சி தங்கியுள்ளது. இறந்தகாலம் அல்லது பயன்படுத்தாதவை பழையது என்ற வார்த்தையை அர்த்தப்படுத்தலாம். அந்த வகையில் இறந்தகாலம் கழிய வேண்டுமா? இறந்த காலம் தேவையற்ற ஒன்றா? இறந்த கால அனுபவங்கள் மறக்க வேண்டியவையா? என்ற அடுக்கான கேள்விகள் பழையது என்பது இறந்தகாலம் இல்லை என்பதை உறுதியாக கூறுகின்றன.

பழையன என்பது இறந்தகாலமோ அல்லது பயன்படுத்தாதவையோ இல்லை. பழையன என்பவை பொருளடக்கம் அற்றவை (copycrave.com)

வழமையாக நீங்கள் துவிச்சக்கர வண்டியில் செல்லுவீர்கள் என வைப்போம். உங்கள் நண்பன் வெளியூர் செல்லவேண்டிய காரணத்தினால் அவரின் மோட்டார் சைக்கிளை உங்கள் வீட்டில் வைத்து விட்டு வரும் வரை பாவிக்கவும் அனுமதி   தருகிறார். நீங்கள் இப்பொழுதெல்லாம் மோட்டார் சைக்கிளில் தான் செல்கிறீர்கள் என்பதற்காக பயன்படுத்தாத உங்கள் துவிச்சக்கர வண்டி பழையதா? துவிச்சக்கர வண்டி பயன்படவில்லை என்று கழித்துவிட்டால் அடுத்த நாள் அல்லது தொடர்ந்து வரும் நாட்களில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

இன்று பயனில்லை என்பதற்க்காக கழித்துவிடுதல் நாளைய தேவை ஒன்றிற்கான விடையினை அழித்துவிடுதல் ஆகும். இதிலிருந்து பழையன என்பது இறந்தகாலமோ அல்லது பயன்படுத்தாதவையோ இல்லை. பழையன என்பவை பொருளடக்கம் அற்றவை. இன்னும் விரிவாக சொல்லப்போனால் தனது உள்ளடக்கங்கள் அனைத்தையும் தந்து காலியாக இருக்கின்றவை அல்லது பொருந்தாத உள்ளடக்கங்களுடன் உள்ளவை என்று விளிக்கலாம். கடையில் இரண்டு ரூபாய் கொடுத்து இனிப்பு வாங்குகிறோம் , காசு கொடுத்து வாங்கினோமே என்பதற்க்காக இனிப்பின் உறையை யாரும் பத்திரப்படுத்திக் கொள்வதில்லை. இது தான் விடயம் , இனிப்பு என்னும் உள்ளடக்கம் தீர்ந்தவுடன் உறை என்னும் காவி கழிந்து போகின்றது. பழையன கழிதல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

இதை முகவுரை என்பதை விட ஒரு பதிவாக எடுத்துக்கொண்டு தலைப்பிற்குள் நுழையலாம்.

கலைகளில் மிகவும் நளினமானது எது என்றால் ஆடற்கலையையே எல்லோரும் உரைப்பர். ஆடற்கலையில் உள்ள நளினம் வேறு எந்த கலைகளுக்கும் கிடையாது என்பதே நிதர்சனம். உணர்ச்சிகளை பலவிதப்படுத்தி வெளிக்காட்டுவர். வெளிப்பாட்டின் உச்சம் நடனமாகவே இருக்கும், இது சந்தமற்ற முறையற்ற கூச்சல் நடனமாக இருந்தாலும் சரி.

ஆடற்கலையில் உள்ள நளினம் வேறு எந்த கலைகளுக்கும் கிடையாது என்பதே நிதர்சனம். (sehernow.in)

எந்த நாட்டார் கலையுமே இலக்கணங்களுக்கோ யாப்புகளுக்கோ வரைமுறைக்குட்படுத்தாமல் வளர்ச்சி கண்டவையே. ஆதிகால மனிதனிடம் மொழி இருக்கவில்லை. இதில் மனிதன் என்பது கவனிக்க வேண்டிய விடயம். அவனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளவும் பதிந்து கொள்ளவும் ஒரு ஊடகம் தேவைப்பட்டிருக்கும். அந்த தேவைப்பாட்டின் விளைவே நடனமாகிறது. அவன் தனது சந்தோஷங்களையும், துக்கங்களையும், அதிர்ச்சிகளையும், ஏமாற்றங்களையும், பயத்தினையும் ஆடலின் மூலமே வெளிப்படுத்தினான். எத்தனை யுகங்கள் போனாலும் இன்னும் அங்க அசைவில் உண்டாகும் நடனங்கள் தான் உணர்ச்சி வெளிப்பாட்டின் உச்சம். உலகிலே நடமாடாத இடங்களும் இல்லை, மாந்தரும் இல்லை.

அதிலும் முக்கியமாக பயம் என்ற உணர்வின் சிறந்த வெளிப்பட்டு ஊடகம் நடமாகவே இருந்திருக்கிறது, இருந்து கொண்டிருக்கிறது. இன்றைய பரத நாட்டிய நிகழ்வுகளில் பயம்  என்ற நிலையில் தான் அதிக சிறப்பு காணப்படுகிறது. ஆக அன்றும் கடவுளைப்பார்த்து மனிதன் பயந்தான். பயத்தின் வெளிப்பாடாக பக்தி தோன்றியது. பக்தியின் வெளிப்பாடு நடனமாகியது. இறைவனை- இயற்கையை சாந்தப்படுத்த நடமாடினார்கள். சங்க இலக்கிய வரலாறுகள் வெறியாட்டு, துணங்கை , குரவை போன்ற ஆடல் கலைகளை கூறுகின்றன. இதே ஆடல் கலைகள்தான் இன்றைய நாட்டார் நடனங்களாக பெயர் பெறுகின்றன.

பயத்தின் வெளிப்பாடாக பக்தி தோன்றியது. பக்தியின் வெளிப்பாடு நடனமாகியது. இறைவனை- இயற்கையை சாந்தப்படுத்த நடமாடினார்கள் (bhmpics.com)

கிராமிய நடனங்கள் அணையற்ற ஆறு போன்றவை. எந்த இலக்கண எல்லைக்குள்ளும் இல்லாமல் இருப்பதே இதன் சிறப்பாகும். அவற்றின் வளர்ச்சியும் அப்படியே, எந்த வித்துவான்களும் அல்லது சங்கீத லக்ஷணகாரர்களும் அதற்கு அணை கட்டிவிடவில்லை. ஆதி காலத்தில் இருந்ததிலிருந்து இன்றைய காலகட்டத்தை நோக்கிய ஆடற்கலைகளின் வளர்ச்சி வியப்பான ஒன்றாகும், எந்த கட்டுப்பாடும் அற்ற கலை ஒன்று நீடித்து இருத்தல் என்பது அதீத சிறப்பு. அச்சிறப்பை நடனங்கள் பெற்றிருக்கின்றன. நாட்டார் நடனங்கள் பார்த்த மாத்திரத்திலேயே உவகை ஊட்டுவனவாக இருக்கின்றமை அதற்கொரு காரணமாகவும் இருக்கலாம்.

கவனிப்பில் பொதுவான நாட்டார் நடனங்களில் காணப்படும் சந்தம் நான்கு அக்ஷர காலம் கொண்ட தாளங்கள் (சதுர்சிரம்) அல்லது மூன்று அக்ஷரகாலம் கொண்ட தாளங்கள் (திரிசிரம்) ஆகவும் மேலும் சில ஏழு அக்ஷரகால தளங்களை (மிசுரம்) கொண்டதாகவும் அமைகின்றன.

நாட்டுப்புற ஆடற்கலைகள் என்ற போர்வைக்குள் காவடி , கரகம் , வசந்தன், கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என்பவை முக்கியமானவை.

காவடி

காவடி என்பது சமயம் சார்ந்த ஒன்று, தனித்துவமாக முருகன் என்ற சைவ கடவுளுக்கு மிக நெருக்கமானது. (bhmpics.com)

காவடி என்ற சொல்லை காவு + தடி என்ற சொற்களின் சேர்க்கையாக கருதலாம். காவுகின்ற தடி எனபதே காவடியில் பொருள். காவுகின்ற தடி என்றால் வெறும் தடியினை காவுவதா? இல்லை, தடியையும் காவுகின்றோம் அது தடி என்ற நிலையை தாண்டி, அத்தடியில் இருபுறமும் நேர்த்திக்கடன் செய்த பொருட்களை காவி அல்லது மஞ்சள் துணியில் சிறிய பொட்டலமாக கட்டி தொங்கவிட்டு அத்தடி நிற்பதற்கு இரண்டு கால்களை இரு புறமும் அமைத்து ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்கு வில்போன்ற அமைப்பையுடைய கூடாரம் ஒன்றை உருவாக்கி அதை பட்டால் சுற்றி மூடி கிளி பூக்கள் போன்றவற்றால் அலங்கரித்து – ஒரு தெய்வீகம் பொருந்திய புனிதப்பொருளாக அந்தஸ்தளிக்கப்படும்.  இது வெறும் தோளிற்கு சுமை என்பதை தாண்டி பிராத்தனைக்காக எடுக்கப்படும் தடி என்ற பொருளில் கையாளப்படுகிறது. காவடி என்பது சமயம் சார்ந்த ஒன்று, தனித்துவமாக முருகன் என்ற சைவ கடவுளுக்கு மிக நெருக்கமானது.

முன்னைய காலங்களில் வழிபாடு என்பது ஊரளவில் இருந்தாலும் புனித தலங்களை நோக்கிய நடைபயண பாத யாத்திரைகள் புகழ் பெற்று இருந்தன. இந்த பாத யாத்திரைகளை ஊரவர் நேர்த்திக்கடனாக செய்வது வழக்கம். எனது எண்ணப்படி, அந்தக் காலம் பயண போக்குவரத்திற்கு ஊடகங்கள் இல்லாத காலம். நடையையே ஒரே மார்க்கமாக கொண்டிருந்த காலம். பொதுவாக எல்லாரும் வடக்கு புறத்தில் இருந்து சைவர்களுக்கு காலம் காலமாக நம்பிக்கையும் அருளும் செய்துகொண்டிருக்கும் கதிக்காம கந்தனை நோக்கி விரதமிருந்து நேர்த்திசெய்வதற்காக ஊரவர் நேர்த்தி பொட்டலத்தையும் இதர தேவையான பொருள்களையும் சேர்த்து ஒரு தடியில் கட்டி எடுத்து சென்றிருக்கலாம். கால ஓட்டத்தில் சாதிப்பிரிவிற்கு ஏற்றால் போல அந்த தடி அலங்காரங்கள் உருவாகி இருக்கலாம். இதுவே இன்றைய காவடியில் வெளித்தோற்றத்திற்கு காரணமாய் இருக்கலாம் என்பது எனது எண்ணம். வழியிலே களைப்பு தெரியாமல் இருக்க அக்காவடியை சில ராக சந்தங்களுடன் நாட்டிய அசைவுகளுடனும் கொண்டு செல்வர். இதுவே பிற்கால காவடிச்சிந்துகளாகும்.

செடிற் காவடி எனப்படுவது, வெள்ளியிலான செடில்களை பக்தரின் முதுகுப்பகுதில் குத்தி அதன் வாலில் இருந்து கிளம்பும் நூலை ஒன்றாக்கி முடிச்சிட்டு அதை ஒருவர் இழுக்க பக்தர் காவடியை தோளில் வைத்து ஆடுவார் (dnaindia.com)

காவடியில் பல வகைகள் உண்டு. சேவற் காவடி , மச்சக்காவடி, அன்னக்காவடி, பாற்காவடி / பன்னீர் காவடி, செடிற் காவடி, ஆட்டக்காவடி, தூக்குக்காவடி, பறவைக்காவடி என்பன வடக்கில் இருந்துள்ள காவடியின் வகைகளாகும். இதில் முதல் மூன்றுமான  சேவற் காவடி , மச்சக்காவடி , அன்னக்காவடி என்பன தற்கால வழக்கில் இல்லை.

சேவலைப்பிடித்து அதன் தலையை வெட்டி குடத்தினுள் இட்டு அதை தடியில் கட்டி ஆடுவதே சேவற் காவடி. மீன்களைப்பிடித்து குடத்தில் இட்டு ஆடுவது மச்சக்காவடி ஆகும். மச்சக்காவடிக்கு வடக்கு செல்வச்சந்நிதி ஆலயம் மிக பிரசித்தமான ஒன்றாகும். ஒரு காலத்தில் பக்தர்கள் மீன்களை பொரித்து குடத்தில் இட்டு கோவிலுக்கு கொண்டு வருவதாகவும், கோவில் அருகே உள்ள தொண்டமானாறு ஆற்றம்கரை அருகே வரும் போது பொரித்த மீன்கள் உயிர்பெற்று ஆற்றினுள் குதிப்பதாகவும் ஐதீகங்கள் உண்டு. அன்னக்காவடி எடுக்கும் வழக்கம் இன்றைய இலங்கையில் இல்லாவிட்டாலும் முற்காலத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. தங்களுக்கும்  தங்களை சார்ந்த சந்நியாசிகளுக்கும் உணவை வேண்டி பரதேசிகள் தங்கள் தோள்களில் வெற்று பாத்திரம் ஏந்திய தடியுடன் அன்னம் பெற செல்லல் அன்னக்காவடி எனப்படுகிறது. பால் அல்லது பன்னீர், செம்புகளில்  நிரப்பப்பட்டு தடியில் கட்டப்பட்டு எடுக்கப்படும் காவடியாகும், இதன்போது ஆடுவதில்லை. பொதுவாகவே சிறுவர்கள் இதனை எடுப்பார்கள். செடிற் காவடி எனப்படுவது, வெள்ளியிலான செடில்களை பக்தரின் முதுகுப்பகுதில் குத்தி அதன் வாலில் இருந்து கிளம்பும் நூலை ஒன்றாக்கி முடிச்சிட்டு அதை ஒருவர் இழுக்க பக்தர் காவடியை தோளில் வைத்து ஆடுவார். கூடவே வாயின் இரு பக்கத்தாலும் வேலினை அலகு என்ற நாமத்தில் குத்தி கொள்வர். இக்கவடியை இருவர் அல்லது நால்வர் ஒரே ஒழுங்கில் ஆடுவது ஆட்டக்காவடி ஆகும்  பொதுவாகவே வடக்கில் பறைமேளம் மற்றும் உடுக்கு மட்டுமே ஆதிகாலத்தில் பயன்படுத்தப்பட்டது, அனால் இன்று தவில், நாதஸ்வரம் போன்றவையும் புழக்கத்தில் உள்ளன.

உடலை வருத்தி பெற்ற பயனுக்காய் வழிபடுதலை மிக உயர்ந்த செயலாக வடக்கு மக்கள் இன்றும் கருதுகின்றனர். (deviantart.net)

ஆட்டக்காவடிக்கு தாளம் மிக முக்கியமானதொன்றாகும். பார்ப்போர் அதனால் உந்தப்பட்டு ஆடுவது வழமை. தூக்குக்காவடி நீண்ட வரலாற்றை கொண்டதல்ல. 1953களில் முதன் முதலாக செல்வசந்நிதியிலேயேதான் இது அரங்கேற்றப்பட்டது. சகடை ஒன்றின் இருபுறமும் இரண்டு மரங்களை நிறுத்துவர். மரங்கள் மிகப்பலமானவையாக இருக்கும். இருமரங்களுக்கும் நடுவே வளை ஒன்றிட்டு அதில் கப்பி இடுவர். காவடி எடுப்பவர் பத்மாசனமிட்டிருக்க அவரின் இரண்டு விலாப்புறமும் இரண்டு பெரிய கொழுக்கி முட்களை குத்துவர். இரண்டு முழங்காலுக்கருகிரும் இரண்டு முட்களை குத்துவர். அதே போன்று பின் பகுதியிலும். ஆறு கயிறுகளையும் சேர்த்து மேற்புறமாக உறிபோல கட்டி கப்பியினூடு செலுத்துவார். காவடி எடுப்பவர் தூக்கில் தொங்குவது போல பத்மாசனத்தில் இருப்பர். இவரை வீதி வீதியாக அழைத்து செல்வார். தூக்கு தண்டனை பெற்ற ஒருவர் மேல் முறையீடு செய்து வெற்றிபெற்றதன் காரணமாக இதை செய்தார் என சொல்லப்படுகிறது. இதே முறையில் அந்த ஆறு முட்களையும் அடியவரை படுக்க வைத்து தோள் தொடை கால் என்பவற்றில் குத்தி ஊர் ஊராக கொண்டு சென்றால் அது பறவைக்காவடிதூக்கு, பறவை காவடிகள் பெண்கள் எடுப்பதில்லை.

இந்த காவடி முறை இன்று வடக்கில் எல்லா கோவில்களிலும் மறக்காமல் மறுக்காமலும் நடைபெற்று வருகின்றது. உடலை வருத்தி பெற்ற  பயனுக்காய் வழிபடுதலை மிக உயர்ந்த செயலாக வடக்கு மக்கள் இன்றும் கருதுகின்றனர். ஆரம்பத்தில் கூறிய பழையன கழிதலுடன் காவடியும் கழிந்து போகாமை காவடியில் சமூக முக்கியத்துவத்தை பறைசாற்றுகின்றது.

இன்னும் சில நாட்டார் நடனங்களுடன் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்.

Related Articles

Exit mobile version