
இலங்கை தீவானது பிரித்தானியர் மற்றும் ஒல்லாந்தர் போன்றோரால் ஆளப்பட்டு வந்த நாடென்பது நாம் அறிந்ததே. அச்சமயங்களில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் முதல் கட்டிடங்கள் வரை இங்கு காணப்படும் நினைவுச்சின்னங்கள் ஏராளம். அப்படி அவர்கள் காலத்தில் பயன்படுத்திய பொருட்களை இலங்கையில் பல அருங்காட்சியகங்கள் பாதுகாத்து வருகின்றன. அதில் இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள சில அருங்காட்சியகங்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.
கொழும்பு ஒல்லாந்தர் அருங்காட்சியகம் – (Colombo Dutch Museum)

படஉதவி – flickr.com

கொழும்பின் புறக்கோட்டை பகுதியிலுள்ள பிரின்ஸ் வீதியில் தூண் வரிசைகள் நிறைந்து காணப்படும் அழகிய கட்டிடமொன்று ஒல்லாந்தர் அருங்காட்சியகமாக செயல்படுகின்றது. இந்த கட்டிடமானது 1692 முதல் 1697 வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஆளுநராக இருந்த தாமஸ் வான் ரீ என்பவரின் மாளிகையாக காணப்பட்டது என்கிறது வரலாறு.அதன் பின்னர் 1696 முதல் 1796 வரை இக்கட்டிடமானது ஆசிரியர் பயிற்சி கல்லூரியாக செயல்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி 1900 களின் காலப்பகுதியில் பிரித்தானியர்கள் ஆட்சியில் காவல் துறை பயிற்சி நிலையமாகவும் பயன்பட்டுள்ளது. பலரினால் பாவனைக்குள்ளாகி சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட இக்கட்டிடத்தை புனரமைத்து ஒல்லாந்தர் கால வரலாற்று சின்னங்களின் அருங்காட்சியகமாக மாற்றியமைத்தனர். ஒல்லாந்தர் காலத்து தளபாடங்கள், மண் பாண்டங்கள், நாணயங்கள், ஆயுதங்கள் என காட்சிப்படுத்தப்பட்டு 1982 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. 1932 ஆம் ஆண்டில் இக்கட்டிடமானது புறக்கோட்டை தபால் நிலையமாக செயல்பட்டுவந்துள்ளமை குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
சுதந்திர நினைவு அருங்காட்சியகம் – (Independence Memorial Museum)

படஉதவி – museum.gov.lk

தலைவர்களின் சிலைகள் மற்றும் ஆயுதங்கள்
கொழும்பு கறுவாத் தோட்டம் என்ற சினமன் கார்டனில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தின் அடித்தளத்தில் இந்த நினைவு அருங்காட்சியகமானது அமைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட போராடிய வீரர்களை கெளரவப்படுத்தும் விதமாக இது திறக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கையில் செயல்பட்ட அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், தேசாபிமானி ஆகியோரின் உருவச்சிலைகளும் அவர்கள் பற்றிய தகவல்களும் இங்க வைக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் பொதுமக்கள் பாவனைக்கென திறக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தினை காலை 9 மணி முதல் 5 மணி வரை நாள்தோறும் உள்நாட்டு மக்கள் உட்பட பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு வருகின்றனர். இந்த அருங்காட்சியகமானது தேசிய அருங்காட்சியகத் திணைக்களத்தினால் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு துறைமுக சமுத்திர அருங்காட்சியகம் – (Colombo Port Maritime Museum)

படஉதவி – alamy.it

ஒல்லாந்த காலத்து சின்னங்கள்
இந்த Colombo Port Maritime அருங்காட்சியகமானது இலங்கையின் கொழும்பு துறைமுகப்பகுதியுடன் இணைந்ததாக காணப்படுகின்றது. 1676 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் கட்டப்பட்ட இது, இலங்கையின் ஒல்லாந்தர் ஆட்சியின் போது சிறைச்சாலையாக காணப்பட்ட இடம் என்று சொல்லப்படுகின்றது. பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இக்கட்டிடத்தினை இலங்கை துறைமுக அபிவிருத்தி அமைச்சினால் புனரமைப்பு செய்யப்பட்டு 2003 ஆம் ஆண்டு அருங்காட்சியகமாக திறக்கப்பட்டது. காலை 9 மணி முதல் 4 மணி வரை பார்வையிடக்கூடிய இந்த சிறைச்சாலைக் கட்டிடமானது ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டு கடைசிக் கட்டிடமாகும்.
கொழும்பு நாணய அருங்காட்சியகம் – (Currency museum Colombo)

படஉதவி – info.shalanka.com

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள நாணய நூதனசாலை தான் இலங்கையிலுள்ள ஒரே ஒரு நாணய அருங்காட்சியகமாகும். இலங்கை மத்திய வங்கியில் தலைமைக் காரியாலயத்தில் அமைந்துள்ள இதனுள் கி.மு. 3 ஆம் மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட நாணய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அனுராதபுரம், கோட்டை மற்றும் பொலன்னறுவை இராசதானிகளின் காலத்தில் புழக்கத்தில் காணப்பட்ட நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரித்தானியர் மற்றும் ஒல்லாந்தர் காலத்தது சில நாணயத்தாள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகமனது வாரநாட்களில் திங்கள் முதல் சனி வரையான கிழமைகளில் செயல்பட்டு வருகின்றது.
கொழும்பு தேசிய அருங்காட்சியகம் – (National Museum of Colombo)

படஉதவி – serendib.btoptions.lk

இலங்கை நூதனசாலைகள் திணைக்களத்தினால் நிர்வாகிக்கப்பட்டு வரும் கொழும்பு தேசிய அருங்காட்சியகமானது இலங்கையின் மிகப் பெரிய அருங்காட்சியகம் ஆகும். இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் போது அப்போதைய ஆளுநர் வில்லியம் கிரகர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தினை இத்தாலியக் கட்டிடக்கலை முறையில் அமைத்துள்ளார்கள். 1876 ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு ஓராண்டுகள் கழித்து 1877 ஜனவரி 1ஆம் திகதி முதல் பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புக்கள் சொல்கின்றன. அப்போதைய காலங்களில், இலங்கையில் ஒரு நூதனசாலை அமையவேண்டியதன் அவசியம் கருதி இந்த அருங்காட்சியகமானது அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி ஆகிய இடங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் பல ராசதானிகளின் நினைவு சின்னங்களும் பிரித்தானியர் மற்றும் ஒல்லாந்தர் காலத்து சில நினைவு பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.