இயற்கை, அதனை அளவுக்குமீறி சூறையாடும் மனிதகுலம், இதனால் ஏற்படும் விளைவுகள் இவை பற்றி பேசினாலே உலகில் நடந்தேறிக்கொண்டிருக்கும் அநேக பிரச்சினைகள், அதற்கான அடிப்படைக் காரணங்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் போன்றவை அலசி ஆராயப்படும். அந்த அளவு உலகின் பல்வேறு பிரச்சினைகளுக்கான அடிப்படை இயற்கை சமநிலை குழப்பப்படுதலாகவே இருக்கிறது.
“நிலைபேறான பாவனை” என்பது துரித இலாபம், வளர்ச்சி, பொருளாதாரம் போன்றவை தலைவிரித்தாடும் அவசர உலகில் கவனிப்பாரற்ற அல்லது புறக்கணிக்கப்பட்ட ஓர் பதமாகவே இருக்கிறது. அத்தோடு, படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை எந்த ஒரு திட்டத்தையும் குறுகிய எதிர்கால நோக்கங்களை அடிப்படையாக வைத்தே சிந்திக்க விழைகின்றார். இச்சமநிலைக் குழப்பத்தால் இயற்கையின் சீற்றம் அவரவரை நேரடியாகத் தாக்கும்வரை அவை அனைத்தும் அடுத்தவர் பிரச்சினையாகவோ அல்லது செய்தித்தாள்களை நிரப்பும் செய்திகளாகவுமே பார்க்கப்படுகிறது.
அப்படி அண்மையில் வெளிவந்திருக்கும் ஓர் செய்தி பற்றித்தான் நாம் இக்கட்டுரையில் பேசவுள்ளோம். இலங்கையை கோகா கோலா (Coca Cola) குளிர்பான உற்பத்தியின் மையமாக மாற்றுவதற்கு விருப்பம் தெரிவிப்பதாக அந்நிறுவனத்தின் ஆசிய பசுபிக் குழுமத்தின் தலைவர் ஜான் மார்பி (John Murphy) தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இலங்கையின் நிதியமைச்சர் திரு. ரவி கருணாநாயக்கவை சந்தித்த திரு.ஜான் மார்பி மற்றும் அதன் நிர்வாக துணைத் தலைவர் திரு.இரியல் பினான் (Iriyal Finan) ஆகியோர் இது குறித்து கலந்தாலோசித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோகா கோலா குளிர்பான உற்பத்திகளின் இறுதி விளைபொருட்களை ஆசியாவில் அதன் மாபெரும் சந்தையாக விளங்கும் இந்தியாவுக்கு ஏற்றுமதிசெய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கையின் இயற்கை நீர் வளங்கள் மற்றும் தேயிலை உற்பத்திகள் போன்றவை உபயோகிக்கப்படப்போவதாக்கவும் கொக்கா கோலா நிறுவனத்தின் ஆசிய பசுபிக் தலைமைகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
பரந்த இந்தியாவின் சந்தைக் கேள்விகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு உற்பத்திகளை வழங்க மழைத்துழி வடிவான இச்சிறு தீவுக்கு இயலுமா? இங்குள்ள நீர்வளம் அதற்கு போதுமானதாக இருக்குமா?
இலங்கைக்கு சாதகமான விளைவுகள் என அடையாளப்படுத்தப்படுபவை
“அந்நியச் செலாவணி” இருக்கின்ற இயற்கை வளமோ, மனித வளமோ இலகுவாக வருமானத்தை பெற்றுக்கொள்ள இலங்கையராகிய நாம் பழகியிருக்கின்ற வழிகளில் முதன்மையானது இந்த அந்நியச் செலாவணி. இத்திட்டத்தின்மூலம் பாரியளவிலான அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது எமது அரசுக்கு இருக்கின்ற ஓர் முக்கிய காரணி.
“வேலைவாய்ப்பு” அதிகரித்த உயர்கல்வி நிறுவனங்கள், பட்டப்படிப்பை முடித்தும் வேலையின்றி வெளிநாடு செல்லும் இளைஞர் பட்டாளம், இப்படி இலங்கையில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க இத்திட்டம் உதவும் என்கின்ற எதிர்பார்ப்பும் அரசுக்கு முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
எதற்காக இலங்கை?
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தனது மாபெரும் சந்தையான இந்தியாவுக்கு குளிர்பானம் மற்றும் அதனோடுகூடிய ஏனைய உற்பத்திகளை வழங்க இலங்கை ஏன் தேர்வுசெய்யப்படுகிறது? அத்தனை பெரிய இந்தியாவிலேயே இதற்கான உற்பத்தி மையங்களை அமைப்பதில் என்ன இடர்பாடு இருக்கிறது? இந்திய சந்தைக்கு தேவையான இறுதி விளைபொருட்களை விநியோகம் செய்ய இலங்கையிலுள்ள இயற்கை வளங்கள் மிகையளவில் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது புறக்கணிக்கத்தகுந்ததா?
கடந்தகாலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களை மீட்டிப்பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
கொக்கா கோலா (Coca Cola), ஸ்ப்ரைட் (Sprite), பாண்டா (Fanta), தமஸ் அப் (Thums Up), லிம்கா (Limca), மினிட் மெய்ட் (Minute Maid), மாசா (Maaza) மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போன்ற பல்வேறு குளிர்பானங்களை உற்பத்தி செய்யும் கொக்கா கோலா நிறுவனத்தின் இந்திய சந்தை சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (5 billion $) பெறுமதியானது.
இந்திய மாநிலங்களில் 57இற்கும் அதிகமான தொழிற்சாலைகளை கொண்டிருக்கும் இந்நிறுவனம் பாரியளவில் இந்தியாவின் இயற்கை நீர்வளத்தைப் பயன்படுத்திவருகின்றது. பல்வேறு சந்தர்பங்களில், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அளவையும் தாண்டி நீரை மிகையாக நுகர்ந்த சந்தர்பங்களும், முறையீடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல்வேறு சமூக ஆர்வலர்கள் கொக்கா கோலா நிறுவனத்துக்கு தடை விதிக்கக்கோரி பல்வேறு விதத்தில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவன்தனர்.
தற்போதைய இந்திய நிலைப்பாட்டில் நீருக்கான தட்டுப்பாடு உலகறிந்தது. நீர்ப் பற்றாக்குறை இந்தியாவின் முதலுற்பத்தியை ஆட்டம்காணச் செய்துள்ளமை தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள் மூலம் இந்திய மாநிலங்கள் முழுவதும் உணரப்பட்டுவருகிறது. தொடர்ந்து நீர்நிலைகளில் இருந்து நீர் உறுஞ்சப்பட்டுவருவதால் விவசாயமும் விவசாயிகளும் ஏனைய இயற்கை வளமும் அழிந்துபோவதோடு, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இப்பானங்களால் மக்களின் உணவுப்பழக்கவழக்கங்களும் சீர்கேடும்நிலை தவிர்கமுடியாதது.
தங்களது நிலத்திலுள்ள நீரை உறுஞ்சி, அதை எமக்கே விற்பனை செய்து இலாபமீட்டுவதோடு நின்றுவிடாது, அது எமதினத்தின் வாழ்வாதாரமான முதலுற்பத்திக்கே வேட்டுவைக்கும் என்றால், அதுபற்றி ஆழமாக சிந்திப்பது மிக அவசியம். ஏற்கனவே மாநிலங்களுக்கு இடையில் இருக்கின்ற நீர்ப் பிரச்சினைகளால் விவசாயிகள் தங்களது பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரைப் பெறமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கையில், இருக்கின்ற நீர்வளத்தையும் இப்படியான கம்பனிகளுக்கு பட்டா போட்டுக் கொடுத்துவிட்டால், நாளை இந்திய மண் வரண்ட பூமியாகிவிடுவதை யாராலும் தடுக்க இயலாது.
இந்நிலையில் தமிழ்நாடு திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.டீ ஏ பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கினையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தாமிரபரணி நதியிலிருந்து பெப்சிகோ மற்றும் கொக்கா கோலா நிறுவனங்கள் நீர் எடுப்பதற்கான தடையுத்தரவைப் பிறப்பித்தது. புள்ளி மான்களுக்கான தேசிய சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட கங்கைகொண்டானிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இத்தொழிற்சாலைகள் தாமிரபரணி நீரை உறுஞ்சுவதால் மான்கள் இனம் பாதிக்கப்படும் எனவும் அவரது மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. நாட்டின் இயற்கை வளம், மற்றும் முதலுற்பத்திக்கு சவாலாக விளங்கும் இச்செயற்பாட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தது.
இதுபோலவே இந்தியாவின் பல பாகங்களிலும் கொக்கா கோலா நிறுவனத்திற்கு எதிராக கிளம்பியுள்ள எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களே இந்நிறுவனத்தின் பல்வேறு கிளைகள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டமைக்கான முழுமுதல் காரணம் எனலாம். கடந்த ஆண்டு முழுவதும் இவ்வாறான பல இடர்களைச் சந்தித்துவந்த இப்பல்தேசியக் கம்பனியின் பார்வை இன்று இலங்கையைநோக்கிப் பாய்ந்திருக்கிறது.
கொக்கா கோலா உற்பத்தி மையமாக இலங்கை
இலங்கையின் நீர்த்தட்டுப்பாடு, மழைவீழ்ச்சியில் ஏற்பட்ட மாற்றம், நீரின்றிக் கருகிய வேளாண்மை செய்கை, விவசாயிகளால் கைவிடப்பட்ட பயிர்ச்செய்கைகள், குடிநீருக்காக திண்டாடும் மக்கள் என இலங்கையின் தற்போது நிலவுகின்ற நீர்ப் பற்றாக்குறை மற்றும் வரட்சி நாமறிந்ததே. வரட்சி காரணமாக கரையோரப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்குள் உவர்நீர் ஊடுருவி குடிநீர் உவர்நீராக மாறியதால் பாதிக்கப்பட்ட மக்களும் உளர். குருநாகலை மாவட்டத்தில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும், இதே காலநிலை தொடருமானால், இன்னும் இரண்டு மாதங்களுக்கே நாடுமுழுவதும் குடிநீர் வழங்க இயலும் எனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எமது நாட்டு மக்களுக்கு குடிநீரே பற்றாக்குறையாக இருக்கும்வேளையில் இப்பல்தேசியக் கம்பனி கொண்டுதரும் அந்நியச் செலாவணியும், வேலைவாய்ப்புகளும் எம் தாகம் தீர்க்குமா?