தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கல் கொள்கைக்கு இடம்கொடுத்த அனைத்து உலக நாடுகளின் நிலைக்கு உவமைபோல் எடுத்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிதான் BIG BOSS. தனிமனிதனை முற்றிலும் கண்காணிப்பதும், அவனது தேவைகள் என்னவென அவனைத் தீர்மானிக்க விடாமல் வழிநடத்தி, அவனுக்குள் போட்டியையும், பொறாமையையும் தூண்டிவிட்டு சகமனிதனின் வாய்ப்பை அடித்துப் பிடுங்கித்தான் அவன் முன்னேற வேண்டும் என்ற சிந்தனையை அவனுள் வளர்த்துவதுதான் இன்று உலகம் முழுவதிலும் உலகமயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கும் நாடுகளில் போலி ஜனநாயகத்தை முன்னிறுத்தி உழைப்புச் சுரண்டலோடு, இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் MNC க்கள் என்று சொல்லப்படுகிற பன்னாட்டுப் பெருநிறுவன முதலாளிகளான ‘பிக் பாஸ்கள்’ செய்கின்ற வேலை.
இதில் பெரிதும் வருத்தப்படவேண்டியது என்னவென்றால் இந்த வகையான அடிமைச் சிந்தனையை மக்கள் ஏற்றுக்கொள்வதுதான். “ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கும்போது அது பௌதீக சக்தியாகிவிடும்” என்பார் கார்ல் மார்க்ஸ். அந்த வகையிலே இந்த அடிமைத்தனமும் மக்களைக் கவ்விப் பிடித்துவிட்டது. இதற்கும் அந்த பிக் பாஸ்கள் தான் காரணம். தங்களது தந்திரத்தால் மக்களின் நுகர்வு வெறியைத் தூண்டி மக்களைத் தயார்படுத்துவதோடு, இந்தியப் பண்பாட்டுக் கூறுகளில் ஆழமாக வேரூன்றிவிட்ட சாதி, மதம் ஆகியவற்றை எளிமையாகக் கையாண்டு மக்களைப் பிளவுபடுத்தி, அவர்களது பொருளாதாரச் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்துவிட்டார்கள்.
இந்திய விடுதலைப் போராட்ட முழக்கமான ‘சுயராஜ்யம்’ என்பதன் அடிப்படை ‘எங்கள் மண்ணை அந்நியன் ஆளக்கூடாது’ என்பது மட்டுமா? மனித வளமும், இயற்கை வளமும் செழித்துக் கிடக்கும் இந்த நாட்டில் தற்சார்பு நிலைகொண்டு உழைத்துத், துறைதோறும் உற்பத்தியைப் பெருக்கி வணிகம் செய்திட முடியும் என்பதுதானே. விடுதலைக்குப் பின்னர் 1990வரை கூட இந்தியாவின் பொதுவுடமைச் சிந்தனை கொண்ட திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கை தற்சார்பு நிலையை அடைதல், வறுமை ஒழிப்பு, உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு பாட்டளிகளையும், உள்நாட்டிலே உருவாகிய சிறு மற்றும் குறு முதலாளிகளையும் பாதுகாத்தது.
ஆனால் 1991க்குப் பிறகான புதிய பொருளாதாரக் கொள்கையில் இன்று வரை படிப்படியாக இந்த அரசு தற்சார்பு நிலையை விட்டுக்கொடுத்துக் கொண்டே வருகிறது. 1970 இந்தியக் காப்புரிமைச் சட்டம் மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் மீதான காப்புரிமையை அந்நிய முதலீட்டாளர்களிடம் விட்டுத்தராதது மூலம் அடிப்படைத் தேவையான அதன் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்தது. பிறகு 1994இல் புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு அதில் திருத்தம் செய்து அதையும் விட்டுக்கொடுத்தது.
தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான இந்தியக் கூட்டமைப்பு (FICCI-FEDERATION OF INDIAN CHAMBER OF COMMERCE AND INDUSTRY) தன்னுடைய சமீபத்திய அறிக்கை ஒன்றில் 84% அந்நிய நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக்கொள்ள விரும்புவதாகவும், 70% நிறுவனங்கள் இலாபம் அடைந்திருப்பதாகவும் கூறுகிறது. உதாரணமாக L&T என்ற நிறுவனம் சென்ற ஆண்டு தங்களது நிகர இலாபம் 43970 கோடி என அறிவித்திருக்கிறது. 40% வரி செலுத்தும் அந்நிய முதலாளிகளாலேயே இலாபம் அடைய முடியுமென்றால் தற்சார்பு நிலைகொண்டு உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தை ஊக்கப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தால் பல மடங்கு இலாபம் பெற்று, அரசின் கடன் சுமையைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தலாம். பிறகு ஏன் அரசு அதைச் செய்யவில்லை? ஏனென்றால் அரசை வழிநடத்துகின்ற, அமைப்புகளை வழிநடத்துகின்ற தலைவர்கள் அனைவரும் அந்த பிக்பாஸ்களின் விசுவாசிகளாகவே இருக்கிறார்கள்.
சரி புதிய தொழில்கள் உருவாவதன் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம் குறைய வேண்டுமல்லவா? ஆனால் ஒருபுறம் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, அதே வேளையில் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைகிறது, வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கிறது. இது எளிய மக்களின் சிந்தனையால் புரிந்துகொள்ள முடியாத முரண். உண்மையில் நடப்பது என்னவென்றால் அப்படியொரு தேக்க நிலையை உருவாக்குவதன் மூலம் போட்டியை அதிகரித்து தனிமனிதனின் உழைப்பை அதிகம் சுரண்டும் வேலையைச் செவ்வனே செய்கிறார்கள் இந்த பிக்பாஸ்கள்.
இன்னும் எளிமையாகவே விளக்குகிறேன், வேலைப்பழு அதிகம் மற்றும் சரியான ஊதியம் தராமை ஆகிய காரணங்களைக் கூறி ஒருவர் வெளியேறினால் அந்த இடத்தில் அவரைக் காட்டிலும் அதிக நேரம் உழைக்கவும், குறைந்த ஊதியம் பெற்றுக்கொள்ளவும் பலபேர் தயாராக இருப்பார்கள். இந்நிலையில் அவரது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தாலும் அதை வேறுவழியின்றி ஏற்றுக்கொள்வார். அதுதான் இங்கே நடக்கிறது.
இன்று 85% இந்திய இளைஞர்கள் இதுபோன்ற பன்னாட்டுப் பெருநிறுவனங்களில் பணிக்குச் சேர்வதையே விரும்புகிறார்கள் என்றும் மீதமுள்ள இளைஞர்களில் முக்கால்வாசிப் பேர் தாங்கள் என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலையில் இருக்கிறார்கள் என்றும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை இந்திய அரசு தனது 2016 நிதிநிலை அறிக்கையில் கூறியது. மேலும் இது அரசின் சாதனையாகக் கருதுவதாகக் கூறியது. இந்த அடிமைத்தனத்தைத் தங்களது சாதனையாகக் கூறும்போதே தெரிந்துகொள்ளலாம் இந்த அரசு யாருக்கானது என்று. இதுதான் வளர்ச்சியா? வெறும் 3% மக்களின் நலன் காக்க மீதமுள்ள 97% சதவிகித மக்களின் உழைப்பு ஏமாற்றிச் சுரண்டப்படுகிறதே இதுதான் ஜனநாயகமா? அது சரி வாக்களிக்கும் உரிமை ஒன்றே ‘ஜனநாயகம்’ என்ற விளக்கத்தை மக்கள் மனதில் ஆழப் பதித்துவிட்டது இங்குள்ள அமைப்புகள்.
மேலும் மக்களின் நுகர்வுத் தன்மையைக் கண்காணித்து அவர்களது கடன் வாங்கும் திறனைக் கணக்கிட்டு இந்த பிக்பாஸ்களுக்கு விளக்குவதற்காகவே FITCH RATINGS, MOODY’S, STANDARD & POOR’S RATINGS போன்ற பல தனியார் அமைப்புகள் உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. கல்விக் கடன், வாகனக் கடன், வீடு கட்டக் கடன் என அனைத்திற்குமான தனிநபர் தகுதியை இவர்களே தீர்மானிக்கிறார்கள். இந்த வேலையை இந்தியாவில் செய்துகொண்டிருக்கும் ‘FITCH RATINGS’ நிறுவனமும் ஒரு அமெரிக்க நிறுவனமே. ஆக, படிப்படியாக இந்த நாட்டின் மொத்த மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் சுரண்டுவதுதான் இந்த பிக்பாஸ்களின் இலக்கு. எனவே மக்கள் தங்கள் நுகர்வு வெறியைக் குறைத்துக் கொண்டு விழிப்புணர்வு அடையாவிட்டால் தலைமுறைதோறும் அடிமைகளே.
“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?….”