
இலங்கையில் COVID 19 தொற்றின் பரவல் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பகுதியளவான பொதுமுடக்க செற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த அக்டோபர் மாதம் 01ம் திகதி மினுவங்கொடை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடைதொழிற்சாலையில் தொழிற்புரியும் பெண்னொருவர் கொரோனா தெற்றிற்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை நாட்டில் பல பிரதேசங்களிலிருந்தும் நோய் தொற்றாளர்கள் தொடர்ந்தும் இனங்காணப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதுடன், அரச மற்றும் சில தனியார் நிறுவனங்களும் தமது சேவைகளை தற்கலிகமாக இடைநிறுத்தியுள்ளன.
மாநாடுகள், கூட்டங்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், களியாட்டங்கள், விழாக்கள், ஊர்வலங்கள், பேரணிகள் மற்றும் அத்தியாவசியமற்ற கூட்டங்கள் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த தடையுத்தரவு நாடு முழுவதும் அமுலில் இருக்கும் எனவும் சுகாதார அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. 2ம் தவணை விடுமுறைக்கென பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதுடன், புலமைபரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் உயர் கண்கானிப்பின் கீழ் நடைப்பெற்று வருகின்றது.
மூன்றாம் கொத்தணி
அக்டோபர் மாத ஆரம்ப பகுதி முதல் இன்றுவரை 1500 இற்கும் அதிகமான புதிய நோயாளர்கள் (மூன்றாம் கொத்தணி) இனங்காணப்பட்டுள்ள நிலையில், நாளொன்றில் சராசரியாக 100-120 வரையானவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது. அதிமான நோய்தொற்றாளர்கள், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிவந்தவர்கள் என இனங்காணப்பட்டுள்ளது. எனினும் தற்பொழுது மினுவங்கொடை, கம்பஹா பிரதேசங்களையும் தாண்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நோய்பரவலுக்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது.
அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய நோய் தொற்றாளர்களை விரைவாக இனங்கானும் நடவடிக்கையினையும் அரசு துரிதப்படுத்தியுள்ளதுடன் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது. கொரோனா தொற்றாளர்களை அடையாளம் கண்டுக்கொள்வதற்காக இராணுவம், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்புக்களுடன் சுகாதார அமைச்சு தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5000 இற்கும் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3380 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இலங்கையில் முதலாவது கொவிட் கொத்தணி கடற்படைக்குள் உருவாகியிருந்ததுடன், இரண்டாவது கொவிட் கொத்தணி கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலும் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் தற்போது மூன்றாவது கொவிட் கொத்தணி பரவ ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
COVID 19 பரவல் தடுப்பிற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் செயற்பாடுகள் (NOCPCO)
அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் மினுவங்கொடை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடைதொழிற்சாலையில் தொழில் புரியும் பெண்னொருவர் கொரோனா தெற்றிற்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டிருந்நதாலும், அதற்கு முன்னரே அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 33 ஊழியர்களுக்கு COVID 19 தொற்றின் அறிகுறிகளான இருமல், காய்ச்சல் மற்றும் தடிமன் போன்றன காணப்பட்டதாகவும் இவர்கள் தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் COVID 19 பரவல் தடுப்பிற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் (NOCPCO) தலைவர்; இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவிந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார். செப்டெம்பர் 10ம் திகதி முதல் 20ம் திகதி வரையான கால கட்டத்தில் இவர்கள் இந்த நோய் தொற்றினை கொண்டிருந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் இம்முறை இந்நோயின் தோற்றத்தினை அறிவதற்கான விசாரனைகளை நாம் தொடர்ந்து நடத்தி வருகின்றோம். அத்துடன் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள், அவர்கள் பயணித்த பாதைகள், பொது போக்குவரத்து உட்பட பல்வேறு தரப்புகளிடமும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.இதுவரை 10,500 பேர் வரை தனிமைப்படுதலில் இருந்து வருகின்றனர். மேலும் 2000 பேருக்கான தனிமைப்படுத்தல் வசதிகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது, தொடர்ந்தும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை முன்னெடுப்போம். நாடுதழுவிய பொதுமுடக்கத்தினை அமுல் செய்வதற்கான எண்ணம் இதுவரை எமக்கு இல்லை. நோய் தொற்றுக்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கு தேவையேற்படின் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். அத்துடன், ஏற்கனவே ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில் மீள் அறிவிப்பு வரும்வரை அது தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு! உயர் ஆபத்து நிறைந்த பகுதியா?
கம்பஹா மாவட்டத்தினை தொடர்ந்து கொழும்பு மாவட்டம் அதிக நோய் தொற்று பரவும் ஆபத்துள்ள பகுதியாக இனங்காணப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. தற்பொழுது நாளொன்றிற்கு 6000 PCR பரிசோதனைகளே நடத்தப்பட்டு வருவதாகவும் அது நாளோன்றிற்கு 10,000 பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட வேண்டுமென அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் Dr. ஷெனல் பர்னான்டோ தெரிவித்துள்ளார். COVID 19 தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் உள்ள பிரதேசங்களை சுகாதார மேம்பாட்டு பணியகம் சரியாக இனங்காண்பதுடன் நோய் பரவல் தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை பொது மக்களுக்கு வெளியிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
COVID 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து திரையரங்குகளும் எதிர்வரும் ஒக்டோபர் 31 வரை மூடப்பட வேண்டும். சுகாதார அமைச்சின் உத்தரவின் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. ஜயந்த தர்மதாச தெரிவித்துள்ளார்
சுகாதார அமைச்சின் விசேட வர்த்தமானி

COVID 19 தடுப்பு விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்கள் இதில் கையெழுத்திட்டிருந்தார்.
இதன்படி பொது இடங்களில் சமூக இடைவெளிகளை பேணுதல், முகக்கவசம் அணிதல் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் இக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ10,000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.